சனி, 27 ஜூலை, 2019

வாங்க பேசலாம் – பிங்க் ஸ்லிப் - நாளைல இருந்து வேலைக்கு வராதே...



அன்பின் நண்பர்களுக்கு இனிய காலை வணக்கம். ”வண்ணங்களில் இல்லை வாழ்க்கை… மனித எண்ணங்களில் உள்ளது வாழ்க்கை” என்று சமீபத்தில் ஒரு வாசகத்தினை படித்தேன். வண்ணங்கள் – ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வண்ணம் பிடிக்கும். மகளுக்கு சிறு வயதில் பிங்க் நிறம் ரொம்பவே பிடிக்கும். எல்லாமே பிங்க் நிறத்தில் வேண்டும் என்பார்! கடைக்குப் போய் துணி வாங்கினால் பெரும்பாலும் அந்த வண்ணத்தில் உள்ள உடையைத் தான் பிடித்ததாகக் காண்பிப்பார். இப்போது இந்த வண்ணம் பிடிக்காமல் போயிருக்கலாம்! ஆனால் இந்த வண்ணத்தின் ஒரு வித பயன்பாடு பற்றி தான் இன்றைக்கு இங்கே பார்க்கப் போகிறோம்.

 
ஆங்கிலத்தில் இந்த பிங்க் வண்ணத்தின் பயன்பாடு உங்களுக்குத் தெரிந்திருக்கலாம் – “John is in the pink” என்று சொன்னால் ஜான் நல்ல உடல் நலத்தோடு, ஆரோக்யமாக இருக்கிறார் என்று அர்த்தம். அதே வேளையில் “John got a pink slip”, என்பதற்கு அர்த்தம் ஜானை திடீரென வேலையை விட்டுத் தூக்கி விட்டார்கள் என்பது! பொதுவாக தனியார் நிறுவனங்கள் பலவற்றில் இப்படித்தான் எதிர்பாராத ஒரு வேளையில் நிறுவனத் தலைவர் அவரிடம் வேலை பார்ப்பவரை அழைத்து “நாளைல இருந்து நீ வேலைக்கு வர வேண்டாம்பா” என்று சுலபமாகச் சொல்லி விடுவது வழக்கம். இந்த மாதிரி pink slip கொடுப்பது எப்போதிருந்திலிருந்து ஆரம்பித்தது எனத் தேடினால் பிரபல மோட்டார் கம்பெனியான ஃபோர்ட் நிறுவனத்தில் ஆரம்பித்தது என்று இணையம் சொல்கிறது – இது செவி வழி செய்தி என்ற குறிப்போடு.



ஃபோர்டு கம்பெனியில் வேலை செய்யும் எல்லாப் பணியாளர்களுக்கும் தங்களது உடமைகளை வைத்துக் கொள்ள சிறு பெட்டிகள் உண்டு – வரிசையாக பெட்டிகள் இருக்கும் – அவரவர் பெட்டியில் உடைமைகளை வைத்து விட்டு வேலை செய்யும் தளத்திற்குப் போவார்கள். மாலை நேரத்தில் வீடு திரும்பு முன் பெட்டியில் வெள்ளை நிற காகிதம் இருந்தால் – அன்றைய அவரது வேலை சரியாக இருந்தது. பிங்க் நிற காகிதம் இருந்தால் அவரது வேலை சரியில்லை – நாளையிலிருந்து நீ வர வேண்டாம் என்ற அறிவிப்பு! இப்படித்தான் இந்த பிங்க் ஸ்லிப் பயன்பாடு ஆரம்பித்திருக்க வேண்டும் என்று செவி வழி செய்தி என்று கண்டுபிடித்திருக்கிறார் ஒருவர். இந்த பிங்க் ஸ்லிப் பயன்பாடு பற்றி தேடிய போது ரெட் டேப் பயன்பாடு பற்றியும் கண்டுபிடித்திருக்கிறார் – சிவப்பு வண்ணத் துணியில் முக்கியமான கோப்புகளைக் கட்டி வைப்பது வழக்கமாக இருந்திருக்கிறது – அது அப்படியே மாறிப் போய் Bureaucratic red tapism ஆகிவிட்டது!

