வியாழன், 25 ஏப்ரல், 2019

சாப்பிட வாங்க – தஹி வாலே அர்பி



தஹி வாலே அர்பி...

அர்பி – அரேபிய மனிதன் பற்றியோ, ‘தஹி’க்கும் சூழல் பற்றியோ ஏதோ சொல்லப் போகிறேன் என்று நினைத்து விட வேண்டாம். அர்பி என்பது நாம் பயன்படுத்தும் ஒரு காய்கறியின் ஹிந்தி பெயர் தான்! தஹி என்றால் தயிர்! சாப்பிட வாங்க என்று அழைத்து விட்டு ஒரேடியா ஹிந்தி பாடம் நடத்துகிறேன் என்ற கோபம் வேண்டாம்! கூடுதலாக ஒரு மொழியை அறிந்து கொள்வதில் தவறில்லை! தமிழகத்தினை விட அதிக வருடங்கள் தலைநகர் தில்லியில் இருந்ததால் நிறைய ஹிந்தி வார்த்தைகள் எனது பதிவுகளில் தலைகாட்டலாம்! போலவே உணவிலும் வடக்கு தெற்கு என்ற பாகுபாடு இல்லை எனக்கு! வட இந்திய உணவும் எனக்குப் பிடித்தவை! கேட்கும், பார்க்கும் பல உணவுகளை நானே வீட்டில் செய்து சுவைப்பது உண்டு! அப்படி செய்த ஒரு உணவு பற்றி தான் இன்றைக்கு “சாப்பிட வாங்க” என்ற பதிவாக பார்க்கப் போகிறோம்.

அர்பி – நாம் பயன்படுத்தும் சேப்பங்கிழங்கு தான் ஹிந்தியில் அர்பி! பொதுவாக அர்பி, உருளை என்றால் பலருக்கும் நிறைய எண்ணெய் சேர்த்து ரோஸ்ட் செய்து சாப்பிடப் பிடிக்கும் அல்லவா! நானும் அதற்கு விதிவிலக்கல்ல! நம் ஊரில் கூட இந்த சேப்பங்கிழங்கை மோர்க்குழம்பில் சேர்ப்பதுண்டு என்றாலும் தயிர் சேர்த்து சேப்பங்கிழங்கை சப்ஜியாக செய்தது இல்லை. அப்படிச் செய்து சாப்பிடுவது இங்கே ஒரு பழக்கம். உணவகங்களில் அப்படிச் சாப்பிட்டதுண்டு என்றாலும், வீட்டில் செய்து சாப்பிட்டதில்லை. சமீபத்தில் அந்த மாதிரி செய்த குறிப்பு பார்த்த போது, சரி செய்து தான் பார்த்துடுவோமே என செய்தது இந்த “தஹி வாலே அர்பி!” வாருங்க என்ன வேணும், எப்படிச் செய்யணும்னு பார்த்துடலாம்!

தேவையான பொருட்கள்:



அர்பி எனப்படும் சேப்பங்கிழங்கு – கால் கிலோ
கெட்டியான தயிர் – முக்கால் கப்
ஜீரகம் – ½ டீஸ்பூன்
ஓமம் – ½ டீஸ்பூன்
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்
மல்லித்தூள் – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
சமையல் எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி தழை – அலங்கரிக்க….

செய்முறை:

அர்பியில் மண் ஒட்டிக்கொண்டு இருக்கும். அதனை தண்ணீரில் நன்கு சுத்தம் செய்ய வேண்டும். ஒரு கப் தண்ணீர் விட்டு குக்கரில் வைத்து ஒரே ஒரு விசில் விடவும். அதிக விசில் விட்டால் குழைந்து விடும். குழைந்து விடாமல் இருப்பது அவசியம். குக்கர் நிறுத்தி கொஞ்சம் சூடு ஆறுவதற்குள் வேறு சில வேலைகள் செய்யலாம்!

பச்சை மிளகாயை சிறு துண்டுகளாகவோ அல்லது நடுவில் மட்டுமே நறுக்கியோ வைத்துக் கொள்ளலாம். எடுத்துக் கொண்டுள்ள கெட்டித் தயிரில் மிளகாய்த் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் மூன்றையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

இப்போது அர்பியின் தோலை உரித்து சிறிய வட்ட வடிவத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் சமையல் எண்ணெய் சேர்த்து சற்று சூடானதும், ஜீரகம் மற்றும் ஓமம் சேர்க்கவும். அது வெடித்தவுடன் பெருங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

பிறகு கலக்கி வைத்திருக்கும் தயிர் சேர்த்து கொஞ்சம் கொதி வந்த பிறகு, நறுக்கி வைத்திருக்கும் அர்பி மற்றும் கொஞ்சம் தண்ணீர் சேர்க்கவும். ரொம்பவும் நீர்க்க இருக்கக் கூடாது.

