வியாழன், 12 ஜனவரி, 2012

ஜான்சியில் ரயில் இஞ்சின்:


[மத்தியப்பிரதேசம் அழைக்கிறது…. பகுதி-27]
(மத்தியப்பிரதேசம் அழைக்கிறது தொடரின் பகுதி  1   2   3   4   5     7     9   10   11   12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26) 

பத்து மணி அளவில் ஓர்ச்சாவிலிருந்து கிளம்பிய நாங்கள் 12 மணிக்கு ஜான்சி வந்தடைந்தோம்.  எங்களுடைய இந்த கல்விச் சுற்றுலாவில் முக்கியமான பகுதியாக ஒரு பெரிய தொழிற்சாலைக்குச் செல்வதும் ஒன்று.  முன்பே இரு பகுதிகளில் ஒரு தனியார் தொண்டு நிறுவனம் மற்றும் தனியார் தொழிற்சாலை சென்றது பற்றியும் எழுதியிருக்கிறேன். 

இப்போது நாங்கள் சென்றது ஜான்சி நகரத்தில் இருக்கும் அரசு தொழிற்சாலையான பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட்-இன் ஒரு யூனிட்டிற்கு.  இந்த யூனிட்-இல் அவர்கள் தயாரிப்பது ரயில் இஞ்சின்கள் மற்றும் ட்ரான்ஸ்ஃபார்மர்கள். 



இஞ்சின்களின் சக்கரங்கள் செய்வது முதல் ஒவ்வொரு பகுதியும் எப்படிச் செய்கிறார்கள், எப்படி இணைக்கிறார்கள், தரத்தினை எப்படிச் சோதிக்கிறார்கள் என்றெல்லாம் எங்களுடன் ஒவ்வொரு பகுதியாய் வந்து எங்களுக்குப் புரியும் பாஷையில் சொல்லிக் கொண்டு வந்தார் ஒரு பொறியியலாளர்.

இந்திய ரயில்வே தனக்குத் தேவையான ரயில் இஞ்சின்களை அவர்களது சொந்த தொழிற்சாலைகளிலேயே தயாரித்துக் கொள்கிறது. இருந்தாலும் சில சமயங்களில் இவர்களுக்கும் இஞ்சின்கள் தயாரிக்க ஆர்டர்கள் தருகிறார்கள்.  இந்த தொழிற்சாலையில் எல்லா பகுதிகளையும் சுற்றிப் பார்க்க எங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஆனது.  ஒவ்வொரு இடமும் நிறைய விஷயங்களை எங்களுக்குச் சொல்லித் தந்தது. 

அங்கிருந்த எல்லோருக்கும் நன்றி தெரிவித்து விட்டு கிளம்பினோம்.  நாங்கள் அடுத்ததாய் சென்றது ஜான்சி நகரத்தில் இருந்த ஒரு பழமை வாய்ந்த கிறிஸ்துவ தேவாலயத்திற்கு.  1956-ஆம் வருடம் கட்டப்பட்ட இந்த தேவலாயத்திற்கு எல்லோரும் சென்று சிறிது நேரம் இருந்துவிட்டு கிளம்பினோம். 



ஜான்சி ரயில் நிலையத்திற்கு வந்து ஒரு மணி நேரம் காத்திருந்தோம்.  நாங்கள் தில்லி செல்ல போபால்-தில்லி ஷதாப்தியில் பதிவு செய்யப்பட்டு இருந்தது.  அருமையான பயணச் சுற்றுலாவினை முடித்த திருப்தியில் அவரவர் இருக்கையில் அமர்ந்தோம். 



என் பக்கத்தில் வந்து அமர்ந்தது ஒரு வட கொரியா நாட்டினைச் சேர்ந்த ஒரு ஆசிரியர்.  ஜான்சியிலிருந்து அவர் செல்லும் ஆக்ரா வரை என்னுடன் பேசியபடி வந்தார்.  இந்திய உணவு வகைகள், படிப்பதில் இந்தியர்கள் காட்டும் ஆர்வம், இங்கு இருக்கும் அரசியல்வாதிகள் என்று பலதரப்பட்ட தளங்களில் பயணித்தது எங்கள் பேச்சு. 

