வெள்ளி, 5 ஏப்ரல், 2019

பீஹார் டைரி – கயாவில் ஒரு அன்னதாதா…


லச்சா பராட்டா-லபாப்தார் பனீர்

பீஹார் பயணத்தின் போது Gகயா நகரில் இரு இரவும் ஒரு பகலும் இருக்க நேர்ந்தது. Gகயா மற்றும் Bபோத் Gகயா இரண்டு இடங்களும் சுற்றிப் பார்க்க வேண்டுமெனில் ஒரு நாளாவது அங்கே தங்க வேண்டியிருக்கும் என்பதால் நண்பர் மூலம் அங்கே தங்க ஏற்பாடு செய்திருந்தேன். 


ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மூன்று அறைகள், ஹால், இரண்டு கழிப்பறைகள், சமையலறை என சகல வசதிகளுடன் கொண்ட வீட்டை வாடகைக்கு எடுத்து, அதை தங்கும் விடுதியாக மாற்றி இருக்கிறார்கள். அங்கே தங்குபவர்களுக்கு உணவுப் பிரச்சனை இருக்கக் கூடாது என்பதற்காக, ஹைதையில் கேட்டரிங் படித்த ஜார்க்கண்ட் இளைஞர் ஒருவரையும் அங்கேயே நியமித்து இருக்கிறார்கள்.

Gகயா நகரை நாங்கள் நெருங்குவதற்கு முன்பிருந்தே அவர் எங்களை அழைத்து எங்கே இருக்கிறீர்கள் என்பதைக் கேட்டுக் கொண்டே இருந்தார். தலைநகர் பட்னாவிலிருந்து வழியில் பாவாபுரி, நாளந்தா, ராஜ்கீர் போன்ற இடங்களைப் பார்த்து விட்டு நாங்கள் Gகயா நகரம் நெருங்கும்போது இரவு ஏழரை மணிக்கு மேல்! இந்தப் பகுதிகளில் இரவு நேரப் பயணம் அவ்வளவு சரியானதல்ல என்பதால் கொஞ்சம் பதட்டத்துடன் எங்களிடம் பேசினார். கவலைப் பட வேண்டாம் எனச் சொல்லி தங்குமிடத்தின் முகவரியைச் சொல்லும்படிக் கேட்க, எனக்கு WhatsApp மூலம் தனது Location அனுப்பினார். எனது அலைபேசி மூலம் நான் எனது Location அனுப்ப, சுலபமாக அலைபேசியின் GPS மூலம் தங்குமிடத்தினைச் சென்று அடைந்தோம். இப்படியான வசதிகள் அலைபேசியில் இருப்பதும் நல்ல விஷயம் தானே.

தங்குமிடச் சுவற்றில் ஓர் ஓவியம்!


நாங்கள் அங்கே சென்று சேர்ந்து கொஞ்சம் ஓய்வெடுத்த பிறகு இரவு உணவு சமைத்துக் கொடுத்தார். சப்ஜி, தால், சப்பாத்தி, கொஞ்சம் சாதம் என சிம்பிள் உணவு என்றாலும் மிகவும் சுவையான உணவு. அனில் என்பது அவருடைய பெயர். ஜார்க்கண்ட் மாநிலத்தினைச் சேர்ந்தவர். ”ஹைதையில் தான் படித்தேன். இங்கே நிரந்தரப் பணி என்றாலும் எங்கள் ஊர் மாதிரி இந்த ஊர் இல்லை என்பதால் இங்கே தொடர்ந்து இருக்க விருப்பம் இல்லை” என்று சொல்லி, ஊரிலேயே ஏதாவது உணவகம்/தங்குமிடம் தொடங்க விருப்பம் என்பதை நாங்கள் அங்கே இருந்தபோது எங்களிடம் தெரிவித்தார். ஒவ்வொரு வேளையும் எங்களுக்குத் தேவையான உணவைக் கேட்டு பாசத்துடன் பரிமாறினார்.

