வெள்ளி, 4 அக்டோபர், 2019

கடைசி கிராமம் – கோட்டையிலிருந்து குபா கிராமத்திற்கு…


அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, சமீபத்தில் படித்த ஒரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.


 
கடைசி கிராமம் என்ற தலைப்பில் இதுவரை வெளிவந்த பதிவுகளின் சுட்டிகள் கீழே:




















காம்ரூ கோட்டையும், கோட்டைப் பகுதியில் இருந்த காமாக்யா தேவியையும் பார்த்த பிறகு அங்கே இருந்த சிப்பந்திக்கு நன்றி சொல்லி விடைபெற்றோம். மீண்டும் சாங்க்ளா செல்வதில் எங்களுக்கு இஷ்டமில்லை – அங்கே கும்பல் அதிகம்! அதனால் அடுத்த கிராமத்திற்குச் செல்லலாம் என்ற முடிவு எடுத்தோம். அடுத்த கிராமம் எது, அதன் பெயர் என்ன என்பதைப் பார்க்கலாம்! கோட்டையிலிருந்து இறங்க வேண்டிய பாதை அதே பாதை தான்! குறுகலான பாதையில் நடுநடுவே படிக்கட்டுகள். ஒரு பக்கத்தில் பழங்கள் தரும் மரங்களும், பைன் மரங்களும் மலைச் சிகரங்களும் என்றால் மறு புறத்தில் வீடுகள். வீடுகளில் நிறைய பூச்செடிகளை வளர்க்கிறார்கள். பெரும்பாலான வீடுகளின் முன் பக்கத்தில் அழகிய பூச்செடிகள், அதில் பூத்துக் குலுங்கும் பூக்கள் என பார்க்கவே ரம்மியமான காட்சி.  ஏறிச் சென்றபோது எடுத்துக் கொண்ட நேரத்தினை விட இறங்கும்போது கொஞ்சம் குறைவான நேரமே எடுத்துக் கொண்டோம்.



ஆனாலும் இரண்டு பேருக்கும் கால் கெஞ்சியது! சீக்கிரமே தங்குமிடம் பார்த்து சிறிது நேரம் படுத்துக் கொண்டு கால்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால் நாம் நினைப்பது நடந்து விடுகிறதா என்ன? நுழைவாயில் அருகே வந்த பிறகு இடது பக்கப் பாதையில் சென்றால் சாங்க்ளா, வலது பக்கப் பாதை அடுத்த கிராமத்தினை நோக்கிச் செல்லும் பாதை. நாங்கள் வலது பக்கப் பாதையைத் தேர்ந்தெடுத்தோம். அடுத்த கிராமத்தின் பெயர் என்ன தெரியுமா? அந்தக் கிராமத்தின் பெயர் குpபா! வித்தியாசமான பெயர் கொண்ட பல ஊர்கள் இங்கே இருக்கிறது – நீங்களே சொல்லுங்கள் – கர்chசம், ரெக்காங்க் பியோ, chசித்குல், ரக்chசம், குpபா, கல்pபா, ரோghகி – என பல கிராமங்களின் பெயர்களை இந்தப் பயணத்தொடரில் நான் குறிப்பிட்டு இருக்கிறேன் – உங்களில் யாராவது இந்த ஊர் பெயர்களை முன்னரே அறிந்தது உண்டா?



வலது பக்கப் பாதையைத் தேர்ந்தெடுத்து நாங்கள் நடந்து கொண்டிருந்தோம். குபா கிராமம் வரும் வழியாகத் தெரியவில்லை.  இணையத்தில் தேடும்போது சாங்க்ளாவிலிருந்து குபா நான்கு கிலோமீட்டர் என்று காண்பித்தது கூகுள். ஆனால் நாங்களோ நீண்ட நேரம் நடந்த மாதிரி ஒரு உணர்வு எங்களுக்குள்! கால்கள் வலிக்க ஆரம்பித்திருந்தன.  கிராமம் தென்படாதா என்று பார்த்துப் பார்த்து கண்கள் பூத்தன! வழியில் சென்ற ஒரு வண்டியை நிறுத்தி ஏறிக் கொள்ளலாம் எனப் பார்த்தால் எல்லா வண்டிகளும் சாங்க்ளா நோக்கியே சென்று கொண்டிருந்தன. ஒருவரிடம் குபா கிராமம் இன்னும் எவ்வளவு தூரம் என்று கேட்க, இதோ வந்து விடும் – குறைவான தூரம் தான் என்று சொல்லி புன்னகை புரிந்து செல்கிறார்! அவருக்கு நன்றி சொல்லி மேலும் நடக்கிறோம் – ஆஹா – எதிரே சிறு சிறு கட்டிடங்கள், வீடுகள் மற்றும் சாலையோரத்தில் புத்த மதத்தின் வழிபாட்டு மணி – கிராம வாசிகள் மணியைச் சுழற்றிச் செல்ல, சப்தம் கேட்கிறது.



