எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, October 17, 2014

ஃப்ரூட் சாலட் – 110 – மனிதம் - மணி ப்ளாண்ட் - பகிர்ந்துண்போம் - காதணி
இந்த வார செய்தி:அவசர உதவிக்கு ஓடும் ஆபத்பாந்தவன்: 44 ஆண்டில் 5 ஆயிரம் உடல்களை காரில் ஏற்றிச்சென்று சேவைகடந்த 44 ஆண்டுகளில் தனது சொந்தக் காரில் வாடகை வாங்காமல் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சடலங்களை மருத்துவமனையிலிருந்து வீடுகளுக்கு ஏற்றிச்சென்று உதவியுள்ளார். நூற்றுக்கணக்கான பிரசவங்களுக்கு இலவச சேவை, விபத்து உள்ளிட்ட அவசர உதவிக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றவர்களில் நிறைய பேர் பிழைத்துள்ளனர் என்ற இந்த வியக்க வைக்கும் பட்டியலுக்குச் சொந்தக்காரர் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்த கணேசன்.ஏழை மக்களுக்கு உதவுவதையே லட்சியமாகக் கொண்ட 515கணேசன் என்று அழைக்கப்படும் 62 வயதான எஸ்.கணேசன், தனது சேவை குறித்து, ‘தி இந்துவிடம் கூறியது:குடும்பச் சூழ்நிலையால் 8-ம் வகுப்புக்குப் பிறகு படிப்பைத் தொடரமுடியாமல் அப்போதிலிருந்து பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறேன். அப்போ ஆலங்குடியில வசதியில்லாத ஒரு குடும்பத்தினர் இறந்துபோன உறவினரின் சடலத்தை காரில் எடுத்துச் செல்ல வழியில்லாம தள்ளுவண்டியில வச்சு அவங்களே வீட்டுக்கு தள்ளிக்கொண்டு போனதைப் பார்த்து மனசுக்கு ரொம்ப வேதனையாகிடுச்சு.ஊரில் 2 வாடகைக் கார் இருந்தும் அவங்க காரில் பிணத்தையெல்லாம் ஏத்துறதில்லை. இந்த சம்பவத்துக்கு அப்புறம் இரும்பு வியாபாரம் செய்து சேர்த்து வச்சிருந்த ரூ.17 ஆயிரத்தைக் கொண்டு 44 வருஷத்துக்கு முன்னாடி 515 என்ற பதிவு எண்ணுள்ள காரை வாங்கினேன்.அவசர தேவைக்காக தவிக்கிறவங்களுக்கு மட்டும் அந்தக் காரை வாடகை வாங்காமல் ஓட்டவேண்டும் என்பதே என் லட்சியம். பெரும்பாலும் பிரசவம், விபத்து, அனாதைப் பிணங்களை ஏற்றிச்செல்வதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். எத்தனையோ அனாதைப் பிணங்களை நானே குழிவெட்டி அடக்கம் செய்திருக்கேன். நானா காசு கேட்க மாட்டேன். ஒருசிலர் டீசல் போடுறதுக்கு மட்டும் காசு கொடுப்பாங்க.ஒருமுறை சென்னையில இருந்து ஒரு பிணத்தை ஏத்திக்கிட்டு வர போயிருந்தேன். ஆலங்குடியில இருந்து நான் டீசல் போட்டுக்கிட்டு வந்துட்டேன். நீங்க டீசல் மட்டும் போடுங்க. ஊருக்கு போயிருவோம் என்றேன். என்னை அங்கே வரச்சொன்ன பெண்ணிடம் கையில காசு இல்லை. டக்குனு தாலியைக் கழற்றிக் கொடுத்து இதை அடகு வச்சு டீசல் போட்டுக்கிட்டு வாங்கன்னாங்க. இதுக்காடா நம்ம கார் வாங்குனோம்னு மனசு கொதிச்சுப் போச்சு. வேண்டாம்மான்னு சொல்லிட்டு அங்கேயே கொஞ்சம் கடன் வாங்கி டீசல் போட்டுக்கிட்டு பிணத்தை ஊருக்கு கொண்டுவந்து சேர்த்தேன்.புதுக்கோட்டை மாவட்டத்துல உள்ள எல்லா போலீஸ் ஸ்டேஷன்ல யும் என்னுடைய செல்போன் நெம்பரை வச்சுருக்காங்க. இதுவரைக்கும் 5 ஆயிரத்துக்கும் அதிகமான பிணங்களை ஏத்தியிருக்கேன். உடம்பு சரியில்லாம சீரியசா இருக்கிறவங்க, விபத்துல சிக்கினவங்கன்னு நான் ஏற்றிக்கொண்டு மருத்துவமனையில் சேர்த்ததில் 1000 பேர் பிழைச்சிருப் பாங்க. சுமார் 2000-ம் பேருக்கு பிரசவத்துக்கு உதவி செஞ்சிருக்கேன்.இப்ப வச்சுருக்குறது 17-வது காரு. இதை 2 வருஷத்துக்கு முன்னாடி ரூ.40 ஆயிரத்துக்கு வாங்கினேன். பிணம் ஏத்துறதுக்குன்னே சகல வசதியோட இப்ப ஆம்புலன்ஸ் வாகனங்கள் இருந்தாலும், என்னுடைய காரும் ஓடிக்கிட்டேதான் இருக்குது. இப்போது அவ்வளவாக பிரசவ உதவி கேட்டு யாரும் வருவதில்லை.எனக்குன்னு ஒரு குழி நிலம்கூட கிடையாது. இன்றைக்கும் பழைய இரும்பு வியாபாரம்தான் செய்கிறேன். அதை வச்சுத்தான் காரை பராமரிக்கிறேன். 5 மகள்களில் 4 பேருக்கு திருமணம் செய்துவைத்துவிட்டேன். ஏழை சனங்களுக்கு இறுதிக்கட்டத துல உதவி செய்யுறது மனசுக்கு ரொம்பவும் திருப்திகரமா இருக்கு. நாம பொறந்த இந்த வாழ்க்கைக்கு ஏதோ அர்த்தம் இருக்குங்கிறத நினைக்கிறப்போ சந்தோஷமா இருக்கு. என் உயிர் இருக்கும்வரை ஏழைகளுக்காக இந்த சேவையைத் தொடர்வேன்என்றார்.-          நன்றி தி இந்து.


