புதன், 8 டிசம்பர், 2010

மனச் சுரங்கத்திலிருந்து...


இருபது வயது வரை நான் இருந்த நெய்வேலி நகரம், திறந்தவெளி சுரங்கங்களைக் கொண்டது. ஆனால் நம் மனது என்னும் சுரங்கமோ, மூடி வைக்கப்பட்ட ஒன்று.

என்னுடைய முந்தைய சில பதிவுகளில் நெய்வேலி நகரத்தில் நான் சந்தித்த, பழகிய சில மனிதர்களைப் பற்றி எழுதியிருக்கிறேன். சிறு வயதில் நான் சந்தித்த மேலும் பல மனிதர்கள், நிகழ்வுகள் பற்றிய எண்ணங்கள் அவ்வப்போது என் மனதில் வந்து போவதுண்டு.

என் மனச் சுரங்கத்திலிருந்து, நிலக்கரி நகரமாம் நெய்வேலியின் நினைவுகளை ஒவ்வொன்றாய் தோண்டியெடுத்து உங்களுடன் பகிர்ந்து கொள்ள எண்ணியிருக்கிறேன். அதில் முதலாவதாக…..

பகுதி-1: டைலர் ராமதாஸ்


சில நாட்களுக்கு முன் வலையுலக நண்பர் ஆர்.வி.எஸ் தனது ஒரு பதிவில் மன நிலை குன்றியவர்களைப் பற்றி எழுதியிருந்தார். அந்த பதிவு எனக்கு நெய்வேலி ராமதாஸ் பற்றிய நினைவுகளைத் தூண்டியது.

எங்களது வீட்டின் முன் இருந்த ஒரு பெட்டிக்கடையின் ஒரு பகுதியில் ராமதாஸ் என்று ஒரு தையல்காரர் இருந்தார். தொழிலில் அத்தனை ஒரு நேர்த்தி. ஆண், பெண் என இருபாலருக்கும் உடைகள் தைப்பதில் வல்லுனர். கனகச்சிதமாய் துணிகளைத் தைத்துக் கொடுப்பார்.

நெய்வேலியில் நாங்கள் இருந்த பகுதி மக்கள் மட்டுமில்லாது பல இடங்களிலிருந்தும் அவரிடம் துணி தைத்துக்கொள்ள மக்கள் வருவார்கள். அதுவும் தீபாவளி சமயமெனில் கேட்கவே வேண்டாம். எனது அம்மாவுக்குக் கூட தையல் சொல்லிக் கொடுத்த நல்லுள்ளம் படைத்தவர்.

ன்ன ஆயிற்றோ தெரியவில்லை, இரண்டு மூன்று நாட்கள் வெளியூர் சென்று வந்தவரிடம் பெரும் மாற்றம். மனநிலை சரியில்லாமல் தாடி வளர்த்துக்கொண்டு, தைக்க வந்திருந்த துணிகளை சின்னாபின்னமாக்க ஆரம்பித்து விட்டார்.

அதற்கு மேலாக அவர் வாடகைக்குக் கடை வைத்திருந்த கடையின் முதலாளி, அவருடைய எல்லா பொருட்களையும் எடுத்து வைத்துக்கொண்டு அவரை அடித்துத் துரத்தி விட்டார். பல வருடங்கள் அலைந்து திரிந்து, கிடைத்ததை சாப்பிட்டு, வாழ்ந்து கொண்டிருந்தார்.

அப்படியே இருந்தவருக்கு வந்தது ஓர் சோகமான முடிவு. ஒரு தேர்தலின் போது கொடியை எரித்ததாகச் சொல்லி, அவரை நையப்புடைத்து விட்டனர் அடியாட்கள். அந்த நிகழ்ச்சி நடந்து ஓரிரு தினங்களிலேயே அவர் இறந்து விட்டார்.

நல்லதொரு மனிதனுக்கு சோகமான முடிவு. அவரிடம் பணமும் புகழும் இருந்தபோது அவருடன் இருந்து அதனைப் பயன்படுத்திக் கொண்ட அத்தனை நட்பு வட்டமும் அவர் மனநிலை குன்றியவராய் ஆனபிறகு அவருக்கு சிறு உதவி கூட செய்யவராமல் தள்ளியே இருந்தது இன்றைக்கு நினைத்தாலும் மனசுக்கு ரண வேதனையை தருகிறது.

மீண்டும் சந்திப்போம்...

