எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, October 20, 2014

பாண் கங்கா – சில காட்சிகள்
மாதா வைஷ்ணோ தேவி பயணம்பகுதி 6


 நன்றி: கூகிள்

ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது!என்று சொல்வது போல, ஜெய் மாதா தி கோஷங்களை எழுப்பியபடியும், நடனமாடியபடியும் செல்வதை சென்ற பகுதியில் பார்த்தோம்.  இந்தப் பகுதியில் கொஞ்சம் மலையடிவாரத்தில் இருக்கும் “[b]பாண் கங்காபற்றியும், வேறு சில இடங்களைப் பற்றியும் பார்க்கலாம்.

[b]பாணம்  என்ற சொல்லை நாமும் பயன்படுத்தி வருகிறோம் – அம்பு என்பதைத் தான் வடமொழியில் “[b]பாண்என்கிறார்கள். இதிலிருந்து இந்த [b]பாண் கங்காவிற்கும் அம்பிற்கும் ஏதோ தொடர்பு இருப்பது உங்களுக்குப் புரியும்.  மாதா வைஷ்ணவ தேவி தான் குடியிருக்கும் குகைக்குச் செல்வதற்கு முன் தான் எப்போதும் வைத்திருக்கும் அம்புகளில் ஒன்றை எய்து கட்ராவில் கங்கையினை தோற்றுவித்தார் என்ற கதை சொல்லப்படுகிறது. 

 நன்றி: கூகிள்

ஒரு சிலர் மாதா வைஷ்ணவ தேவி இங்கே தான் தலைக்குக் குளித்து தலைமுடியை அலசினார் என்றும் அதனால் இந்த இடத்திற்குப் பெயர் “[b]பால் கங்காஎன்றும் சொல்வதுண்டு – ஹிந்தியில் ‘[b]பால்என்றால் தலைமுடி.  எது எப்படியோ, இந்த [b]பாண் கங்கா கட்ரா நகரில் எப்போதும் வற்றாது ஓடிக்கொண்டிருக்கிறது. மிகச் சில நாட்களில் மட்டுமே தண்ணீர் இருக்காது. கூழாங்கற்கள் நிறைந்த இந்த நீர்நிலையில் குளித்த பிறகே மலையேற்றத்தினைத் துவங்கும் நபர்கள் இப்போதும் உண்டு.  மற்ற சிலர் [எங்களைப் போல!] நேரடியாகவே நடக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.


நான் முதல் முறை இங்கே சென்ற போது இந்த [b]பாண் கங்காவின் குளிர்ச்சியான நீரில் குளித்து நடுங்கியபடி நின்றது இன்றைக்கும் நினைவில் – இப்போது நினைத்தால் நரம்பு வரை ஒரு குளிர்ச்சி தாக்கும் – நாங்கள் சென்றது நல்ல குளிர்காலத்தில் – அதாவது டிசம்பர்-ஜனவரி சமயத்தில்! அதிலிருந்து எப்போது சென்றாலும் நேரடி மலையேற்றம் தான்! :)

என்ன தான் குளிராக இருந்தாலும் இந்த [b]பாண் கங்காவில் குளித்த பின் தான் மலை ஏற்றம் என்ற உணர்வுடன் அங்கே சிலர் குளித்துக் கொண்டிருந்தார்கள். எல்லா புண்ணிய நதிகளில் கரையோரங்களில் எழுதி வைத்திருப்பதைப் போலவே இங்கும் “அசுத்தம் செய்யாதீர்கள்என்ற வேண்டுகோள் விடுத்திருந்தாலும் அவற்றினைக் கேட்கவோ, படிக்கவோ, செயல்படுத்தவோ யாரும் தயாராக இல்லை என்பது வருத்தமான விஷயம். இப்படி சில மக்கள் அழுக்காக்கிக் கொண்டிருக்க, நாங்கள் எங்கள் பயணத்தினைத் தொடர்ந்து கொண்டிருந்தோம். பாதையில் நமது முன்னோர்களின் தொந்தரவுகளும் அவ்வப்போது உண்டு. அதனால் யாருமே இறைவிக்குச் சமர்ப்பிக்கும் பொருட்களை கட்ராவிலிருந்து எடுத்து வருவதில்லை. அப்படி எடுத்து வந்தால் குரங்குகள்/லங்கூர் வகைக் குரங்குகள் அவற்றை தட்டிப் பறித்துக் கொண்டு நம்மை பார்த்து பல்லைக் காட்டும்!

