ஒரு மாதம்
தில்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பழைய வளாகத்தில் நடந்த பயிற்சியின் போது
தினமும் காலையும் மாலையும் தில்லி நகரப்
பேருந்தில் பயணம் செய்வது வாடிக்கையாகிப் போனது.  ஒவ்வொரு முறையும் ஒரு மணி நேரத்திற்கும்
அதிகமாக பயணம் செய்யும்போது நிறைய மனிதர்களைச் சந்திக்க நேர்வது நிச்சயம்.  இந்த ஒரு மாதத்தில் நான் சந்தித்த பல மனிதர்களில்
இரண்டு மனிதர்கள் பற்றியே இப்பகிர்வில் சொல்லப் போகிறேன்.
முதலாம்
நபர்:  ஒரு மாலை ராமகிருஷ்ணபுரம்
செக்டர் -1-ல் இருந்து தடம் எண்-610 பிடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தேன்.  வழியில் ஒரு மனிதர் பேருந்தில் ஏறினார்.  அரையில் ஒரு தடித்த தேங்காய் பூ துண்டு. மேலுக்கு
ஒரு சட்டை, அதற்கு மேல் குளிர் காலமானதால் ஒரு பழைய கோட்.  கை, கழுத்து என எல்லா இடங்களிலும் வித வித அலங்காரமாய் செயற்கை நகைகள்,
மாலைகள், காலில் தண்டை, கையிலே ஒரு நீண்ட குச்சி, ஜடாமுடி, தாடி என்று இருந்தார்.  உற்று நோக்கியபோது கவனித்த ஒன்று - ஒரு பக்கக்
காதில் தோடு போல ஒரு சிறிய பூட்டு!
அவர் மட்டும் தனியாக பேசிக் கொண்டு இருந்ததைப் பார்த்து கூர்ந்து [எதைப் பார்த்தாலும் பிளாக் எழுத
ஏதாவது தேறுமான்னு பார்க்கத் தோன்றுவது தப்போ?]  கவனித்தபோது நடந்தது இது தான்.
தாடியை
தடவியபடி அவர் பேசியது “ம்ம்…  சொல்லுங்க, நல்லா கேக்குது…
ஓவர் [கையில் வாக்கி டாக்கி இல்லை].  பூமியில் ரொம்ப அநியாயம் தான் நடக்குது ஓவர்.  மழை, வெயில், குளிர் என மாறி மாறி ரொம்ப கஷ்டப்படறாங்க மக்கள்.  நீங்களும் கைலாசத்தில் இருந்து கொண்டு ஒன்றுமே
கவனிக்க மாட்டேங்கறீங்க!  ஓவர்.  என்னது சீக்கிரம் வரீங்களா?  வாங்க – அது தான் நல்லது.  நீங்க வருகிற வரைக்கும் நான் உங்க சார்பா எல்லாம் பார்த்துக்கிறேன்
இங்கே…  ஓவர். [இடையில் பக்கத்தில்
அதிர்ந்துபோய் அமைதியாய் அமர்ந்து இருக்கும் ஒரு பெண்ணிடம், “என்ன? ஒண்ணும்
கவலைப்படாதீங்க! எல்லாம் நான் பார்த்துக்கிறேன்! என்று வீர வசனம் வேறு!]  திரும்பவும் இல்லாத வாக்கி-டாக்கியில் “ம். என்ன
சொல்றீங்க, ஒழுங்கா கேட்கல…  சிக்னல் சரியா இல்லை.  ம். இப்ப கேட்குது.  எப்ப வருவேன்னு சொல்லுங்க அடுத்த தடவை.  எனக்கு இப்ப கொஞ்சம் வேலை இருக்கு, என் இருக்கை யாருக்கோ வேணுமாம். நான்
இறங்கறேன்” என்று அடுத்த நிறுத்தத்தில் இறங்கி மறைந்து போனார்.  ஆனால் அவர் ஏற்படுத்திய அதிர்வு மட்டும் இன்னும்
மறையாமல் என்னுள்.
