திங்கள், 15 ஜூலை, 2019

திறமைசாலிகள் – ஒரு அறிமுகம்


இது உங்களுக்கே நல்லா இருக்கா? தமிழ் வலைப்பூ தானே உங்களுடையது? இதுல என்னமோ ஜாங்கிரி ஜாங்கிரியா எழுதி இருக்கும் ஒரு படத்தை முதல் படமா போட்டா என்ன அர்த்தம்? எல்லாருக்கும் கில்லர்ஜி மாதிரி, நரசிம்மராவ் மாதிரி பல மொழிகள் தெரிந்திருக்குமா என்ன? மேலே எழுதி இருப்பது தமிழ் இல்லை என்று எங்களால் கண்டிப்பாகச் சொல்ல முடியும்! என்ன மொழின்னு நீங்களே சொல்லிடுங்க சரியா?


மேலே சொன்னது போல யாரும் பதறிப் போய் வார்த்தைகளைக் கொட்டுவதற்குள் நானே சொல்லி விடுகிறேன். மேலே உள்ளது தெலுங்கு எழுத்துக்கள்! அப்படி என்னதான் அதில் எழுதி இருக்கிறது? அதையும் சொல்லி விடுகிறேன். மேலே எழுதி இருக்கும் வார்த்தைகளின் தமிழாக்கம் இது தான்.

திருமலா திருப்பதி தேவஸ்தானம்
தாஸ ஸாஹித்ய ப்ரொஜெக்ட்
ஸ்ரீ பக்த ஆஞ்சனேயா & ஸ்ரீ ஸ்ரீனிவாஸ கோலாட்ட சமாஜம்
அரிகி ரேவுலா, கொவ்வூரு மண்டலம், வடக்கு கோதாவரி மாவட்டம்

சமீபத்தில் ஹரியானாவில் உள்ள குருக்ஷேத்திரம் சென்று வந்தது பற்றி சில பதிவுகளில் குறிப்பிட்டு இருந்தேன். அங்கே பிரஹ்ம சரோவர் அருகிலேயே திருமலா திருப்பதி தேவஸ்தானம் மிகவும் பெரிய, அழகிய திருப்பதி பாலாஜி கோவில் கட்டியிருக்கிறது என்பதையும் அங்கே சமீபத்தில் நடந்த பிரஹ்மோத்ஸவ நிகழ்ச்சிக்காக நண்பர்களுடன் அங்கே பயணித்து வந்ததையும் சொல்லி இருந்தேன். அந்த நிகழ்ச்சியில் மாலை சிம்ஹ வாகனத்தில் பெருமாள் கோவில் வளாகத்திலேயே திருவீதி உலா வர இருந்தார்.  அதற்கு முன்னர் ஊஞ்சல் உற்சவம்.  பெருமாள், பத்மாவதி தாயார் மற்றும் ஆண்டாளுடன் இணைந்து ஊஞ்சலில் அமர்ந்தபடியே பக்தர்களுக்கு அருள் பாலித்தார்கள். ஊஞ்சல் உற்சவம் முடிவதற்கும் கோவில் வாசலில் இருந்து உற்சாகமான மேளச் சப்தம். ஆஹா வித்தியாசமாக இருக்கிறதே என்ன விஷயம் எனப் பார்க்கலாம் என வாசலுக்கு விரைந்தேன்.




உலா வரும் இறைவனுக்கு முன்னர், ஆடிப்பாடி மகிழ்ச்சியாகக் கொண்டாட ஒரு கோலாட்டக் குழுவும் கூடவே வாத்தியக் குழுவும் வந்திருந்து தங்களது திறமைகளைக் காண்பித்துக் கொண்டிருந்தார்கள். வாத்தியக் குழுவில் பெரும்பாலானவர்கள் இளைஞர்களும் இளைஞிகளும்! அந்த பெரிய மேளத்தினை தூக்குவதே பெரிய விஷயம். அதனை கழுத்தில் மாட்டிக் கொண்டு உற்சாகமாக, தாள லயத்துடன், சிறப்பாக வாசித்துக் கொண்டிருந்தார்கள். சிம்ஹ வாகனத்தில் உற்சவ மூர்த்தியை புறப்பாட்டிற்காக அலங்காரம் செய்து முடிக்கும் வரை இக்குழுவினரின் கொண்டாட்டம் தான்! இந்த மாதிரி வாத்திய இசையைக் கேட்டிராத குருக்ஷேத்திர மக்கள் அங்கேயே நின்று கொண்டு இசையை ரசித்தார்கள். பல அலைபேசிகள் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தன – நிழற்படங்களும், காணொளிகளும் தொடர்ந்து எடுத்துக் கொண்டிருந்தார்கள்.