தன்னுடைய தாய்க்கு இந்தியாவைச் சுற்றிக் காட்டுவதற்காக அழைத்து வந்திருக்கிறாராம்.  கொரிய பாஷையில் சில வார்த்தைகளை எழுதிக் காட்டினார்.  ஒன்றுமே புரியவில்லை.  சீன பாஷை போன்றே இவர்களும் எழுதுகிறேன் என்று படம் வரைகிறார்கள்….  இரண்டு-மூன்று மணி நேர பயணத்திற்குள் இப்படி வரையக் கற்றுக்கொள்வது கடினம் என்பதால் மேலே செல்லவில்லை….  J

இரவு பத்தரை மணிக்கு புது தில்லி ரயில் நிலையம் வந்தடைந்தோம்.  எல்லோரும் அவரவர் இலக்கினை நோக்கி பயணம் செய்யும் முன் பரஸ்பர இரவு வணக்கங்களும் சொல்லிக்கொண்டோம்.  அடுத்த நாள் மீண்டும் வகுப்பறைக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் மனதில் எழ, “நாளை வருவதை நாளை பார்த்துக்கொள்வோம், இப்போதைக்கு நான்கு நாள் பயணம் பற்றிய இனிய நினைவுகளை சுமப்போம்” என வீடு திரும்பினேன்.

இப்படியாக இந்த நான்கு நாள் பயணத்தில் நான் சந்தித்த, சிந்தித்த விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.  உங்கள் அனைவருக்கும் இந்தப் பயணக் குறிப்புகள் பிடித்திருக்கும் என நினைக்கிறேன். 

நான்கு நாட்கள் சென்றதை இருபத்தி ஏழு பகுதிகளாய் பிரித்து எழுதி இருக்கிறேன்.  பார்த்த அனைத்தையும் எழுத முயன்றாலும், நினைவில் இல்லாத சிலவற்றை விட்டுவிட்டேன். 

என்னுடன் இந்தப் பயணத் தொடரில் கூடவே பயணம் செய்த அனைவருக்கும் எனது நன்றி கலந்த வணக்கங்கள். 



மீண்டும் சந்திப்போம்…..

நட்புடன்

வெங்கட்.

டிஸ்கி:  இந்த பயணத் தொடர் முடிந்துவிட்டதே என்பதில் எனக்கும் வருத்தம் தான்…  இப்போது தான் மீண்டும் ஒரு பயணம் தொடங்கி இருக்கிறதுஇதுவும் மத்தியப் பிரதேசம் தான்…  ஜபல்பூர் மற்றும் பாந்தவ்கர்[ட்].  இது பற்றிய குறிப்புகள் இன்னும் சில நாட்கள் கழித்து எழுதுவேன்

செவ்வாய், 10 ஜனவரி, 2012

எங்கோ மணம் வீசுதே…


[மத்தியப்பிரதேசம் அழைக்கிறது…. பகுதி-26]
(மத்தியப்பிரதேசம் அழைக்கிறது தொடரின் பகுதி  1   2   3   4   5     7     9   10   11   12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25) 



காலையிலேயே எழுந்து விட்டதால் எங்கள் தங்குமிடத்தின் மிக அருகிலேயே பேத்வா நதிக்கரையில் அமைந்திருக்கும் புந்தேலா ராஜ குடும்பத்தினருக்கான சத்ரிகளைப் பார்க்க நானும், இன்னும் மூன்று நண்பர்களும் சேர்ந்து கிளம்பினோம். 

