புதன், 30 டிசம்பர், 2020

சென்னைக்கு ஒரு பயணம் - 2 - ஐந்து வேளை கல்யாண சாப்பாடு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். முன்னர் வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


நீங்கள் அடைவதெல்லாம் இறைவன் உங்களுக்குத் தரும் பரிசு. இழப்பதெல்லாம் நீங்கள் இன்னொருவருக்குத் தரும் வாய்ப்பு!


*****




சென்னைக்கு ஒரு பயணம் பகுதி ஒன்றினை எழுதி, வெளியிட்டு சில நாட்கள் ஆகிவிட்டது. இதோ இப்போது இரண்டாம் பகுதியுடன் உங்களைச் சந்திக்க வந்து விட்டேன்! முதல் பகுதியைப் படிக்காத நண்பர்களின் வசதிக்காக பகுதி ஒன்றின் இணைப்பு இதோ!


சென்னைக்கு ஒரு பயணம் - 1 - ஊபர் ஆட்டோவுக்கு ஜே!




நண்பருக்கு நட்பு வட்டம் மிகப் பெரியது. அவர் பண்பு அப்படி! எந்த நண்பரையும் விட்டுக் கொடுக்காதவர் - நட்பு வட்டத்தில் யார் வீட்டில் எந்த விசேஷம் நடந்தாலும், அழைப்பு வந்து விட்டது என்றால் அவரோ, அவர் துணைவியோ கலந்து கொள்ளாமல் இருக்க மாட்டார்கள் - இந்தியாவின் எந்த மூலையில் நடந்தாலும்! அப்படி இருக்கையில் இவர் வீட்டில் ஒரு நிகழ்வு என்றால் எத்தனை பேர் வருவார்கள் என்று சொல்ல வேண்டியதில்லை.  கடந்த மே மாதமே இந்த சஷ்டி அப்த பூர்த்தி நிகழ்வு நடந்திருக்க வேண்டியது - தீநுண்மி காரணத்தினால் நடத்த இயலவில்லை.  இரண்டு மூன்று முறை தள்ளிப் போய்விட்டது.  வேறு வழியில்லாமல் இந்த நவம்பர் மாதத்தில் வைத்துக் கொண்டார்கள்!  100 பேருக்கு மேல் அனுமதி அளிக்காத காரணத்தினால், நட்பு வட்டத்தில் இருந்த பலரை அவரால் அழைக்க முடியாமல் போனது.  


அழைத்த அனைவருமே முதல் நாளிலோ அல்லது இரண்டாம் நாளிலோ வந்துவிட்டார்கள்.  நான் இரண்டு நாட்களிலும் கலந்து கொண்டேன்.  சென்னை வந்தாலும், நிகழ்வு நேரம் தவிர மற்ற நேரத்தில் நண்பர்களைக் காண முடியும் என்றாலும், யாரையும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்ற எண்ணத்தில் நான் வந்ததைச் சொல்லவில்லை.  நண்பர் பால கணேஷ் அவர்களை அழைத்து முடிந்தால் சந்திக்கலாம் என்று சொல்ல, வேலை இருந்ததால் அவரால் வர இயலவில்லை.  அதனால் நிகழ்வு நடந்த ஆழ்வார்பேட்டை பகுதியிலேயே இருந்து விட்டேன் - உண்பது, அரட்டை அடிப்பது, நிகழ்வில் கலந்து கொள்வது, உண்பது என தொடர்ந்து கொண்டிருந்தது. மொத்தத்தில் நண்பர்களுடன் அரட்டை, உணவு, நிழற்படங்கள் எடுப்பது என்றே தொடர்ந்து கொண்டிருந்தது இந்தச் சென்னைப் பயணம். 


தலைநகரிலிருந்து இந்த நிகழ்வுக்காகவே, விமானத்தில் ஒரு வட இந்திய இளைஞரை அழைத்து வந்திருந்தார் நண்பர்.  இந்த இளைஞரும் உங்களுக்கு அறிமுகம் ஆனவர் தான்! எனது வலைப்பூவில் இவர் வரைந்த ஓவியங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டதுண்டு - அந்தப் பதிவினை படிக்காதவர்கள் வசதிக்காக, அந்தப் பதிவின் இணைப்பு - ஓவியம் – கண் பார்ப்பதை கை வரையும்....  அவரை அழைத்துக் கொண்டு மாம்பலம், டி.நகர் பகுதிகளில் ஒரு உலா வந்தேன் - அதைத் தவிர வேறே எங்குமே செல்ல இயலவில்லை. சென்னையின் பெரிய பெரிய கடைகள் பார்த்து அந்த இளைஞருக்கு வியப்பு.  எங்கேயும் அழைத்துச் செல்ல முடியாத சூழல் என்பதால் கடற்கரைக்குச் செல்ல அவருக்கு விருப்பம் இருந்தாலும் செல்ல இயலவில்லை. மயிலாப்பூர் கோவில் கூட பக்தர்களுக்கு அனுமதி அளிப்பதில்லை என்று சொல்லிவிடவே மீண்டும் மண்டபத்திற்கே வந்து விட்டோம். 


