வெள்ளி, 6 செப்டம்பர், 2019

கடைசி கிராமம் – ரோகி – கிராமமும் கோவிலும்



அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

கீழே விழுவதும் பின்பு மேலே எழுவதும் நம் வாழ்க்கைப் பயணத்தில் மிக முக்கியமானது. நம் இதயத்துடிப்பை அளவிடும் கருவிகூட ஒரே நேர்க்கோட்டைக் காட்டினால் நாம் உயிரோடு இல்லை என்று அர்த்தம்ரத்தன் டாடா.



டம்-1: நாராயண் மந்திர், ரோghகி

கடைசி கிராமம் என்ற தலைப்பில் இதுவரை வெளிவந்த பதிவுகளின் சுட்டிகள் கீழே:







டம்-2: நடந்து வந்த மலைப்பாதை - ஒரு நினைவூட்டலாக!

சென்ற பகுதியில் கல்பா என்ற இடத்திலிருந்து ரோghகி எனும் சிறு கிராமம் வரை மலைப்பாதையில் நடந்து சென்ற அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருந்தேன். ரோghகி என்பது ஒரு சிறு கிராமம் – ஒரு வகையில் இதுவும் கூட கடைசி கிராமம் தான் – கல்பாவிலிருந்து வரும்போது! அதற்குப் பிறகு வேறு எந்த கிராமங்களும் இல்லை – மலை, மலை, எங்கெங்கும் மலை மட்டுமே! சுமார் 125 குடும்பங்கள் தான் இங்கே நிரந்தரமாகக் குடியிருப்பவர்கள் – ஒரு வீட்டிற்கு நான்கு பேர் என்று கணக்கில் கொண்டால் கூட 500 பேருக்கு மேல் கிராமத்தின் மக்கள் தொகை இல்லை. சுற்றிலும் ஆப்பிள் தோட்டங்கள், மற்ற பழங்களின் மரங்கள், தேவதாரு மரங்கள் என மிகவும் அழகான சூழலில் இருக்கும் கிராமம் தான் இந்த ரோghகி.  கடந்து வந்த பாதை ஆபத்தான ஒன்றாக இருந்தாலும் இந்தச் சின்ன கிராமத்தில் கண்ட அமைதி மனதுக்கு மிகவும் பிடித்திருந்தது.


டம்-3: சாலையோரப் பூக்கள்

டம்-4: வாத்தியம் இசைப்பவர் - கோவிலுக்குச் செல்லுமுன்னர் மேலிருந்து எடுத்த படம்  

சிறு கிராமம் என்பதால் பெரிதாக வசதிகள் இல்லை என்றாலும் ஒரே ஒரு கோவில் மட்டும் இங்கே உண்டு.  நாராயணன் கோவில் என்று அழைக்கப்படும் இந்தக் கோவில் பற்றிதான் கிராமத்தில் விசாரித்தபோது சொன்னார்கள்.  ஐம்பது படிகளுக்கும் மேலாக கீழே இறங்கிச் சென்று தான் கோவிலுக்குச் செல்ல முடியும். இறங்குவது பெரிய விஷயமில்லை – மீண்டும் அந்த ஐம்பது படிகளையும் கடந்து, மேலேறி வரவேண்டும் – ஆனாலும் நாங்கள் விடுவோமா என்ன, படிகளில் இறங்கி கோவில் அருகே சென்றோம். அங்கே காலை நேர பூஜை நடந்து கொண்டிருந்தது. பெரும்பாலான ஹிமாச்சலப் பிரதேசத்துக் கோவில்கள் போலவே அழகான அமைப்பு. வெளியே ஒரு கிராமவாசி உட்கார்ந்து தபலா போன்ற ஒரு வாத்தியத்தில் குச்சி வைத்து தட்டிக் கொண்டிருந்தார். உள்ளே தொடர்ந்து மணியோசை. இறைவனுக்கு உள்ளே பூஜை நடப்பதால் தரிசனம் கிடையாது என்று சொல்லி விட்டார்.