30 கருத்துகள்:

 1. பணம் இருக்கும் வரைதான் இன்றைய உலகில் மதிப்பு

  பதிலளிநீக்கு
 2. நல்லதொரு மனிதனுக்கு சோகமான முடிவு. அவரிடம் பணமும் புகழும் இருந்தபோது அவருடன் இருந்து அதனைப் பயன்படுத்திக் கொண்ட அத்தனை நட்பு வட்டமும் அவர் மனநிலை குன்றியவராய் ஆனபிறகு அவருக்கு சிறு உதவி கூட செய்யவராமல் தள்ளியே இருந்தது இன்றைக்கு நினைத்தாலும் மனசுக்கு ரண வேதனையை தருகிறது.


  .......என்ன கொடுமை சார், இது? வேதனையாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 3. தையல்காரர் பதிவு மனதை தைத்தது. நாம் அவர்களுக்கு ஸ்பெஷல் ஆக எதுவும் செய்யவேண்டாம். துன்புறுத்தாமல் இருந்தாலே போதுமானது. எங்களூரில் நான் நிறைவாக இவர்களுக்கு செய்தேன். நன்றி ;-)

  பதிலளிநீக்கு
 4. @@ சித்ரா: ஒவ்வொரு தையல்காரரை பார்க்கும்போதெல்லாம், எனக்கு ராமதாஸின் நினைவு வரும். அதுவும் அவரது முடிவு கொடுமை.... வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

  @@ அமுதா கிருஷ்ணா: அக்கிரமம் தான். நன்றி சகோ.

  @@ RVS: நல்ல விஷயம். எங்கள் வீட்டிலிருந்தும் அவ்வப்போது அவருக்கு உணவும், உடைகளும் தந்து உதவுவோம். கருத்திற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 5. உங்கள் மனச்சுரங்கத்தில் இருந்து கொஞ்சம் மனபாரத்தை எங்கள் மீது இறக்கி வைத்து விட்டீர்கள்.

  பதிலளிநீக்கு
 6. பணம் ஒரு புறம் அவசியமாக இருக்கிறது ...மனமும் பிறழாமல் இருக்க வேண்டியிருக்கிறது ... இல்லாவிட்டால் சக மனிதர்களிடம் அந்நியபட்டுவிடுகிறோம் ... மனதை தொடும் பதிவு ......

  பதிலளிநீக்கு
 7. படித்த உடன் அந்த நபரை நினைத்து மனசுக்குள் உண்டானது வருத்தம்.

  பதிலளிநீக்கு
 8. அன்னிக்கே கண்ணதாசன் பாடிவெச்சுட்டு போயிட்டாரே.. அண்ணன் என்னடா!! தம்பி என்னடா!!ன்னு. பணம்தான் உறவுகள் பிரியாம பசைபோட்டு ஒட்டவைக்குது :-(

  பதிலளிநீக்கு
 9. ஒவ்வொருவர் மனச் சுரங்கத்திலும் எத்தனை வேதனை நினைவுகள்!

  பதிலளிநீக்கு
 10. @@ ஈஸ்வரன்: ஆஹா, உங்கள் கருத்தினை மீண்டும் எனது வலைப்பூவில் கண்டு ஆனந்தம். மிக்க நன்றி.

  @@ பத்மநாபன்: உறவுகளில் கூட பணமே பிரதானமாக ஆகிவிட்டது என்பது நூறு சதவீதம் உண்மை. மிக்க நன்றி.

  @@ ரிஷபன்: மிக்க நன்றி சார்.

  @@ அமைதிச்சாரல்: மிக்க நன்றி சகோ.

  @@ K.B.J.: மிக்க நன்றி சார். மனச் சுரங்கத்தில் வேதனையான விஷயங்களும், பல மகிழ்ச்சியான விஷயங்களும் பொத்திப் பொத்தி வைத்திருக்கின்றனர் ஒவ்வொருவரும்…..

  பதிலளிநீக்கு
 11. ஒரு காலத்தில் நல்ல நிலையிலிருந்து, பின் அனைத்தையும் இழந்து சுய நினைவில்லாது,யாருமில்லாதவராக இறப்பது மிகவும் கொடுமை! மனதை கனமாக்குகிறது உங்களின் பதிவு!