இரண்டாம்
மனிதரும் அவரது தன்னம்பிக்கையும்:  பேருந்தின் ஓட்டுனருக்கு
பின்பக்க இருக்கையில் நான்.  தில்லிப் பேருந்துகளில்
எப்போதும் நடத்துனர் பின் பக்கம் தான் இருப்பார். ஒரு நிறுத்தத்தில் பேருந்து
நின்று கிளம்பியபின் நடத்துனர் பயணச்சீட்டு தரும் இடத்திலிருந்து “திருவிதாங்கூர்
மாளிகைக்கு ஒரு டிக்கட் கொடுங்க!” என்று தமிழில் ஒரு குரல் – அதுவும் தலைநகர்
தில்லியில்.  தமிழ்க்  குரல் கேட்டவுடன் திரும்பினேன் – அங்கே, சபரிமலை
செல்லும் ஒரு வயதானவர் [60 வயதுக்கு மேல் இருக்கலாம்], கழுத்தில் மாலைகள்,
மழிக்கப்படாத தாடி, தலையில் இருமுடி, பாதணிகள் இல்லாத கால்கள் என மலைக்குப் போகத்
தயாராக இருப்பது போல இருந்தார். அவர் என்ன கேட்கிறார் எனப் புரியாத நடத்துனர்
‘க்யா, கஹா[ன்] ஜானா ஹே?” என்று வினவ, திரும்பவும் இவர் தமிழில் “திருவிதாங்கூர்
மாளிகைக்குப் போகணும், கேரளா ஹவுஸ்-ல இடம் இல்லை, அதனால, திருவிதாங்கூர்
மாளிகைக்கு ஒரு டிக்கட் கொடுங்க, எவ்வளவு?” என்று சொன்னார். 
சரி அவருக்கு
உதவி செய்யலாம் என்று  இருப்பிடத்தினை விட்டு
எழுந்தேன் – அதற்குள் பின்னால் இருந்து இன்னுமொரு தமிழ் குரல் – அதுவும் ஒரு வட
இந்தியரிடமிருந்து.   அவரிடம் பேசி
நடத்துனருக்கு விளக்கி, அந்தப் பெரியவருக்கு பயணச்சீட்டு வாங்கிக் கொடுத்து
விட்டார். 
அவரைப்
பார்த்தால் இந்த ஊரிலேயே இருப்பவராகவும்
தெரியவில்லை.  கேரளா செல்லும் முன் தில்லியில்
வந்து என்ன செய்கிறார் என்பதும் புரியாத புதிர்தான்.  பயணம் முழுவதும் அந்தப் பெரியவரின் தன்னம்பிக்கை பற்றியே யோசித்து
வந்தேன்.  சுத்தமாக ஹிந்தி மொழி
தெரியாமல் எப்படி இவர் இந்த ஊரில் பேருந்துகளிலும், ஆட்டோவிலும் பயணம் செய்கிறார்
என்று.  என்னே ஒரு தன்னம்பிக்கை
இவரிடம் என்று யோசித்தபடியே வர, நான் இறங்க வேண்டிய நிறுத்தம் [அவரும் இறங்க
வேண்டிய அதே நிறுத்தம்] வரவும் இறங்கிக்கொண்டு அந்த  இடத்திலிருந்து அவர் செல்லவேண்டிய இடத்திற்கு நடந்து செல்ல [பத்து நிமிடங்கள்
நடைப்பயணம்] வழி சொல்லி விட்டு நான் என் இலக்கை நோக்கி நடந்தேன்.
ஒவ்வொரு
பயணத்திலும் நிறைய மனிதர்களைச் சந்திக்கிறோம்.  எத்தனை எத்தனை அனுபவங்கள்.  ஒவ்வொன்றாய் ரசித்தால் நன்றாகத் தான் இருக்கிறது இல்லையா…  பயணங்கள் தொடரட்டும்…
மீண்டும்
சந்திப்போம்….
வெங்கட்.
புது தில்லி.