திங்கள், 22 ஏப்ரல், 2019

இரயில் பயணங்களில்… – காலன் வீசிய கயிறு…”யாராவது டாக்டர் இந்தப் பெட்டியில இருக்கீங்களா?” என்ற பதட்டமான குரலில் கேட்டுக் கொண்டே ஒரு இளைஞர் வருகிறார். ஏழு மணிக்கு புறப்பட வேண்டிய இரயில் பத்து மணிக்குப் புறப்பட்டதால், இரயிலில் ஏறிய உடனேயே படுக்கைகளை விரித்து தூங்க ஆரம்பித்துக் கொண்டிருந்தனர் பெரும்பாலான பயணிகள். இந்த மருத்துவருக்கான அபயக் குரலை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை.
 
இரயில் ஆனந்த் விஹார் நிலையத்திலிருந்து புறப்பட்டு அரை மணி நேரம் தான் ஆகியிருக்கலாம். அதற்குள் என்ன ஆயிற்று? யாருக்கு உடம்பு சரியில்லை என்ற கவலை எனக்குள். இளைஞரை, பயணப் பரிசோதகரிடம் பட்டியல் இருக்கும் அவரைக் கேளுங்கள் எனச் சொல்ல, அவரைத் தேடிக் கொண்டு போகும்போது தான் இங்கேயும் கேட்டேன். நானும் CPR [Cardiopulmonary resuscitation] எனக்குத் தெரிந்த வரை செய்து பார்த்துவிட்டேன். மருத்துவர் பார்த்தால் கொஞ்சம் நல்லது என்று சொல்லிக் கொண்டே பதட்டத்துடன் முன்னே செல்கிறார் – தொடர்ந்து “மருத்துவர் யாரும் இங்கே இருக்கிறீர்களா?” என்று குரல் கொடுத்தபடியே. பலரும் வேடிக்கை பார்த்தபடி இருக்கிறார்கள். துன்பமும், கஷ்டமும் நமக்கு வரும்வரை யாருக்குமே அதன் கடுமை புரிவதில்லை.

இரயில் Gகாஜியாபாத் தாண்டி இருந்தது. பயணச்சீட்டு பரிசோதகர் தனது பட்டியல் பார்த்து இரயிலில் எந்த மருத்துவரும் இல்லை என்றும் அடுத்த பெரிய இரயில் நிலையமான அலிகட்[ர்] நகருக்குத் தகவல் அனுப்பி விட்டதாகவும் சொல்கிறார் – அந்த நிலையம் வருவதற்கு இன்னும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகலாம்! அங்கே இந்த வண்டிக்கு சாதாரணமாக நிறுத்தம் கிடையாது. நிலைய மருத்துவருக்கும் இரயில்வே காவல்துறைக்கும் தகவல் சொல்லி விட்டோம் என்று சொல்கிறார் பயணச்சீட்டு பரிசோதகர். உடம்பு முடியாத பயணி இருந்த இடத்தினைச் சுற்றி சிலர் நின்று கொண்டு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பயணியுடன் வந்த ஒரு பெண்மணி அழுதபடியே யாருக்கோ அலைபேசியில் சொல்லிக் கொண்டு இருக்கிறார் நிலைமையை. மொத்தம் நான்கு பேர் – உடல்நிலை சரியில்லாத பயணியும் சேர்த்து.

“அது போய் அரை மணி நேரமாச்சு… அடுத்து ஆக வேண்டிய காரியத்தைப் பாருங்க…” என்று சொல்லியபடி போகிறார் ஒருவர். ”ஆனந்த்விஹார் இரயில் நிலையத்திலேயே பார்த்தேன், அவருக்கு உடம்பு சரியில்லை. இப்படி உடம்பு சரியில்லாத நிலையில ஒருத்தரை இவ்வளவு தொலைவு இரயில் பயணம் அழைத்துச் செல்வது சரியில்லை! இதெல்லாம் இந்தக் காலத்து இளைஞர்களுக்கு எங்கே புரியுது!” இன்னுமொரு பெரியவர். ”கொஞ்சம் காத்து வரட்டும்பா, சுத்தி நின்னு கரைச்சல் கொடுக்காதீங்க!” என்று அதட்டுகிறார் ஒரு இளைஞர். ஆளாளுக்கு ஏதேதோ சொல்லிக் கொண்டு அலிகட் நிலையம் எப்போது வரும் என்று காத்திருக்கிறார்கள் அனைவருமே. இரயில் வேகமாகச் சென்று அலிகட் நிலையம் அடைந்து நிற்கிறது.