வெளியே வந்தால் யார் மேல் என்ன கோபமோ தெரியவில்லை பேத்வா நேற்றை விட இன்னும் அதிக ஆக்ரோஷத்துடன் ஓடிக்கொண்டிருக்கிறாள்.   அன்றைய தினம் ராம்ராஜா மந்திரில் நாக பஞ்சமியை முன்னிட்டு சிறப்புப் பூஜைகள் இருக்கிறதாம். அதனால் சுற்றுப்புறக் கிராமத்தில் இருந்தெல்லாம் நிறைய மக்கள் தத்தமது குடும்பத்தினருடன் வந்து ஆங்காங்கே தங்கியிருக்கிறார்கள். 

சரி நதிக்கரைக்குச் செல்லலாம் என மக்கள் கூட்டத்தில் நாங்களும் முட்டி மோதிச் சென்றால், செல்லும் போதே ஒரு வித நாற்றம் நாசியை எட்டியது.  முந்தைய நாள் இரவில் நடனம் பார்த்தபோது தூரத்தே வீசிய நாற்றம் இப்போது அருகினில். பூச்சி தான் நாற்றம் பரப்பும் எனச் சொன்ன தங்குமிட நிர்வாகி சொன்னது பொய் என சிறிது நேரத்தில் புரிந்து கொண்டோம்.

பேத்வா நதிக்கரை ஓரம் முழுவதும் மனித எச்சங்கள்…. பூச்சித் தொல்லைக்கு எதுவுமே செய்யாத நிர்வாகம் இந்த மனிதர்களுக்கும் எந்தவித ஏற்பாடுகளும் செய்யவே இல்லை என்பது தெள்ளத் தெளிவாயிற்று.  நதிவரை சென்று கை-கால்களையாவது நனைக்க வேண்டும் என்ற எண்ணமே அகன்றது.  எனவே அங்கிருந்து விரைந்து வெளியே வந்து விட்டோம்.

வெளியே வரவும் கூட மக்கள் வெள்ள அலையைக் கடந்துதான் வர வேண்டியிருந்தது.  தெருவெங்கும் ஆங்காங்கே மக்கள் கிடைத்த இடத்தில் உட்கார்ந்திருந்தார்கள்.  காலைக் கடன்கள் முடித்து பேத்வா நதியில் குளித்து, உடை மாற்றி, அலங்காரங்கள் செய்து கொண்டு இருந்தனர். 



நாங்கள் நால்வரும் ஒரு வழியாக சத்ரிகள் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தோம்.  பெரிய பெரிய கட்டிடங்களாக இருந்தன இந்த சத்ரிகள்.  மொத்தம் 14 கட்டிடங்கள் இருக்கின்றன இங்கே.  அவற்றில் பெரும்பாலானவை பல்வேறு நிலையில் சேதங்களுடன் கண்டது மனதிற்கு வருத்தமாய் இருந்தது.  ஷிவ்புரியில் நாங்கள் கண்ட ராஜா-ராணி குடைகள் பகுதியில் சொல்லி இருந்த சத்ரிகள் போலில்லாது இங்கே சுத்தமாய் பராமரிப்பு இல்லாமல் இருந்தது. 

இந்தியாவிற்கு அதுவும் குறிப்பாய் மத்தியப்பிரதேசத்திற்கு வரும் வெளி நாட்டு பிரயாணிகள் ஏராளம். காரணம் அங்கிருக்கும் கஜுராஹோ. இந்த கஜுராஹோ செல்லும் வழியில் ஓர்ச்சா இருப்பதால் அந்த வெளிநாட்டு பிரயாணிகளில் பெரும்பாலானவர்களும் இந்திய பிரயாணிகளில் சிலரும் அங்கு வரும்போது அவற்றால் கிடைக்கும் வருமானத்தினைக் கொண்டோ அல்லது வேறு வகையிலோ இந்த கட்டிடங்களை பராமரித்தால் இன்னமும் நிறைய பிரயாணிகளை ஈர்க்க முடியும்.