காலை உணவும் அங்கே சாப்பிட்ட பிறகு தான் நகர்வலம் சென்றோம். மதிய உணவு அனைவரும் சாப்பிட்ட பிறகு தான் எங்களுடன் வந்திருந்த தில்லி நண்பரும் அவரது துணைவியும் பட்னா திரும்பினார்கள். நானும் நண்பர் பிரமோத்-உம் அன்றைய இரவும் அங்கேயே தங்கினோம். மாலை மீண்டும் Bபோத் Gகயா சென்று கொஞ்சம் உலவி வந்தோம். கடைத்தெருக்களில் கொஞ்சம் உலா. காலை மஹாபோதி கோவில் சென்றபோது கடைத்தெருவில் உலவ முடியவில்லை. நண்பருக்கு அங்கே இருந்து வெண்கலத்தில் புத்தர் சிலை வாங்கிக் கொண்டு போக வேண்டும் என்ற எண்ணம் இருந்ததால், மாலை மீண்டும் Bபோத் Gகயாவிற்கு உள்ளூர் ஷேர் ஆட்டோவில் பயணித்தோம். எப்படிச் செல்ல வேண்டும் என்பதையும் அனில் தான் சொல்லி அனுப்பினார்.


உல்லாசமாகப் பயணிக்கும் பிள்ளையார்!


Bபோத் Gகயா பகுதியில் நிறைய கடைகள் இருக்கின்றன. விதம் விதமான பொருட்களை அங்கே விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள். வெளிநாட்டவர்கள் அதிகம் வரும் பகுதி என்பதால் கைவினைப் பொருட்கள் நிறையவே இருந்தன. எத்தனை எத்தனை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள் என்று பார்க்கும்போதே மகிழ்ச்சியாக இருந்தது. வெண்கலச் சிலைகள் விலை நிறையவே சொல்கிறார்கள். பேரம் பேச வேண்டியிருக்கிறது! ஒரு சில கடைகளில் எடைக்குத் தகுந்த விலை! நண்பர் அப்படி இப்படி என சில ஆயிரங்கள் கொடுத்து ஒரு புத்தர் சிலை வாங்கி விட்டார். நான் ஒரு பிள்ளையார் சிலை பார்த்தேன் – மிகவும் பிடித்திருந்தது அச்சிலை! மஞ்சத்தில் கால் நீட்டி அமர்ந்து இருக்கும் பிள்ளையாரை இரண்டு பேர் தூக்கிச் செல்வது போன்ற அந்த சிலை மிகவும் பிடித்திருந்தது – ”விலை அதிகமில்லை! 5000 ரூபாய் மட்டுமே!” என்று கடைக்காரர் சொல்ல, “ரொம்ப நல்லா இருக்கு! ஆனா ஃப்ளைட்ல எடுத்துப் போறது கஷ்டம்னு” சொல்லி அங்கேயே வைத்து விட்டு விட்டேன்!

நிறைய நேரம் அங்கே சுற்றிப் பார்த்து விட்டு, மீண்டும் ஷேர் ஆட்டோ மூலம் தங்குமிடம் வந்த பிறகு, அனில் சுடச் சுட லச்சா பராட்டாவும், லபாப்தார் பனீர் சப்ஜியும் செய்து தந்தார். ரொம்பவே சுவையாக இருந்தது. அன்றைய நாள் முழுவதும் அலைந்து திரிந்து திரும்பிய எங்களுக்கு அந்த உணவு ரொம்பவும் மகிழ்ச்சியைத் தந்தது. அடுத்த நாள் காலை Gகயாவிலிருந்து நாங்கள் புறப்பட வேண்டும். அதற்கும் இரயில் நிலையம் செல்ல எங்களுக்கு ஒரு ஷேர் ஆட்டோவை ஏற்பாடு செய்து தந்தார். எங்களைத் தவிர வேறு யாரையும் ஏற்றாமல் செல்லும்படி ஏற்பாடு செய்தார்! அப்படிச் செல்லும் போது யாராவது கை நீட்டி நிற்கச் சொன்னால், “ரிஜர்வ்!” என்றார் ஆட்டோ ஓட்டுனர்! காலையிலும் புறப்படும் முன்னர் காலை உணவாக பால், ப்ரெட் மற்றும் கார்ன் ஃப்ளேக்ஸ் தருகிறேன் என்று சொன்ன அனிலிடம் வேண்டாம் எனச் சொன்னது எவ்வளவு தவறு என்பது இரயிலில் உணவு கிடைக்காமல் திண்டாடியபோது தான் தெரிந்தது!