டம்-5: ஹிமாச்சலத்தின் கிராமிய வீடு ஒன்று மாதிரிக்காக...



டம்-6: கோவில், வீடு என அனைத்து கட்டுமானங்களில் மரம் பிரதான இடம் பிடிப்பது!

சரி சற்று நேரம் காத்திருந்தால் தரிசிக்க முடியுமா எனக் கேட்க, பூஜாரி பூஜை முடிக்க நீண்ட நேரம் ஆகும் – தவிர வேறு எவருக்கும் இப்போது அனுமதி இல்லை – என்று சொல்ல, வெளியிலிருந்தே சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டு, மனதில் இறைவனை நினைத்து வணங்கி விட்டு அங்கிருந்து குறுகிய படிகளில் மேல் நோக்கி நடந்தோம். எட்டு கிலோமீட்டர் மலைப்பாதையில் நடந்து வந்த பிறகு, மீண்டும் இப்படி படிகளில் ஏறிச் செல்வது கொஞ்சம் கடினமாக இருந்தது என்று தான் சொல்ல வேண்டும். ஆனாலும் ஏறிச் சென்று தான் ஆக வேண்டும். பேருந்து வந்திருந்தாலும் வந்திருக்குமே! பத்து படிகளுக்கு ஒரு முறை சற்றே நின்று மேல் நோக்கி வந்தோம்! கடினமான, செங்குத்தான படிகள் என்பதால் இப்படி நின்று நின்று தான் ஏற வேண்டியிருந்தது. கிராம வாசிகள் – சில முதியவர்கள் கூட எங்களைப் பார்த்து சினேகத்துடன் புன்னகைத்து எங்களைக் கடந்து முன்னே சென்று கொண்டிருந்தார்கள்.


டம்-7: சேர்த்து வைத்திருக்கும் ஒரு வித பழ வகை - இதன் பயன்? வரும் பகுதிகளில் சொல்கிறேன்...

ஒரு வழியாக படிகளில் மேலேறி வந்து, நாங்கள் நடந்து வந்த சாலையின் ஒரு முக்கில் பேருந்து நின்று கொண்டிருந்தது.  நாங்கள் செல்ல வேண்டிய பேருந்து அது தான் என்பதால் வேகவேகமாக நடந்தோம். பாதையில் எங்களைப் பார்த்த இரண்டு பெண்கள், பொறுமையாகப் போகலாம், யாராவது வருகிறார்களா என்று பார்த்துதான் பேருந்தை இங்கிருந்து எடுப்பார்கள் என எங்களை ஆஸ்வாசப் படுத்த, முதுகுச் சுமையோடு முன்னே நடந்தோம். நாங்கள் சென்று பேருந்தினைப் பார்த்தால், பேருந்தில் இருந்த அனைத்து சீட்டுகளிலும் ஆட்கள் அமர்ந்திருக்க சிலர் நின்று கொண்டிருந்தார்கள். மலைப்பாதைகளில் பயணிக்கும் பேருந்து என்பதால் நீளம் குறைவான பேருந்துகள் தான் இங்கே – மொத்த இருக்கைகள் 30-32 தான் இருக்கும். உட்கார்ந்திருந்தவர்கள் தவிர ஐந்தாறு பேர் நின்று கொண்டிருந்தார்கள்.


டம்-8: அதோ அங்கே நிற்கிறது நாம் போக வேண்டிய பேருந்து...



டம்-9: பயணித்த பேருந்து ஒரு கிட்டப்பார்வை...


டம்-10: ஹிமாச்சலத்தின் பாரம்பரிய தொப்பி - இதை நாங்களும் அணிய வேண்டியிருந்தது - ஓர் இடத்தில்! தகவல் பின்னர் வரும்.... 


