புதன், 18 செப்டம்பர், 2019

கடைசி கிராமம் – சித்குல் கிராம உலா – சித்குல் மாதா

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

வழிபாடு என்பது வெறும் சொற்களால் ஆனது அல்ல! அது இதயத்திலிருந்து புறப்பட்டு இதயத்திற்குள்ளேயே கலந்து விட வேண்டும் – ரமண மகரிஷி.



படம்-1: chசித்குல் கிராமம்...

கடைசி கிராமம் என்ற தலைப்பில் இதுவரை வெளிவந்த பதிவுகளின் சுட்டிகள் கீழே:












படம்-2: chசித்குல் மாதா கோவில்...

கடைசி கிராமமான chசித்குல்-இல் இரவு தங்கியபோது நல்ல உறக்கம். பக்கத்து அறையில் தங்கிய பெங்காலிகள் சப்தத்தையும் மீறி நல்ல உறக்கம்! காலையில் எழுந்த போது மணி ஆறு. கதவுகளின் திரைச் சீலைகளை விலக்கிப் பார்த்தால் கிராமம் விழித்திருந்தது. அழகான, ரம்மியமான காட்சிகளை சில நிமிடங்கள் பார்த்தபடியே அமர்ந்து இருந்தேன். நண்பரும் எழுந்திருக்க, ஒவ்வொருவராக தயார் ஆனோம். எங்களது திட்டம் விரைவில் குளித்து, காலை நேரத்திலேயே கடைசி கிராமத்தில் இருக்கும் கோவிலையும் பார்த்து, அப்படியே கிராமத்தில் உலா வருவது! அதற்காகவே இப்படி தயார் ஆனோம்.  அன்றைய தினம் அடுத்த கிராமத்திற்குச் செல்வதாகத் திட்டம். அதற்கு முன்னர் முடிந்தால் chசித்குல் கிராமத்தில் இன்னும் கொஞ்சம் சுற்ற வேண்டும்! தயார் ஆனதும் இருவரும் கீழே இறங்கினோம். முதலில் தேநீர் – ஹிந்துஸ்தான் கா ஆக்ரி டாபா இன்னும் திறந்திருக்கவில்லை!


படம்-3: வாத்திய இசை...


படம்-4: கோவிலில் ஒரு மேடை...

முதல் நாள் இரவு உணவு சாப்பிட்ட இடத்தில் வேறு ஒரு பெண்மணி இருந்தார். தேநீர் கிடைக்குமா? எனக் கேட்க, பால் இன்னும் வரவில்லை என்று சொன்னார் – பெரும்பாலும் மெதுவாகத் தான் வருமாம்! சரி எங்களுக்கு பால் இல்லாமல் ப்ளாக் டீ சாப்பிட்டு பழக்கம் என்பதால் நானும் நண்பரும் ப்ளாக் டீ தரச் சொல்லிக் கேட்க, ப்ளாக் டீ சில நிமிடங்களில் வந்தது. ITBP-ஐச் சேர்ந்த சில வீரர்கள் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். இந்திய திபெத் எல்லையில் தொடர்ந்து நடந்தும், வாகனத்திலும் எல்லைப் பாதுகாப்பில் ஈடுபட்டு இருக்கும் வீரர்கள் அவர்கள். அவர்களது பணி பற்றிய கேள்விகள் கேட்டு அவர்களை விசாரித்தோம். நம் நாட்டில் இந்த மாதிரி வீரர்களுக்கு உரிய மரியாதையை பொதுமக்கள் கொடுப்பதே இல்லை.  இம்மாதிரி சந்திக்கும் சமயங்களில், அவர்களது ஊர், குடும்பம், பணியில் இருக்கும் கடினம் எனப் பேசினாலே அவர்களுக்குக் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவில்லை.


 படம்-5: கோவிலின் உள்ளே...


படம்-6: எனக்கும் இங்கே இடமுண்டு...

