வெள்ளி, 27 செப்டம்பர், 2019

கடைசி கிராமம் – ரக்சம் கிராமம் – ராஜ்மா சாவல்…


அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

உள்ளே தள்ளும் உணவு ருசியாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் நாக்கு, வெளியே தள்ளும் வார்த்தைகளில் மட்டும் எதையும் நினைப்பதில்லை!




கடைசி கிராமம் என்ற தலைப்பில் இதுவரை வெளிவந்த பதிவுகளின் சுட்டிகள் கீழே:

















ஆற்றங்கரை ஓரத்தில் இருந்த தங்குமிடத்தில் மழைக்காக ஒதுங்கி அங்கே சில மணி நேரங்களை இயற்கை எழிலை ரசித்தபடி இருந்த பிறகு அங்கிருந்து ரக்chசம் கிராமத்தின் பிரதான சாலைக்கு வந்து சேர்ந்தோம். மதிய உணவை முடித்துக் கொண்டு அந்தக் கிராமத்திலிருந்து அடுத்த கிராமத்திற்குப் புறப்படலாம் என்பது எங்கள் திட்டமாக இருந்தது. கிராமவாசி ஒருவரிடம் மதிய உணவு எங்கே கிடைக்கும் எனக் கேட்க அங்கே இருந்த ஒரே உணவகம் மட்டுமே திறந்திருக்கும் என்று சொல்லி எங்களை அங்கே அழைத்துச் சென்றார்.  சிறிய உணவகமாக இருந்தாலும் நன்றாக இருந்தது அந்த உணவகம் – ஆங்கிலத்தில் சொல்வார்களே – நல்ல Ambience என்று! அந்த உணவகத்தில் அந்த ஆம்பியன்ஸ் நன்றாகவே இருந்தது – சுவர்களில் அழகழான பொருட்கள் காட்சிக்கு வைக்கப் பட்டிருந்தது! நல்ல பல வாசகங்களும் ஒட்டப்பட்டிருந்தது – மேலே கொடுத்திருக்கும் படமும் அவற்றில் ஒன்று!


சரி என்ன கிடைக்கும் என்று கேட்க, ஹிமாச்சல மக்களின் பாரம்பரிய உணவான ராஜ்மா CHசாவல், மற்றும் வெஜ் புலாவ் போன்றவை கிடைக்கும் என்றார். கூடவே தேநீர் – அதுவும் ”லெமன், ஜிஞ்சர் ஹனி” டீ என்று மூன்றையும் கலந்து ஒரு தேநீர்! யாருக்கு என்ன வேண்டும் என்று கேட்க, அவரவருக்கு விருப்பமானதை அந்த உணவகத்தின் உரிமையாளரிடம் சொன்னோம் – அவரே தான் அங்கே சிப்பந்தியும்! உணவு தயாரிப்புக்கு மட்டும் பணியாளர்கள் இருக்கிறார்கள் போலும்! பொதுவாக ராஜ்மா CHசாவல் என்றால் சாதத்தில் ராஜ்மா [Red Kidney Beans] கலந்து தருவார்கள் – இரண்டும் சேர்த்து தான் அதற்கான பணம் வாங்குவார்கள் – இந்த உணவகத்தில் அப்படி இல்லை! ராஜ்மா தனி, சாதம் தனி! சரி என மூன்று Plate ராஜ்மா, மூன்று Plate சாதம், ஒரு வெஜ் புலாவ் மற்றும் தேவையான அளவு தேநீர்! சிறிது நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும் என முதலிலேயே சொல்லி விட்டார்.