வழியெங்கிலும் Shri Mata Vaishno Devi Shrine Board அனுமதி பெற்ற குளிர்பானக் கடைகளும், தேநீர்/காப்பி கடைகளும், சிற்றுண்டி கடைகளும் அமைந்திருக்கின்றன.  அங்கே அனைத்து வகை வட இந்திய உணவு வகைகளும் கிடைக்கும் – தோசை உட்பட! – தோசை இப்போதெல்லாம் கிடைக்காத இடமே இல்லை! அதுவும் மசால் தோசை! அதனால் இதை வட இந்திய உணவாகவே கொள்வோம்! :)உணவு வேண்டியிருக்கிறதோ இல்லையோ தண்ணீரோ அல்லது தாகம் தணிக்கும் பானங்களோ அடிக்கடித் தேவையாக இருக்கும்.  இப்படி அடிக்கடி பானங்களைக் குடித்தால் அதை வெளியேற்றவும் வசதிகள் வேண்டுமே! நல்ல வேளையாக பாதையெங்கும் நிறைய வசதிகள் இருக்கின்றன என்றாலும் அவற்றில் சுத்தம் என்பதை அதிகமாக எதிர்பார்க்க முடிவதில்லை – நாளொன்றுக்கு லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து போகும் இடமாயிற்றே! இருந்தாலும் சுத்தம் செய்வதற்கென்றே சில ஏற்பாடுகளைச் செய்தால் நல்லது.போலவே இத்தனை கடைகள் இருந்தால் அவற்றின் கழிவுகளும் இருக்கத்தானே செய்யும்.  அவற்றை எல்லாம் என்ன செய்வார்கள் என்று பார்த்தால் அப்படியே மேலிருந்து கீழே கொட்டி விடுகிறார்கள்.  பல இடங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் மலையின் மேல் மலைபோலவே குவிந்து கிடந்ததைக் காணமுடிந்தது! திருந்தாத மனிதர்கள்....

சரி சென்ற வாரத்தில் சொன்ன கதையின் தொடர்ச்சியைப் பார்க்கலாம்!

மாதா வைஷ்ணவ தேவியின் மீது ஆசை கொண்ட பைரோன் நாத் அவரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற பேராசை கொண்டிருந்தார் – அவரைத் தொந்தரவும் செய்ய ஆரம்பித்தார். அச்சமயத்தில் மாதா வைஷ்ணவதேவியின் தீவிர பக்தியாளரான ஸ்ரீதர் என்பவர் ஒரு மிகப்பெரிய “[b]பண்[d]டாராவினை ஏற்பாடு செய்தார்.  அதாவது ஊரில் உள்ள அனைவரையும் அழைத்து உணவு அளிப்பது.  அந்த “[b]பண்[d]டாராவிற்கு பைரோன் நாத், அவரது குருவான [g]கோரக் நாத் உட்பட அனைத்து கிராம மக்களையும் அழைத்தார்கள். 

அந்த இடத்திலும்  பைரோன் நாத் வைஷ்ணவ தேவியின் கைப்பிடித்து அவளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு இம்சிக்க, பலமுறை தடுத்துப் பார்த்த வைஷ்ணவ தேவி வேறு வழியில்லாது, தனது தவத்தினைத் தடையில்லாது மேற்கொள்ள திரிகூட மலையை நோக்கி பயணித்தார். 

ஆனாலும் அவரைத் தொடர்ந்து பைரோன் நாத் பின் தொடர்ந்தார்.  பிறகு என்ன நடந்தது என்பதை அடுத்த பகுதியில் சொல்லவா!

அடுத்த வாரம் வேறு சில அனுபவங்களையும் தகவல்களையும் பார்க்கலாம்... 

ஜெய் மாதா [dh]தி!

தொடர்ந்து பயணிப்போம்!

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

30 comments:

 1. பயணத்திலும் தொடர்கிறேன், கதையையும் தொடர்கிறேன்! :)))

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. தூய்மை என்பதுதான் கூட்டம் அதிகமாகக் கூடும் இடங்களில், சுத்தமாக இல்லாமல் இருக்கிறது ஐயா
  அரசு இனிமேலாவது இப்பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணவேண்டும்
  மக்களும் தூய்மையினைக் கடைபிடிக்க ஒத்துழைப்பு நல்க வேண்டும்
  அருமையான பதிவு நன்றி ஐயா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 3. Replies
  1. தங்களது வருகைக்கும் தமிழ் மணம் மூன்றாம் வாக்கிற்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 4. இயற்கைக் காட்சிகள் நிறைந்த மலைப்பகுதிபோல் இருக்கிற‌து. அசுத்தமாக்காமல் இருந்தால் அதன் அழகு நீடிக்கும். என்ன செய்வது !