Gகயாவிலிருந்து புறப்படும் முன்னர் அனிலுக்கு கொஞ்சம் பணமும் கொடுத்து அவரது வாழ்க்கையில் மேலும் சிறப்புற வாழ்த்துகளைச் சொல்லி புறப்பட்டோம். இப்போதும் WhatsApp மூலம் புத்தாண்டு, ஹோலி என பண்டிகை சமயங்களில் வாழ்த்துகளை பரிமாறிக் கொள்கிறோம்! நான்கு வேளை எங்களுக்கு அன்னதாதாவாக இருந்த அனிலுக்கு நன்றி! எல்லா இடங்களிலும் இப்படி உணவுக்கு கவலை இல்லாமல் இருந்தால் மகிழ்ச்சி தானே ததும்பும்! ”அன்னதாதா சுகிபவ!”

நட்புடன்

வெங்கட்
புது தில்லி

46 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!

  முதல் இரண்டு படங்களே ஆஹா ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் னு நாவில்னீர்

  லச்சா பராட்டா லபாப்தார் பனீர் ரெண்டும் சாப்பிட்டிருக்கேன் செய்தும் இருக்கேன்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய காலை வணக்கம் கீதாஜி!

   லச்சா பராட்டா நான் செய்வதுண்டு. லபாப்தார் பனீர் வீட்டில் முயற்சிக்கவில்லை. வெளியே சாப்பிடுவதோடு சரி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. அலைபேசியின் GPS மூலம் தங்குமிடத்தினைச் சென்று அடைந்தோம். இப்படியான வசதிகள் அலைபேசியில் இருப்பதும் நல்ல விஷயம் தானே.//

  மிகவும் சௌகரியமாக இருக்கு நெட் ரீச் இருந்தால்...

  இப்பல்லாம் பெண்கள் பாதுகாப்புக்குனு போலீஸ் ஒரு நம்பர் கொடுத்துருக்காங்க..அதுல மெசேஜ் அனுப்பலாம் கூப்பிடலாம்னு

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அலைபேசி நல்லதற்கும் பயன்படுகிறது - ஆனால் துர்ப்பிரயோகமே அதிகம் செய்கிறார்கள் மக்கள்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

   நீக்கு
 3. அந்த ஜார்கண்ட் இளைஞருக்கு மண் ஊர்ப் பாசம் போலும்! பொதுவாக எல்லோருக்குமே அப்படித்தானே!

  ரிஜர்வ்// ஹா ஹா ஹா ஹா ஹா இங்கும் நம் வீட்டருகில் நிறைய ஹிந்திக்காரர்கள் அவர்கள் கடையும் வைச்சுருக்காங்க. உச்சரிப்பு பல சமயங்களில் புரிவதில்லை சில சமயங்களில் சிரிப்பும் வரும் ஆனால் பாவம்தான் அவர்கள் ....எல்லா மாநிலங்களிலும் அந்தந்த ஊர் அக்சென்டில் தான் நம்மூர் சைடிலும் கூட இப்படியான உச்சரிப்புகள் வேறு விதத்தில் உண்டுதான்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வார்த்தை உச்சரிப்பு - ஹாஹா... எல்லா ஊரிலும் இப்படி மாற்றி உச்சரிப்பது உண்டு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

   நீக்கு
 4. சுவரில் இருக்கும் ஓவியம், பிள்ளையார் எல்லாம் ....ஒய்யாரமா படுத்திருக்கார் பிள்ளையார் நிறைய அப்ளிகேஷன்ஸ் வந்துருக்கும் போல ஸ்பாஆஆஆஆஆஆஆஆஆஅ நு படுத்திருக்கார் ரிலாக்ஸ்டா!!!!!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பிள்ளையார் சிலை ரொம்பவுமே பிடித்திருந்தது. விலை தான் பிடிக்கவில்லை! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

   நீக்கு
 5. குட்மார்னிங்.