கதவு திறக்க, ஒருவர் – பார்த்தால் மருத்துவர் போலவே தெரியவில்லை – உள்ளே வருகிறார். அவருடைய உதவியாளர் கையில் பெட்டி, ஸ்டெத் சகிதம் பின்னால் வருகிறார். வந்து ஸ்டெத்தை எடுத்து மருத்துவர் கழுத்தில் மாட்டி, காதில் வைக்கிறார்! மருத்துவர் சோதித்துப் பார்த்து விட்டு உதட்டைப் பிதுக்கி “அவர் உயிர் பிரிந்து விட்டது… இவரோட வந்தவங்க யாரு, கீழே வாங்க சான்றிதழ் தருகிறேன்” என்று சொல்லி கீழே இறங்க, காவல் துறையினர் அங்கிருந்து மேலே வேலைகளைக் கவனிக்க விசாரணையை ஆரம்பிக்கிறார்கள். எங்கே இருந்து வருகிறார்கள், எங்கே போகப் போகிறார்கள் என்பதை எல்லாம் கேட்டு, அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள் எனக் கேட்க, உயிரற்ற உடலை அப்படியே இரயிலிலேயே தங்கள் ஊருக்கு எடுத்துச் செல்வதாகச் சொல்ல பிரச்சனை ஆரம்பிக்கிறது!
”என்னதான் குளிரூட்டப்பட்ட பெட்டி என்றாலும் உயிரற்ற உடலை, அதுவும் அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பயனில்லாமல் வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுங்கன்னு சொன்னாங்களாம், அப்படி இருக்கப்போ, இரயிலில் எல்லாரும் இருக்க “பாடி” எடுத்துட்டுப் போகலாமா? இரயில் பெட்டியில பல முதியவர்கள் இருக்காங்க! செத்த உடலை வைத்துக் கொண்டு அவர்கள் பயணிக்க முடியுமா? எல்லாருக்கும் இன்ஃபெக்‌ஷன் ஆகிடும்… பாடியை இங்கேயே இறக்கிடுங்க” என்ற வாதங்களும், ”இந்த இராத்திரி பன்னிரெண்டு மணிக்கு தெரியாத ஊர்ல “பாடி”யை வச்சுக்கிட்டு அவங்க திண்டாடணுமா, உங்களுக்கு மனிதத் தன்மையே இல்லையா, நீங்க பாட்டுக்கு உங்க சீட்ல தூங்கிட்டு வாங்க, அது பாட்டுக்கு அது ஒரு ஓரத்துல இருக்கட்டும்!” என்று எதிர்வாதங்களும் தொடர்ந்து கொண்டிருந்தன.

கீழே இறங்கி நடப்பவற்றைக் கவனித்தால், மருத்துவர் சான்றிதழ் தர, காவல் துறை அதிகாரிகள் இரு பக்க வாதங்களையும் கேட்ட பிறகு “அவங்க போக வேண்டிய ஊருக்கு, இரயில் போய் சேர கிட்டத்தட்ட பதினைஞ்சு மணி நேரம் ஆகும். அது வரை உயிரற்ற உடலை இப்படி இரயிலில் எடுத்துச் செல்வது பாதுகாப்பில்லாதது. அதற்கு சட்டதிட்டங்களும் கிடையாது! அதனால இங்கே இறக்கிடுங்க, கூட வந்தவங்களும் இறங்கிடுங்க! பாடி கொண்டு போக வண்டி ஏற்பாடு செய்துடலாம்” என்று சொல்லி, “யாருய்யா அங்க, ஸ்ட்ரெச்சர் எடுத்துட்டு வா, வண்டிக்கு லேட் ஆகுது பாரு!” என்று சொல்லி ஏற்பாடுகளைக் கவனிக்க ஆரம்பித்தார் – அங்கே ஒருவர் “Late” ஆகியிருக்க, பலருக்கு வண்டி லேட் ஆனது தான் பெரிதாகத் தெரிகிறது!

ஸ்ட்ரெச்சர் வெளியிலே இருக்க, உள்ளேயிருந்து உடலை எடுத்துக் கொண்டு வந்த விதம் பார்த்த போது மனது பதறியது! இரண்டு கைகளையும் ஒருவர் பிடித்துக்கொள்ள, கால்களை ஒருவர் பிடித்துக்கொள்ள அங்கேயும் இங்கேயும் இடித்தபடி தூக்கிக் கொண்டு வருகிறார்கள்! என்னதான் உயிரற்ற உடல் என்றாலும் இப்படியா? அவர் மேலே போர்த்தியிருந்த கம்பளியும், மெல்லிய படுக்கை விரிப்பும் பார்த்த ஒருவர், அதையெல்லாம் எடுத்துடுப்பா, ‘பாவம் அவன் சம்பளத்துல பிடிச்சுடுவாங்க’ என்று சொல்ல, கம்பளி மட்டும் மீண்டும் மடித்து உள்ளே வைக்கப்பட்டது! அன்றைக்கு இரவே வேறு ஒரு பயணிக்கு அந்தக் கம்பளி தரப்படலாம்! கார்ட் வாக்கி டாக்கி மூலம் ஓட்டுனருக்கு தகவல் தர வண்டி நகர ஆரம்பித்தது.

