திங்கள், 21 செப்டம்பர், 2026

கதம்பம் - பாசிட்டிவ் பாட்டி - வாழ்க்கை வாழ்வதற்கே - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. 

இதற்கு முன்னர் வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.


*********


பாசிட்டிவ் பாட்டி 17.09.2026:


அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் மனிதர்களிடமிருந்து தான் எத்தனை எத்தனை விஷயங்களை கற்றுக் கொண்டு வருகிறோம்! நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கையை குறித்து ஏதோ ஒரு சந்தர்ப்பத்திலாவது குறைபட்டுக் கொள்ளும் இந்நாளில் சமீபத்தில் நான் சந்தித்த ஒரு பாட்டியை பற்றித் தான் உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்!  

அவரின் வயது 97! அவரை முதன்முறையாக நான் பார்த்த போது அவரின் மகன் மற்றும் மருமகளின் அன்பான கவனிப்பில் மெலிந்த தேகத்துடன் மரக்கட்டில் ஒன்றில் படுத்துக் கொண்டிருந்தார்! அவரிடம் சென்று வணங்கியதும், ரொம்ப சந்தோஷம்! ரொம்ப சந்தோஷம்! என்று வாய்கொள்ளா சிரிப்புடன் தன் பொக்கை வாயை அழகாக காண்பித்துக் கொண்டிருந்தார்!

உடனே தன் மருமகளிடம் திரும்பி மிகுந்த சந்தோஷத்துடன் ‘நம்ம வீட்டுக்கு ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் வந்திருக்கா பாரு! என்று சொன்னார்! ‘உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? இவ நன்னா பேசுவா! என்னை நன்னா பார்த்துப்பா! என்று என்னிடம் தன் மருமகளைப் பற்றி சொன்னார்! தன் சம்பந்தியுடன் அவ்வளவு இணக்கமாக இருப்பாராம்! 

தன் மருமகளின் அம்மாவும் இந்த பாட்டியும் தோழிகள் போல் ஒன்றாகவே இருப்பார்களாம்! இருவரும் சேர்ந்து நடைப்பயிற்சி செய்வார்களாம்! அவருடைய உடைகளைக் கூட இந்த பாட்டியே துவைத்து போடுவாராம்! என்று அந்த மருமகள் மாமியாரைப் பற்றி நெகிழ்வுடன் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார்! இந்த பாட்டி ஒருகாலத்தில் மும்பையில் வாழ்ந்தவராம்! ஆனால் பாட்டிக்கு இப்போது எதுவும் நினைவில்லை! 

தன் குடும்பமும் தற்போது உள்ள சூழலும் அங்கு சந்திக்கும் மனிதர்களும் மட்டுமே தான் தெரிகிறது! ஆனால் என் கண்களில் தென்பட்டது எல்லாம் பாட்டியின் வாய்கொள்ளா புன்னகையும், அவர் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கும் அந்த ‘ரொம்ப சந்தோஷம்! ரொம்ப சந்தோஷம்!’ என்ற வார்த்தைகளும் தான்!

அன்று என் மனதில் தோன்றியது ஒரு விஷயம் தான்! கடந்தகாலத்தில் நடந்த கசப்புகளோ, நிகழ்கால நிகழ்வுகளோ பெரிதாக எதையும் யோசித்துக் கொண்டிருக்காமல் அன்றைய சூழலை மகிழ்ச்சியுடன் உணர்ந்து அதை நம்மை சுற்றியிருப்பவர்களுக்கும் பரப்ப வேண்டும்! இந்த பாசிட்டிவ் பாட்டியைப் போல!

*********

வாழ்க்கை வாழ்வதற்கே - 18.09.2026 :


சமீபத்தில் மகள் அவள் வாசித்த ஒரு புத்தகத்தின் கதையை எனக்கு சொன்னாள்! இருவரும் சாப்பிட்டுக் கொண்டே அந்தக் கதையை பற்றி நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தோம்! அதைக் கேட்டதிலிருந்தே மிகுந்த ஆச்சர்யமாக இருந்தது! உண்மையில் இப்படித்தான் இருக்குமோ என்றும், அட ஆமாம்ல! என்றும் பலவாறு என்னை யோசிக்க வைத்தது!

வாழ்வில் தொடர்ந்து பல தோல்விகளையும், துக்கங்களையும் கடந்து வந்த இளம்பெண் ஒருவள், இனி இவ்வுலகில் வாழ்வது வீண் என்று தன் முடிவைத் தேடிக் கொள்ள முயற்சி செய்கிறாள்! இப்போது அவள் ஒரு பெரும் நூலகத்தில் இருக்கிறாள் என்பதாக கதை நகர்கிறது! அந்தப் பெண்ணுக்கு தான் ஒரு நூலகத்தில் இருக்கிறோம் என்பது ஆச்சர்யம் என்றால் அங்கிருக்கும் அத்தனை நூல்களும் அவளை பற்றியது தான் என்பது அடுத்த ஆச்சர்யம்!

தானே அந்த நூலகத்தின் உயிர் என்றும் அவளுக்குத் தெரிய வருகிறது! அந்த நூலகத்திலிருந்து ஒரேயொரு புத்தகத்தினை எடுத்துப் பார்க்கிறாள்! அந்த புத்தகம் அவளுடைய Regrets என்று சொல்லப்படுகிற வருத்தங்கள் அல்லது கவலைகள் என்பதாக இருக்கிறது! அதை பிரித்த மாத்திரத்தில் அவள் அந்த வாழ்க்கைக்கும் சென்று விடுகிறாள்!