எல்லாவற்றிலும் பணம் பார்க்கும் மனிதர்கள் மத்தியில் இப்படியும் ஒரு நல்ல மனிதர்.  அவருக்கு இந்த வாரப் பூங்கொத்து....இந்த வார முகப்புத்தக இற்றை:Money Plant என்ற செ[கொ]டியை உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். பல வீடுகளில் இதை தொட்டியில் வைத்து அப்படியே படர விடுவார்கள்.  இது இருந்தால் பணப்புழக்கம் அதிகம் இருக்கும் என்று நம்பிக்கை!  நமது எதிர்பார்ப்பும் நிதர்சனமும் என்ன என்பதை அழகாய்ச் சொல்லி இருக்கிறது இப்படம்! பாருங்களேன்....

இந்த வார குறுஞ்செய்தி:துடிக்கும்போது யாரும் கவனிக்கமாட்டார்கள். நின்றுவிட்டால் பலரும் துடிப்பார்கள். இது தான் வாழ்க்கை!இந்த வார காணொளி:மும்பையில் டப்பாவாலாக்கள் மிகவும் பிரபலம் – அலுவலகங்களில் வேலை செய்பவர்களுக்கு மதிய உணவினை அவர்களது வீடுகளிலிருந்து எடுத்துச் சென்று ஒவ்வொரு நாளும் சரியான டப்பாவினை சரியான நபருக்கு தருவதில் இவர்களுக்கு நிகர் இவர்கள் தான். இவர்களைப் பயன்படுத்தி, அந்த டப்பாக்களில் இருக்கும் மீதமான சாப்பாட்டை ஒரு வேளை கூட உண்ண வழியில்லாத குழந்தைகளுக்குக் கொடுக்க முயற்சி எடுத்திருக்கிறார்கள் – ஒரு சின்ன ஸ்டிக்கர் உதவி கொண்டு. இந்த திட்டத்தில் பங்களிக்க விரும்புவர்கள் செய்ய வேண்டியது தங்களது டப்பாவில் “Share My Dabba” எனும் ஸ்டிக்கர் ஒட்டினால் போதும்.  பாருங்களேன் அவர்கள் எப்படி இதைச் செய்கிறார்கள் என்று.  இரண்டு காணொளிகள் இங்கே கொடுத்திருக்கிறேன் – உங்களது பொன்னான சில நிமிடங்கள் செலவானாலும் பரவாயில்லை – பாருங்கள்......