இன்றைக்கு எதற்காக இந்த பிங்க் ஸ்லிப் பற்றிய விவரங்கள் – காரணம் இருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்னர் எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி என்னைப் பார்க்க வந்திருந்தார். கடை நிலை ஊழியராக வேலை பார்ப்பவர் – அதுவும் அவர் கணவர் இறந்து விட்டதால் அவருக்கு பதில் Compassionate Ground-ல், அதே நிறுவனத்தில் தற்காலிகமாக வேலைக்குச் சேர்ந்தவர் – வயது கிட்டத்தட்ட ஐம்பது. பத்துப் பதினைந்து வருடங்களாக அந்த வேலையில் இருக்கிறார். பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டாலும் நிரந்தரம் செய்யப்படாத வேலை. சில வருடங்களுக்கு ஒரு முறை பணி நீட்டிப்பு செய்வார்கள். அதற்கான காகிதம் கிடைத்தபிறகு அவருக்குக் கொஞ்சம் நிம்மதி! இன்னும் சில வருடங்களுக்கு வேலையில் இருக்கலாம் என்ற நிம்மதி.

சமீபத்தில் அவருக்கு பணி நீட்டிப்பு செய்ய வேண்டிய காலம் – ஆனால் எந்தவித காகிதமும் கிடைக்கவில்லை. சம்பளமும் வரவில்லை – கேட்டால் உங்கள் பணி நீட்டிப்பு பற்றிய சம்பாஷணைகள் பெரிய இடத்தில் நடந்து கொண்டிருக்கிறது விரைவில் நல்ல செய்தி வரும் என்று மட்டுமே சொல்லி, கிட்டத்தட்ட இரண்டு மாதங்களைக் கடத்தி விட்டார்கள். ஏதாவது கேட்டால் “ரொம்ப கேள்வி கேட்காதீங்க, வேலையை விட்டே தூக்கினாலும் தூக்கிடுவாங்க” என்று தான் சொல்லி இருக்கிறார்கள் அங்கே இருக்கும் அலுவலகப் பணியாளர்கள். கடைசியாக அவருக்கு ஒரு காகிதம் கிடைத்தது! இனிமேல் இங்கே வேலை இல்லை. எங்களுடைய வேறு ஒரு அலுவலகம் இருக்கிறது – அங்கே வேலை தருகிறோம் என்று – ஆனால் அதுவும் நிரந்தரப் பணியல்ல! எப்போது வேண்டுமானாலும் தூக்கிவிடுவோம் என்று சொல்லி இருக்கிறார்கள்.

அந்தக் காகிதத்தினை எடுத்துக் கொண்டு என்னிடம் வந்திருந்தார் – ஆங்கிலத்தில் இருப்பதால் என்னிடம் வந்திருந்தார் – என்ன எழுதி இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள. விவரங்களைப் படித்துப் பார்த்து, அதில் ”முன்பே இருந்த சம்பளத்தினை விட குறைவு, வேறு சில வசதிகளும் இனிமேல் கிடைக்காது போகும் நிலை” என்பதையெல்லாம் சொல்லச் சொல்ல, தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்து விட்டார்.,  எனக்கு ஒரே தர்ம சங்கடம் – எப்படிச் சொல்லி அவரைத் தேற்றுவது எனப் புரியவில்லை. அழுகை எனக்குப் பிடிக்காத ஒன்று! ஆனால் இப்படி என்னிடம் வந்து தன் நிலை பற்றிய வருத்தத்தில் அழ ஆரம்பித்தவரை எப்படிச் சமாதானப் படுத்துவது என்று புரியவில்லை. அவருடன் வேறு சிலரையும் இப்படி வேறு நிறுவனத்திற்கு மாற்றி விட்டார்கள். பலரை வேலையை விட்டே தூக்கி விட்டார்கள் என்பதெல்லாம் தெரிந்தது.