  ஆம் லொகேஷன், ஜி பி எஸ் வசதிகள் மிகவும் உதவியாய் இருக்கின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம் ஸ்ரீராம்.

   நல்ல வசதி தான். ஆனால் ஜி.பி.எஸ். சில சமயங்களில் படுத்திவிடுகிறது - குறிப்பாக சிற்றூர்களில்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. சுவர் ஓவியத்தில் சிவன் தலைகுனிந்து கண்கள் மூடி ஆழ்ந்த ஏதோ சிந்தனையில் இருக்கிறார் என்று தெரிகிறது. என்ன பிரச்னையாம்?பார்வதியோ, "இவர் இப்போ என்ன முடிவு எடுக்கப்போகிறார்?" என்று டென்ஷனுடன் பார்த்துக்கொண்டிருக்கிறார்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா.... நல்ல அவதானிப்பு.

   பாவம் சிவனுக்கு என்ன டென்ஷனோ?

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 7. //ஒவ்வொரு வேளையும் எங்களுக்குத் தேவையான உணவைக் கேட்டு பாசத்துடன் பரிமாறினார்.//

  பாசமான மனிதர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்படியான மனிதர்கள் இன்னும் இருப்பதில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 8. //லச்சா பராட்டாவும், லபாப்தார் பனீர் சப்ஜியும்//

  பெயரே வித்தியாசமாக, கவர்ச்சியாக இருக்கிறது. ஒரு கதையின் தலைப்பு மாதிரியும் இருக்கிறது!!! ஏன் நண்பர்கள் யாராவது இந்தத்தலைப்பில் கேவாபோவுக்கு ஒரு கதை எழுதக்கூடாது?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கவர்ச்சியான பெயர்....

   கதையின் தலைப்பு - ஆஹா... கேவாபோவில் வரப் போகும் கதைக்கு நானும் காத்திருக்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 9. //அப்படிச் செல்லும் போது யாராவது கை நீட்டி நிற்கச் சொன்னால், “ரிஜர்வ்!” என்றார் ஆட்டோ ஓட்டுனர்! //

  கேள்விப்பட்டிருக்கிறேன். அனில் தந்த உணவுதவியை மறுத்ததால் என்ன பிரச்னை ஏற்பட்டது என்று அறிய ஆவலுடன்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வேறு என்ன உணவு கிடைக்கா/சாப்பிட முடியாத திண்டாட்டம் தான். விரைவில் வரும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 10. நண்பரின் ஊர்பாசமும் மண் பாசமும் மகிழ்வைத் தருகிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 11. //நான்கு வேளை எங்களுக்கு அன்னதாதாவாக இருந்த அனிலுக்கு நன்றி! எல்லா இடங்களிலும் இப்படி உணவுக்கு கவலை இல்லாமல் இருந்தால் மகிழ்ச்சி தானே ததும்பும்! ”அன்னதாதா சுகிபவ!”//