இணையத்தில் பார்த்தபோது இரண்டு மூன்று தங்குமிடங்கள் உண்டு என்று எழுதி இருந்தது. நாங்கள் பார்த்த முதல் இடத்தில் இரண்டு தங்குமிடங்கள் எதிரெதிரே! அதில் Hotel Rock View என்பதைத் தேர்ந்தெடுத்து அறைகள் இருக்கிறதா எனக் கேட்க, முழுவதுமே காலியாகத் தான் இருக்கிறது என்றும், எந்த அறை வேண்டுமானாலும் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம் என்றும் சொன்னார் அந்த தங்குமிட உரிமையாளர்! மார்க்கெட் டல் இப்போது – மழைக்காலம் தொடங்கிவிட்டது என்பதால் மலைச்சரிவுகளுக்கு பயந்து கொண்டு யாருமே வரவில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார். தங்குமிட வாடகை – ஒரு அறைக்கு 700 மட்டும்! 1000/- சொல்லி 700-க்கு ஒப்புக் கொண்டார்! இன்னும் கூட குறைத்திருக்கலாம் என்று தோன்றியது! ஹாஹா… எவ்வளவு குறைவோ அவ்வளவு லாபம் தானே! அங்கே இருந்த சிப்பந்தி பற்றி சொல்லியே ஆக வேண்டும்!


நாங்கள் சென்றவுடன் எங்கள் அறைக்கு வந்து தேவையானவற்றைக் கொடுத்து விட்டு, குடிப்பதற்கு தேநீர் வேண்டுமா எனக் கேட்டு எது தேவை என்றாலும் தொலைபேசியில் அழைக்கச் சொல்லி எண்ணையும் சொன்னார். நாங்கள் தேநீரும் கொறிப்பதற்கு ஏதேனும் வேண்டும் எனச் சொல்லி அனுப்பி, வென்னீரில் குளித்து கொஞ்சம் ஓய்வெடுத்தோம். ஓய்வுக்குப் பிறகு கிராமத்திலிருந்து வெளியே செல்லும் பாதையில் கொஞ்சம் நடந்தால் ஒரு அணைக்கட்டு இருக்கிறது அதனைப் பார்க்கலாம் என நினைத்திருந்தோம்.  ஆனால் தொடர்ந்து மழை பெய்த வண்ணமே இருந்தது. அந்த மழையில் சென்று வந்தால் படமும் எடுக்க முடியாது, கூடவே மலைப்பாதையில் மழையில் நடந்து செல்வது சரியல்ல என்று அந்த சிப்பந்தியும் சொல்லி விட, தங்கும் அறையிலேயே ஓய்வெடுத்தோம்.  சிப்பந்தியிடம் அடுத்த நாள் காலை பேருந்து பற்றி விசாரிக்க, தங்குமிடம் வழியாகவே செல்லும் என்றும் தங்குமிட வாசலிலேயே ஏறிக் கொள்ளலாம் என்று சொன்னார். 


காலை எட்டு மணிக்கு இருக்கும் பேருந்து சண்டிகட் வரை செல்லும் பேருந்து – அந்த பேருந்து உங்களுக்கு வசதியாக இருக்கும் என்று சொன்னதோடு மேலதிகத் தகவலாக, இரவு அந்தப் பேருந்து வந்து சாங்க்ளாவில் நிற்கும் என்றும், இரவு வந்தால் தான் காலையில் பேருந்து புறப்படும் என்றும் சொன்னார். இல்லை என்றால் ஏழு மணி பேருந்தில் நீங்கள் செல்ல வேண்டியிருக்கும் என்று சொல்லி, இரவு பேருந்து செல்வதைப் பார்த்து உங்களுக்குச் சொல்லி விடுகிறேன் – அதன் படி நீங்கள் காலையில் புறப்படலாம் என்று சொல்லிச் சென்றார். இரவு உணவு என்ன தேவை என்பதையும் முன்கூட்டியே சொல்லிவிட்டால் எட்டு மணிக்கு தயாராக இருக்கும் என்பதையும் சொல்ல, தவா ரொட்டி, தால் மற்றும் மிக்ஸ் வெஜிடபிள் சப்ஜி மட்டும் போதும் என்று சொல்லி அனுப்பினோம்.  சரியாக எட்டு மணிக்கு கீழே இருந்து அவரின் அழைப்பு – உங்களுக்கான உணவு தயார் – கீழே வந்தால் சுடச் சுட தவா ரொட்டி போட்டு விடுகிறேன் என்று!


