அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட Diary RJ Saha பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
உலகின் மிக உயரமான (கடல் மட்டத்திலிருந்து 3680 மீட்டர் - 12073 அடி) சிவாலயமான துங்க்நாத் சென்று பனிப்பொழிவு மூடியிருந்த ஆலயத்தினை வெளியிலிருந்து பார்த்து, இறைவனை தரிசிக்க முடியாவிட்டாலும், எங்கும் நிறைந்திருக்கும் ஈசனை மனதுருக வேண்டிக் கொண்டு அங்கிருந்து அடுத்த இலக்கை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். அந்த மலையிலிருந்து இன்னும் உயரத்தில் இருக்கும் சந்த்ரஷீலா என்கிற இடத்தினை நோக்கி தான் எங்களது பயணம் இருந்தது. துங்க்நாத் ஆலயம் அமைந்திருக்கும் இமயமலையின் இந்தப் பகுதி கூட சந்திரநாத் பர்வத் என்றே அழைக்கப்படுகிறது. நாம் பயணத்தினை தொடங்கிய சோப்தா கடல் மட்டத்திலிருந்து 2680 மீட்டர். சற்றேறக்குறைய ஆயிரம் மீட்டர் உயரத்தினை சோப்தாவிலிருந்து துங்க்நாத் வரை நடந்து கடந்திருக்கிறோம். அங்கிருந்து இன்னும் ஒரு 320 மீட்டர் - அதாவது கடல் மட்டத்திலிருந்து 4000 மீட்டர் உயரத்திலிருக்கும் சந்த்ரஷீலா மலைச்சிகரத்தினை அடைய ஏற்கனவே கடந்து வந்த பாதையை விட அதிக பனிப்பொழிவு இருக்கும் மலைப்பாதையில் நடக்க வேண்டியிருக்கும்.
எங்களுடன் வந்திருந்த இளைஞர் ஆலயத்திற்குப் பிறகு நடந்து வரவில்லை - அங்கேயே அமர்ந்து ஓய்வு எடுத்துக் கொள்கிறேன் என்று பின்வாங்கிவிட, நாங்கள் மூவரும் - ஐம்பதைக் கடந்த நாங்கள் தைரியமாக முன்னேறினோம். சுமார் ஒரு மணி நேரம் இந்த மலைப்பாதையில் நடக்க வேண்டியிருக்கும். முன்பை விட குறுகிய பாதைகள், அதீத பனிப்பொழிவு காரணமாக பாதையெங்கும் பனி - அதிலும் நிறைய இடங்களில் Black Ice - இருந்தாலும், நாங்கள் மெதுவாக எங்கள் இலக்கை நோக்கி முன்னேறினோம். நிறைய இடங்களில் நின்று நிதானித்து தான் ஏறிச் செல்ல வேண்டியிருந்தது. ஒவ்வொரு இடத்திலும் சிறிது நேரம் நின்று தான் செல்ல வேண்டியிருந்தது. தொடர்ந்து ஏறிச் சென்றால் அதிக அளவில் மூச்சு வாங்க ஆரம்பித்து விடும் என்பதால் இப்படி நின்று நின்று தான் செல்ல வேண்டியிருந்தது.
உயரம் அதிகரிக்க அதிகரிக்க ஆக்சிஜன் குறைவதால் இப்படி மூச்சுத் திணறல் சிலருக்கு உண்டாகும். அதனால் பொறுமையாகவே நடக்க வேண்டியிருக்கும். எந்த இடத்தில் இப்படி மூச்சுத் திணறல் இருக்கிறதோ அங்கே சற்று ஓய்வெடுத்துச் செல்வது தான் நல்லது. நாங்கள் பொறுமையாகவே நடந்து கொண்டிருந்தோம். அப்படி நடந்து செல்லும்போது இந்த இடம் குறித்த சில செவி வழிக் கதைகளையும் பார்த்துவிடலாமா? இந்த சந்திரஷீலா சிகரம், ஸ்ரீராமனுடன் தொடர்புடையது என்ற ஒரு கதையும், இல்லை இல்லை சந்திரனுடன் தொடர்புடையது என்று வேறொரு கதையும் சொல்கிறார்கள். நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் நாம் தலையிட வேண்டியதில்லை. சொல்லப்படும் கதைகளை மட்டும் இங்கே பார்க்கலாம் இல்லையா…. சரி முதலாம் கதையை, முதலில் பார்த்து விடலாம்.