மற்றவர்களைப் போல, மொத்தமாக வேலையை விட்டு உங்களை நீக்கவில்லை. இப்போதைக்கு வேறு பணியிடம், சம்பளமும் வசதிகளும் குறைத்திருக்கிறார்கள். அதனால் கவலைப் படாமல் இருங்கள் என்று மட்டுமே சமாதானம் சொல்ல முடிந்தது – அது சரியான சமாதானம் அல்ல என்று தெரிந்தும். இப்படித் திடீரென வேலைக்கு வராதே என்று சொல்லி விட்டால் அந்த நபரின் நிலை என்ன – அவரை நம்பி இருக்கும் அவரது குடும்பத்தின் நிலை என்ன என்பதையெல்லாம் யோசிப்பதே இல்லை பிங்க் ஸ்லிப் கொடுக்கும் நிறுவனங்கள். அன்றைக்கு அந்தப் பெண்மணியை ஒரு வழியாகத் தேற்றி அனுப்பி வைத்தேன் என்றாலும் மனதில் அவரைப் பற்றிய எண்ணங்கள் தொடர்ந்து கொண்டிருந்தது.

இத்தனை வயதிற்குப் பிறகு, வேறு வேலைக்குப் போக முடியாது – அதுவும் சரியான படிப்போ, இல்லை வேறு திறமைகளோ இல்லாத அவர் என்ன செய்வார் – சம்பளம் அதிகரித்தால் கூட அது தேவையை விடக் குறைவாகவே இருக்கும்/உணரும் காலம் இது – இப்படி இருக்கையில் முன்பை விடக் குறைவான சம்பளம் என்றால் எப்படி வாழ்க்கை ஓடும் என்ற சிந்தனைகள். பல சமயங்களில் நம்மிடம் உதவி கேட்டு வருபவர்களுக்கு நம்மால் ஒன்றும் செய்ய இயலாது எனும்போது நம் மீதே கோபம் வருகிறது. கூடவே மற்றவர்களைக் காயப்படுத்தும் நபர்கள் மீதும் கோபம் வருகிறது. குறைந்தது சில மாதங்கள் முன்னரே அவர்களை வேலையை விட்டு நீக்கப் போகிறோம் என்பதைச் சொல்லி விட்டால், அதற்குத் தகுந்தாற்போல வேறு வேலையைத் தேடிக் கொள்ளவோ அல்லது அந்த நிலைக்குத் தன்னைத் தயார் செய்துகொள்ளவோ முடியும். திடீரென “நாளைல இருந்து நீ வேலைக்கு வராதே” என்று சொன்னால்…   

நண்பர்களே, இன்றைய பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.

மீண்டும் சந்திப்போம்… சிந்திப்போம்…

நட்புடன்

வெங்கட்
புது தில்லி

28 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!

    ஆமாம் ஜி அருமையான வாசகம் அது....நல்ல எண்ணங்கள் வலைமைதரும்...ஆட்டிட்யூட் இஸ் எவ்ரிதிங்க் என்று சொல்வதுண்டே...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் கீதாஜி!.

      எண்ணங்கள் வல்லமை தரும் என்பது உண்மை தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. குட்மார்னிங் வெங்கட்.

    எண்ணங்களுக்கு நிச்சயம் ஒரு சக்தி உண்டு என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.

      நல்ல எண்ணம் நல்லதையே தரும். தரட்டும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. பாவம் அந்தப் பெண்மணி. எங்கள் அலுவலகத்தில் இருக்கும் அனைவருமே தற்காலிக அரசாணை என்கிற ஆணையில்தான் பணி. ஆனால் காலக்கிரமத்தில் தொடரும் ஆணை வந்துவிடும். சமயங்களில் ஓரிரு நாட்கள், அல்லது ஒரு வாரம் தாமதமாகும். அதுவே நாங்கள் பேசி சிரித்துக் கொள்வோம். பாவம் இந்தப் பெண்மணி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம். அவருக்கு நிறைய பிரச்சனைகள். குடித்துக் குடித்தே இறந்த கணவர் - குடியினால் பணம் சேர்த்து வைக்காததும் அதனால் இப்போது இருக்க இடமின்றி இருப்பதும் அவரை எப்போதும் கஷ்டப்படுத்தும் ஒரு விஷயம்.