இந்த மாதிரி வீரர்களிடம் பேசுவதை நான் வழக்கமாகவே வைத்திருக்கிறேன். காசா, பணமா? பேச்சு தானே! அவர்களிடம் பேசிக் கொண்டே இருந்த போது தேநீர் வந்தது. அவர்களையும் தேநீர் அருந்தச் சொல்ல, வேண்டாம் என மறுத்து மேலே நடக்க ஆரம்பித்தார்கள். அவர்களுக்கு விடை கொடுத்து அனுப்பிய பிறகு தேநீரை நாங்கள் அருந்தினோம். உரிய விலையைக் கொடுத்து அங்கிருந்து நடந்தோம். chசித்குல் கிராமத்தில் உள்ள வீடுகள், தங்குமிடங்கள் தவிர ஒரு அழகிய கோவிலும், புத்தமத வழிபாட்டுத் தலம் ஒன்றும் இருப்பதாக முன்னரே பார்த்து வைத்திருந்தோம். சரி முதலில் கோவிலுக்குச் செல்லலாம் என வழியில் பார்த்த ஒரு முதியவரிடம் கோவிலுக்குச் செல்லும் வழி கேட்க, “நானும் அங்கே தான் செல்கிறேன் வாருங்கள்” என்று அழைத்தபடியே நடந்தார். அவரது வழியில் நாங்களும் நடந்தோம்.


படம்-7: வீட்டுச் சுவர்களில் ஓவியம்...



படம்-8: இது என்ன?...

பெரும்பாலும் மலைப்பாங்கான இடம் என்பதால் கொஞ்சம் மேடான பகுதியில் தான் வீடுகள், கோவில்கள் ஆகியவை அமைந்திருக்கின்றன. முதியவர் வேகவேகமாக நடக்க, நாங்கள் அவரைத் தொடர்ந்து மூச்சு வாங்கியபடியே நடந்தோம். வெளிக் கதவைத் திறந்து கொண்டு முதியவர் செல்ல நாங்களும் அவரைப் பின்தொடர்ந்தோம். அழகான கோவில். உள்ளே திறந்தவெளி – ஓரங்களில் திண்ணைகள் இருக்க அங்கே அமர்ண்டு கொண்டு எங்கள் காலணிகளைக் கழற்றி வைத்தோம். இங்கே உள்ள வீடுகள் போலவே கோவிலும் மரத்தினால் ஆனது தான். ஹிந்து கோவில் என்றாலும் கோவிலுக்கு வாயிலில் இரண்டு ட்ராகன்கள் – மரத்தினால் ஆன ட்ராகன்கள் நெடிதுயர்ந்து நிற்கின்றன! கோவிலின் வாயில் மூடி இருக்க, உள்ளே பூஜாரி பூஜை செய்து கொண்டிருக்கிறார். வாசலில் ஒருவர் அமர்ந்து மேளத்தினை ஒலிக்க, எங்களுக்கு வழிகாட்டிய முதியவர் கைகளில் ஒரு குச்சி வைத்து பெரிய பித்தளை தட்டு போன்ற வாத்தியத்தில் ஒலி எழுப்பினார்.


படம்-9: வித்தியாசமான பூட்டு...

பூஜை முடிய நீண்ட நேரம் ஆகும் போல இருந்தது. காத்திருக்கலாம் என நினைத்து, அது வரை கோவிலையும் வாத்தியம் வாசித்தவர்களையும் படம் எடுத்துக் கொண்டிருந்தோம். உள்ளே பூஜை முடிந்ததற்கான விவரம் ஏதுவும் கிடைக்கவில்லை. ஆனால் முதியவரும் மற்றவரும் வாத்தியம் வாசிப்பதை நிறுத்தி விட்டு மூடியிருந்த கோவிலின் வாசலை நோக்கி கைகளைக் கூப்பி, வாத்தியங்களை அவற்றுக்கான இடத்தில் வைத்து வெளியே போகிறார்கள். கோவில் திறக்க மாட்டார்களா எனக் கேட்க, இன்னும் நிறைய நேரம் ஆகும். உங்களுக்கு வேறு வேலை இருந்தால் பார்த்து வாருங்கள் என்று சொன்னார் முதியவர் – அட என்னடா இது சோதனை? என்று நினைத்தபடியே கோவில் பற்றிச் சொல்லுங்களேன் என முதியவரிடம் கேட்டோம்.  chசித்குல் கிராமத்தின் பாதுகாவல், chசித்குல் மாதா என்றும் மதிதேவி என்றும் அழைக்கப்படும் ஸ்ரீமதி தேவியிடம் தான் என்றும் மிகவும் சக்தி வாய்ந்த தேவி என்றும் கேட்ட வரம் கொடுப்பவள் என்றும் சொல்லி பரவசப்பட்டார்.