உடலைச் சுமந்து செல்ல வண்டி கிடைத்ததா, அந்த நள்ளிரவில் ஒரு தகப்பனை இழந்த ஒரு பெண்ணையும் வைத்துக் கொண்டு எவ்வளவு திண்டாடி இருப்பார்கள் அவர்கள், இங்கே உயிருக்கான விலையே இல்லையா? என்ற சிந்தனைகளோடு, அப்பெண்ணின் அழுகைக் குரலும் கேட்டபடியே இருக்க, உறக்கமற்ற ஒரு இரவாகவே கழிந்தது எனக்கு. இரயில் நிலையத்தில் இருந்த ஒரு இரயில்வே காவல்துறை ஊழியர் சொன்ன வார்த்தைகள் காதுக்குள் ரீங்கரித்துக் கொண்டே இருந்தது – “இங்கே மனிதம் மரணித்து விட்டது…”

நாளை மீண்டும் சந்திப்போம்… சிந்திப்போம்…


நட்புடன்

வெங்கட்
புது தில்லி

60 கருத்துகள்:

 1. குட்மார்னிங்.

  மிகவும் சோகமான சம்பவம் ஒன்றை விவரித்திருக்கிறீர்கள். மிகவும் சங்கடமான விஷயம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம் ஸ்ரீராம்.

   சோகமான சம்பவம் தான். இப்போது நினைத்தாலும் வருத்தம் தரும் சம்பவம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. இதே அனுபவம் எங்கள் வீட்டில் உண்டு.

  2002 இல் என் அம்மா காலமான சமயம். அம்மாவின் பத்துக்கு வர அவர் தங்கை குஜராத்திலிருந்து கணவருடன் ரயிலில் கிளம்பினார். சித்தப்பாவுக்கு காது கேட்காது. இருவருக்கும் ஹிந்தி தெரியாது. பாதி வழியில் சித்தியின் உயிர் பிரிந்துவிட்டது. காது கேட்காத, மொழி தெரியாத சித்தப்பா இதே போலவே அல்லாடி, வழியில் இறக்கி விடப்பட்டு, அங்கிருந்த ஸ்டேஷன் மாஸ்டர் உதவியுடன் மீண்டும் குஜராத் சேந்து...

  அந்த நினைவுகள் வந்துவிட்டன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹையோ எவ்வளவு கஷ்டம் இல்லையா ஸ்ரீராம். பாவம் அவர் அதுவும் காதும் கேட்காது மொழியும் தெரியாமல் பாவம்..

   இப்படித்தான் என் நெருங்கிய உறவினர் கணவன் மனைவியுமாக வட இந்திய புனித யாத்திரை சென்றிருந்த போது இறங்கி வரும் சமயம் ரிஷிகேஷோ அல்லது ஹரித்வாரோ அதன் அருகில் கணவன் ஹார்ட் அட்டாக்கில் இறந்திட, மனவி தவித்து இத்தனைக்கும் செல்லும் முன் முழு ஹெல்த் செக்கப் எல்லாம் செய்து அவருக்கு எந்தவிதப் பிரச்சனையும் இல்லை பிரயாணம் செய்யாலாம் என்று சொல்லித்தான் சென்றிருக்கிறார்கள். அப்புறம் இங்கிருந்து அவர் தம்பி, ஒரே மகன், இறந்தவரின் மனைவியின் தம்பி அவர் மருத்துவர் அவரும் சென்று உரிய ஃபார்மாலிட்டிஸ் எல்லாம் முடித்து அதன் பின் இறந்தவரை இங்கு கொண்டு வருவது சிரமம் என்பதால் அங்கேயே தகனம் செய்து விட்டு மீதிக் காரியங்களை இங்கு செய்தனர்.

   கீதா

   நீக்கு
  2. மொழி தெரியாமல், இப்படியான இடங்களில் குறிப்பாக பயணத்தின் போது ரொம்பவே கஷ்டம். எத்தனை கஷ்டப்பட்டிருப்பார் அந்தச் சித்தப்பா. நினைத்தாலே வேதனை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
  3. வட இந்தியப் பயணம் வந்து இங்கே இறந்தவர் ஒருவர் குடும்பத்தினை நானும் சந்த்தித்து இருக்கிறேன். என்னால் இயன்ற உதவியும் செய்தேன். ரொம்பவே கொடுமையான விஷயம். யாருமே இல்லாமல் தவிக்கும் போது அந்த மனது என்னவெல்லாம் பாடு படும்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
 3. இனிய காலை வணக்கம் வெங்க்ட்ஜி

  தலைப்பே சோகமாக இருக்கிறதே அப்ப சோக நிகழ்வோ...பின்னர் வ்ருகிறேன் ஜி. இன்று லேட்..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய காலை வணக்கம் கீதாஜி.