அதுவும் வெளிநாட்டுப் பிரயாணிகளிடம் இருந்து இவர்கள் டாலர்களில் வசூலிக்கும் தொகைக்கு நிச்சயமாய் ஏதாவது நல்லது செய்ய முடியும்.  சாதாரணமாய் இந்திய சுற்றுலாப் பயணிகளிடம் 10-20ரூபாய் நுழைவுக்கட்டணம் வசூலிப்பவர்கள்  வெளிநாட்டவர்களிடம் 300 ரூபாய் வாங்கும்போது நிச்சயம் இந்த இடங்களை நல்லவிதமாய் பராமரிப்பது சாத்தியம் என நினைக்கிறேன்.  நீங்க என்ன நினைக்கறீங்க!

இந்த நினைவுகளோடு தங்குமிடம் திரும்பினோம்.  மற்றவர்களும் எழுந்து தயாராகி வரவே காலை உணவு முடித்து ஓர்ச்சாவிலிருந்து எங்களின் கடைசி இலக்கான ஜான்சி நோக்கிய பயணத்தினை ஆரம்பித்தோம்.  ஜான்சி நகரத்தில் நாங்கள் பார்த்த இடம் பற்றிய பகிர்வு அடுத்த பகுதியில்.

மீண்டும் சந்திப்போம்…

நட்புடன்
வெங்கட்.

டிஸ்கி:  அடுத்த பகுதியில் இத்தொடர் முடியும்….  :) அடுத்த பகுதியில் வேறு ஒரு அறிவிப்பு காத்திருக்கிறது…. :)  காத்திருங்கள்

வெள்ளி, 6 ஜனவரி, 2012

ஒரு பயணமும் அதன் நினைவுகளும்




உறவினர் வீட்டுத் திருமணத்திற்காக சென்னை செல்ல வேண்டியிருந்தது.  தில்லியிலிருந்து சென்னை செல்லும் துரந்தோ விரைவு வண்டியில் சனிக்கிழமை [10.12.2011] அன்று செல்வதற்காக  பயணச்சீட்டு பதிவு செய்து வைத்திருந்தேன்.  அன்று காலை சென்னையிலிருந்து தில்லி வந்து சேரவேண்டிய அதே வண்டி மெதுவாக மாலை 04.15 மணிக்கு வந்து சேர்ந்ததால், நான் செல்ல வேண்டிய வண்டி இரவு 09.45 மணி அளவில் சுமார் 6 மணி நேரம் தாமதமாகக் கிளம்பியது. 

துரந்தோ விரைவு வண்டி ”[D]தீ[D]தி” [அக்கா] என செல்லமாக அழைக்கப்படும் மம்தா பேனர்ஜி ரயில்வே துறை மந்திரியாக இருந்தபோது ஆரம்பிக்கப்பட்ட இந்த (விரைவு[!]) வண்டியில் சாதாரண பெட்டிகளும், குளிரூட்டப்பட்ட பெட்டிகளும் இருக்கின்றன.  உணவுக்கும் சேர்த்தே பயணிகளிடமிருந்து கட்டணம் வசூலிக்கின்றனர்.  அது என்ன பாரபட்சமோ தெரியவில்லை – சாதாரண பெட்டிகளில் வரும் சாப்பாட்டிற்கும் குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் வரும் சாப்பாட்டிற்கும் நிறைய வித்தியாசம்.

அதுவேனும் பரவாயில்லை – 25 ரூபாய் வாங்கிக் கொண்டு சாதாரண பெட்டிகளில் கொடுக்கும் படுக்கைகளில் –  அழுக்கான ஒரு தலையணையும் ஒரு சாதாரண படுக்கை விரிப்பும் மட்டுமே – கம்பளி கிடையாது.  ஆனால் குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் சலவை செய்யப்பட்ட இரண்டு படுக்கை விரிப்புகளும், சுத்தமான தலையணையும், ஒரு கம்பளியும் [சென்னை – தில்லி வந்த போது குளிரூட்டப்பட்ட பெட்டியில் தான் பயணம் செய்தேன்.  அதனால் இந்த இரண்டிலும் இருக்கும் வித்தியாசங்கள் புரிந்தது!]  ஏனிந்த பாரபட்சமோ தெரியவில்லை.  வட இந்தியாவில் தப்போது இருக்கும் அதீதமான குளிரில் சாதாரண பெட்டிகளில் தான் கம்பளியின் தேவை அதிகம் என்னும்போது இந்த பாரபட்சம் இன்னும் அதிகம் துக்கப்படுத்துகிறது. 

