திங்கள், 28 மே, 2018

குஜராத் போகலாம் வாங்க – அடலஜ் கி வாவ் – இன்னுமொரு படிக்கிணறு



இரு மாநில பயணம் – பகுதி – 44

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


தண்ணீரில் பிம்பம்.... கூடவே வெள்ளையாய் சிறு சிறு புள்ளிகள் - 
அது என்ன? இதைப் புகைப்படப் புதிராக வைத்துக் கொள்ளலாம்!
அடலஜ் கி வாவ்....

காந்திஜியின் சபர்மதி ஆஸ்ரமத்திலிருந்து புறப்பட்டு அடுத்ததாய் நாங்கள் சென்ற இடம் ஒரு படிக்கிணறு – அஹமதாபாத் நகரின் எல்லைக்குள்ளேயே அமைந்திருக்கும் இந்த படிக்கிணற்றின் பெயர் அடலஜ் கி வாவ்.  இந்தப் பயணத் தொடர் ஆரம்பிக்கும் போது எழுதிய ராணி கி வாவ் பதிவுகள் உங்களுக்கு நினைவிலிருக்கலாம். இல்லாதவர்கள் மீண்டும் ஒரு முறை படித்து, படங்களைப் பார்த்து விடுவது நல்லது – அந்த படிக்கிணற்றுக்கும் இந்த படிக்கிணற்றுக்கும் இருக்கும் வித்தியாசங்கள் உங்களுக்குப் புலப்பட ஏதுவாக இருக்கும். அடலஜ் கி வாவ் – இங்கே என்ன இருக்கிறது, இந்த இடத்தில் எங்களுக்குக் கிடைத்த அனுபவங்கள் என்ன என்பதைப் பார்க்கலாம்.







அடலஜ் – அஹமதாபாத் நகரிலிருந்து சுமார் 19 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு சிறிய ஊர். இங்கே தான் அமைந்திருக்கிறது அடலஜ் கி வாவ் அல்லது ரூதாபாய் வாவ்! அடலஜ் என்பது இந்த ஊரின் பெயர் என்றால், ரூதாபாய் யார்? இந்த படிக்கிணற்றினை அமைத்த ராணி தான் ரூதாபாய். வகேலா ராஜாக்களில் ஒருவரான வீரசிம்ஹா என்பவரின் பட்டத்தரசி இந்த ரூதாபாய். 1499-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த படிக்கிணறு ராணி கி வாவ் அளவுக்கு இல்லையென்றாலும் ஐந்து நிலைகளில் அழகிய வேலைப்பாடுகள் கொண்ட அறுகோண வடிவக் கிணறு. மூன்று பக்கங்களிலிருந்து படிகள் கீழே இறங்கி முதலாம் நிலையில் ஒன்று சேர, பிற்கு அதன் கீழே நான்கு நிலைகள்.






அந்தக் காலத்தில் இந்த வழியே பயணிக்கும் நபர்களும், வியாபார நோக்கமாக இவ்வழிச் செல்லும் வியாபாரிகளும் கொஞ்சம் தங்கி இளைப்பாறிச் செல்ல ஏதுவாக இருந்த இடம் இந்த இடம். கிணற்றுக்கு மேலே திறப்பு இருந்தாலும், சூரியனின் கிரணங்கள் நேரடியாக கிணற்றுக்குள் வருவதில்லை – மதிய நேரத்தில் சில நிமிடங்கள் தவிர. அதனால் கிணற்றின் இரண்டாவது மூன்றாவது நிலைகளில் வெளியே இருக்கும் வெப்பத்தை விட ஆறேழு டிகிரி குறைவாகவே, குளிர்ச்சியாக இருக்கும்படி அமைத்திருக்கிறார்கள். இங்கே தண்ணீர் பிடிக்க வரும் பெண்கள், தண்ணீர் எடுத்துக் கொண்டு தங்களுக்குள் அளவளாவி, பொது விஷயங்கள் பேசிச் செல்வார்களாம். இப்போதும் தண்ணீர் இருக்கிறது என்றாலும் இங்கே தண்ணீர் எடுத்துக் கொண்டு செல்பவர்கள் யாரும் இல்லை!