   சோகம் தான். சில சமயங்களில் இப்படியான சம்பவங்களும் நடந்து விடுகிறது. விதியின் விளையாட்டு... வேறென்ன சொல்ல.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனையில் சேர்த்திருந்தோம். அங்கு மருத்துவர்கள் கைவிரித்த நிலையில் நெருங்கிய உறவினர்கள் பார்க்க வந்திருந்தனர். இரண்டுமுறை மீண்டு விட்டாலும் மூன்றாவது முறை காலனிடம் சரணடைந்தார் அம்மா. நெருங்கிய உறவு வீட்டில் இருக்க, அவசிய ஆவணங்களும், பணமும் எடுக்க வீடு சென்ற என்னிடம் அந்த உறவு கேட்ட கேள்வின்னும் என் நினைவில் "பிணம் எப்போ வீடு வரும்?" நேற்றுவரை உறவு, பெயர் சொல்லி அழைக்கப்பட்ட உயிர் உடனே மதிப்பிழந்துபோனது. அவர் கேட்டதில் தவறில்லை என்றாலும் நெருங்கிய உறவான நமக்கு வேதனை ஆகிப்போகிறது.

  அந்தப் பெண்ணின் நிலையை எண்ணிப்பார்க்க மனவேதனைதான் மிஞ்சுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மனிதனுக்கு மதிப்பு என்பது அவனது பணத்துக்கும் ஸ்டேடஸுக்கும் புகழுக்கும்தான் ஸ்ரீராம். எப்போ அது நம்மை விட்டுப் போகுதோ அப்போ நம் மதிப்பும் காணாமல் போய்விடுகிறது. அதைத்தான் நான் பல இடங்களில் கண்டிருக்கிறேன்.

   உறவுகளின் மூலம் அதைத் தெரிந்துகொள்ளும்போது மனது மிகவும் வருத்தமடையும். ஆனாலும், எல்லோருக்கும் இந்த நிலைமைதானே....

   என் அப்பாவின் இறுதிச் சடங்கின்போது, மண் பானையை அவர் தலைமாட்டிலோ (இல்லை கால்மாட்டிலோ) போட்டு உடைக்கும் நிகழ்வு வந்தபோது, மனது துணுக்குற்றது..இவ்வளவு சத்தம் அவருக்குப் பிடிக்காதே என்று.... நமக்கு உணர்வு... மற்றவர்களுக்கு அது நிகழ்வு..

   நீக்கு
  2. ஸ்ரீராம் உண்மைதான்.
   உறவு சொல்லி, அல்லது பெயர் சொல்லி வீட்டிற்கு கொண்டு வந்தாச்சா என்று கேட்பது வழக்கமாயிற்று. ஸ்ரீராம் எனக்கும் இது போன்ற அனுபவம் அதிலிருந்து கற்றது..என் மிகச் சிறு வயதிலேயே என் பெரிய அத்தை இறந்த போது.

   கீதா

   நீக்கு
  3. //இவ்வளவு சத்தம் அவருக்குப் பிடிக்காதே என்று.... நமக்கு உணர்வு... மற்றவர்களுக்கு அது நிகழ்வு..//


   நெல்லை... இந்தப்பதிவில் நான் இடும் பின்னூட்டம் எல்லாம் ஒரு மாதிரியாகவே இருக்கிறது. வெங்கட் மன்னிக்கட்டும். அவர் பதிவின் காரணமாகவே எனது பின்னூட்டங்கள். என் அப்பாவை கடைசியாக மின் மயானத்தில் தள்ளுப்படுக்கையில் உள்ளே தள்ளியபோது அக்னி நட்சத்திர மதிய இரண்டு மணி வெயிலில் அவர் படும் அவஸ்தைகளை பார்த்திருந்த எனக்கு இந்தச்சூடை அவர் எப்படித்தாங்கப் போகிறார் என்கிற பதைப்பு வந்தது.

   நீக்கு
  4. கீதா...

   பேரினை நீக்கி பிணமென்று பெயரிட்டு...