நானும் சில படங்களை எடுத்தேன். அலைபேசியில் ஒரு காணொளியும் எடுத்தேன். நான் எடுத்த படங்களில் சிலவும், காணொளிகளும் இப்பதிவில் இணைத்திருக்கிறேன். சிம்ஹ வாகனத்தில் இறைவனின் வீதி உலா ஆரம்பிக்கு முன்னரே, குழுவினரில் ஒருவர் நரசிம்ஹ வேடமிட்டபடி வர பக்தர்களிடையே ஆரவாரம். ஆடி முடித்தபின் அந்த மனிதருடன் செல்ஃபி எடுக்க நிறைய போட்டி! இந்த மாதிரி குழுவினரைப் பார்த்திருக்காதவர்களுக்கு இது புதுமையான விஷயம் தானே! நிறைய செல்ஃபி பிள்ளைகள் உருவானார்கள். அதனால் வட இந்தியர்கள் இடையே பலத்த போட்டி – வேறெதற்கு - நரசிம்ஹ வேடமிட்ட மனிதருடன் செல்ஃபி எடுத்துக் கொள்ளத்தான். இங்கே செல்ஃபி செஷன் நடந்து கொண்டிருக்க, ஒரு வழியாக சிம்ஹ வாகனத்தில் பெருமாள் வீதி உலா புறப்பட்டார். வாகனத்திற்கு முன்னர் குழுவினரின் கோலாட்டமும் இசையும் தொடர்ந்தது.







நான் படங்கள் எடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து, குழுவினரில் ஒருவர் அவர்களுக்குப் புகைப்படங்களை எடுத்துத் தர முடியுமா எனக் கேட்க, சில படங்களை எடுத்து அவர்களுக்குக் காண்பித்தேன். குழுவினரில் ஒருவரின் அலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டு தில்லி வந்த பிறகு அவர்களுக்கு வாட்ஸப்-இல் அனுப்பியும் வைத்தேன். ஏதோ நம்மால் முடிந்த வகையில் அக்குழுவினருக்கு மகிழ்ச்சி தர முடிந்ததில் ஒரு சந்தோஷ உணர்வு! அவ்வளவு தானே வாழ்க்கை.


எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே

அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே

தாயுமானவர் - (பராபரக்கண்ணி - 221)




பதிவு, படங்கள் பற்றிய உங்கள் எண்ணங்களை பின்னூட்டத்தில் தெரிவிக்கலாமே! விரைவில் வேறு ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

நட்புடன்

வெங்கட்
புது தில்லி

38 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!

    கீதா

    பதிலளிநீக்கு
  2. ஜி நினைவிருக்கிறது குருஷேத்ரம் சென்றது பற்றி சொல்லியிருந்த பதிவில் திருப்பதி கோயில் அங்கும் ப்ரம்மசரோவர் பற்றி சொன்னது எல்லாம்.

    முதல் படம் தெலுங்கு என்று தெரிந்துவிட்டது!

    அட! இளம் பெண்களும் மேளம் வாசிக்கின்றார்களே அதுவும் அதைக் கழுத்தில் தொங்கவிட்டுக் கொண்டு! நல்ல பலம் வேண்டும் இதற்கு.

    வடக்கில் இதெல்லாம் புதிதாகத்தான் இருந்திருக்கும்.

    படங்கள் எல்லாமே அருமை. காணொளியும் அதில் நடனமாடும் நரசிம்ம வேடம் இட்டவர் என்று நன்றாக இருக்கிறது ஜி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீதாஜி! அத்தனை இளம் பெண்களும் ஒரு உத்வேகத்துடன் வாசித்தார்கள். கழுத்தில் தொங்க விட்டுக்கொண்டு - ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இப்படி வாசிக்க நிறையவே பொறுமையும், பலமும் வேண்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. இனிய காலை வணக்கம் வெங்கட்.
    வெகு நாட்கள் உங்கள் பதிவைப் படிக்காத மாதிரி இருந்தது. நீங்கள் பதிவு
    போட்டு நான் பார்க்கவில்லையா.

    வெங்கடேசன் திருக்கோவில் உற்சவக்காட்சிகள் பிரமாதம்.
    அதுவும் அந்த ட்ரம் அடிப்பவர்களின் உற்சாகம்
    ஆனந்தம். கோலாட்டக்காட்சிகளோடு திருப்பதியையே

    அங்கு கொண்டு வந்து விட்டார்கள்.
    மிக நன்றி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் வல்லிம்மா... கடந்த 3-ஆம் தேதிக்குப் பிறகு நான் பதிவுகள் எதுவும் எழுதவில்லைம்மா... வேலை அதிகம் என்பதால் இங்கே வரவோ, எழுதவோ இயலவில்லை.

      உற்சவக் காட்சிகள் உங்களுக்கும் மகிழ்ச்சி அளித்ததில் எனக்கும் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. குட்மார்னிங்.

    உங்களுக்கு தெலுங்கு எழுதப்படிக்கத் தெரியுமா? அட...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் ஸ்ரீராம்.