உப்பு சேர்த்து மிதமான தீயில் ஐந்து நிமிடங்கள் வைக்கவும். அவ்வப்போது கலக்கி விடவும்.

அடுப்பை நிறுத்தி, தஹி வாலே அர்பியை ஒரு கிண்ணத்திற்கு மாற்றிக் கொள்ளவும். கொத்தமல்லி தழைகள் கொண்டு அலங்கரிக்கவும்!


சப்பாத்தியுடன் தஹி வாலே அர்பி...



அம்புட்டுதான்! தஹி வாலே அர்பி தயார்! சப்பாத்தி, பூரி போன்றவற்றோடு இந்த சப்ஜி நன்றாக இருக்கும். முடிந்தால் செய்து பாருங்கள். உங்கள் எண்ணங்களைப் பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நாளை மீண்டும் சந்திப்போம்…. சிந்திப்போம்…

நட்புடன்

வெங்கட் நாகராஜ்
புது தில்லி.

26 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!

    ஆஹா தஹிவாலே சேம்பு.....எங்க வீட்டு ஃபேவரைட்...மகனுக்கு மிகவும் பிடிக்கும். உங்கள் குறிப்புகளையும் பார்க்கிறேன்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் கீதாஜி!

      தஹிவாலே சேம்பு - உங்களுக்கும் பிடித்தது என்று தெரிந்து மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. போலவே உணவிலும் வடக்கு தெற்கு என்ற பாகுபாடு இல்லை எனக்கு! வட இந்திய உணவும் எனக்குப் பிடித்தவை! கேட்கும், பார்க்கும் பல உணவுகளை நானே வீட்டில் செய்து சுவைப்பது உண்டு!//

    அதே அதே வெங்கட்ஜி!

    நீங்க செஞ்சுருக்கறது சூப்பரா இருக்கு ஜி!

    இதே முறைதான். மகன் கொஞ்சம் சிறியவனாக இருந்த போது ஓமம் போட்டால் பிடிக்காது அப்புறம் சேம்பை வறுத்து சேர்க்க வேண்டும் என்று இருந்தது. அப்புறம் அவன் பெரியவன் ஆனதும் வறுக்காமல் வெந்து கட் செய்து ஓமமும் சேர்த்தும் சாப்பிடத் தொடங்கிவிட்டான். அப்புறம் இந்த மெத்தட் தான்.

    நான் தெற்கில் இருந்தாலும் வடக்கோடு நிறைய தொடர்பு உண்டு ஹா ஹா ஹா ஹா..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தெற்கில் இருந்தாலும் வடக்கோடு நிறைய தொடர்பு உண்டு// ஹாஹா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

      நீக்கு
  3. திருவனந்தபுரத்தில் இருந்த போது நம் ஃப்ளாட்டின் கீழ் ஃப்ளாட்டில் ஹரியானா குடும்பம் இருந்தார்கள் அவர்களிடம் கற்றுக் கொண்டது. அவர்கள் கொஞ்சம் க்ரேவியாகச் செய்ததையும் கற்றுக் கொண்டேன்.

    வெங்காயம் வதக்கி அரைத்துவிட்டு. அப்புறம் நானும் கொஞ்சம் வேரியேஷன்ஸ் இதில் முயற்சி செய்ஞ்சேன். கொஞ்சம் ரிச்சாக, முந்திரிப்பருப்பு அரைத்து விட்டு, க்ரீம் சேர்த்து என்று..அதுவும் வீட்டில் பிடித்திருந்தது.
    டம் ஆலு போலவும் இதைச் செய்யலாம் என்று அந்த ஹரியானாக்காரர் சொன்னார். அவரிடம் நான் நிறைய கற்றுக் கொண்டேன்.

    நீங்கள் செய்திருப்பதைப் பார்த்ததும் சாப்பிடும் ஆசை வந்துவிட்டது. அழகாக இருக்கிறது உங்கள் ரெசிப்பி செய்முறை எல்லாம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முந்திரிப் பருப்பு அரைத்து விட ரிச் ஆக இருக்கும் சப்ஜி. க்ரீம் சேர்ப்பதும் சுவை கூட்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

      நீக்கு
  4. தஹி வாலே அர்பி அறிந்து கொண்டேன்.
    செய்முறை, குறிப்புகள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  5. குட்மார்னிங்.