காத்திருந்த நேரத்தில் எங்கள் சம்பாஷணைகள் தொடர்ந்தன. மைக்கேல் அவர் பதிவு செய்திருந்த ஒலிகளை எங்களுக்குப் போட்டுக் காண்பித்தார் – சில பறவைகளின் குரல்கள் மிகவும் இனிமையாக இருந்தன.  நேரில் கேட்பதற்கும் இப்படி பதிவு செய்து கேட்பதற்கும் நிறைய வித்தியாசம் – பதிவு செய்ததில் அத்தனை துல்லியம்.  நீண்ட நேரம் கேட்க முடியாது – மாலை வரை எனக்கு அதன் பேட்டரியைச் சார்ஜ் செய்ய முடியாது என்பதால் சிறிது நேரம் மட்டுமே கேட்க முடிந்தது.  முதலில் மைக்கேல் கேட்ட வெஜ் புலாவ் வந்தது. பார்க்க நன்றாக இருந்தது – மைக்கேல் சாப்பிட்டுப் பார்த்து – வாவ் என்று சொல்லி, அந்த உணவக உரிமையாளரிடம் ஒரு கை உயர்த்தி நன்றாக இருப்பதைச் சொன்னார். இப்படி பாராட்டுகளைச் சொல்லும் போது அந்த நபருக்கும் மகிழ்ச்சி – அதைத் தருவதில் என்ன பெரிய கஷ்டம் என்று எங்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார் மைக்கேல்!


சிறிது நேரத்திற்குப் பிறகு எங்களுக்குச் சொல்லி இருந்த ராஜ்மா – CHசாவல் தனித் தனியாக வந்தது! வந்த பிறகு தான் தெரிந்தது – மூன்று CHசாவல் உடன் இரண்டு ராஜ்மா மட்டும் சொல்லி இருந்தால் கூட போதுமானதாக இருக்கும் என்பது! ஆனால் சொல்லியதை வேண்டாம் என்று திருப்பிக் கொடுப்பது சரியல்லவே! ராஜ்மாவுடன் சாதம் கலந்து சாப்பிட, சுடச் சுட நன்றாகவே இருந்தது.  சுவையான ராஜ்மா CHசாவல்! நாங்கள் சாப்பிடும் போதே இன்னும் சிலர் அந்த உணவகத்திற்கு வந்தார்கள். அவர்களும் எங்களுடன் பேசிக் கொண்டிருந்தார்கள் – அவர்களும் அந்த இடத்திற்குப் புதியவர்கள் என்பதால் எங்கள் அனுபவம் என்ன? chசித்குலில் தங்கலாமா இல்லை ரக்chசம் கிராமத்திலேயே தங்கலாமா என்பதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். இரண்டுமே நன்றாகவே இருக்கிறது. இரண்டில் ரக்chசம் கிராமத்தில் தங்குவது நல்லது – ஆனால் chசித்குலில் தங்குமிடம் அதிகம் என்று சொல்லிக் கொண்டிருந்தோம்.


தேநீர் நன்றாகவே இருந்தது.  இஞ்சி நீளநீளமாக [ஜூலியன்!] வெட்டிப் போட்டிருந்ததால் அதை முதலிலேயே வாய்க்குள் போக விடாமல் தேநீரை மட்டும் குடிக்கச் சிரமப் பட வேண்டியிருந்தது! ஹாஹா… கடைசியில் சில துண்டுகள் உள்ளே போக அவற்றையும் மென்று தின்று முடித்தேன்! அடுத்த பேருந்து எத்தனை மணிக்கு என்று கேட்டபோது அந்த உணவகத்தின் உரிமையாளர் பேருந்து வருவதற்கு எப்படியும் அரை மணி நேரத்திற்கு மேலாகும். நீங்கள் இங்கேயே அமர்ந்து பேசிக் கொண்டிருங்கள். நான் அதற்குள் சில பொருட்கள் வாங்க வேண்டும். வாங்கிக் கொண்டு பேருந்து வருவதற்குள் வந்து விடுவேன். உணவக வாசலிலேயே பேருந்தில் ஏறிக் கொள்ளலாம் என்று சொல்லிச் சென்றார். மைக்கேலிடம் இருந்து விடை பெற வேண்டும் என்பதால் மீண்டும் அவருக்கு நன்றி சொல்லி, அவருடன் ஏற்பட்ட சந்திப்பிற்கும், செலவழித்த சில மணிநேரத்திற்கும் மகிழ்ச்சி தெரிவித்தோம்.