      ஹிஹி.... எனக்கு தெலுங்கு கன்னடம் இரண்டுமே ஜாங்கிரி தான். இது தெலுங்குப் பெண்மணி ஒருவரிடம் கேட்டு எழுதியது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. இளைஞர்களும், இளைஞிகளும் இதில் சிறந்திருப்பது வரவேற்கத்தக்க ஒன்று. அவர்களின் ஆர்வம் வாழ்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை ஸ்ரீராம். இளைஞர்களும் இக்குழுவில் இருந்ததில் எனக்கும் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. அந்த வாத்தியக்காரர்களின் முகங்கலில் காணப்படும் மகிழ்ச்சியே .. மகிழ்ச்சி...

    நல்லோர் அனைவரையும் நம் பெருமாள் காத்தருள்வாராக!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அவர்களது மகிழ்ச்சி நம்மையும் தொற்றிக் கொள்ளும் மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஜி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. படங்கள் அருமை ஜி பெண்கள் இவ்வளவு பெரிய ட்ரம்ஸ் அடிப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. ஏற்கனவே உங்களது பதிவில் பார்த்தும் இருக்கிறேன்.
    காணொளி கண்டேன்.

    நரசிம்மராவையும், என்னையும் ஒன்றிணைப்பது மறைமுகமாக என்னை அவரைப்போல் புன்னகை மன்னன் என்று சொல்வது போல் இருக்கிறது ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா.... மொழிப் புலமைக்கு மட்டுமே அந்த ஒப்புமை கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. அழகான படங்களுடன் கூடிய விபரமான பதிவுக்கு வாழ்த்துகள் புது மடிக்கணினி வாங்கியாச்சா? பழசையே சரி பண்ணிட்டீங்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதே கணினி தான். தாஜா செய்து வேலை வாங்கிக் கொண்டிருக்கிறேன் கீதாம்மா.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. புகைப்படங்களும் அவற்றைப்பற்றிய விஸ்தரிப்பும் அருமை! சில இளைஞர்களின் அசாத்திய கலைத்திறமைகளை அவ்வப்போது பார்க்கும்போது மிகவும் பிரமிப்பாக இருக்கும். இந்த இளைஞர்களும் பிரமிக்க வைக்கிறார்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரமிக்க வைக்கும் பல இளைஞர்களை பார்க்கும்போது நமக்கும் மகிழ்ச்சி மனோ சாமிநாதன் மேடம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  11. மகிழ்ச்சியான காட்சிகள் ...அனைத்தும் அழகு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனு ப்ரேம்.

      நீக்கு
  12. படங்கள் அருமை. அதைவிட வாத்தியம் வாசிப்பவர்களில் உற்சாகம் நமக்கும் தொற்றிக்கொள்வதுபோல இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசிப்பவர்களின் உற்சாகம் நம்மையும் பற்றிக் கொள்வது உண்மை நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை. சே. குமார்.

      நீக்கு
  14. திருமலா தேவஸ்தானம்பெயரில்பல இடங்களில் கோவில்களிருக்கின்றன

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தக் கோவில் அவர்களுடைய நிர்வாகத்தில் தான் இயங்குகிறது ஜி.எம்.பி. ஐயா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  15. //
    நம்மால் முடிந்த வகையில் அக்குழுவினருக்கு மகிழ்ச்சி தர முடிந்ததில் ஒரு சந்தோஷ உணர்வு! அவ்வளவு தானே வாழ்க்கை. //


    அருமையாக சொன்னீர்கள்.

    படங்களை பார்த்து மகிழ்ந்து போய் இருப்பார்கள் என்பது உணமை.

    படங்கள் எல்லாம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களை அனுப்பி வைத்ததில் அவர்களுக்கும் மகிழ்ச்சி தான் கோமதிம்மா....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  16. படங்களில் மட்டுமல்ல, எழுத்துக்களிலும் மகிழ்ச்சி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  17. அந்த இளைஞர்களின் உற்சாகம் நம்மையும் தொற்றிக் கொண்டது உண்மை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் பத்மநாபன் அண்ணாச்சி. எத்தனை துடிப்பு அவர்களிடத்தில்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  18. மிகவும் அருமையான படங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி!

      நீக்கு
  19. அன்புள்ள வெங்கட் ஜி.. வழக்கம் போல் நல்ல பதிவு.

    ஒரு சிறு மாற்றம்... தெலுங்கு என்பது சரியான வார்த்தை கிடையாது... தெலுகு எனபதே சரி. அவர்கள் தெலுகு மக்கள் மற்றும் அவர்களது மொழி தெலுகு..

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெலுங்கு தெலுகு இரண்டுமே இன்றைக்கு வழக்கில் இருக்கிறது ஜி. அதனால் அப்படியே எழுதி இருக்கிறேன் ஜி. சுட்டிக் காட்டியதற்கு நன்றி பொன். பாரதிராஜா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....