 


 முதல் காணொளியை தனது தளத்தில் பகிர்ந்திருந்த நண்பர் மெட்ராஸ் பவன் சிவா அவர்களுக்கு எனது நன்றி.ரசித்த பாடல்:கரும்பு வில் படத்திலிருந்து “மீன் கொடி தேரில் மன்மத ராஜன்பாடல் இந்த வார ரசித்த பாடலாக இதோ உங்களுக்காக! இந்த வார புகைப்படம்:


நவராத்திரி முடிந்த சமயத்தில் தொடர்ந்து சில நாட்கள் அலுவலகத்திற்கு விடுமுறை. அதைப் பயன்படுத்தி குஜராத் மாநிலத்திற்கு பயணம் செய்தேன். குஜராத் மாநிலத்தில் பல விவசாயிகளின் காதுகள் ஒரே பளபள! ஆண்களும் காதுகளில் தோடு அணிந்துகொள்கிறார்கள் – சாதாரண தோடல்ல...  பெரிய அளவில் அதுவும் காது மடலின் நடுவே.....  பாருங்களேன் எப்படி இருக்கிறது என! நிறைய இப்படி பார்த்து எனக்கும் இப்படி காதணி அணிந்து கொள்ள ஆசை – ஆனால் காதை மூடும் இதை அணிந்தால் காது கேட்காதோ என்ற அச்சத்தில் ஆசையை விட்டேன்! :) நீங்க என்ன சொல்றீங்க! 
படித்ததில் பிடித்தது:அம்மாவின் அன்பு....சொட்டச்சொட்ட மழையில் நனைந்து

வீட்டுக்கு வந்த என்னைப் பார்த்து

அண்ணன் சொன்னான்

குடையை எடுத்துப் போவதற்கென்ன

தங்கை கேட்டாள்

மழை விட்ட பிறகு வந்தாலென்ன

அப்பா கத்தினார்

ஜலதோஷம் பிடித்து அவஸ்தைப் படுவே...

என் தலையைத் துவட்டியபடி அம்மா சொன்னாள்

இந்த மழைக்கென்ன அவசரம்

என் பிள்ளை வீட்டிற்கு

வந்தபிறகு பெய்தாலென்ன-          ரசிப்பு வலைப்பூவிலிருந்து....மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..நட்புடன்வெங்கட்.

புது தில்லி.

48 comments:

 1. ஆலங்குடி கணேசன் போற்றப்பட வேண்டியவர்
  போற்றுவோம் பாராட்டுவோம்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 2. Replies
  1. தமிழ் மணம் மூன்றாம் வாக்கிற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 3. வழக்கம்போல நானும் இந்தச் செய்தியை ங்கள் பாஸிட்டிவ் பதிவுகளில் சேர்த்துக் கொண்டிருக்கிறேன்! :))) இவர் போன்ற மனிதர்கள் பற்றி நிறையப் பேர்களுக்கு அறியத் தர வேண்டும்.

  ஷேர் மை டப்பா - பாஸிட்டிவுக்கு எடுத்துக் கொள்கிறேன்! :)))
  குறுஞ்செய்தி அருமை.

  மீன்கொடி தேரில் பாடல் யேசுதாஸ் பாடியது, ஜென்சி பாடியது இரண்டுமே எனக்கும் பிடிக்கும்.

  காதணி... ஹா...ஹா..

  படித்ததில் பிடித்தது எனக்கும் பிடித்தது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   பாசிட்டிவ் செய்திகள் உங்கள் மூலம் இன்னும் பலருக்குத் தெரியும். அதில் மகிழ்ச்சி.

   சொல்லுங்க காதணி ஆர்டர் பண்ணிடலாமா!

   Delete
 4. நாம பொறந்த இந்த வாழ்க்கைக்கு ஏதோ அர்த்தம் இருக்குங்கிறத நினைக்கிறப்போ சந்தோஷமா இருக்கு. என் உயிர் இருக்கும்வரை ஏழைகளுக்காக இந்த சேவையைத் தொடர்வேன்”//

  மனிதநேயம் மிக்க உயர்ந்த மனிதருக்கு வாழ்த்துக்கள், வணக்கங்கள்.
  அம்மாவின் கரிசனம் அருமை.
  அனைத்தும் மிக நன்றாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 5. ஆலங்குடி திரு கணேசன் அவர்களைப் பற்றி படித்ததில் மனம் நெகிழ்ந்தது... அவர் பல்லாண்டு வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 6. குஜராத் மாநிலத்தில் பல விவசாயிகளின் காதுகள் ஒரே பளபள! ஆண்களும் காதுகளில் தோடு அணிந்துகொள்கிறார்கள் – சாதாரண தோடல்ல... பெரிய அளவில் அதுவும் காது மடலின் நடுவே...