  மற்றப் பதிவுகளைப் படிக்கவில்லை, நேரமிருக்கும்போது படிக்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. முடிந்த போது மற்ற பதிவுகளையும் படியுங்களேன்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

   Delete
 5. அரசு தலையிட்டால் ஓரளவேனும் பிளாஸ்டிக் கழிவு குவிந்து போவதைத் தடுக்க முடியுமே.

  தகவல்கள் மற்றும் கதையுடன் பகிர்வு அருமை. தொடருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. செய்யலாம். அரசு ஒன்றும் செய்வதாகத் தெரியவில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 6. படங்கள், தகவல்கள் ,கதை என அருமையான
  பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.,

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 7. பயணமும் கதையும் அருமையாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 8. முன்புபோல ஒவ்வொரு பதிவிலும் கருத்துரை எழுத இயலாவிடினும், தொடர்ந்து படித்து வருகிறேன்! தொடர்கின்றேன்!
  த.ம.4

  ReplyDelete
  Replies
  1. முடிந்த போது படித்து கருத்தினை பதிவிடுங்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

   Delete
 9. வணக்கம் சகோதரரே!

  தெளிவான படங்களுடன், பொறுமையாக விவரித்துச்செல்லும் இந்தப் பயணத்துடன், இனி நானும் தொடர்கிறேன்.! பார்க்க முடியாத இடங்களுக்கெல்லாம் வழி நடத்திச்செல்லும் தங்கள் பதிவுக்கு என் நன்றிகள்.! அருமையாக அதை எழுதும் தங்களுக்கு என் வாழ்த்துக்கள்.!

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   Delete

 10. தொடர்ந்து பயணித்துக்கொண்டு இருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 11. இயற்கையை சீரழிப்பதில் இந்தியர்களுக்கு குறைவில்லை! மலையழகை கெடுக்கும் மாசுக்களை கண்டு மனம் வருந்தினேன்! சுவாரஸ்யமான தொடர்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 12. #“அசுத்தம் செய்யாதீர்கள்” என்ற வேண்டுகோள் விடுத்திருந்தாலும் அவற்றினைக் கேட்கவோ, படிக்கவோ, செயல்படுத்தவோ யாரும் தயாராக இல்லை#
  பாவத்தை கழுவி விடும்போது ஆறு அழுக்காகத்தானே செய்யும் :)
  த ம 6

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 13. எத்தனை அழகான இயற்கை அன்னை குடி கொண்டிருக்கும் பகுதி! ஆனால் ஏனோ மக்கள் இப்படி அசுத்தப்படுத்துகின்றார்கள்! இயற்கை அன்னைக்கு அதனால்தான் அடிக்கடி கோபம் பொத்துக் கொண்டு வருகின்றது! பின்னே! வராதா? அதுவும் நம் இந்தியர்கள் மிகவும் மோசமோ என்றுதான் தோன்றுகின்றது! நல்ல பகிர்வு!

  அருமையான படங்கள் அதுவும் அந்த நதிப்படம் அருமை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   Delete
 14. பாண் கங்காவில் நாங்களும் குளிக்கவில்லை, குளிருக்கு பயந்து.
  அருமையான் பயண்ம தொடர்கிறேன்.
  தீபாவளி வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   Delete
 15. பாண்கங்கா பார்க்கப் பரவசம்! நுரைத்துக் கொண்டு
  பாய்வது பார்க்க அழகாக இருகிறது!

  மலையடிவாரத்து மக்காத குப்பை அநியாயம்.
  பாவம் விலங்கினங்கள்!
  பல்லிளிக்கும் மந்தியர்தான் மனதிற்குப் பயமான ஒன்று எனக்கு!

  ஈழத்தில் இருந்தபோது திருகோணமலை கோணேஸ்வரர் கோவிலுக்குப்
  போகும்போது கொண்டுபோகும் பூசைப் பொருட்களைக்
  காப்பற்றப் பட்ட பாடு நினைவில் வந்து போனது!
  வைஷ்ணவி தேவி வரலாறு சுவாரஸ்யம்!

  தாமதிப்பினும் தொடருகிறேன் இன்னும்..! வாழ்த்துக்கள் சகோதரரே!

  ReplyDelete
  Replies
  1. பல்லிளிக்கும் மந்தியர் - கொஞ்சம் பயமாகத்தான் இருக்கும்.... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....