இப்படி அவள் செல்கின்ற வாழ்வில் அவளின் கனவுகள், ஏக்கங்கள் என்று எல்லாமே நிறைவேற, ஒரு கட்டத்தில் சவால்கள் நிறைந்தது தான் வாழ்க்கை! வாழ்க்கை என்பது வாழ்வதற்கே! என்பதாக அவள் ஏற்றுக் கொள்ள அவள் கடந்து செல்லும் பாதைகளில் பலவிதமான ஆச்சர்யங்கள் நிறைந்திருக்கிறது! இறுதியில் என்ன தான் செய்தாள் என்பது தான் மீதிக்கதை! 

நிஜமாகவே அந்த நாவலாசிரியர் எப்படித்தான் இப்படி எழுதியிருப்பார் என்று நினைத்து வியந்தேன்! சிலநேரங்களில் இந்த இடத்துக்கு எதுக்காக வந்தோம்! எதை எடுக்க நினைத்தோம்! என்று நாம் நினைத்திருக்கலாம்!! இல்லையென்றால் இந்த விஷயத்தை இப்படிக்கூட செய்திருக்கலாமே! என்று நினைத்திருக்கலாம்! இப்படி நமக்கு அவ்வப்போது நிகழ்கின்ற பல விஷயங்களுக்கும் கூட ஏதேனும் தொடர்பு இருக்கலாம்!

இந்தக் கதையை மகள் என்னிடம் சொல்லிக் கொண்டிருந்த போது சட்டென்று என் மனதில் ஒரு எண்ணம் எழுந்தது! ஏனோ இந்த எண்ணம் அவ்வப்போது கூட எனக்குத் தோன்றுவது தான்! உண்மையில் அது ஒரு சாதாரண விஷயமும் கூட! ஆனாலும் என் மனதில் அந்த விஷயம் ஆழமாக படிந்து விட்டது! என்ன அது??

சில வருடங்களுக்கு முன்பு எங்கள் வீட்டுக்கு வந்திருந்த விருந்தினர்களுக்கு உணவு பரிமாறிய பின் தான் எனக்குத் தோன்றியது! அடடா! நம்மிடம் அழகாக Serving dishes எல்லாம் இருக்கும் போது, நம்ம வீட்டுல சாப்பிடற மாதிரி கடாய்ல வெச்சு பரிமாறிட்டேனே என்று..:) வேடிக்கையாக இருக்கிறது இல்லையா..:)

மகளிடம் இதுபற்றி நான் சொன்னதும் சிரித்துக் கொண்டே அவள் சொன்னாள், ‘அம்மா! அப்ப அது கூட உன்னோட புக்ல ஒரு regret ஆக இருக்கும் என்று! சென்ற வாரத்தில் கூட எங்கள் வீட்டுக்கு வருகை தந்திருந்த கேரள நண்பர்களுக்கு விருந்து பரிமாறும் போது மிகவும் கவனத்துடன் அழகாக பரிமாறி உபசரித்தேன்! அப்போதும் மகள் என்னை பார்த்து புன்னகைத்தாள்..:)

இந்த புத்தகத்தை வாசித்தால் இப்படி உங்களை நிறைய யோசிக்கவும் வைக்கும்! வாழ்க்கையை வேறு கோணத்திலும் பார்க்க வைக்கும் என்பது உறுதி! வாய்ப்பு கிடைத்தால் கட்டாயமாக வாசித்துப் பாருங்கள்! மகள் தன் பார்வையை Instagram இலும், பிளாகிலும் பகிர்ந்திருக்கிறாள்!

*********

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்.

21 செப்டெம்பர் 2026

4 கருத்துகள்:

  1. மனதார பாசிட்டிவாக நினைத்தாலொழிய இப்படி மறதி நிலையிலும் சிரிப்பும், பாசிட்டிவ் எண்ணங்களும் வராது.  படிக்கும்போதே சந்தோஷமாக இருக்கிறது.

    'நள்ளிரவு நூலகம்' வித்தியாசமான சிந்தனையுள்ள புத்தகம் என்று தெரிகிறது!

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை. பாஸிடிவ் பாட்டியை பற்றிய செய்தி படிக்கும் போதே மனதுக்குள் ஒரு நல்ல எண்ணத்தை உருவாகிறது. பாட்டியின் முகத்திலும் என்னவொரு தேஜஸ்...! அவர் முகப் பொலிவே நம்முள் ஒரு பாஸிடிவ் எண்ணத்தை தோற்றுவிக்கிறது.

    அறிமுகப்படுத்திய புத்தகமும் பாஸிடிவ் வாழ்க்கைக்கு துணையாக உள்ளது. நல்ல கருத்துள்ள புத்தகம். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. பாசிடிவ் பாட்டி... கடந்தகால மட்டுமல்ல நடக்கும் காலத்தின் கஷ்டங்களையும் மனதில் போட்டுக்கொள்ளாமல் பாசிடிவ் ஆக இருந்துவிட்டால் எப்படி புதிய பிரச்சனைகள் முளைக்கும்? வீட்டில் நமக்கு உதவி செய்பவர்களை மற்றவர்கள் முன்பு பாராட்டுவது மிக நல்ல குணம். குற்றம் பார்க்கிறேன் சுற்றம் இல்லை

    பதிலளிநீக்கு
  4. //பாட்டியின் வாய்கொள்ளா புன்னகையும், அவர் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கும் அந்த ‘ரொம்ப சந்தோஷம்! ரொம்ப சந்தோஷம்!’ என்ற வார்த்தைகளும் தான்!//

    பாட்டி போல இருந்து விட்டால் எல்லாம் நலமே! பாசிடிவ் பாட்டி போல வயதான காலத்தில் இருந்தால் நல்லது.

    ரோஷ்ணி படித்த புத்தகம் அருமை.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....