இரவு உணவை முடித்துக் கொண்டு குபா கிராமத்தில் ஒரு உலா வந்தோம். அப்படி ஒரு அமைதி – கிராமமே அந்த எட்டரை மணிக்குள் தூங்கி இருந்தது! மலைப்பிரதேசம் என்பதால் அனைவருமே விரைவில் தூங்கி விடுகிறார்கள். காலையில் எழுந்திருப்பதும் மெதுவாகவே எழுந்திருக்கிறார்கள்.  நாங்கள் சிறிது தூரம் நடந்து விட்டு எங்கள் அறைக்குத் திரும்பினோம். அறைக்குத் திரும்பியதும் அழைப்பு – சிப்பந்தியிடமிருந்து! பேருந்து வந்து விட்டது – அதனால் எட்டு மணிக்கு புறப்படும் பேருந்தில் நீங்கள் செல்லலாம் என்று! அன்றைய நாள் முழுவதும் நிறையவே நடந்திருக்கிறோம், கூடவே மலையேற்றமும் என்பதால் நல்ல உறக்கம்! படுத்துச் சில நிமிடங்களிலேயே உறங்கி விட்டோம். காலை ஐந்தரை மணிக்கு அலார்ம் வைத்து இருந்ததால் அந்த அலார்ம் சப்தம் கேட்ட போது தான் விழித்தோம். திரைச்சீலைகளை விலக்கி வெளியே பார்க்க, அப்போதும் மழைத் தூறல்! 


ஏற்கனவே accuweather தளத்தில் வலுவான மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாகத் தகவல் படித்திருந்தோம். பயணத்தில் இது வரை மழையால் எந்தத் தொந்தரவும் இல்லை. அன்றைக்கு தில்லி திரும்ப வேண்டும் – வழியில் எந்தப் பிரச்சனையும் இருக்கக் கூடாது என்று நினைத்தபடியே தயார் ஆனோம்.  காலையில் பேருந்தில் பயணம் எப்படி இருந்தது என்பதைப் பற்றி அடுத்த பகுதியில் சொல்கிறேன் – அடுத்த பகுதி “கடைசி கிராமம்” தொடரின் கடைசி பகுதியாகவும் இருக்கலாம்! இன்றைக்கு பதிவில் சொன்ன விஷயங்களைப் பற்றிய உங்கள் சிந்தனைகளையும் எண்ணங்களையும் பின்னூட்டம் வழியாக பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி. நாளை வேறு ஒரு பதிவில் உங்களைச் சந்திக்கும் வரை…
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

24 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி..

    மிக மிக மிக அழகான படங்கள்.

    கணினி ரொம்ப படுத்துது...ஆஃப் செய்துவிட்டு மீண்டும் வருகிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாலை வணக்கம் கீதாஜி.

      படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      கணினி - :) எனது மடிக்கணினியிலும் பிரச்சனை தான் - இப்போது மொத்தமாக படுத்துவிட்டது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. குட்மார்னிங்.   ஏற்கெனவே நடையோடு இன்னும் நான்கு கிலோமீட்டர் அதுவும் மலைப்பாதையில்...   கஷ்டம்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாலை வணக்கம் ஸ்ரீராம்.