   சித்தர் பாடலின் இரண்டாவது வரி நினைவுக்கு வருகிறது. உண்மைதான். என் ஒன்று விட்ட மாமா ஒருவர் இறந்து அவர் காரியங்களுக்குச் சென்றிருந்தேன். அவர் என் அப்பாவின் மனதுக்கு நெருக்கமானவர். சடங்குகள் சென்னையில் நடக்க, என் அப்பா மதுரையில் இருந்தார். அவ்வப்போது என்ன நடக்கிறது என்று போனில் கேட்டுக்கொண்டிருந்தார். வயதானவர்களுக்கே உரிய இயல்பான அச்ச ஆர்வமுமொரு காரணம் என்று எனக்குத் தோன்றியது. அப்போது மறைந்த மாமாவின் பெயரைச் சொல்லி - அவர் பெயர் மகாதேவன் - "மகாதேவன் மாமா கடைசி ஸ்நானம் செய்கிறார்" என்றேன். அப்புறம் அவர் கிளம்பியபோது இந்த வீட்டை விட்டு "மகாதேவன் மாமா பயணம் கிளம்பி விட்டார், என்ன, இனிமேல் அவர் திரும்பி வரமாட்டார்" என்று கூறியதும் போனிலேயே அப்பா அழுது விட்டார்.

   இதுவும் நினைவுக்கு வருகிறது.

   நீக்கு
  5. ஸ்ரீராம்... நான் பெரும்பாலும் கேமராவோடு இருப்பேன், எல்லாவற்றையும் படம் பிடிப்பேன். இப்போது ஒரு சில வருடங்களாகத்தான் ஐபோனில் படம் எடுக்கிறேன்.

   என் அப்பாவைக் காண வந்தபோது படம் எடுக்கணும் என்று நினைத்தேன். என் போதாத காலம் அங்கு இருந்த உறவினர்கிட்ட கேட்டுட்டேன். அவர், மறைந்தவர்களை படம் எடுக்கக்கூடாது என்று சொல்லிட்டார். அதனால் கேமரா இருந்தும் அதனைப் படம் எடுக்கவில்லை. ப்ராப்தம் இல்லை. (அவரை மனதால் திட்டாத நாளில்லை. ஏன் அவரிடம் கேட்டோம் என்று நினைக்காத நாளும் இல்லை. என்னிடம் என் அப்பாவை யதேச்சையாக இறப்பதற்கு 18 நாட்களுக்கு முன்பு ஆபீஸ் பயணமாக வெளிநாட்டிலிருந்து வந்து இரவு 9 மணிக்குச் சந்தித்தபோது எடுத்த படம்தான் கடைசிப் படமாக இருக்கிறது, அதற்கு ஒரு வருடத்துக்கு முன்பு மும்பையில் ஐசியுவில் இருந்தபோது, நான் அவரை வெளிநாட்டிலிருந்து காணவந்தபோது, அங்குள்ள நர்சை ஸ்நேகம் பிடித்து அங்கேயே அப்பாவுடன் போட்டோ எடுத்துக்கொண்டேன்.)

   என்னவோ வெங்கட் இந்த இடுகையை எழுதினாலும் எழுதினார், நினைவுகள் இதைப்பற்றியே சுழல்கின்றன

   நீக்கு
  6. //எப்போ வீட்டுக்குக் கொண்டு வருவீங்க... எப்ப எடுப்பீங்க// என்று கேட்கப்படும் கேள்விகள் மனதை என்னவோ செய்யும். பலமுறை இப்படியான கேள்விகளைக் கேட்கும் மனிதர்களை இங்கே சந்தித்தது உண்டு ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
  7. //இவ்வளவு சத்தம் அவருக்குப் பிடிக்காதே// மனதைத் தொட்டது உங்கள் வார்த்தைகள். சுலபமாகச் சிலர் இப்படியான நிகழ்வுகளைக் கடந்து விடுகிறார்கள். சிலரால் அப்படி இருக்க முடிவதில்லை நெல்லைத் தமிழன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
  8. இறந்த சில நிமிடங்களிலேயே உறவும், பெயரும் விடுபட்டுப் போகிறது! எத்தனை கொடுமை இல்லையா கீதாஜி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
  9. //அக்னி நட்சத்திர சூட்டில் இந்த வெப்பத்தை எப்படி தாங்கப் போகிறார்// மனது நெகிழ்ந்து போனது ஸ்ரீராம். பாசமும் நேசமும் சொல்லித் தெரிவதில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
  10. //பேரினை நீக்கி பிணமென்று பெயரிட்டு// சித்தர் பாடல் - முழுவதும் படிக்கத் தோன்றுகிறது. தேட வேண்டும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
  11. //ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டு
   பேரினை நீக்கி பிணம என்று பெயரிட்டு
   சூரையங்காட்டிடை கொண்டு பொய் சுட்டிட்டு
   நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே//

   திருமூலரின் இந்தப் பாட்டை இப்போது தேடி மீண்டும் படித்தேன்.