உணவு என்று எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு வேளையிலும் மெனுவில் மாற்றங்கள் இருந்தது! பதிர்பேணி, அசோகா அல்வா, ஜிலேபி ஒவ்வொரு வேளையிலும் இனிப்பிலும் மாற்றம்! திரு ஐயப்பன் அவர்கள் எங்கள் அனைவருக்குமே தெரிந்தவர் என்பதால், அவருடைய குழுவினரும் பார்த்துப் பார்த்து எங்களைக் கவனித்தார்கள் - அன்புத் தொல்லையும் உண்டு - “இன்னும் ரெண்டு போட்டுக்கோங்க அண்ணா!” என்று எல்லா வேளையிலும் ஏதோ ஒரு பதார்த்தம் இலையில் விழுந்தவாறே இருந்தது!  பல சமயங்களில் அன்புத் தொல்லையாக இருந்தாலும் அவற்றை அனுபவித்து, சுவைத்து, உண்பது என்பது பிடித்து தானே இருக்கிறது! சென்னையில் இந்த விழாவில் இருந்தவரை நிறையவே சாப்பிட்டு இருக்கிறேன் என்பது எனக்கே தெரிந்தது - ஒவ்வொரு முறை சாப்பிட்டு எழும்போதும், எடை கூடிவிட்டது போல ஒரு உணர்வு! 


சென்னையிலிருந்து சில நண்பர்களும், பணி ஓய்வுக்குப் பிறகு சென்னையிலேயே தங்கிவிட்ட சில நண்பர்களும் நிகழ்வுக்கு வந்திருக்க, அவர்களை நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சி.  நிறைய நிழற்படங்களும் எடுத்துக் கொண்டோம்.  தில்லி நண்பர்கள் தில்லிக்குப் புறப்பட, நான் திருச்சி திரும்பினேன் - பல்லவன் கோவிட் ஸ்பெஷல்! - எல்லா இரயில்களும் கோவிட் ஸ்பெஷல் என்ற அடைமொழியுடன் ஓடிக் கொண்டிருக்கிறது! முன்பு இருந்த பெயரில் இருந்தாலே போதுமானது என்று தோன்றியது - கோவிட் ஸ்பெஷல் என்ற பெயர் பார்க்கும்போதே கொஞ்சம் மனது பதறுகிறதே! பல்லவனிலும் அதிக கூட்டம் இல்லை - நான் பயணித்த கோச்சில் பாதி இருக்கைகளுக்கு மேல் காலி தான்! அதனால் மூன்று இருக்கைகளில் நான் மட்டுமே! ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து நிம்மதியாக பயணிக்க முடிந்தது! மாலை புறப்பட்டு இரவு எட்டரை மணிக்குள் வீடு வந்தாயிற்று!


சென்னை பயணம் இனிதே முடிந்தது! சாதாரண நாட்களாக இருந்திருந்தால், குடும்பத்துடன் சென்றிருக்க முடியும் - தவிர சில பதிவுலக நண்பர்களையும் சந்தித்து இருக்க முடியும்! என்றாலும் தற்போதைய சூழலில் சென்று வந்ததே பெரிய விஷய்மாக இருக்கையில், பயணிக்க முடிந்ததே மகிழ்ச்சி தான்! 


தொடர்ந்து வேறொரு பதிவில் சந்திக்கும் வரை…


நட்புடன்




வெங்கட் நாகராஜ் 

புது தில்லி



18 கருத்துகள்:

  1. இத்தனை இனிப்புகளை வாசிக்கும் போதே எடை கூடுவதாக தோன்றுகிறது ஜி...!

    பதிவுலக நண்பர்களை சந்தித்து இருப்பீர்கள் என்று நினைத்தேன்... ஆனால் சூழல் வேறுவிதம் என புரிகிறது,,,!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசிக்கும்போதே எடை கூடலாம்! ஹாஹா...

      யாரையும் சந்திக்க இயலவில்லை - சூழல் அப்படி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  2. அதிக இனிப்புகளுடன், இனிய பயணமாக அமைந்ததில் மகிழ்ச்சி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணம் இனிமையாகவே அமைந்ததில் எனக்கும் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. உங்கள் பழக்கத்துக்கு நீங்கள் ஒரே இடத்தில் இருந்ததே ஆச்சர்யம்தான்.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரே இடத்தில் இருந்தது ஆச்சர்யம் - ஹாஹா... இருக்கலாம் ஸ்ரீராம். பல நேரங்களில் இப்படி வெளியே செல்லாமல் ஒரே இடத்தில் இருந்ததுண்டு!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. இனிப்பான பதிவு - நன்றி அப்பாவி தங்கமணி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. இனிமையான பயண அனுபவம் சுவாரஸ்யமான தகவல்கள் நன்றி ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. பயணம் செய்ய முடியாத நிலையில் இருந்து சிறிது மாறி உள்ளது. இதுவும் கடந்து போகும். Covid special என்பது மனதை பதற தான் வைக்கிறது. இந்த identity தேவை இல்லை 👎

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சூழல் பரவாயில்லை என நினைக்கும்போது தீநுண்மியின் அடுத்த வகை வந்து பயமுறுத்துகிறது! பார்க்கலாம் வரும் வருடமாவது சிக்கல்கள் இல்லாததாக அமையட்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கயல் இராமசாமி மேடம்.

      நீக்கு
  7. வணக்கம்
    ஐயா

    தங்களின் பயண அனுபவம் பற்றி சிறப்பாக சொல்லிவிடுவீர்கள் அதிலும் உணவு பற்றி சொல்லிய விதம் சிறப்பு வாழ்த்துக்கள்

    அன்புடன்
    ரூபன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கவிஞர் த. ரூபன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. சுவையான பயண அணுபவம் சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயண அனுபவம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. கோவிட்டினால் யாரையும் பார்க்க முடியாவிட்டாலும் உங்கள் பயணம் ரிலாக்ஸ்டாக இனிமையாக இருந்தது பதிவில் தெரிகிறது அண்ணா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் - அதிக அலைச்சல் இல்லாமல் செய்த பயணம் இது கிரேஸ்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....