படம்-10: இயற்கை எழில் கொஞ்சும் chசித்குல் கிராமம்...

படம்-11: வீட்டின் வெளியே உள்ள அமைப்பு...

ஐந்நூறு வருடத்திற்கும் மேற்பட்ட கோவில் என்றும் தேவியின் சிலை வாதுமை கொட்டை மரத்திலிருந்து உருவாக்கியது என்றும் பெரியவர் சொல்லிக் கொண்டே தனது வீடு நோக்கி நடக்க, நாங்கள் இன்னும் சில நிமிடங்கள் அமர்ந்து இருந்த பிறகு கிராமத்தினுள்ளே நடந்தோம். அழகான வீடுகள், வீடுகளின் சுவர்களில் ஓவியங்கள் என கிராமமே அழகாக இருந்தது. ஒவ்வொரு வீட்டு வாசலிலும் மரத்தினால் ஆன சிறு வீடு போன்று ஒரு அமைப்பு இருக்கிறது. அதற்கு மிகச் சிறிய கதவு. அந்தக் கதவில் வித்தியாசமான பூட்டு என பார்க்கவே வித்தியாசம். பெரும்பாலான வீடுகளில் இப்படியான அமைப்பு இருக்கிறது. எதற்காக இந்த அமைப்பு எனத் தெரிந்து கொள்ளாவிட்டால் மண்டை வெடித்து விடும் என்று தோன்றியது! ஒரு பெண்மணி அந்த அமைப்பின் அருகே செல்ல, அவரிடம் கேட்டு விட்டோம். அந்த அமைப்பு கிராமிய மக்களின் மிக அத்தியாவச அமைப்பு!


படம்-12: chசித்குல் கிராமம்... 

இந்த chசித்குல் கிராமம் பனிப்பொழிவு காலங்களில் மிக அதிக அளவு பனிப்பொழிவை பெறும் கிராமம். மூன்று மாதங்களுக்கு எந்த வித தானியமும் விளையாது. காய்கறிகளும் விளைவிப்பது முடியாத காரியம். அந்த மாதிரி நேரங்களில் உணவுக்காக தானியங்களையும், காய்கறிகளையும் பாதுகாத்து வைக்க வேண்டிய கட்டாயம் இந்த மக்களுக்கு. மரத்தினால் ஆன இந்த அமைப்பில் தானியங்களைச் சேமித்து வைத்தால் ஒரு வருடம் ஆனாலும் கெட்டுப் போகாது என்கிறார் அந்தப் பெண்மணி. இப்படி தானியங்கள், உருளை, வெங்காயம், மலைப்பூண்டு போன்றவற்றை சேமித்து வைத்து, தேவையான போது எடுத்துப் பயன்படுத்துவார்களாம். அந்த அமைப்பிற்கான பூட்டும் மிகவும் வித்தியாசமாகவே இருந்தது. அமைப்பினையும் பூட்டையும் படம் எடுத்துக் கொண்டோம். இந்தப் பகிர்விலும் அப்படங்களை இணைத்திருக்கிறேன். அமைப்பு பற்றி நீங்களும் தெரிந்து கொள்ள ஒரு வசதி தானே!


படம்-13: சுவர் ஓவியங்கள் - chசித்குல் கிராமம்...


படம்-14: chசித்குல் கிராமம்... - சாலை...