அதே போல சாதாரண பெட்டிகளில் ஒவ்வொரு 8 இருக்கைகளுக்கும் அலைபேசி/மடிக்கணினி மின்னூட்டல் செய்ய வசதிகள் இருக்கின்றன.  ஆனால் ஒன்று கூட வேலை செய்யவில்லை.  பானிபத் நகரில் வேலை செய்யும் என்னுடன் பயணித்த ஒரு தமிழ் மின்சாரவியலாளர் அதைத் திறந்து பார்த்தபோது அதற்கு மின்சார இணைப்பே இல்லை என்பது தெரிந்தது.  அதுவே குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் வேலை செய்கிறது.  எதற்கு இந்த தனி கவனிப்பு!

இன்னுமொன்றை  இந்த ரயில் பயணத்தின் போது அனுபவித்தேன்.  நீண்ட பயணம் என்பதால் அவரவர் தங்களது கை பேசியில் பாட்டு கேட்டபடி வந்தனர்.  சிலர் பரவாயில்லை காதில் ’ஹியரிங் எய்ட்’ போல மாட்டியபடி கேட்டனர்.  ஆனால் நான் சொல்ல வந்தது அவர்களைப் பற்றி அல்ல.  சத்தமாக பாட்டு கேட்டபடி வந்த சிலரைப் பற்றியே.  இரவு 09.30 மணிக்கு மேல் தான் வண்டி கிளம்பியது என எல்லோரும் நொந்து கொண்டிருக்க, ஒருவருக்கு என்ன கவலையோ[!] தெரியவில்லை – அவர் கேட்ட பாட்டு அப்படி – என்ன பாட்டுன்னு கேட்கறீங்களா? இரவு 11.30 அளவில் அவர் சத்தமாக வைத்து கேட்ட பாட்டு – கேப்டனின் “ஒரு மூணு முடிச்சால முட்டாளா ஆனேன் கேளு கேளு தம்பி!”.  கொடுமைடா சாமி!

சுத்தம் என்றால் என்னவென்று இந்தத் துறைக்கு யாரேனும் சொல்லித்தரவேண்டும். பயணம் செய்யும் நபர்களை விட எலிகளும், கரப்பான் பூச்சிகளும் அதிகமாகவே இருக்கின்றன!  ஒரு வேளை அவைகளும்  மாதாந்திர பயணச் சீட்டுகள் வாங்கி வைத்திருக்கின்றனவோ என்னவோ…

இப்படியாக பயணம் செய்து, 6 மணி நேரம் தாமதமாகக் கிளம்பியதன் விளைவு அதை அப்படியே பராமரித்து சென்னையில் அகால வேளையில் அதாவது இரவு 02.50 மணிக்கு கொண்டு தள்ளியது துரந்தோ!  இறங்கிய உடன் கேட்ட பாட்டு – ”ஆறிலும் சாவு நூறிலும் சாவு தாயகம் காப்பது கடமையடா!”  பாடியவர் – வண்டியிலிருந்து பெட்டிகளை இறக்கிக் கொண்டு இருந்த ஒரு கூலி!  ஆஹா என்ன ஒரு பாடல்…  சரியாக சேர்ந்திருந்தால் திருச்சி செல்ல மலைக்கோட்டை விரைவு வண்டி பிடித்திருக்க முடியும்.  சேராததால், அதில் பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டுகளை இரத்து செய்துவிட்டு பேருந்து மூலம் பயணம் செய்ய வேண்டியதாயிற்று.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து 08.00 மணிக்கு புறப்பட்ட குளிரூட்டப்பட்ட பேருந்தில் திருச்சிக்குப் புறப்பட்டேன்.  துரந்தோவில் தான் சுத்தம் இல்லையென்றால் கோயம்பேடும் அப்படியே!  அங்கிருந்த பொதுக் கழிப்பறை – மூக்கை மொத்தமாக அடைத்துக் கொண்டோ அல்லது அறுத்து எறிந்துவிட்டோ தான் பயன்படுத்த வேண்டும்…