எங்கள் உடமைகளை மேலே அதற்கான இடத்தில் வைத்து விட்டு நாங்களும் நின்று கொண்டோம். ரோghகியிலிருந்து நாங்கள் சென்று சேர நினைத்திருந்த இடமான chசித்குல் கிட்டத்தட்ட 75 கிலோமீட்டர். மலைபாதை என்பதால் குறைந்த பட்சமாக 3 ½ மணி முதல் நான்கு மணி நேரம் ஆகும்.  மேலே தந்திருக்கும் வரைபடத்திலிருந்து பாதையில் எத்தனை வளைவு நெளிவுகள் என்பதை ஓரளவுக்குப் புரிந்து கொள்ளலாம்! பேருந்தில் எங்களைத் தவிர அனைவருமே உள்ளூர் காரர்கள்! ஹிமாச்சலப் பிரதேசத்தில் ஒரு பழக்கம் உண்டு – ஆண்கள் பெண்கள் என இருபாலருமே தலையில் ஒரு வித பச்சை நிறத் தொப்பியை அணிந்து கொள்வது வழக்கம்.  பேருந்தில் நாங்கள் நின்று கொண்டிருந்தது பின்பகுதியில் – முன்பக்கத்தில் இருப்பவர்களை அலைபேசியில் ஒரு படம் எடுக்க – எத்தனை எத்தனை தொப்பிகள்! – அந்தப் படமும் இப்பதிவில் இணைத்திருக்கிறேன்.


டம்-11: பூவா அல்லது காயா?

நடத்துனர் வர, அவரிடம் பேச்சுக் கொடுத்தோம். எங்களுக்கு ரோghகியிலிருந்து chசித்குல் வரை பயணச் சீட்டு தரும்படிக் கேட்க, அவர் ரோghகியிலிருந்து ரெக்காங்க் பியோ வரை வாங்கிக் கொள்ளுங்கள். அங்கே சென்று சில நிமிடங்கள் பேருந்து நிற்கும். அதன் பிறகு தான் புறப்படும் – அப்போது ரெக்காங்க் பியோவிலிருந்து chசித்குல் வரை பயணச் சீட்டு வாங்கிக் கொள்ளுங்கள் என்றார். ரோghகியிலிருந்து ரெக்காங்க் பியோ வரை கட்டணம் ரூபாய் 30 மட்டும்/ [ஒருவருக்கு] அதன் பிறகு பியோவிலிருந்து chசித்குல் வரை ரூபாய் 150/- [ஒருவருக்கு]. நின்றபடியே பயணம் செய்து கொண்டிருந்த நாங்கள் பேருந்தில் இருந்த மற்றவர்களிடமும் பேசிக் கொண்டே வந்தோம். உள்ளூர்வாசிகளிடம் பேசுவதால் பல விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம். ஒரு இளைஞர் எங்களுடன் தொடர்ந்து பேசிக் கொண்டு வந்தார்.


டம்-12: ஆப்பிள் தோட்டம்...

மருத்துவம் படிக்க வேண்டும் என்பதற்காக தில்லியில் வந்து தங்கியிருந்து பயிற்சி வகுப்புகளில் படித்துக் கொண்டிருந்து பிறகு தேர்வு எழுதி இருக்கிறாராம். ஹிமாச்சலப் பிரதேச அரசுக் கல்லூரிகளிலும் நுழைவுத் தேர்வுகள் எழுதி இருப்பதாகச் சொன்னார். பல விஷயங்கள் பேசிக் கொண்டிருந்தோம் – ஊர் அழகான ஊர் தான் என்றாலும் மேல் படிப்பு என வரும்போது அங்கே வசதிகள் இல்லை என்பதால் ராம்பூர், சிம்லா, சண்டிகட்[ர்] அல்லது தில்லி வந்து தான் படிக்க வேண்டியிருக்கிறது. மருத்துவ வசதிகளும் அவ்வளவாகக் கிடையாது என்றும் சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு சிறு Primary Health Centre இயங்குகிறது என்றாலும் அங்கே அடிப்படை மருத்துவ வசதிகள் மட்டுமே உண்டு என்பதையும் சொல்லிக் கொண்டிருந்தார். சின்னச் சின்ன கிராமங்களில் இதைத் தவிர அதிக வசதிகளை எதிர்பார்க்கவும் முடியாது என்பதையும் ஒப்புக் கொண்டார். பள்ளிகளும் மேல் நிலைப்பள்ளி வரை இருக்கிறது என்றும் சொல்லிக் கொண்டு வந்தார்.