கிராமத்துப் பள்ளி, வீடுகள் ஆகியவற்றைக் கடந்து நாங்கள் சென்று சேர்ந்த இடம் புத்தமத வழிபாட்டுத் தலம்! ஆனால் அங்கேயும் எங்களுக்கு தரிசனம் வாய்க்கவில்லை. வழிபாட்டுத் தலத்தினை புதுப்பித்துக் கொண்டிருக்கிறார்களாம்! அதனால் அங்கே நின்று வழிபாட்டுத் தலம் இருந்த இடத்தினையும் புதுப்பிக்கும் வேலையையும் சிறிது நேரம் கவனித்துக் கொண்டிருந்தோம். அங்கே சிலரைப் பார்க்க அவர்களுடன் பேச ஆரம்பித்தோம். அவர்களுடன் என்ன பேசினோம், அங்கே கிடைத்த அனுபவங்கள் என்ன என்பவற்றை அடுத்த பகுதியில் சொல்கிறேன் – அந்த அனுபவங்களும் ஸ்வாரஸ்யமானவையே – தில்லி வாசிகளைப் பற்றி அந்தக் கிராமத்தினர் சொன்னது – தில்லிவாசிகள் சோம்பேறிகள்! திருடர்கள்! ஹாஹா… ஏன் அப்படிச் சொன்னார் என்று அடுத்த பதிவில் சொல்கிறேன்.


படம்-15: chசித்குல் கிராமம்...

இன்றைக்கு பதிவில் சொன்ன விஷயங்களைப் பற்றிய உங்கள் சிந்தனைகளையும் எண்ணங்களையும் பின்னூட்டம் வழியாக பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி. நாளை வேறு ஒரு பதிவில் உங்களைச் சந்திக்கும் வரை…
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

26 கருத்துகள்:

  1. அழகிய கிராமம். மலையடிவாரத்திலென்ன ஒரு ஆரோக்கியமான இடம், அமைதியான இடம்....   கொடுத்து வைத்தவர்கள் அங்கே வாழ்பவர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழகான இடம் தான். மனிதர்களும் பழக இனிமையானவர்கள் தான் ஸ்ரீராம்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. நீங்கள் ஸ்ரீரங்கத்துக்காரர் என்பதால் அவர்கள் சொன்னது பற்றி பிரச்னையில்லை!    அவர்களுக்கு என்ன அனுபவமோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். அவர்களுக்குக் கிடைத்த அனுபவம் மோசமானதாக இருந்து இருக்க வேண்டும் ஸ்ரீராம். அதனால் தான் இப்படிச் சொல்கிறார்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. வழக்கம் போலவே சுவாரஸ்யமாக இருந்தது ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி

      நீக்கு
  4. எத்தனை இடங்கள் எத்தனை அனுபவங்கள். அத்தனையும் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜோசப் ஐயா.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  6. மிக அழகிய இடம். சில கட்டிடங்களைப் பார்க்க, மிகவும் பழமையானதும், மிகவும் ஸ்ரோங்காகனதுமாக இருக்கு.

    அந்தக் குருவியாரின் கலர் அழகாக இருக்க்கே.. வெள்ளையும் இலாமல் சாம்பலும் இல்லாமல்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்... பழமையான கட்டிடங்கள் தான் அதிரா.

      வித்தியாசமான குருவி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. பின்னூட்டம் எழுதலையே தவிர, எல்லாவற்றையும் படித்துக்கொண்டுதான் வருகிறேன். இண்டெரெஸ்டிங். அந்த டாபா காரர்ட உங்களுக்கு உணவு எடுத்துவைக்கச் சொல்லக்கூடாதா? நல்லா பண்ணறாங்கன்னு எழுதியிருந்தீங்களே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாப் பதிவுகளும் படிப்பது அறிந்து மகிழ்ச்சி. உங்கள் கருத்துக்களை சொன்னால் கூடுதலாக மகிழ்ச்சி!