    சேப்பங்கிழங்கு தயிர் பச்சடியா!!! சேப்பங்கிழங்கு ரோஸ்ட் ஒரு காலத்தில் எனக்கு மிகவும் பிடித்த பண்டம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் ஸ்ரீராம்.

      தயிர் பச்சடி அல்ல! இதுவும் ஒரு வித சப்ஜி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. எளிதாகத்தான் இருக்கிறது. ஒருமுறை செய்து பார்க்க வேண்டும்.

    இப்படி ஒருமுறை செய்து பார்க்கவேண்டும் என்று குறித்துக்கொண்ட எளிதான குறிப்புகளை எதுத்து எத்தனை ரெசிப்பிகளை செய்து பார்த்திருக்கிறோம் என்று கணக்கெடுக்க வேண்டும்!!! ஹா... ஹா... ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு முறை செய்து பார்க்க வேண்டும் என குறித்துக் கொண்ட ரெசிப்பிகளில் எத்தனை செய்து பார்த்து இருக்கிறோம்! ஹாஹா... ரொம்பவே குறைவாகவே இருக்கும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  7. இது ஓமம் சேர்க்காமல் நிறையப் பண்ணி சாதத்தோடு சாப்பிடுவோம். சப்பாத்திக்கு அவ்வளவாப் பிடிக்கலை. ஆனால் மோர்க்குழம்பு பண்ணும்போது அது மிஞ்சினால் உ.கியைப் போட்டு தஹி வாலே ஆலூ பண்ணிடுவேன். இஃகி, இஃகி, இஃகி! மோர்க்குழம்பும் தீரும், சப்பாத்திக்கும் சப்ஜி என்ன செய்யலாம்னு மண்டையை உடைச்சுக்க வேண்டாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தஹி வாலே ஆலு! :)) திப்பிசம் உங்களுக்கு கை வந்த கலை ஆச்சே! ஹாஹா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  8. நம்ம மோர்க்குழம்பு செய்யறாப்போலயே தயிர் அல்லது மோரில் மி.வற்றல், வெந்தயம், மிளகு, ஜீரகம், தேங்காய் வறுத்து அரைத்துச் சேர்த்துக் கிழங்குகளையும் போட்டுக் கலவையைச் சேர்த்துக் கொதிக்க விட்டுச் சாப்பாடுக்குத் தொட்டுக்கறாப்போல் மதுரையில் நாங்க குடி இருந்த வீட்டு மாமி பண்ணுவாங்க! செக்கச்செவேல் எனச் சிவப்பு மிளகாயைப் போட்டு அரைச்சிருப்பாங்க! ஒரு கிலோ சேப்பங்கிழங்கில் அந்த நாட்களில் செய்வாங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எத்தனை விதம் விதமாகச் சமையல்... ரசித்து, அனுபவித்து சமைக்க முடிந்தால் ஆனந்தம் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  10. "//அர்பியில் மண் ஒட்டிக்கொண்டு இருக்கும். அதனை தண்ணீரில் நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.//" -
    இவ்வளவு கஷ்டமான(?) வேலை எல்லாம் இங்க வேண்டாம். எல்லாம் பதப்படுத்தப்பட்ட (frozen) தான் கிடைக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதப்படுத்தப்பட்ட காய்கறிகள் - இங்கேயும் கிடைப்பதுண்டு - ஆனால் ஃப்ரெஷாக இருப்பதற்கும் இப்படியான காய்கறிகளுக்கும் சுவையில் வித்தியாசம் உண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

      நீக்கு
  11. முதல் படமே ஆசையை தூண்டுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுவையும் நன்றாகவே இருக்கும் ஜி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  12. சேப்பங்கிழங்கை வறுவலாய் தவிர குழம்பில் போட்டால் எனக்கு பிடிக்காது. பிசுபிசுன்னு இருக்குமே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிசுபிசுன்னு இருக்காது! செய்து பாருங்கள்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  13. சப்பாத்திக்கு சைட் டிஷ்ஷா? நான் சாப்பிடுவேன் என்று தோன்றவில்லை.....

    அது 'அர்வி' இல்லையோ? வட இந்தியர்களுக்கு 'வ' வராததனால் 'ப' உபயோகப்படுத்துகிறார்களோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வட இந்தியர்களுக்கு வ வரும்! பெங்காலிகளுக்கு தான் இந்த வ/ப பிரச்சனை எல்லாம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....