  சுற்றுலா சென்றபோது பார்த்துப்பார்த்து வியந்துபோனேன் நானும்..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 7. அறிந்துகொள்ளவேண்டிய தகவல் பகிர்வுகள்..பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 8. வணக்கம் சகோதரரே.!

  மனித நேயத்தின் மறு உருவமாக திகழும் ஆலங்குடி திரு கணேசன் அவர்களுக்கு நன்றி.! குறுஞ்செய்தி மிகச்சிறப்பு.! மும்பை டப்பா வாலாக்களின் பெருந்தன்மையான செயல்களை தங்கள் காணொளி மூலம் கண்டதும் மனதை உருகச்செய்தன.! அம்மாவின் அன்பிற்குத் தனி அடையாளம் காட்டிய, படித்ததில் பிடித்த கவிதை வெகுச்சிறப்பு.! மொத்தத்தில் இந்த வார ஃப்ருட் சால்ட் அருமை.! பகிர்ந்தளித்த தங்களுக்கு வாழ்த்துக்களுடன் நன்றிகள்.!

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   Delete
 9. இப்படிப்பட்ட மனிதர்களைப் பற்றி அறியும் போது மனிதம் இன்னும் சிலரிடம் இருப்பது தெரிகிறது/
  என்னதான் பசியானாலும் கனவுகள் யாரையும் விடுவதில்லை. திரை உலகு எங்கும் ஆக்ரமிப்பு செய்திருக்கிறது. எனக்கு அந்த பணங் காய்ச்சி மணி ப்லாண்ட் பிடித்தது. தாயின் அரவணைப்பு பற்றிய கவிதை ஜோர்...!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   Delete
 10. இந்த வார பழக்கலவையில் ஆலங்குடி திரு கணேசனின் தன்னலமற்ற சேவை பற்றிய செய்தியை பகிர்ந்தமைக்கு நன்றி! அவருக்கு வாழ்த்துக்கள்! இரண்டு காணொளிகளையும் கண்டேன். டப்பா வாலாக்களுக்கு நன்றி சொல்லவேண்டும் இந்த சேவைக்காக.
  வழக்கம்போல் தங்களுக்குப் பிடித்த கவிதை எனக்கும் பிடித்தது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 11. மனிதம் இன்னும் வாழ்கின்றாது! ஆலங்குடி கணேசன் போன்ற மனிதர்களால். மாபெரும் சேவை!

  குறுஞ்ச்செய்தி நிதர்சனமான உண்மை!

  காணொளிகள் அ ருமை டாப்!

  மீன் கொடித் தேரில் நாங்களும் ரசிக்கும் பாடல் பகிர்வுக்கு நன்றி ஜி

  ஹை! உங்களுக்கும் காதில் அணிவித்துக் கற்பனை செய்து பார்த்தோம்....பரவாயில்லை நன்றாகத்தான் இருந்தது!!!!!

  படித்ததில் பிடித்தது ரொம்பவே பிடித்தது! எங்கேயோ படித்த நினைவும் கூட.....அம்மா அம்மாதான்.(தமிழ் நாட்டு அம்மா அல்ல!!)...நம்மை பெற்ற நம் அம்மாஸ்......நிகர் யாருமில்லை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   Delete
 12. சிறப்பான செய்திகள்! கவிதையும் குறுஞ்செய்தியும் ரசிக்க வைத்தன! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 13. டப்பாவாலாக்களின் சேவை போற்றுதற்குரியது.
  கவிதையை ஏற்கனவே ரசித்திருந்தாலும் மீண்டும் படித்தபோது ஒரு மன நிறைவு
  அனைத்தும் அருமை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 14. எஸ். கணேசனின் சேவை பாராட்டுக்குரியது. Share my dabba நல்ல ஏற்பாடு.

  நல்ல தொகுப்பு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 15. ஒரு நல்ல மனதை பற்றி தங்கள் மூலம் தெரிந்து கொண்டேன். அருமையான பதிவு. தொடர்ந்து இந்த மாதிரியான "மனிதருள் மாணிக்கத்தை பற்றி எழுதுங்கள், நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விசு.