      டாபா விரைவாக மூடிவிடுவார்கள் என நினைக்கவில்லை நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. வீட்டின் வெளியே உள்ள அமைப்பு கண்டவுடன் சரியாகத்தான் நினைத்துள்ளேன்.
    எங்கள் அம்மம்மா காலத்தில் வயல் வைத்திருப்போர் வீடுகளில் மரத்தாலான மிகபெரிய பெட்டகம் நெல்லு பெட்டகம் என்பார்கள் இருக்கும் கண்டிருக்கிறேன். அதற்கு கூரை இல்லை மூடி இருக்கும்.வீட்டிற்குள் வைத்திருப்பார்கள்.

    அழகிய ஓவியங்கள்.கோவில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் உங்கள் கணிப்பு சரிதான். தமிழகத்தில் கூட இப்படியான அமைப்பு உண்டு. பத்தாயம் என அழைப்பார்கள் மாதேவி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. நம் பக்கம் நெற்குதிர் மாதிரி போலும் பத்தாயம் என்றும் மாயவரம் பக்கம் சொல்வார்கள்.
    மரத்தில் இருக்கும்.
    கோவில்களில் இது போன்ற மர அமைப்பில் காணிக்கையாக வரும் தானியங்களை சேர்த்து வைப்பர்கள்.
    படங்கள், ஓவியம், பாதுகாப்பு படைவீரர்களிடம் பேச்சு, முதியவர் , மற்றும் அந்த ஊர் பெண்மணி யிடம் உரையாடியது அருமை.
    நானும் மதிதேவியிடம் வேண்டிக் கொண்டேன். நலம் பெற .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கோமதிம்மா. நெற்குதிர், பத்தாயம் என அழைக்கப்படும் அதே மாதிரி தான். ஆனால் இங்கே நெல்லுக்கு பதில் வேறு தானியங்கள், தனித்தனியாக சேமிக்கிறார்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. நம்ம ஊர் நெல் பத்தாயம் போல அங்கே விளையும் தானியங்களுக்கான பத்தாயம் என்றே தோன்றியது. மிக அருமையான அமைப்பு! கோயில்களில் தரிசனம் கிடைக்காதது குறித்து வருத்தமாக உள்ளது. ஊர் எழில் கொஞ்சுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எழில் கொஞ்சும் ஊர்தான் கீதாம்மா. கோவில் தரிசனம்... எங்களுக்கும் வருத்தம் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. //நம் நாட்டில் இந்த மாதிரி வீரர்களுக்கு உரிய மரியாதையை பொதுமக்கள் கொடுப்பதே இல்லை.// ஆந்திரா, கர்நாடகம் வரை உள்ள இந்திய மக்கள் நமது படை வீரர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுக்கின்றனர். கேரளத்தில் தெரியாது. ஆனால் தமிழ்நாட்டில் சுத்தமாக மரியாதை கொடுப்பதில்லை என்பதோடு அவர்கள் செய்யும் வேலைகள் பற்றிய உணர்வும் இல்லை. சரியான புரிதல் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம் படஒ வீரர்கள் பற்றிய புரிதல் இல்லாதது வருத்தம் தான் கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. அன்பு வெங்கட்,

    இந்த சித்குல் தான் எவ்வளவு அழகு.
    மலையும், கோவிலும். மனிதர்களும் அருமை. படை வீரர்களை நீங்கள் சந்தித்ததுதான் ஹைலைட். எவ்வளவு கடமைப் பட்டிருக்கிறோம் அவர்களுக்கு. எங்கள் சார்பில் உங்களுக்கு நன்றி.

    இந்த ஊரில் முன்னாட்களில் கழிப்பிடமாக அவுட் ஹௌஸ் என்றி கட்டி வைப்பார்கள்.ஆப்ரஹாம் லிங்கன் வீட்டில் பார்த்தோம்.
    இவர்கள் நல்ல முன் யோசனையுடன் செயல் படுகிறார்கள்.

    குளிர் பிரதேசங்களில் அனைவரும் மெதுவாகவே செயல் படுவார்கள்
    போலத்தெரிகிறது. அடுத்த பதிவுக்குக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  13. சித்குல் அமைதி எனக்கும் மிகவும் பிடித்தது வல்லிம்மா.

    பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி.

    தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....