   படம் எடுத்து வைத்துக் கொள்வது! சில சமயங்களில் நிழற்படம் எடுப்பது தவறாகப் பார்க்கப் படுகிறது. கிராமத்து வீடுகள் சிலவற்றில் அந்தச் சமயங்களில் கூட நிறைய படங்கள் ப்ரொஃபெஷனல் கொண்டு எடுப்பதைப் பார்த்திருக்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 5. காலை வேளையில் சோகமான நிகழ்வு. மனம் வேதனை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வேதனை தந்த நிகழ்வு தான் கீதாம்மா...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. என் தங்கை ரயிலில் காசிக்கு பயணம் செய்த போது ஒரு வய்தானவரும் அந்த பயணத்தில் கலந்து கொண்டவர் இறந்து விட்டார். தனியாக வந்து இருக்கிறார். ஊரில் இருக்கும் மகனுக்கு தகவல் தெரிவித்துவிட்டு வழியில் ரயில் நிலையத்தில் விட்டு விட்டு அவர்கள் பயணத்தை தொடர்ந்து விட்டார்கள்.

  ஸ்ரீராம் சொன்ன விஷயமும் மனதை கனக்க வைக்கிறது.

  //நள்ளிரவில் ஒரு தகப்பனை இழந்த ஒரு பெண்ணையும் வைத்துக் கொண்டு எவ்வளவு திண்டாடி இருப்பார்கள் அவர்கள்//

  நல்ல மனம் படைத்தவர்கள் விரைந்து உதவிகள் செய்து இருக்க வேண்டும் என்று நம்புவோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீண்ட நேர இரயில் பயணங்களில் இப்படியான நிகழ்வுகள் நடக்கும்போது ரொம்பவே சங்கடம் தான். அதுவும் தனியாக வந்தவர் இறந்தால் இரயில்வே துறையினர் அடுத்த பெரிய ஸ்டேஷனில் இறக்கி மார்ச்சுவரியில் வைத்து விடுவார்கள். அவர்கள் குடும்பத்தினர் வரும் வரை - அனாதை போல... எத்தனை கொடுமை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 7. ரொம்பவும் பரிதாப நிலை, மனிதநேய மற்ற மக்கள், உடல்நலமற்றவரை முதல் சிகிச்சையளித்தவர் CPR[Cardiopulmonary resuscitation] நிலமையை சொல்லி அருகாமையிலுள்ள ஸ்டேஷனில் இறங்கி விட்டிருந்தால் அங்கு சென்று எப்படியாவது காப்பாற்றி இருக்கலாம் அதைவிடுத்து நீன்ட தூரம் வந்தது தவறு. அந்த கூடவந்த பெண்ணின் நிலை பரிதாபம். யாருக்கும் இதுபோன்ற அவல நிலை வரக்கூடாது. சம்பவம் நேரில் பார்த்தமாதிரி கலக்கமாகவே உள்ளது. சக பயனிகளின் மனிதநேய மற்ற பேச்சு கண்டிக்க தக்கது, தனக்கென்று வரும்போதுதான் மனிதநேயம்மற்றவர்களுக்கு அடுத்தவர்கள் கஷ்டம் புரியுமோ என்னவோ!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //தனக்கென்று வரும்போது தான் மனித நேயம் மற்றவர்களுக்கு அடுத்தவர்கள் கஷ்டம் புரியுமோ என்னவோ!// இருக்கலாம் ரங்கராஜன் ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. மனதுக்கு சங்கடமான விஷயத்தை எழுதியிருக்கீங்க.

  உயிர் என்பது போனபிறகு அதனைச் சுமந்த உடலுக்கு மரியாதை இல்லையா? மிகவும் சங்கடமாக மனம் உணர்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //உயிர் என்பது போனபிறகு அதனைச் சுமந்த உடலுக்கு மரியாதை இல்லையா?// மரியாதை கொடுப்பது இல்லை என்பதே கொடுமையான உண்மை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 9. பதில்கள்
  1. வேதனை தான் கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 10. பதில்கள்
  1. வேதனை தான் தனபாலன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 11. சம்பவம் மனதை மிகவும் பாதித்துவிட்டது. மனித நேயம் நம்மில் குறைந்து வருவது வேதனையான விஷயம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //மனித நேயம் நம்மில் குறைந்து வருவது வேதனையான விஷயம்// சுடும் உண்மை இராமசாமி ஜி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 12. மிக மிக மனதை நொறுக்கிய வேதனையான நிகழ்வு. வாசிக்கும் எங்களுக்கே அப்படி என்றால் நேரில் பார்த்த உங்களுக்கு எப்படி இருந்திருக்கும்?!