  பயணத்தில் முக்கியம் வயிற்றை கெடுக்காத உணவு. அதை கொடுத்தவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அனிலுக்கு வாழ்த்துக்கள்! அவர் எண்ணம் ஈடேற இறைவன் துணை இருக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பயணத்தில் முக்கியம் வயிற்றை கெடுக்காத உணவு. உண்மை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 12. அலைபேசி நன்மைகளுக்காகவே கண்டு பிடித்ததே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்மைகளை வீட தீமை அதிகமாகிவிட்டதாகத் தெரிகிறது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 13. பதில்கள்
  1. பயணிக்கும் பிள்ளையார் - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 14. சுவற்றின் ஓவியம், பார்வதி தேவி, குற்றம் சுமத்தி சிவனிடம் கேள்வி கேட்பதுபோலவும், சிவன் குற்ற உணர்ச்சியால் தலையைக் குனிவதுபோலவும் இருக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குற்ற உணர்ச்சியால் தலை குனிவு! நல்ல கற்பனை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 15. இடத்தின் ரென்'ட் எவ்வளவு, அதன் வசதி எப்படி இருந்தது, எந்த இடம் என்றெல்லாம் எழுதலையே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்குமிடம் பொது மக்களுக்கானது அல்ல. நல்ல வசதியான இடம் தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 16. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 17. அருமையான படங்கள்.. அழகான படங்கள்..

  அன்ன தாதா வாழ்க...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   நீக்கு
 18. வணக்கம் சகோதரரே

  அழகான படங்கள். அருமையாக பயணித்த விபரங்களை எழுதியிருக்கிறீர்கள். அன்னதாதாவாக செயல்பட்ட அனிலுக்கு வாழ்த்துக்கள். பாசமும், பரிவுமாக தன் கடமையே செய்யும் மனிதர்கள் இன்னமும் இருக்கிறார்கள்.

  சுவற்றின் ஓவியத்தில் சிவன் நண்பர்கள் கூறுவது போல் மிகுந்த சிந்தனையில் இருக்கிறார்." உலக மக்களின் நடப்புகள் இப்படியாயிருக்கிறதே" என்ற சிந்தனையோ? பிள்ளையார் மிகவும் அழகு. விலைதான் கொஞ்சம் அதிகம். அடுத்து என்வென்று அறிய ஆவல்.. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பிள்ளையார் விலை - அதிகம் தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   நீக்கு
 19. ராமன் என்றாலே அணிலுக்கு மகிழ்ச்சிதானே. வெங்கடராமனுக்கும், ராமசாமிக்கும் என்றவுடன் அனி(ணி)ல் அதிக அக்கறையுடன் பரிமாறியிருப்பாரோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா வார்த்தை விளையாட்டு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி...

   நீக்கு
 20. அப்பாடா.. இப்படி எழுதும் உங்களை போன்றோர் எங்க ஹோட்டல் பக்கம் வரக்கூடாதா என மனம் ஏங்கும் படி எழுதுகின்றீர்கள். ரசித்து ருசிக்க வைக்கும் பயண அனுபவங்கள்.பிள்ளையாரின் சயனம் அழகோ அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா... ஒரு டிக்கெட் போட்டுட வேண்டியது தான் உங்க ஊருக்கு! :) உங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி தந்தது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா.

   நீக்கு
  2. வாங்க வாங்க காசு கூட தர வேண்டாம். நாலு வார்த்தை நல்லதா எழுதினால் ஜில்லுன்னு ஆல்ப்ஸ் மலைக்குளிரில் மிதக்கலாம் எனும் ஆசை தான்.

   நீக்கு
  3. ஹாஹா... வரலாம். உங்கள் ஊருக்கு ஒரு டிக்கெட் எடுப்பதற்கு முன்னர் பாஸ்போர்ட் வாங்க வேண்டுமே! என்னிடம் பாஸ்போர்ட் இல்லை என்பதை இங்கே சொல்லி விடுகிறேன்! இதுவரை வெளிநாட்டுப் பயணம் எதுவுமே செய்ய நேரமோ/வாய்ப்போ வரவில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா.

   நீக்கு
 21. பயண கட்டுரை அருமை. அந்த பிள்ளையார் அழகு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   நீக்கு
 22. வட இந்தியாவில் நல்ல உணவு கிடைக்குமா என அச்சப்படுவோருக்கு அனில் போன்றவர்கள் நல்ல உணவு தர இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியான தகவல்தான். தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....