அவரும் எங்களுக்கு நன்றி தெரிவித்து, தொடர்ந்து நட்பில் இருக்கலாம் என்று சொல்லியதோடு ஒவ்வொருவராக ஆரத் தழுவினார்.  நாங்கள் ஒன்றாக இருந்தது சில மணி நேரங்கள் என்றாலும் அந்த சில மணி நேரமும் இனிமையாகவே கழிந்தது. எப்போதாவது எங்கேயாவது சந்திக்க வாய்ப்பு கிடைக்காமலா போய்விடும் – அப்போது மீண்டும் சந்திப்போம் என்று பேசியதோடு, எங்கள் பேருந்து வரும் வரை எங்களுடனேயே இருந்தார்.  பேருந்தும் வந்து சேர, நான், ப்ரமோத் மற்றும் ப்ரஷாந்த் ஆகிய மூவரும் பேருந்தில் ஏறிக் கொண்டோம். மைக்கேல் அவர் தேர்ந்தெடுத்த தங்குமிடத்திற்குச் சென்றார். எங்களது திட்டம் ரக்chசம் கிராமத்திலிருந்து பதினோறு கிலோமீட்டர் தொலைவில் இருந்த சாங்க்ளா வரை செல்வது.  ப்ரஷாந்த் அதே பேருந்தில் கார்ச்சம் என்ற இடம் வரை செல்வதாகச் சொல்லி இருந்தார்.  பேருந்தில் பதினோரு கிலோமீட்டர் தொலைவினை முக்கால் மணி நேரத்தில் கடந்தோம்.


சாங்க்ளா பேருந்து நிலையத்தில் நானும் நண்பர் ப்ரமோத்-உம் இறங்கிக் கொள்ள ப்ரஷாந்த்-உக்கும் விடை கொடுத்தோம்! இரண்டிலிருந்து நான்காகி மீண்டும் இரண்டானோம்! ஆனால் அடுத்த நாள் அவரை மீண்டும் சந்திக்கப் போகிறோம் என்று தெரியாமல் பிரியாவிடை கொடுத்து அனுப்பினோம்.  சாங்க்ளா இதுவரை சென்ற இடங்களில் கொஞ்சம் பெரிய கிராமம் என்பதை அங்கே இறங்கியபிற்கு உணர்ந்தோம்! நிறைய தங்குமிடங்கள், கடைகள் என இருந்தது. அதனால் அங்கே தங்குவதில் எங்களுக்கு இஷ்டமில்லை. சரி முதலில் சாங்க்ளாவிலிருந்து அடுத்த நாள் புறப்பட என்ன பேருந்து இருக்கிறது என்பதை பேருந்து நிலையத்தில் விசாரித்துக் கொண்டு அதற்குத் தகுந்த மாதிரி முடிவெடுக்கலாம் என பேருந்து நிலையத்தில் விசாரித்தோம்.



அடுத்த நாள் காலையில் ரெக்காங்க் பியோ, ராம்பூர், சண்டிகட் போன்ற ஊர்களுக்கு தொடர்ந்து பேருந்து வசதிகள் இருந்தன. ஏதோ ஒரு இடத்திற்குச் சென்றால் போதுமானது என்பதால் அடுத்த நாள் வரை என்ன செய்யலாம் என எங்களுக்குள் பேசினோம். சாங்களாவில் சில இடங்கள் பார்க்க உண்டு என்பதை முன்னரே பார்த்து வைத்திருந்தோம். சரி அந்த இடங்களுக்குச் சென்று பார்த்த பிறகு தங்குமிடம்/கிராமத்தினை முடிவு செய்து கொள்ளலாம் என பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்தோம். நாங்கள் சென்ற இடம் என்ன, அங்கே எங்களுக்குக் கிடைத்த அனுபவங்கள் என்ன என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன். இன்றைக்கு பதிவில் சொன்ன விஷயங்களைப் பற்றிய உங்கள் சிந்தனைகளையும் எண்ணங்களையும் பின்னூட்டம் வழியாக பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி. நாளை வேறு ஒரு பதிவில் உங்களைச் சந்திக்கும் வரை…
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

22 கருத்துகள்:

  1. அன்றன்றைய  பொன்மொழியைப் பார்க்கும்போது பதிவின் சாரம் புரிந்துகொள்ளலாம் என்று நினைக்கிறேன்.   அரசாங்கத் கடிதங்களில் சப்ஜெட், ரெஃபரென்ஸ்  என்று ஒன்று போடுவதுபோல....!