நிறைய சிற்பங்களும், அழகிய வடிவங்களும் இங்கே அமைக்கப்பட்டு இருக்கின்றன. இங்கே புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்த போது ஒரு வெளிநாட்டு இளைஞரையும் இளைஞியையும் பார்த்தோம். ஒரு பெரிய கல் உத்தரம் [BEAM] ஒன்றில் அந்த இளைஞி தலைகீழாகத் தொங்க, அந்த இளைஞர் விதம் விதமாக புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். அந்தக் காட்சி புகைப்படம் எடுக்கத் தூண்டினாலும், அது சரியல்ல என்பதால் அங்கிருந்து அந்த இளைஞரை நோக்கி புன்னகைத்தபடியே கடந்தோம். இங்கே சிற்பங்களை விட வடிவங்களே நிறைய இருந்தது போன்று ஒரு உணர்வு. இந்தப் படிக்கிணற்றின் அருகே ஒரு சிறு கோவில். அங்கேயும் சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.








வெளியே நிறைய நடமாட்டம், சிறு சிறு கடைகள் என மும்மரமாக இருக்கிறது அடலஜ். அங்கே ஒரு தள்ளு வண்டியில் இரு பெண்கள் இளநீர் மற்றும் கொய்யா விற்றுக் கொண்டிருக்க, இளநீர் அருந்தலாம் என்றும், கொஞ்சம் கொய்யா வாங்கிக் கொள்ளலாம் என்றும் நினைத்தோம். வண்டியின் ஓரத்தில் தனது புடவையால் ஒரு சிறு தூளி கட்டி அங்கேயே தனது குழந்தையைக் கட்டி வைத்திருந்தார் அந்தப் பெண்மணி. இளநீர் வெட்டிய ஒரு சிறு துண்டை வைத்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்த அந்தக் குழந்தையையும், இன்னுமொரு சிறுவனையும் புகைப்படம் எடுத்துக் கொண்டோம். நண்பர் அந்தப் பெண்மணிகளையும் புகைப்படம் எடுத்துக் கொண்டார் – அப்போது அங்கே வந்த பெண்மணியின் கணவர் – “விறுவிறுன்னு வேலையைப் பார்க்காம என்ன பேச்சு?” என்று கடிந்து கொண்டார்.









இளநீர் குடித்து, கொய்யா வாங்கிக் கொண்ட பிறகு அங்கிருந்து புறப்பட்டோம். வண்டியில் ஏறிக் கொண்ட பிறகு தான் ஓட்டுனர் முகேஷ், பெண்மணியைப் புகைப்படம் எடுத்த நண்பரிடம் ஹிந்தியில் சொன்னார் – அந்தப் பெண்மணியை நீங்கள் புகைப்படம் எடுத்தது சரியல்ல – அதைச் சொல்லித் தான் அந்தப் பெண்ணை அவரது கணவர் திட்டினார் என்று! நல்ல வேளை எதுவும் பிரச்சனை ஆகவில்லை. அதனால் தான் நான் எப்போதுமே புகைப்படம் எடுக்கும்போது கொஞ்சம் முன் ஜாக்கிரதையாகவே இருப்பேன். வெளியூர் சென்றிருக்கும் போது, அதுவும் வேற்று பாஷை பேசும் ஊருக்குச் செல்லும் போது இந்த மாதிரி புகைப்படங்கள் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.  நண்பரிடம் சொல்ல, அவரும் அவரது தவறை உணர்ந்தார்.




காலா நமக் எனும் மசாலாவுடன் கொய்யாயைச் சுவைத்தபடியே அங்கிருந்து பயணித்தோம். அடுத்ததாய் நாங்கள் சென்ற இடம் எது, அங்கே என்ன சிறப்பு என்பதைச் சொல்வதற்கு முன்னர் ஒரு விஷயத்தினைச் சொல்லி விடுகிறேன் – இந்த இடத்திற்கு நிச்சயம் செல்ல வேண்டும் என நண்பர் திட்டமிட்டு வந்தார் – அது என்ன இடம், அடுத்த பகுதியில் சொல்கிறேன்.

தொடர்ந்து பயணிப்போம்.
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

38 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!!