      மலைப்பாதையில் நடக்கும்போது ரொம்பவே கஷ்டமாகத் தான் இருந்தது. ஆனாலும் பார்க்கக் கிடைத்த இடங்கள், அந்த கஷ்டத்தினை மறக்கச் செய்தது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. எல்லாப் பெயர்களுமே புதிதாய்த்தான் இருக்கின்றன.   அந்த ஊர் பாஷையில் என்னென்ன அர்த்தம் வருமோ!  உங்களுக்கு வித்தியாசமான அனுபவங்கள் இனிமையான அனுபவங்கள் கிடைத்திருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வித்தியாசமான பெயர்களுக்கு அந்த ஊர் பாஷையில் என்ன அர்த்தமோ? ஹாஹா... ஸ்ரீராம் அவர்களிடம் அதைக் கேட்கத் தோன்றவில்லை எங்களுக்கு!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. அப்படியானால் அந்த கிராமத்தில் ஒன்றுமே பார்க்கவில்லையா?  அறையை விட்டு வெளியேயே செல்லவில்லை போல...  மறுநாள் பஸ் ஏறிக் கிளம்ப வேண்டியதுதானா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம், கிராமத்திலிருந்து சில கிலோமீட்டர் நடந்தால் ஒரு அணை இருக்கிறது - அங்கே மின்சாரம் தயாரிக்கிறார்கள். பேருந்தில் செல்லும்போது அப்படியே பார்த்துக் கொண்டோம். வேறு எதுவும் பெரிதாக அங்கே இல்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. காலம்பர வரேன், உங்க பதிவெல்லாம் அவசரக் கோலத்தில் படிக்க முடியாது! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது வந்து படிக்கலாம் கீதாம்மா... எங்கேயும் போய்விடாது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. சுவாரஸ்யம் ஜி
    கல்பா துபாய் நாட்டில் ஒரு ஊரின் பெயர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா... கல்பா எனும் பெயரில் துபாயில் ஒரு ஊர்! தகவல் பகிர்வுக்கு நன்றி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. கிராமங்களின் பெயர்கள் புதியவை. ஹோட்டல் வெளிப்பார்வையில் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  8. ஓ வெங்கட்ஜி குபாவில் எதுவும் பார்க்க முடியவில்லையோ. அணைக்கட்டும். மழையால். என்றாலும் இப்படியான கிராமங்களுக்குச் சென்றதை வாசிக்கும் போது நானும் மகனும் முன்பு பேசிக் கொண்டது ஹிமாச்சலை உள்ளே சென்று பார்க்க வேண்டி நெட்டில் பார்த்துக் கொண்டது எல்லாம் நினைவுக்கு வந்தது.

    இப்படியான பய்ணங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குபாவில் அணை தவிர பெரிதாக ஒன்றும் இல்லை கீதாஜி. அணைக்கட்டை அடுத்த நாள் பேருந்தில் செல்லும் வழியில் பார்த்ததோடு சரி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. நீங்கள் சொல்லியிருக்கும் கிராமங்களில் கல்பா, (ரெக்காங்க் பியோ) சித்குல் மற்றவை தெரியவில்லைஜி. இவை நாங்கள் பார்த்த போது குறித்துக் கொண்டவை. மற்றபடி விவரங்கள் எல்லாம் உங்கள் குறிப்புகளில் இருந்துதான்... மற்றொன்று நீங்கள் முன்பு குறிப்பிட்ட நினைவு சைனா பார்டரில் இருக்கும் நகோ...அதைப் பற்றியும் பார்த்து வைத்திருந்தோம்..

    மற்றவை எல்லாம் உங்கள் பதிவிலிருந்து நிறைய அறிய முடிந்தது ஜி.

    அருமையான பயணக் குறிப்புகள்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கும் இந்த இடங்கள் பிடிக்கும் கீதாஜி. சில இடங்களை நீங்கள் முன்னரே அறிந்திருப்பதில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. நிச்சயமாக நாங்கள் இந்த பெயர்களை அறிந்திருக்க வாய்ப்பில்லை.இந்த பதிவின் வழியாக நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கு புதிய சில விஷயங்களை இத் தொடர் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது என்று அறிந்து மகிழ்ச்சி இராமசாமி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. பேர் தெரியாத, கேள்வி படாத கிராமம் அழகு. தங்குமிடம் அழகு.
    மரவேலைப்பாடு அழகு.
    பணியாளர் பயணத்துக்கு உதவியது அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  12. கர்chசம், ரெக்காங்க் பியோ, chசித்குல், ரக்chசம், குpபா, கல்pபா, ரோghகி – என பல கிராமங்களின் பெயர்களை.... மிக வித்தியாசம் அனைத்தும் ...


    தங்கள் அனுபவங்கள் வெகு சுவாரஸ்யம் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுப்ரேம் ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....