  கடைசி வ்ரி உண்மை. மனிதம் மரித்துவிட்டது. அந்தக் குடும்பத்தினருக்கு எப்படி இருந்திருக்கும் இல்லையா? பாவம். தவித்திருப்பார்கள்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நேரில் பார்த்த போது ரொம்பவே சங்கடமாக இருந்தது கீதாஜி. எதுவும் செய்ய முடியாத சூழல்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 13. மனிதம் தொலைத்து வாழும் மனிதர்கள். மிகவும் வேதனையாக இருந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மனிதம் தொலைத்து வாழும் மனிதர்கள் - வேதனை தான் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 14. இங்கே மனிதம் மரணித்து விட்டது

  மிகவும் சோகமான சம்பவம்...

  வலி நிறைந்த பகிர்வு அண்ணா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மனிதம் மரணித்து விட்டது - பல சமயங்கள் இதை நிரூபித்துக் கொண்டே இருக்கிறது இவ்வுலகம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   நீக்கு
 15. காலனுக்கு ஏது நேரம் காலமெல்லாம் இந்த மாதிரி பயணத்தில்மரித்தவர்களை விட கூட வரும்சொந்தங்களுக்கே தொல்லை அதிகம் தவிர்க்க இயலாதது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலனுக்கு ஏது நேரம் காலமெல்லாம்.... அதானே!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு
 16. நடந்த நிகழ்வா இல்லை, கதையா, வெங்கட்?..

  ஒருவிதத்தில் பார்க்கப் போனால் நிகழ்வு--கதை இரண்டும் ஒன்று தான். நடப்பதை, பார்ப்பதைத் தானே கதையாக எழுதுகிறோம்?

  கதை எனில் பாராட்டுகள். யதார்த்த உணர்வு கொப்பளித்த கதை. நாமும் இரயிலில் பயணிப்பது போலவே இருந்தது. அடுத்தடுத்த ஸ்டேஷன்கள், பயணிகளின் வழக்கமான உபதேசங்கள், சட்ட கெடுபிடிகள்.. ஹூம்... ஒருவிதத்தில் பார்க்கப் போனால் இந்தக் கதையோ, நிகழ்வோ இப்படியெல்லாம் தான் நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கையையும் சொல்லிச் செல்கிறது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நடந்த நிகழ்வு தான் ஜீவி ஐயா.

   //இப்படியெல்லாம் தான் நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கையும் சொல்லிச் செல்கிறது// உண்மை தான். இப்படியும் நடக்கலாம் என்று நமக்கு ஒரு பாடம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 17. அன்பு வெங்கட், பரிதாபம் அந்த மனிதரின் இறுத்க்கட்டம். அனாதையாகிவிட்ட அந்தப் பெண்.
  முதலுதவி செய்த அந்த மனிதருக்கு நன்றி.\

  என் கணவரின் இறுதி நேரம் , பக்கத்து ஹாஸ்பிட்டலின் ஊழியர்கள் அவரைக் கொஞ்சம் கூடக் கவனில்லாமல் ஸ்ட் ரெச்சரில் எடுத்துப் போட்டது. ஊசலாடிய கையை நாந்தான் எடுத்து ஸ்டே ரச்சரில் வைத்தேன்.
  நொடியில் மாறிவிட்ட அவரின் நில்மை என்னை அதிர வைத்ததுஎன்னவோ பணம் கொடுத்தேன். ஐஸ் பாக்ஸ் வரவழைத்தேன். கண்முன்னே மலர்ந்த முகத்தோடு அவர் படுத்திருக்க,வந்தவர்களிடம் உளறிக்கொண்டிருந்தேன்.