    படங்கள் எல்லாம் முன்பு போட்ட படங்கள் போல இது வேறு ஒரு இடம் போல இருக்கே படங்கள் சூப்பர்!! பதிவு பார்க்கிறேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீதா ஜி! இது வேறு ஒரு படிக்கிணறு!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  2. முன்பு போட்டது ராணி கி வாவ் இலையோ அப்படித்தான் நினைவு! அந்தப் பெயர்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீதா ஜி - அது ராணி கி வாவ், இந்தப் பதிவு - அடலஜ் கி வாவ்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  3. குட்மார்னிங் வெங்கட். ராணி கி வாவ் படங்களையும் விவரங்களையும் உங்கள் பதிவில் பார்த்திருக்கிறேன். மிகவும் கவர்ந்தது அது. இப்போது இது. கிணறுகளைத்தான் எவ்வளவு அழகாக அமைக்கிறார்கள்? இது போல இன்னும் நிறைய இருக்கிறதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம். குஜராத்தில் நாங்கள் பார்த்த படிக்கிணறுகள் இவை இரண்டு மட்டுமே. இன்னும் சில இடங்களில் இருக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. வெங்கட்ஜி படங்கள் பிரமிப்பு!!! அப்படியே பார்த்துக் கொண்டிருந்தேன். ஹயோ என்ன கலை அழகு! ஒரு கிணற்றிற்கு இப்படி ஒரு அழகான கலைநயத்துடன் ஒரு கட்டிடம் படைத்த அந்த ராணி ரூதாபாய் வாழ்க! தண்ணீர் எப்போதும் இருக்குமோ?!! கலைப்பொக்கிஷமாக ஒரு கிணறு!!! வாவ்! அதிசயித்துப் போனேன். இடம் மிக மிக அழகாக இருக்கிறது. நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கணுமே என்று வேண்டுதலும்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேரில் பார்க்க உங்களுக்கும் வாய்ப்பு அமையட்டும். நிச்சயமாக கலைப் பொக்கிஷம் தான். தண்ணீர் இருந்து கொண்டிருக்கிறது என்றாலும் பயன்படுத்துவதில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  5. ஆறேழு என்று இருக்க வேண்டியது ஏறேழு என்று இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், நானும் சொல்ல நினைச்சேன். ஶ்ரீராம் சொல்லிட்டார். :)

      நீக்கு
    2. சுட்டிக் காட்டியமைக்கு நன்றி ஸ்ரீராம். மாற்றி விட்டேன்.

      நீக்கு
    3. ஹாஹா... ஸ்ரீராம் சொன்னதைப் பார்த்த உடன் மாற்றி விட்டேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  6. குழந்தை படம் மிக அழகு. அந்த வெளிநாட்டு ஜோடி.. ஏன் அந்தப் பெண் அப்படி ஒரு போஸ் கொடுத்து போட்டோ எடுத்துக் கொண்டாரோ?!!

    புகைப்படங்கள் தெளிவாக, அழகாக உள்ளன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏன் அப்படி எடுத்துக் கொண்டார் என்று தெரியவில்லை. கேட்கவும் முடியவில்லை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  7. வெங்கட் ஜி அந்தத் தண்ணீரில் வெள்ளை நிறம் மேலே இருக்கும் அடைப்பில் உள்ள சிறிய சிறிய ஓட்டைகளின் வழி வரும்சூரிய வெளிச்சமோ?!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெள்ளை நிறம் - சூரிய வெளிச்சம் அல்ல! அவை வேறு! என்ன என்று யாராவது சொல்கிறார்களா பார்க்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  8. ஆமாம் ஜி நானும் மனிதரளை குறிப்பாகப் பெண்களைப் புகைப்படம் எடுப்பதற்கு மிகவும் யோசிப்பேன். பெரும்பாலும் பிடித்தாலும் தவிர்த்துவிடுவேன். அக்குழந்தைகள் அழகு!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான். சில சமயம் பிரச்சனைகள் வரும் என்பதற்காகவே தவிர்த்து விடுவேன். அதுவும் நமக்குத் தெரியாத இடத்தில் என்றால் நிச்சயம் நோ நோ தான். தூரத்திலிருந்து Candid ஆக எடுக்க முடிந்தால் எடுத்ததுண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  9. நான் பெரும்பாலும் செல்லும் இடம் தவிர்த்து, தற்செயலாக அங்கே குறுக்கிடும் மனிதர்கள் தவிர யாரையும் படம் எடுத்ததில்லை. (ஹிஹிஹி, படம் எடுக்கத் தெரிந்தால் தானே! ம.சா. கூவல்!) :)))))))))))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மன சாட்சியின் கூவல்! ஹாஹா.... அவ்வப்பொழுது இப்படி வந்து கூவல் கொடுப்பது வழக்கம் தானே அனைவருக்குமே!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  10. மிக அழகாகக் கலை நேர்த்தியுடன் கட்டப்பட்டுள்ளது. சிற்பங்கள் வட நாட்டுக் கட்டிடக் கலையைப் பிரதிபலிக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கலை நேர்த்தியுடன் வடிவமைக்கப்பட்ட இடம் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