  பதிலளிநீக்கு
 12. நற் பதிவுகள் ஒரு நூற்றினை குறுகிய காலத்தில் எமக்கு வழங்கிட்ட திரு வெங்கட் அவர்களே, கரி சுரங்க நகரமாம் நெய்வேலியின் நினைவுகளை எம்மோடு பகிர்ந்துகொள்ள முன் வந்ததுற்கு எமது முதற்கண் நன்றி. இதில் முதலில் வந்த தையல்காரரின் நினைவலைகள், ஆழ்ந்த மன வருத்தத்தை ஒருபுறம் கொடுத்தாலும், நன்றிகெட்ட மனிதர்கள் வாழும் இந்த வையகத்தோரை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டியமைக்காக எனது பாராட்டுதல்களை தெரிவிதுக் கொள்கிறேன். கவிஞர் கண்ணதாசன், "உயர்ந்த இடத்தில் இருக்கும்போது உலகம் உன்னை மதிக்கும், நிலைமை கொஞ்சம் இறங்கிவந்தால் உன் நிழல் கூட மிதிக்கும்," என்று பல்லாண்டுகளுக்கு முன்பே ஒரு படத்தில் பாடியதை இந்த இடத்தில் நினைவு கூர்கிறேன்.வாழ்க, வளர்க.

  மந்தவெளி நடராஜன்.

  பதிலளிநீக்கு
 13. உடல் நோயை பெருமையடித்துக் கொள்ளும் இச் சமூகம், மன நோயை இன்னும் ஏளனப் பார்வையுடனே எதிர்கொள்கிறது. உற்றார் உறவினர் உட்பட ... மனிதம் குறைபடாத சிலரின் இரக்கத்தில் தான் இவர்களது வண்டியோட்டம்...
  ஒவ்வொருவரும் ஒரு நாளின் ஏதாவதொரு ஐந்து நிமிடம் (ஆளுக்காள் நேர அளவு மாறலாம்) பைத்திய நிலைக்கு சென்று மீள்வதை , தத்தம் வாழ்வியலை கூர்ந்து அவதானித்தால் புரிந்து கொள்ளாலாம்.

  பதிலளிநீக்கு
 14. @@ மனோ சாமிநாதன்
  @@ மந்தவெளி நடராஜன்
  @@ DrPKandaswamyPhD
  @@ கலாநேசன்
  @@ நிலாமகள்

  உங்கள் அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  இந்த பதிவைப் படித்து, இண்ட்லியில் வாக்கு அளித்து பிரபலமாக்கிய அனைத்து நட்புகளுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 15. இப்படி எல்லாம் நடக்காவிட்டால்தான் அதிசயம் :((

  பதிலளிநீக்கு
 16. தையல்காரர் நிலை மனதை சங்கடப்படுத்தியது.

  மனிதர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று கவலைப் படுகிறது மனது.

  பதிலளிநீக்கு
 17. @@ புதுகைத் தென்றல்: நன்றி சகோ.

  @@ சக்தி: தங்களது முதல் வருகைக்கு நன்றி.

  @@ கோமதி அரசு: மிக்க நன்றிம்மா.

  பதிலளிநீக்கு
 18. எப்போதோ எழுதியிருக்கும் இந்தப் பதிவுக்குப் பொருத்தமான ஒரு நபரைப்பற்றி இந்த வார ஆ வியில் பாக்கியம் சங்கர் (கிட்ணா) எழுதியிருப்பதைப் படித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் இதுவரை படிக்காத இந்தப் பதிவுக்கு வந்து படித்து கருத்துரைத்தமைக்கு நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 19. பதில்கள்
  1. வருத்தம் தான் இப்போது நினைத்தாலும்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 20. பாவம் அந்த மனிதர். குடும்பம் இல்லையா? இருந்திருந்தால் ஒருவேளை இப்படி விட்டிருக்க மாட்டார்கள்! :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குடும்பம் பற்றி ஒன்றும் தெரியாது எங்களுக்கு. அவர் தனியாகத்தான் இருந்தார்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 21. உங்கள் மனபாரத்தை இறக்கி என்னை அவரைப் பற்றி நினைக்கச் செய்துவிட்டீர்கள். பாவம் அவர்.

  நான் எப்போதும் ஏழைகளையோ, இரப்பவர்களையோ இல்லை ரோட்டில் அலையும் கஷ்டப்படுபவர்களையோ பார்க்கும்போது, இவர்கள் பிறந்தபோது இவர்கள் அம்மாவிடம் எவ்வளவு செல்லமாக இருந்திருப்பார்கள், வாழ்க்கை என்ன செய்து அவர்களை இந்த நிலைமைக்குக் கொண்டுவந்துவிட்டது? வாலிப வயதில் இந்த மாதிரி ஆவோம் என்று நினைத்துப்பார்த்திருப்பார்களா என்று நினைத்துக்கொள்வேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களைப் போல எனக்கும் தோன்றும். தம் குழந்தைகள் எப்படி எல்லாம் இருப்பார்கள் என யோசித்த அம்மாவிற்கு இப்போதைய நிலை தெரிந்தால் எவ்வளவு வருத்தம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....