      அரசாணைகள் சரியான நேரத்தில் வராவிட்டால் கஷ்டம் தான். காத்திருப்பவர்களுக்கு எத்தனை கஷ்டம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. நிரந்தரப் பணியாளர்கள் தவிர மற்றவர்கள் இதனை எப்போதும் எதிர்பார்க்கணும். அதிலும் கணிணித் துறையில் இதனை எதிர்பார்த்து, கிடைக்கும் சம்பளத்தை நன்கு சேமித்து வைத்துக்கொள்ளணும். எப்போ வேலை போனாலும், கவலைப்படாமல் அடுத்ததை மெதுவாகத் தேடிக்கொள்ளும் தைரியம் வேணும். ஆனா அனேகமா எல்லோரும், ஏதாவது கடனில் சிக்கிக்கொண்டு, வேலை போனால் கஷ்டப்படுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான். சம்பாதிக்கும்போது சரியான விதத்தில் சேமிப்பும் இருக்க வேண்டும். இப்போது பலரும் அதிகக் கடனிலும், கடன் அட்டைகள் பயன்பாட்டிலும் மாட்டிக்கொண்டு தவிக்கிறார்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  5. பணியில் இருப்பவர்களை நிரந்தரமாக்கும்வரை அவர்களது மனம் அலைபாயும் அது வெளியில் சொல்ல முடியாத உணர்வு.

    இதை நானும் அனுபவித்து இருக்கிறேன் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பணி நிரந்தரம் ஆகும் வரை மனது அலைபாயும். உண்மை தான் கில்லர்ஜி. சொல்ல முடியாத உணர்வு அது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. கொடுமையிலும் கொடுமை
    இதுதான் முதலாளித்துவமோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொடுமை தான் கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. வேலையைவிட்டு நீக்குதல்...அதுவும் வேண்டுமென்றே..வேதனை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேதனை தான் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  8. எதிர்பாரததை எதிர் பாருங்கள்...! - இன்றைய உலகின் தத்துவம்...

    இந்த தலைப்பில் ஒரு பகிர்வு எழுத வேண்டும் என்று உள்ளேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  9. முன் அறிவிப்பு இல்லாமல் நீக்குவது கொடுமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  10. அந்த பெண்மணியின் நிலை பரிதாபத்துக்குரியது! நிறுவனங்களிடம் கொஞ்சம் மனிதாபிமானமும் இருக்கலாம் என்று தோன்றுகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு
  11. கணினி தொழிலில்தான் இம்மாடிரிபிங்க் என்று கேள்வி பட்டிருக்கிறேன் நீங்கள் குற்பிடும்பெண் காண்ட்ராக்ட் முறையில் வேலைக்குச் சேர்ந்திருக்கலாம் அர்சுபணியில் இந்த பிங்க் ஸ்லிப் உண்டா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரசுப் பணியிலும் உண்டு - சில கட்டுப்பாடுகள் உண்டு அதை பயன்படுத்த - 56 J விதி என்று அழைப்பார்கள். சமீபத்தில் நிறைய பேரை இத விதி மூலம் வெளியேற்றினார்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
    2. ஒவ்வொரு அரசிலும் இப்படி சில விதிகள் - அங்கே 17B... தகவலுக்கு நன்றி ஸ்ரீராம்.

      தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. இந்த பிங்க்ஸ்லிப் படுத்தும் பாடு பலருக்கும்...பாவம் அப்பெண்மணி.

    என்ன சொல்ல? வேறு பெரிய வேலையில் இருப்பவர்களே கூட குறிப்பாக தொழில்நுட்பத் துறையில் இருப்பவர்கள் கூட (அது அவர்களது தவறால், சரியாகச் சேமிக்காமல் உள்ளதுவரை தகுதிக்கு மீறிச் செலவு செய்துகொண்டு...) கஷ்டப்படும் போது இப்படியான பெண்மணிகள் எல்லாம் பாவம் தான். நம்மால் உதவ முடியவில்லை என்றா ஆமாம் ஜி வருத்தம் வருகிறதுதான்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகுதிக்கு மீறிய செலவு - இந்தப் பெண்மணியின் கதை இப்படியல்ல. ஆனாலும் சேமித்து இருக்கலாம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  13. தொழிலாளர் சட்டங்களை திருத்தி இந்த மாதிரியான சம்பவங்கள் நடக்காமல் தடுக்கலாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறைய மாற்றங்கள் தேவை. ஆனால் பூனைக்கு மணி கட்டுவது யார்?

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....