      நீக்கு
  11. //தண்ணீரில் பிம்பம்.... கூடவே வெள்ளையாய் சிறு சிறு புள்ளிகள் -
    அது என்ன? இதைப் புகைப்படப் புதிராக வைத்துக் கொள்ளலாம்!
    அடலஜ் கி வாவ்....// அட, இதைக் கவனிக்கவே இல்லை. வெள்ளிக்காசுகளாய் விழுவது சூரிய ஒளி?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெள்ளிக்காசுகளாய் விழுவது சூரிய ஒளி - இல்லை. வேறு.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  12. கல்லில் உள்ள சிற்பங்கள் ஆச்சர்யமளிக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  13. பதில்கள்
    1. உண்மை தான் தனபாலன் - எத்தனை வேலைப்பாடு இந்த சிற்பங்களில்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  14. வாவியில் இருக்கும் சிற்பங்கள் - அசரடிக்கிறது. குழந்தை மற்றும் பையனில் போட்டோக்கள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அசரடிக்கும் சிற்பங்கள் - உண்மை - இரண்டு வாவ்களில் எனக்குப் பிடித்தது ராணி கி வாவ்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  15. பார்க்கவே ரம்மியமாக இருக்கிறதே! வெங்கட்ஜி. உங்கள் வழியாகத்தான் பல இடங்களைப் பற்றி அறிய முடிகிறது. மிக அழகான படங்கள். வேலைப்பாடுகள் பிரமிக்க வைக்கிறது. பராமரிப்பும் நன்றாக இருப்பது போல் தெரிகிறது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேலைப்பாடுகள் சிறப்பாக இருப்பதுடன் பராமரி்ப்பும் மற்ற இடங்களை விட பரவாயில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

      நீக்கு
  16. முதல் படத்துக்கான புதிர் மீன்களுக்கு போட்ட பொரி..

    தூளியில் இருக்கும் பாப்பா செம அழகு...

    கல்லிலே கலைவண்ணம் கண்டார்ன்னு பாட்டு இங்கயும் பொருந்தும்போல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீன்களுக்குப் போட்ட பொரி - நல்ல கற்பனை - ஆனால் விடை அதுவல்ல!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

      நீக்கு
  17. வணக்கம் சகோதரரே

    கலை பொக்கிஷங்களாக அனைத்து படங்களும் இருந்தது.
    கல் தூண்களும், அதில் கலைநயம் மிக்க சிற்பங்களும் கண்ணையும், மனதையும் கவர்கின்றது. ஒவ்வொரு இடமும் அருமை.
    பிள்ளையார் சிலை மிகவும் நன்றாக உள்ளது.
    கடைசியாக குழந்தைகள் படமும் அழகாக இருந்தது. தங்கள் பதிவின் மூலம் நாங்களும் பல இடங்களைப் பற்றி விபரமாக அறிந்து கொள்கிறோம்.
    பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒவ்வொரு சிற்பமும் சிறப்பாகவே வடித்திருக்கிறார்கள். அனைத்தும் ரசிக்கத்தவை தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு
  18. கிணற்றுக்குள் காசு போட்டிருக்கிறார்களோ?..

    அழகிய படங்கள்.. வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிணற்றுக்குள் போடப்பட்டிருப்பது காசு தான் ஐயா. நீங்கள் சொன்ன விடை சரியானது தான்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....