புதன், 28 அக்டோபர், 2026

Reading Streak - வாசிப்பை நேசிப்போம் - 100 புத்தகங்கள் - வெங்கட் நாகராஜ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******





வலைப்பக்கம் வராமல் இருந்த நாட்களில் தினம் தினம் கிண்டில் வழி புத்தகங்கள் வாசித்துக் கொண்டிருந்தேன்.  இரவு நேரங்களில் தினமும் சில பக்கங்களேனும் வாசிக்க வேண்டும் என்று ஒரு வழக்கத்தினை வைத்திருந்தேன். வாசிப்பதை விட்டுவிடக்கூடாது என்ற எண்ணம் இருந்ததால், இப்படி கிண்டில் வழி வாசிப்பில் ஈடுபாடு கொண்டிருந்தேன்.  Kindle Unlimited Subscription கட்டுவது வீணாகவும் கூடாது அல்லவா? அதனால் தினம் தினம் ஏதேனும் ஒரு புத்தகம் வாசிப்பதை தொடர்ந்து கொண்டிருந்தேன்.  அதில் ஒரு விஷயம் மகள் வழி தெரிந்தது - அது Reading Streak என்பது! தொடர்ந்து எத்தனை நாட்கள், எத்தனை வாரங்கள் படிக்கிறோம் என்பதோடு எத்தனை புத்தகங்கள் வாசித்திருக்கிறோம் என்பதையும் Kindle App தகவலாகத் தருகிறது. சமீபத்தில் பார்த்த போது தொடர்ந்து 60 நாட்கள் படித்து முடித்திருக்கிறேன் என்பது தெரிந்தது - அது மட்டுமல்லாது இந்த வருடத்தில் மட்டும் 100 புத்தகங்கள் படித்திருக்கிறேன் என்ற தகவல் தான் அது! 


வீட்டில் இருக்கும் அச்சுப் புத்தகங்களை ஏனோ படிக்கத் தோன்றுவதில்லை. இல்லத்தரசியும், மகளும் அச்சுப் புத்தகங்களை படித்துக் கொண்டிருக்க நான் மட்டும் கிண்டில் வழி மட்டுமே வாசிப்பைத் தொண்டர்ந்து கொண்டிருக்கிறேன். ஏனோ இது எனக்கு வசதியாக இருக்கிறது. வீட்டில் அச்சுப் புத்தகங்களாக இருக்கும் சில புத்தகங்களைக் கூட நான் கிண்டில் வழி படிக்க, மகளும் இல்லாளும் “அது என்ன அச்சுப் புத்தகம் படிக்கவே மாட்டீர்களா?” என்று என்னைக் கிண்டல் கூட செய்தார்கள்! அவ்வப்போது இப்படிச் செய்யும் கிண்டல் கூட வாழ்வின் ருசியை அதிகரிக்கத்தானே செய்கிறது! என்ன நான் கிண்டல் செய்தால் சில சமயங்களில் அதீதமாக ஆகிவிடுகிறது! :) Part of Life! என எடுத்துக் கொண்டு சென்று விடுவதால் பிரச்சனைகள் இல்லை! சரி இந்த வருடத்தில் 100 புத்தகங்கள் வாசித்திருக்கிறேன் என்று எழுதி இருக்கிறீர்களே, யாருடைய எழுத்து என்று கேட்பதற்குள் நானே சொல்லிவிடுகிறேன். பெரும்பாலும் பிரபல எழுத்தாளர்களின் புத்தகங்கள் மட்டுமே - சில நூல்கள் மட்டுமே தெரியாதவர்களின் நூல்களாக இருந்தன!