சமீபத்திய பயணச்சீட்டுகள் விலையேற்றமோ என்ன காரணமோ தெரியவில்லை – பேருந்தில் மொத்தமாகவே 10-12 பயணிகள் தான் – அதுவும் கோயம்பேடு நிலையத்திலிருந்து திருச்சி சென்றது நான் மட்டுமே – மற்றவர்கள் வழியில் இறங்குபவர்கள்…  பேருந்து பயணத்தில் ரசித்த ஒரு விஷயம் – புதியதாய் [எனக்கு!] இருக்கும் நெடுஞ்சாலையில் நடுவே இருக்கும் பூச்செடிகள்….  கண்ணுக்குக் குளிர்ச்சியாய் இருந்ததை ரசித்தேன். 

இந்த பயணத்தில் எனக்குப் பிடித்த விஷயம் திருச்சியிலும் சென்னையிலும் சில வலைப்பதிவர்களை சந்திக்க முடிந்ததுதான்.  திருச்சியில் திரு ரிஷபன், திரு ஆரண்யநிவாஸ் ஆர். ராமமூர்த்தி மற்றும் திரு வை. கோபாலகிருஷ்ணன் ஆகியோரையும் சென்னையில் திரு மோகன் குமார் மற்றும் திரு ஆர்.வி.எஸ். அவர்களையும் சந்தித்து அவர்களுடன் பேசியதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.  இன்னும் சில பதிவர்களை சந்திக்க நினைத்திருந்தும் நேரப் பற்றாக்குறையின் காரணமாக முடியவில்லை.  அடுத்த பயணத்தின் போது பார்க்கலாம்!


மீண்டும் சந்திப்போம்….

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

ஞாயிறு, 1 ஜனவரி, 2012

புத்தம் புது புத்தாண்டு!



இன்று புத்தாண்டு தினம்.  இந்த வருடத்தின் முதல் நாளில் நல்லதையே நினைப்போம். நல்லதையே செய்வோம்.  இன்றும் வரப்போகும் நாட்களும் இனியதாக அமையட்டும்…….

இந்த புத்தாண்டு நாளில் உங்கள் அனைவருக்கும் ஒரு விருந்து படைத்திருக்கிறேன்….  ரசித்து ருசியுங்கள்….






டிஸ்கி:  இவை எல்லாம் என்ன வகை உணவுகள் என்று யோசிக்கவே நிறைய நாட்கள் எடுக்குமென நினைக்கிறேன்…  என்ன கவலை…. :)  வருடம் முழுவதும் நமக்காகக் காத்திருக்கிறதே…..

தீபாவளி/[G]கோவர்தன் பூஜா சமயத்தில் அஹமதாபாத் அக்‌ஷர்தாம் கோவிலில் நடக்கும் விழாவில் ஆண்டவனுக்குப் படைத்த 1392 வகையான உணவு வகைகள் இவை!  இறைவனுக்குப் படைத்த பின் பக்தர்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொடுப்பார்கள்….

இந்த புதிய வருடத்தின் முதல் நாளில் நாம் எல்லோரும் புகைப்படத்தில் பார்த்து, ருசிப்போம்!…  :)

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

நட்புடன்

வெங்கட்
புது தில்லி