சரி இந்த இடத்துடன் சம்பந்தப்பட்ட இரண்டாவது கதையினையும் பார்த்துவிடலாம்! சந்திரனை முதன் முறையாக கிரஹணம் பீடித்து தன்னுடைய சக்தியை எல்லாம் இழந்து தவிக்க, இழந்த சக்தியை மீண்டும் பெற சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்த இடம் தான் இந்த இடம் என்றும் அதனாலேயே, அவர் பெயராலேயே இந்த இடம் சந்திர்ஷீலா சிகரம் என்று அழைக்கப்படுகிறது என்றும் சொல்கிறார்கள். சந்திரனின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் அவனுக்கு அருள் புரிந்து அவன் இழந்த சக்திகளை மீண்டும் திரும்பத் தந்ததோடு, பதினைந்து நாட்கள் தேய்பிறை, வளர்பிறை உண்டாகும் பழக்கத்தினையும் ஏற்படுத்தினார் என்றும் இங்கே உள்ள மக்கள் செவிவழிச் செய்தியாக, கதையாகச் சொல்லி வருகிறார்கள். இப்படியான கதைகள் பல பகுதிகளில் நாம் கேட்டு வருகிறோம் என்றாலும், ஏதோ ஒரு இடத்தில் நிச்சயம் நடந்திருக்கக் கூடும் என்பதையும் ஒப்புக் கொள்ளவே வேண்டியிருக்கிறது.
கதைகளை உங்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்த வேளையில், நாம் சிகரத்தினையும் அடைந்திருந்தோம். மலை உச்சியில் ஒரு சிறு ஆலயம். அங்கே ஒவ்வொருவராக, வெளியே நின்றபடி பிரார்த்தனைகள் செய்து கொள்ளலாம். பூசாரிகள் யாரும் கிடையாது. நமக்குத் தெரிந்த வகையில் பிரார்த்தனைகள், வழிபாடுகள் செய்து, அந்தச் சிகரத்தில் நின்று கொண்டு 360 டிகிரியில் எங்கே பார்த்தாலும் பனிபடர்ந்த மலைச்சிகரங்கள் தெரிவதைக் கண்களால் கண்டு ரசிக்க முடியும். அங்கே வந்திருந்த சில இளைஞர்கள் தங்களோடு நம் தேசத்தின் தேசியக் கொடியையும் கொண்டு வந்திருந்தார்கள். அதனை அந்த இடத்தில் பறக்க விட்டு படங்களும், காணொளிகளும் எடுத்துக் கொண்டார்கள். நாங்களும் அவர்களிடமிருந்து கொடியை வாங்கி “வந்தேமாதரம், ஜெய்ஹிந்த்” முழக்கங்களை எழுப்பி மகிழ்ந்தோம். அத்தனை உயரமான இடத்தில் நம் தேசத்தின் கொடியினை பட்டொளி வீசிப் பறக்கச் செய்ததில் உடலில் கொஞ்சம் Goosebumps! என்ன தான் இருந்தாலும் தேசத்தின் மீதான பற்று உயர்ந்த ஒரு உணர்வு தான் இல்லையா?
சந்திரஷீலா சிகரத்தின் உச்சியில் நின்று கொண்டு நாம் நம் பார்வையைச் சுழற்றினால் எங்கே பார்த்தாலும் பனிச் சிகரங்கள்…. நமக்கு எல்லா சிகரங்களும் ஒன்று போலத் தோன்றினாலும், பலமுறை அங்கே பயணப்பட்டவர்கள், வேறு குழுவினருடன் வழிகாட்டிகளாக வந்திருந்த சிலர் அந்தச் சிகரங்களின் பெயர்களைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். நண்பர் பிஷ்ட் அவர்களும் எங்களுக்கு ஒவ்வொன்றாகக் காண்பித்து அங்கே இருப்பது நந்தா தேவி சிகரம், அதோ நான்கு கம்பங்கள் போல சிகரங்கள் தெரிகிறதே அது தான் சௌக்கம்பா சிகரம், அதோ பாருங்கள், சிவபெருமானின் திரிசூலம் போலக் காட்சியளிக்கிறதே அது தான் த்ரிஷூல் சிகரம், அது தான் கேதார்நாத் சிகரம் என்று வரிசையாகக் காண்பித்துக் கொண்டிருந்தார். அது போன்ற உயரமான பகுதியிலிருந்து மற்ற சிகரங்களை அங்கேயிருந்தபடியே பார்த்து விட்டாலும், அந்தச் சிகரங்களுக்கும் ஒரு முறையேனும் பயணப்படவேண்டும் என்ற ஆசை வராமல் இல்லை!