    குட்மார்னிங்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொருத்தமான வாசகம் அமைந்தால் நல்லது தான் - சில தினங்களில் அமைந்துவிடும் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. லெமன் ஜிஞ்சர் ஹனி டீ சுவையாய் இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.   நம்மூரிலேயே சிலைக்கடைகளில் நன்றாய் இருக்கிறதே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுவையாக இருந்தது ஸ்ரீராம். இங்கே முயற்சி செய்ததில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. மைக்கேலின் நட்பு  -  மறுபடியும் சந்திக்கும் சந்தோஷங்கள் நிகழட்டும்.  பஸ் வந்துகிளம்புவதற்குள் கடைக்காரர் வந்து விட்டாரா என்று சொல்ல மறந்து விட்டீர்கள்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடைக்காரர் வந்து விட்டார். பேருந்தை நிறுத்தி எங்களை வழியனுப்பி வைத்தார் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. மறுபடியும் சந்திக்கும் வாய்ப்பு எப்படி வந்தது என்பதை அடுத்த பதிவில் அறிந்துகொள்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வரும் பதிவுகளில் சொல்கிறேன் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. பொன்மொழி ஸூப்பர் உண்மை ஜி
    பயணம் வெகுசுவாரஸ்யமாக செல்கிறது தொடர்கிறேன் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  6. லெமன் ஜிஞ்சர் ஹனி ரீ சூப்பராக இருக்கும்.
    அடுத்து.... காண வருகிறோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  7. பொன்மொழி அருமை.
    பிரியாவிடை பெற்ற நண்பரை மீண்டும் மறு நாளே சந்திக்கும் சந்தர்ப்பம்!
    கடைக்காரர் நீங்கள் கிளம்பும் முன் வந்து விட்டாரா?
    சில நேரங்களில் உலகம் அன்பால் நிறைந்து இருப்பதை உணரலாம்.
    படங்கள் எல்லாம் மிக அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  8. தொடரைத் தொடர்கிறேன். பார்க்காத பகுதிகள். என்ன ஒண்ணு.... நட்ட நடு பனிக் காலத்தில் போயிருந்தீங்கன்னா எங்களுக்கு படங்கள் பார்க்க இன்னும் நல்லா இருந்திருக்கும் (இல்லைனா ப்ளம் விளையும் காலம், ஆப்பிள் பழுத்துத் தொங்கும் காலம்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பனி இருந்த டிசம்பர் மாதத்தில் நைனிதால் சென்று வந்தேன். மின்புத்தகம் கூட வெளியிட்டேன் நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. அன்பு மயமான அழகான பயணம்.
    பொன் மொழி நாள் துவக்கத்தில் பார்க்கப் படிக்க இனிமை.
    மைக்கேல் சேர்த்திருந்த பறவைக் குரலைக் கேட்க ஆவல் எழுகிறது..

    மலைவளமும் வண்ணமும் ,நதியும் கண்ணைக் கட்டிப் போடுகின்றன.
    மனத்திடம்,உளத்திடம் இரண்டும் வேண்டும்.
    ரஜ்மா சாவல் இந்த ஞாயிறுக்கான மெனு.நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா... ஞாயிறு நல்ல மெனு வல்லிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. ராஜ்மா சாவல் எங்க வீட்டில் ரொம்பப் பிரபலமான உணவு என்பதோடு முன்னெல்லாம் அடிக்கடி பண்ணுவோம். இப்போல்லாம் ராஜ்மாவே வாங்குவதில்லை. :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராஜ்மா நானும் சப்பாத்தி உடன் சாப்பிடுவது தான். ராஜ்மா சாவல் கடைகளில் சாப்பிடுவது தான் கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. ஆரம்பத்தில் உள்ள வாசகம் நூற்றுக்கு நூறு உண்மை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....