புதன், 29 அக்டோபர், 2025

கதம்பம் - நிழலும்! நினைவும்! - வார்த்தை விளையாட்டு - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு கதம்பம் பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   முகநூலில் எழுதிய இற்றைகளின் தொகுப்பு - அங்கே வாசிக்காதவர்களின் வசதிக்காகவும், எனது சேமிப்பிற்காகவும் இங்கேயும் பகிர்ந்து கொள்கிறேன்.


இதற்கு முன்னர் வெளியிட்ட நவராத்திரி கொண்டாட்டம் September 2025 பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


நிழலும்! நினைவும்! - 24 அக்டோபர் 2025: 



புவனா! அம்மா 7 கப் கேக் எப்படி பண்ணுவான்னு கொஞ்சம் சொல்லேன்?? நான் தீபாவளிக்கு அதைப் பண்ணலாம்னு நினைக்கிறேன்! என்று கேட்டான் தம்பி! சந்தோஷமாக இருந்தது! தம்பி கேட்டதும் மகிழ்வுடன் வரிசையாக அளவுகளுடன் பக்குவத்தையும் அவனிடம் சொல்லி செய்யச் சொன்னேன்!


அப்போது சட்டென்று நிழலான ஓவியமாக அம்மாவும் அவள் செய்த பட்சணங்களும் தான் கண்முன்னே நிழலாடியது! 


அம்மா பண்டிகை என்று வந்துவிட்டால் திட்டமிடலுடன் ஒரு வாரத்துக்கு முன்பே பட்சணங்களை பண்ண ஆரம்பித்து விடுவாள்! பத்து நாட்களாவது தன் குழந்தைகள் சாப்பிடணும், உடன்பிறந்தோருக்கு கொடுக்கணும், அக்கம்பக்கம் கொடுக்க என்று தடபுடலாக தயாராகத் துவங்கி விடும்! அம்மாவுக்கு கூடமாட உதவிகளை தம்பியும் நானுமாக செய்வோம்! 


அந்த பதின்ம வயதில் என்னென்ன பொருட்களைப் போட்டு அம்மா செய்தாள் என்று அப்போது எனக்கு கேட்கவும் தெரியவில்லை! பின்பு காலத்தின் ஓட்டத்தில் அம்மா செய்த நினைவுகள், பத்திரிக்கைகளில் வந்த துணுக்குகள், இணையம் என்று எல்லாவற்றையும் கலவையாய் இணைத்தே இதுவரை நான் செய்து வந்திருக்கிறேன்! இந்த வருடம் பண்டிகைகள் ஏதும் இல்லாததால் அக்கம்பக்கம் உள்ள நட்புவட்டத்தின் அன்பில் இனிமையாகக் கடந்தது!


அன்றாட வாழ்க்கை முன்பை விட ரொம்பவே பிஸியாகச் செல்வதாக உணர்கிறேன்! என்னவர் இங்கே பணிக்கு சேர்ந்தது முதலாக காலைநேரம் அவர் அலுவலகத்துக்கு கிளம்பும் போது அப்பா தான் என் நினைவுக்கு வருகிறார்! பத்து மணி அலுவலகத்துக்கு எட்டரை மணிக்கே எங்களுடன் தயாராகி சாப்பிட்டு விட்டு கிளம்பி விடுவார்! ‘நீங்க தான் ஆஃபீஸே திறக்கப் போறேளா??’ என்று அம்மா கேட்பாள்..🙂 அப்பா இருவேளை உணவு தான் எடுத்துக் கொள்வார்! பேருந்தில் செல்லக்கூடிய தூரம் என்றாலும் நடந்தே அலுவலகத்துக்குச் சென்று விடுவார்!


மனிதர்கள் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் நிழலும் நினைவுகளுமாக நம்மோடு வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்! வாழும் காலத்தில் நாம் செய்யும் நற்செயல்களாலும் நற்குணங்களாலும் இனிமையான நினைவுகளை விட்டுச் செல்லணும் என்பதை உணர்ந்தேன்! அன்பை விதைப்போம்!


******


வார்த்தை விளையாட்டு!





இடமும் வலமும்

மேலும் கீழும்

குறுக்கும் நெடுக்குமாக

எழுத்துக்களின் கூட்டணியில்

உருவாகின்றன அழகான வார்த்தைகள்!!


ஏற்ற இறக்கத்திலும்

இப்படியும் அப்படியுமாக

குரலை உயர்த்தியும் இறக்கியும்

நாவை பிரட்டி

உருவாகின்றன நாவிலிருந்து வார்த்தைகள்!


ஓர் எழுத்து மாறினாலும்

ஒரு வார்த்தை மாறினாலும்

அந்த வார்த்தையை

விளையாட்டில் எடுத்துக் கொள்ளப்பட

மாட்டாது!!


ஏற்றமோ! இறக்கமோ!

இடமோ! வலமோ!

குறுக்கோ நெடுக்கோ!

வார்த்தைகளை கணக்கிட்டு

பிரயோகித்தால் விளையாட்டு மட்டுமல்ல! வாழ்வும் மேம்படும்!


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்.

27/10/25


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்

29 அக்டோபர் 2025


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....