   Delete
 16. ஐயா கணேசன் அவர்களை வாழ்த்துவோம்...
  இல்லாதவர்களுக்கு சாப்பாட்டை பகிரும் டப்பாவாலாக்கள் வீடியோ முன்னரே பார்த்திருக்கிறேன்.
  மணி பிளான்ட் ஹா... ஹா... நிதர்சனம்.
  தோடு சூப்பர்...
  கவிதை கலக்கல்...
  அனைத்தும் அருமை அண்ணா....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.

   Delete
 17. கரும்பு வில்லுனு எல்லாமா படம் வந்திருக்கு! சேச்சே, ஆனாலும் இந்தத் திரைப்பட விஷயங்களில் ரொம்பவே பின் தங்கி இருக்கேனோ! :))))) அனைத்தும் சுவையான பழங்கள். டப்பாவாலா செய்தி ஏற்கெனவே தெரிந்தது தான். :)))

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
 18. அருமை! மழைக்கென்ன அவசரம்! கவிதை இரசித்தேன்! ராஜாகாதுக்கு அது ஏற்காது என எண்ணுகின்றேன்! பாடல் அருமை! பகிர்விற்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   Delete
 19. //இதுவரைக்கும் 5 ஆயிரத்துக்கும் அதிகமான பிணங்களை ஏத்தியிருக்கேன். உடம்பு சரியில்லாம சீரியசா இருக்கிறவங்க, விபத்துல சிக்கினவங்கன்னு நான் ஏற்றிக்கொண்டு மருத்துவமனையில் சேர்த்ததில் 1000 பேர் பிழைச்சிருப் பாங்க. சுமார் 2000-ம் பேருக்கு பிரசவத்துக்கு உதவி செஞ்சிருக்கேன்.
  ஏழை சனங்களுக்கு இறுதிக்கட்டத துல உதவி செய்யுறது மனசுக்கு ரொம்பவும் திருப்திகரமா இருக்கு. நாம பொறந்த இந்த வாழ்க்கைக்கு ஏதோ அர்த்தம் இருக்குங்கிறத நினைக்கிறப்போ சந்தோஷமா இருக்கு. என் உயிர் இருக்கும்வரை ஏழைகளுக்காக இந்த சேவையைத் தொடர்வேன்” என்றார்.
  // இவர்களைப் போன்றவர்கள் போற்றுதலுக்குரியவர்கள்! அவரது சேவையை மனதாரப் பாராட்டுவோம்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   Delete
 20. காணொளியில் டப்பாவாலாக்களையும் ,மீன்கொடிதேரில் வந்த மன்மத ராஜாவையும் மிகவும் ரசித்தேன் )
  த ம 8

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 21. திரு கணேசன் அவர்களின் சேவையை முகநூலில் பார்த்த போது பிரதி பலன் பாராது செய்யும் உதவியை நிச்சயம் இந்த சமுதாயம் எதையாவது செய்ய வேண்டும். மனதை தொட்ட காணொளிகள் , எச்சில் பண்டத்தை கொடுப்பதை விட தன்னுடைய உணவில் ஒரு பகுதியை கொடுப்பதே சிறந்தது. நல்ல கதம்பம் .

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீனிவாசன்.

   Delete
 22. சாலட் அருமை அண்ணா! அதிலும் மனிப்ளான்ட், டப்பா வாலா கிளாஸ்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி.

   Delete
 23. நினைத்துப் பார்க்கவே முடியாத இவ்வளவு பெரிய உதவிகளை செய்துவரும் கணேசனைப் பாராட்டியே ஆக வேண்டும்.

  ஒரு காலத்தில் வானொலியில் தனித்தனியாக ஜேஸுதாஸ், ஜென்ஸி இவர்களின் குரலில் இப்பாடலைக் கேட்டிருக்கிறேன்.

  ஒன்றும் பிரச்சினை இருக்காது, தைரியமா போட்டுக்கோங்க !!

  அம்மாவின் அன்புக்கு ஈடு, இணை ஏது ? அம்மா இருப்பது கிடைத்தற்கரிய ஒரு வரம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

   Delete
 24. இப்படியும் நல்ல மனம் படைத்த மனிதர்கள் இருக்கிறார்களே!!
  இந்த வார ஃப்ரூட் சாலட் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....