டம்-13: கோவில் மேற்கூரை - ஒரு கிட்டப்பார்வை...

மலைப்பிரதேசத்தில் இருக்கும் இது போன்ற கிராமங்கள் அழகிய சூழலில் இருப்பவை என்றாலும் மலைச்சரிவு, பனிப்பொழிவு போன்ற ஆபத்துகளும் கூடவே உண்டு என்பதைப் பற்றி பேசிக் கொண்டே வந்தார். அவரிடம் பேசியதில் நிறைய உள்ளூர் விஷயங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள முடிந்தது. இரவில் நாங்கள் தங்கியிருந்த கல்பாவினை அடைந்தபோது இன்னும் சில சுற்றுலாப் பயணிகள் எங்கள் பேருந்தில் ஏறிக் கொண்டார்கள். அவர்களில் சிலர் பற்றி பின்னர் தனிப்பதிவாக எழுத வேண்டும்! உள்ளூர் வாசிகளைக் கேட்ட இடத்தில் நிறுத்தி இறக்கி விடுவதும், மேலே பயணிக்க வரும் பயணிகள் கைகாட்டிய இடத்தில் நின்று ஏற்றிக் கொள்வதும் அங்கே சாதாரணமாக நடந்தது. பேருந்தில் எங்களுக்கு பியோ வரை இடம் கிடைக்கவில்லை! நின்றபடியே தான் வந்தோம். ரெக்காங்க் பியோ வந்த பிறகு பெரும்பாலான பயணிகள் இறங்கிக் கொள்ள, எங்களுக்கு இடம் கிடைத்தது. காலையிலிருந்து நடை, பயணம் மட்டுமே – காலை உணவு சாப்பிட வில்லை என்பதை வயிறு நினைவூட்டியது!


டம்-14: மர வேலைப்பாடுகள் - ஒரு கிட்டப்பார்வை...

ரெக்காங்க் பியோ பேருந்து நிலையத்தில் எங்களுக்கு என்ன அனுபவங்கள், சாப்பிட என்ன கிடைத்தது, பயணத்தில் கிடைத்த அனுபவங்கள் என்பது போன்ற விஷயங்களை அடுத்த பதிவில் சொல்கிறேன். இன்றைக்கு பதிவில் சொன்ன விஷயங்களைப் பற்றிய உங்கள் சிந்தனைகளையும் எண்ணங்களையும் பின்னூட்டம் வழியாக பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி. நாளை வேறு ஒரு பதிவில் உங்களைச் சந்திக்கும் வரை…
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

28 கருத்துகள்:

  1. டாட்டா சொல்லி இருப்பதை ஆமோதிக்கிறேன்!
    குட்மார்னிங்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. அவ்வளவு சிரமப்பட்டு இறங்கிச் சென்றும் ஸ்வாமி தரிசனம் இல்லை என்பது சோகம்.  குறுகலான படிகளா?  ஐம்பது படிகள்தானே போகிறீர்கள்...  ஏன் சிரமம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறுகலான படிகளே தான். செங்குத்தான படிகள் என்பதாலும் எட்டு கிலோமீட்டர் நடந்து வந்த பிற்கு படிகள் ஏறுவது கொஞ்சம் சிரமம் தானே ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. பாதைகளின் வளைவுகள் பயமுறுத்துகின்றன.  நிறைய பேர்களுக்கு இது மாதிரி பயணங்கள் ஒத்துக்கொள்ளாது.  இதில் நின்றுகொண்டே பயணம் என்றால்...  இன்னும் சிரமம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். வளைந்து நெளிந்து செல்லும் பாதைகள் பலருக்கும் ஒத்துக் கொள்ளாது தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. உள்ளூர் வாசிகளிடம் என்ன மொழியில் பேசினீர்கள்?  ஹிந்திதானா?  அவர்களுக்கு தனி மொழி உண்டா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த மாதிரி மலைப் பிரதேசங்களில் பேசப்படும் மொழி ”பஹாdடி” என அழைக்கப்படும் - இதுவும் ஒவ்வொரு பிராந்தியங்களிலும் வேறுபடும். ஆனால் பொதுவாக ஹிந்தியும் படிக்கிறார்கள் என்பதால் அனைவரும் ஹிந்தியும் பேசுவார்கள். பஹாடி மொழி புரிவது கொஞ்சம் கஷ்டம் - சில வார்த்தைகள் ஹிந்தி போலவே இருந்தாலும் பேசும் விதம் அப்படி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. சிட்டியில்தான் சுற்றுலா செல்லவேண்டும் என்று பலர் நினைக்கின்றார்கள் அது தவறு.
    ரசனை இருந்தால் எதையும் ரசிக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரசனை இருந்தால் எதையும் ரசிக்கலாம்.... அதே தான் கில்லர்ஜி. கிராமங்களில் இருக்கும் அதீத அழகு பலருக்கும் தெரிவதில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. படங்கள் மனதைக் கவர்கின்றன...
    உள்ளூரைப் பற்றிய விவரமான தகவல்களுடன் சிலுசிலுப்பான பதிவு..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி.

      நீக்கு
  7. அருமையான வாசகம்.

    குளிர் பிரதேஷத்தில் குளிர் தாங்க மரங்களால்தான் வீடுகள் இருக்கும்.
    கோவிலில் பூஜையை காட்டக்கூடாதா? பிரசாதம் படைக்கும் போது மட்டும் தான் திரை போட்டு இருப்பார்கள். படி இறங்கி போயும் பார்க்க முடியவில்லை என்றாலும் மனதில் நினைத்து வணங்கியது மகிழ்ச்சி.

    அந்த பழ சேகரிப்பு, தொப்பி அணிந்து கொள்ள வேண்டிய சூழ்நிலை இவற்றை தெரிந்து கொள்ள ஆசை.

    வளைந்து வளைந்து செல்லும் போது பேருந்தில் நின்று கொண்டு பயணம் செய்வது கஷ்டம் அல்லவா?

    ஆண், பெண் எல்லோருக்கும் ஒரே மாதிரி தொப்பிதானா? அல்லது வித்தியாசம் உண்டா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நின்று கொண்டு பயணம் செய்வது கடினம் தான் கோமதிம்மா. இருவருக்கும் ஒரே மாதிரி தொப்பி தான்மா. சிலர் தொப்பியில் பூக்கள் கூட செருகி வைப்பது உண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. பதிவுகள் எழுதுவது அருகி வரும் சூழலில் தினம் ஒரு பதிவு எழூதி அசத்துகிறீர்கள். வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த வரை தினமும் ஒரு பதிவு எழுதுகிறேன். சில நாட்களில் எழுத முடிவதில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜோசப் ஐயா.

      நீக்கு
  9. மிக அழகிய படங்கள்.. குளிர்ப் பிரதேசம் எப்பவும் ஒரு அழகுதான்.

    அவை கோன் காய்கள்.. ஒருவித சவுக்கு மரம்.. குளிர்ப்பிரதேசத்தில் அதிகம் வளரும்.. அக்காய்களை எடுத்து காய வைட்த்ஹுப் பெயிண்ட் பண்ணி அழகுக்கு வீட்டில் வச்சிருப்பார்கள்.. நானும் அப்படி செய்திருந்தேன் பின்பு எறிஞ்சிட்டேன்.

    அவை பழங்களோ... கடலையை ஊறவிட்டிருக்கிறார்கள் என நினைச்சேன்:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அதிரா. அவை ஒரு வகை சவுக்கு காய்களின் இளம் வடிவம் தான்.