  மரணத்துக்குப் பின்னால் விடப்பட்டவர்களின் சோகம்
  அளக்க முடியாது.
  அவரது சகோதரியும் ,என் தம்பி மனைவியும் இறுதி வரை கூட இருந்தார்கள்.
  இப்பொழுதும் நெஞ்சடைக்கிறது.
  ஆனால் இந்தப் பயணம் வெங்கட்டின் அனுபவம் இன்னும் துயரம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //மரணத்துக்குப் பின்னால் விடப்பட்டவர்களின் சோகம் அளக்க முடியாது// உண்மை தான் வல்லிம்மா... கொடும் சோகம். ஆனால் அதையும் கடந்து வர வேண்டியிருக்கிறது - நமக்காகவும் நம் சொந்தங்களுக்காகவும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 18. அம்மாவின் எரியூட்டலுக்கு தம்பியுடன் நானும் சென்றேன்.
  அக்னி பகவான் அம்மாவின் பாதங்களை விழுங்கிய அந்த
  நேரம் மனம் புரண்டுவிட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. /அக்னி பகவான் அம்மாவின் பாதங்களை விழுங்கிய அந்த நேரம்/ கஷ்டம் தான் வல்லிம்மா...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 19. வேதனை தரும் நிகழ்வு. மறந்திருந்த கடவுள் இந்த மாதிரி சமயங்களில் அதிகம் நினைவுக்கு வருகிறார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மறந்திருந்த கடவுள் - மறைந்திருந்த கடவுள்! என்ன சொல்ல பத்மநாபன் அண்ணாச்சி! இப்படியா நினைவுக்கு வர வேண்டும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 20. இறந்த உடலை 15 மணிநேரத்துக்கு ரயிலில் வைத்திருப்பது நோய்த்தொற்று உண்டாக வாய்ப்பு அதிகம்தான், ரயில்வே காவலர் சொன்னது மிகச்சரிதான். அவங்கக்கிட்ட பைசா இருந்துச்சுன்னா விசாரிச்சு ஆளுக்கு கொஞ்சம் பைசா கொடுத்து வண்டி ஏற்பாடு செய்திருக்கலாம். அதுமட்டுமே அந்த நேரத்தில் செய்திருக்க/ செய்ய வேண்டிய உதவி.

  மனிதம் மரித்து ரொம்ப நாள் ஆச்சுதுண்ணே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மனிதம் மரித்து ரொம்ப நாள் ஆச்சுதுண்ணே... உண்மை தான் ராஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 21. இறந்தவரின் குடும்ப நிலையில் சற்று நம்மை நிறுத்தி பார்க்க வேண்டும் ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்த இடத்தில்/நிலையில் தன்னை வைத்துப் பார்க்க யாரும் யோசிப்பதில்லையே.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

   நீக்கு
 22. மிகவும் வேதனையான சம்பவம். கூட உறவினர்கள் இருக்கும் போதே இப்படியான நிலைமை என்றால் வயதான காலத்தில் தனியாகப் பயணம் செய்வோருக்கு ஏதேனும் நிகழ்ந்தால்? அல்லது அவசர சிகிச்சை வேண்டி வந்தால்? அவஸ்தை மிகவும் வேதனைக்குரியது என்றே தோன்றுகிறது.

  பாவம் அந்தக் குடும்பம். எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள் என்பதை நினைக்கும் போதே மனது வேதனை அடைகிறது. மனதை மிகவும் வருத்தியது

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வேதனையான சம்பவம் தான் துளசிதரன் ஜி! ரொம்பவே கடினமான ஒரு நிகழ்வு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 23. மிகவும் வேதனை தரும் நிகழ்வு. என் பெரிய நாத்தனாரும், இரண்டாவது அத்தையும் ரயில் பயத்தில்தான் உயிர் நீத்தார்கள். சென்னையிலிருந்து டெல்லி சென்று கொண்டிருந்த அத்தை வழியில் இறந்துவிட, இறக்கிவிடப்பட்ட ஒரு கிராமத்தில் அத்தையின் இறுதிச் சடங்குகளை செய்து விட்டு வந்தான் அத்தை மகன்.
  நாத்தனார் மும்பையிலிருந்து முன்னாருக்கு கணவர், மகன் அவனது குழந்தைகளோடு பயணப்பட்டுக் கொண்டிருந்தார். வண்டி ஒரு ஸ்டேஷனை விட்டு நகரத்தொடங்கியவுடன் அவரது உயிர் பிரிந்திருக்கிறது. கிட்டத்தட்ட நீங்கள் விவரி த்திருக்கும் அதே சூழல், அடுத்த சிறிய ஸ்டேஷனில் அவுட்டரில் வண்டி நின்றுவிட, கொட்டும் மழையில் உடலை இறக்கி, போஸ்ட்மார்ட்டத்திற்கு அனுப்பி, மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார்கள். பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை என்றாலும் இம்மாதிரி முடிவுகள் மிகவும் வேதனை அளிக்கக்கூடியது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை// உண்மை தான். உங்கள் உறவினருக்கு நேர்ந்ததும் வருத்தம் தந்தது - ரொம்பவும் கொடுமையான விஷயம் இப்படி ஆவது. அதிலிருந்து மீண்டு வருவது சவாலான விஷயம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதிம்மா...

   நீக்கு
 24. பதில்கள்
  1. கொடுமை தான் உண்மையானவன்....

   இப்பதிவுக்கான மறுமொழிகளுக்கு இன்றைக்கு தான் பின்னூட்டம் இடமுடிந்தது. இத்தனை நாள் விடுபட்டுப் போனது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....