சுஜாதா, இந்திரா சௌந்தர்ராஜன், பாலகுமாரன், சிவசங்கரி, அனுராதா ரமணன், ராஜேஷ்குமார், வித்யா சுப்ரமணியம், பாக்கியம் ராமசாமி, விக்கிரமாதித்தன், கமலா சடகோபன், ஜெயமோகன், கல்கி, லக்ஷ்மி, இந்துமதி, சாவி, வாஸந்தி, சுபா, ரா.கி. ரங்கராஜன், தீபம் நா. பார்த்தசாரதி, ரமணி சந்திரன், பட்டுக்கோட்டை பிரபாகர், ரிஷபன், பரிமளா ராஜேந்திரன், இ.ஜே. சுந்தர், சித்ரா ஜி, டாக்டர் ராஜேந்திரன், அருண் சென்னன், தமிழ் பாரதன், லக்ஷ்மி ராஜரத்னம் என ஒரு பெரிய பட்டியல்! சிலரின் எழுத்து நம்மை ஆட்கொண்டு விடுவது வழக்கம் தானே…  அதிகமாகப் படித்த நூல்கள் இந்திரா சௌந்தர்ராஜன் மற்றும் பாலகுமாரன் புத்தகங்களாக இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது! எத்தனை நூல்களை இவர்கள் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருந்திருக்கிறார்கள் என்று யோசிக்கும்போது வியப்பாக இருக்கிறது.  சிலர் நூற்றுக் கணக்கில் எழுதி இருப்பதை கிண்டில் பக்கத்தில் பார்க்கும்போது அத்தனை நூல்களையும் படிக்க வேண்டும் என்ற ஆர்வமும் ஏற்பட்டது.  அதனால் சில நாட்கள் தொடர்ந்து ஒரே எழுத்தாளரின் நூல்களை படிக்கவும் செய்தேன்.  வித்யா சுப்ரமணியம் அவர்களின் நூல்கள் கிட்டத்தட்ட 200 இருக்கிறது என்று தெரிந்தபோது அனைத்தையும் படிக்க வேண்டும் என்று எண்ணம் வந்தது. படித்துக் கொண்டிருக்கிறேன். 





முன்பு திங்கள் கிழமைகளில் அவ்வப்போது வாசிப்பனுபவம் எழுதி வந்தது நினைவில் இருக்கலாம்! இப்படி கடந்த 60 நாட்களில் படித்த அனைத்து நூல்களைக் குறித்தும் எழுத வேண்டும் என்றால் எத்தனை திங்கள் கிழமைகள் வேண்டும் என்று தோன்ற, சரி முதலில் வாசிப்பை நேசிப்போம் என்று இப்படி ஒரு பதிவு எழுதுவோம், பிறகு முடிந்தபோதெல்லாம் ஒவ்வொரு நூல் குறித்தும் எழுதலாம் என்றிருக்கிறேன். பார்க்கலாம் - எவ்வளவு எழுத முடியும் என்று! பல புதியவர்களின் நூல்களும் கிண்டிலில் இருக்கிறது என்றாலும் ஒரு சிறு தயக்கம் - இவர்களது எழுத்து நமக்குப் பிடிக்குமா? இல்லை பிடிக்காமல் போகுமா? என்ற தயக்கம்.  சரி முதலில் நமக்குத் தெரிந்த எழுத்தாளர்களின் அனைத்து நூல்களையும் வரிசையாகப் படித்து முடிப்போம் - பின்னர் இப்படி தெரியாதவர்களின் நூல்களை வாசிக்கலாம் என்று தோன்ற அதையே கடைபிடித்துக் கொண்டிருக்கிறேன். 


வாசிப்பு என்பது நமக்கு நிச்சயம் பயனுள்ளதாகவே அமையும் என்பதையும் இங்கே குறிப்பிட விருப்பம்! பயனில்லாத வாசிப்பு என்று ஒன்றும் இருக்க முடியாதல்லவா? எவ்வளவு முடிகிறதோ அவ்வளவு வாசிப்போம்! எழுதுவதை விட்டுவிடக்கூடாது என்பது போலவே, வாசிப்பையும் விட்டுவிடக்கூடாது என்று தோன்றுகிறது. படிப்பதோடு விட்டுவிடாமல், வாசித்த நூல்கள் குறித்த அனுபவங்களையும் அடுத்த திங்கள் முதல் இந்த 100 நூல்களிலிருந்து சில நூல்கள் குறித்து ஒவ்வொன்றாக வாசிப்பனுபவ பதிவில் நாம் பார்க்கலாம்! உங்களுக்கும் விருப்பமிருந்தால்! நீங்கள் தயாரா நண்பர்களே!

 

*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

28 அக்டோபர் 2026


2 கருத்துகள்:

  1. நூறு புத்தகங்களா? சற்று பொறாமையாகத்தான் இருக்கிறது!   வைத்திருக்கும் அச்சுப்புத்தகங்களே என்னை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்கின்றன.  இத்தனைக்கும் சமீப காலங்களில் அதிகம் வாங்கவுமில்லை.  படிக்கும் பழக்கத்தை கடவுள் எனக்கு கொடுக்க வேண்டும்!

    பதிலளிநீக்கு
  2. கிண்டிலில் காசு கொடுத்து மூன்று புத்தகங்கள் வாங்கி வைத்தேன்.  இப்போது அதைப் பிரித்தே பல மாதங்கள் ஆகின்றன.  என்ன கடவுச்சொல் என்பதும் மறந்து விட்டது!

    இதைத்தவிர பல்வேறு வகைகளில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் PDF ஆக தரவிறக்கி வைத்திருக்கிறேன்.  நாய் பெற்ற தெங்கம்பழங்களாக அவை இருக்கின்றன.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....