இந்த இடத்திற்கு சிலர் அதிகாலை நேரத்திலேயே வந்திருந்து சூரியோதயக் காட்சிகளைக் காண்பதுண்டு என்றும் அதற்கு இருள் நேரத்திலேயே சோப்தாவிலிருந்து புறப்பட வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார் நண்பர் பிஷ்ட். அத்தனை உயரமான சிகரத்திலிருந்து கிழக்கே உதிக்கும் சூரியனைக் காண்பது என்பது எத்தனை ரம்மியமாக இருந்ததிருக்கும் என்று யோசித்த போதே அப்படி ஒரு மகிழ்ச்சி. பனிபடர்ந்த சிகரங்கள் மீது சூரியனின் கிரணங்கள் பட்டு, அத்தனை சிகரங்களும் தங்கமாக மின்ன, அந்தக் காட்சிகளைக் கண்டு ரசிக்காமல் ஒருவராலும் இருக்க முடியாது என்று நான் அடித்துச் சொல்லுவேன். நீங்களும் அந்த உணர்வினை மறுக்க முடியாது என்றே நான் நம்புகிறேன். அந்தச் சிகரத்தில் சில நிமிடங்கள் அமர்ந்திருந்தோம். நல்ல குளிர், சுற்றிலும் பனி இருப்பதால் அங்கே அடிக்கும் காற்று நம் தோலில் ஊசி போல குத்திக் கொண்டு இருந்தது! ஆனாலும் அங்கே சில நிமிடங்கள் அமர்ந்திருந்தோம். தொடர்ந்து என்ன அனுபவங்கள் கிடைத்தன என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன். அதுவரை பயணத்தில் இணைந்திருங்கள் நண்பர்களே.
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
13 மே 2026

















ஏன் துங்கநாத் இறைவனை தரிசிக்க முடியவில்லை? குறிப்பிட்ட காலங்களில்தான் கோவில் திறந்திருக்குமா?
பதிலளிநீக்குஆலயம் வருடத்தில் ஐந்து ஆறு மாதங்கள் மட்டுமே திறந்து இருக்கும். பனிப்பொழிவு அதிகம் இருக்கும் நாட்களில் இங்கே செல்ல முடியாது. பிப்ரவரி மாதத்தில் நாங்கள் சென்ற போதும் ஆலயம் முடியே இருக்கும். மே முதல் அக்டோபர் வரை மட்டுமே ஆலயம் திறந்து இருக்கும்.
நீக்குபின்தங்கி விட்ட நண்பருக்கு அதற்கும் தைரியம்தான். தனியாகக் காத்திருக்க வேண்டுமே... வெரி யார் நடமாட்டமும் இல்லை போல...
பதிலளிநீக்குஅவர் பின்தங்கிய இடத்தில் சில கல்லூரி மாணவிகள் இருந்தார்கள். பயம் இல்லை.
நீக்குஅந்த மாணவிகள்தான் பயப்பட்டிருப்பார்களோ!!!
நீக்குஹாஹா..... சில மாணவர்களும் அங்கே நின்றுவிட்டார்கள். கூடவே எங்களுடன் வந்த இளைஞரும். :)
நீக்குஅங்கு பனிக்கரடிகள், அப்புறம் தி ஸோ கால்டு பனிமனிதன் நடமாட்டமெல்லாம் உண்டா?!!
பதிலளிநீக்குபனிக்கரடிகள் இங்கே இல்லை. இன்னும் மேலே சென்றால் பார்க்க முடியும் என நினைக்கிறேன்.
நீக்குகாணொளிகள் முதுகை சில்லிட வைக்கின்றன. எது பாதை என்றே தெரியவில்லை. எப்படி ஏறினீர்களோ, எப்படி இறங்கினீர்களோ... அம்.... மாடி.... மாபெரும் சாதனை. உலகத்தின் உயரமான இடத்தில்... கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. கண்களும் மனதும் நிறைகின்றன,
பதிலளிநீக்குசவாலான பயணம் தான். ஆனால் இதை விட சவால் மிகுந்த பயணங்கள் உண்டு. அதனால் தான் இங்கே சென்றோம். எல்லாம் ஒரு வித ஈர்ப்பு தான். அப்படி செல்லாமல் இருந்தால் இந்த அனுபவங்கள் கிடைக்குமா?
நீக்குசெல்லில் சுற்றிலும் படம் எடுக்கும்ப;போது எங்கே செல்லில் கவனமாக கால்கள் இடறுமோ என்கிற பயம் பார்க்கும் எங்களுக்கு வருகிறது. மாடிச் சுவரிலிருந்தே எட்டிப் பார்க்க மாட்டேன் நான்!
பதிலளிநீக்குசுற்றி படம் எடுக்கும்போது, கவனமாகவே எடுத்தேன். நிற்க இடம் இருந்தது.
நீக்குஅங்கு படபடக்கும் கொடி அப்போதுதான் கொண்டு வரப்பட்டதா? அதைப் பார்க்கும்போதே பரவசம் வருகிறது. அடுத்து ஒரு இந்தியன் அங்கு வந்து வணக்கம் வைக்கும்வரை கொடி தனியாகக் காத்திருக்கும். அடுத்து இல்லை, அடுத்தடுத்து...
பதிலளிநீக்குசில கல்லூரி மாணவ மாணவிகள் கொடி எடுத்து வந்தார்கள். அவர்களிடமிருந்து நாங்களும் வாங்கி பறக்க விட்டோம். அது ஒரு அற்புத உணர்வு தான்.
நீக்கு