      கடலை அல்ல பழங்கள்... :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    அழகான படங்கள். எழில் கொஞ்சம் கிராமமாக உள்ளது. அத்தனை பனியிலும்
    குளிரிலும் சகஜமாக மக்கள் தங்கள் தினசரி கடமையாற்றியபடி இருக்கிறார்கள். எல்லா செய்திகளும் வியப்பை தருகின்றன. மர வேலைப்பாடுகள் அமைந்த வீடு, கோவில் அனைத்துமே அழகாகவும் உள்ளன. கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் அந்த பாதையில் நின்று கொண்டே பயணம் மிகவும் கஸ்டந்தான். எப்படித்தான் பயணித்தீர்களோ? நீங்கள் அவ்வளவு கஸ்டப்பட்டு பயணித்து எங்களுக்கு பகிர்வதில் இந்த இடங்களைப் பற்றி நாங்களும் அறிந்து கொள்ள முடிகிறது. அடுத்தப் பகுதிக்கும் ஆவலாக காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான்கு மணி நேரமும் நிற்கவில்லை. ரெக்காங்க் பியோ என்ற இடம் வரை நின்றபடி பயணம். அதன் பிறகு உட்கார்ந்து தான் வந்தோம் - பதிவிலும் குறிப்பிட்டு இருக்கிறேன் கமலா ஹரிஹர்ன் ஜி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. பேருந்துகளில் உட்கார இடமில்லை என்றால் மலைப்பாதைகளில் கூட பயணிகள் நின்றபடி பயணிப்பது உண்டா?.. படத்தைப் பார்த்ததினால் வந்த சந்தேகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசித்த பொழுது நின்று கொண்டே பயணித்தீர்கள் என்று தெரிகிறது. அது எப்படி சாத்தியப்படும்?

      நீக்கு
    2. நாள் ஒன்றுக்கு ஒன்றிரண்டு பேருந்துகளே வரும் என்பதால் நின்றபடியும் பயணிக்கிறார்கள். தொப்பி படம் [படம்-10) பார்த்தால் நின்று வரும் பயணிகளைக் காணலாம் ஜீவி ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    3. வேறு வழியில்லை என்பதால் இப்படி நின்றபடி பயணம் - அனுமதிக்கிறார்கள் என்பதும் தவறு தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜீவி ஐயா.

      நீக்கு
  12. கோயில்களில் மேல் முகப்புகள் நேபாளச் சாயலோ?..

    மர வேலைகளைப் பார்க்கும் பொழுது கேரளக் கோயில்கள் நினைவுக்கு வந்தன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பனிப்பொழிவு அதிகம் உள்ள இடம் என்பதால் மரம் அதிக பயன்படுத்துகிறார்கள். மேலே கூரையில் கூட மரம் தான் - அதன் மேல் பாறைகளை பலகைகள் போல வெட்டி, மரங்களுடன் Nut-Bolt உதவியால் சேர்க்கிறார்கள்.

      திபெத், நேபாளம் என மலைப்பகுதிகள் எல்லாம் இப்படியான கோவில்கள் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜீவி ஐயா.

      நீக்கு
  13. இனிய காலை வணக்கம் வெங்கட்.

    அவ்வளவு தூரம் நடந்து பின் இறங்கீ நாராயணரைப் பார்க்க முடியாவிட்டாலும். மலை முழுவதும் கடவுள் தானே.

    அந்த இளைஞருக்குத் தான் என்ன ஆர்வம்.
    நிறைய விவரங்கள் சொல்லி இருக்கிறார்.
    கிராமப் புற மக்கள் என்றும் ஆரோக்கியத்துடன்
    இருக்கப் பிரார்த்தனைகள்.
    வீடுகள் இந்தோனீசிய வீடுகளி நினைவுறுத்துகின்றன.
    பகோடா டைப் வீடுகள். இனிமையான பயணம்.
    மிக நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் வல்லிம்மா...

      மலை முழுவதும் கடவுள் தானே - உண்மை!

      பகோடா டைப் வீடுகள் - ஆமாம் மா. இந்து சமயக் கோவில்கள் கூட அப்படியே.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....