திங்கள், 15 ஏப்ரல், 2019

இரயில் பயணங்களில்… – இப்ப நிறுத்தப் போறியா இல்லையா…


படம்: இணையத்திலிருந்து...

”இப்ப நிறுத்தப் போறியா இல்லையா?” என்ற கோபமான பெண் குரல் அரைகுறை தூக்கத்தில் இருந்த என்னை விழிக்க வைத்தது. யாரை சொல்றாங்க? எதை நிறுத்தச் சொல்றாங்க என்று புரியாமல் மலங்க மலங்க விழித்தேன்.
 
பொதுவாகவே இரயில் பயணங்களில் இரவு நேரம் தூங்குவது என்பது என்னால் முடியாத ஒன்று. பல இரவுகள் தூங்காமலேயே இருந்திருக்கிறேன். நிம்மதியான உறக்கமாக இல்லாமல் ஒரு கொசுத் தூக்கம். அவ்வப்போது விழிப்பு வந்து விடும். ப்ரயாக்ராஜ் நகரிலிருந்து தில்லி திரும்பும் சமயம் ஹம்சஃபர் எக்ஸ்பிரஸில் தான் பயணம். எங்கள் குழுவில் ஏழு பேர் – ஆறு பேருக்கு ஒரு பெட்டியும், எனது இரு[படு]க்கை வேறு பெட்டியிலும். வண்டி ப்ரயாக்ராஜ் நகரிலிருந்து புறப்படும் முன்னர் சிறிது நேரம் வரை குழுவினருடன் பேசிக் கொண்டு இருந்து விட்டு என் இடத்திற்குச் சென்று படுத்துக் கொள்ளலாம் எனச் சென்றேன். எனக்குக் கிடைத்த இரு[படு]க்கை கீழே இருந்தது. என்னைத் தவிர மற்றவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்தவர்கள். ஹரியானா காரர்கள்.

அவர்களில் இரு மூதாட்டிகள். ஒரு மூதாட்டியின் மகன், மருமகள், பேரன் மற்றும் பேத்தி! மொத்தம் ஆறு பேர். உள் பக்கத்தில் நான்கு இரு[படு]க்கைகளும், பக்கவாட்டில் இரண்டு இரு[படு]க்கைகளும் அவர்களுக்குக் கிடைத்திருந்தது. நான் அங்கே சென்று சேர்ந்தேனோ இல்லையோ, எனது இடம் எது எனக் கேட்கும்போதே என்னை மாற்றிக்கொள்ளச் சொல்லப் போகிறார்கள் எனப் புரிந்தது. எனது கீழ் இரு[படு]க்கையை மூதாட்டியில் ஒருவருக்குக் கொடுத்து விட்டு, என்னை பக்கவாட்டு படுக்கைக்கு மாற்றிக் கொள்ள முடியுமா எனக் கேட்டார்கள். பக்கவாட்டு இருக்கை உயரத்தின் காரணமாக எனக்கு ஒத்து வராது எனச் சொல்லி மேலே Upper Berth மாற்றிக்கொள்கிறேன் எனச் சொல்ல, உடனேயே, “மேலே போ, மேலே போ!”  எனச் சொல்ல ஆரம்பித்து விட்டார் மூதாட்டியின் மருமகள்!

அட கொஞ்சம் இரும்மா, நான் “மேலே” போக இன்னும் நேரம் வரவில்லை! இரயில் புறப்பட்டதும் இரயிலின் Upper Berth-க்கு சென்று விடுவேன் என்று சொல்ல, மூதாட்டியில் ஒருவர் அவரது ஹர்யான்வி மொழியில் என்னுடன் பேச ஆரம்பித்தார். நான் ஹிந்தியில் பதில் சொல்லிக் கொண்டு இருந்தேன். சிறிது நேரத்தில் சொன்னபடியே சென்று உறங்க முயற்சித்தேன். ஹர்யான்வி குடும்பத்தினர் அவரவர்களுக்கான படுக்கைகளில் படுப்பதற்குள் எத்தனை சப்தம் செய்ய முடியுமோ அத்தனை சப்தம் செய்தார்கள். குழந்தைகள் வேறு பயணிகளின் குழந்தைகளோடு தலையணை சண்டை வேறு போட்டார்கள். மருமகள் அனைத்து குழந்தைகளையும் ஒரு மிரட்டல் போட்டு அமைதியாக்கினார். பொதுவாகவே ஹர்யான்விகள் பேசுவதே மிரட்டல் போல இருக்கும் எனும்போது அவர்கள் மிரட்டினால்! குழந்தைகள் கப்சிப் – சில பெரியவர்களும்!


அவர்களது நான்கு இரு[படு]க்கைகள், என்னுடையது ஒன்று தவிர ஆறாவது இரு[படு]க்கைக்கு வந்தவரை நான் பார்க்கவில்லை. அவருக்குக் கிடைத்தது ஒரு மிடில் பெர்த்! அந்த மனிதரிடம் தான் இந்த ஹர்யான்வி மருமகள் இரவு பன்னிரெண்டு மணிக்கு மேல் “இப்ப நிறுத்தப் போறியா இல்லையா?” என்று சப்தமாகக் கேட்டுக் கொண்டிருந்தார். விழித்து எழுந்த நானும் என்ன நடக்கிறது என்று பார்த்துக் கொண்டிருந்தேன். விஷயம் இது தான். நடு படுக்கைக்கு வந்த மனிதர் தன்னை மறந்து உறக்கத்தில் குறட்டை விடுகிறார். குறட்டை விடுவதோ அல்லது அதை நிறுத்துவதோ அவர் கையில் இல்லையே! “இத்தனை நேரம் நீ நல்ல குறட்டை விட்டுத் தூங்கிவிட்டாய், இனிமேல் நீ தூங்காதே… எங்களை தூங்க விடு!” என்று அந்தப் பயணியிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தார் பெண்மணி!
அந்தப் பெண்மணியின் கணவன் நல்ல உறக்கத்தில் இருக்க/அல்லது உறங்குவது போல நடிக்க, பெண்மணி ரகளை செய்து கொண்டிருந்தார். பாவம் அந்தப் பயணி. ஒரு வார்த்தை பேசவில்லை. எப்படியாவது அவரை உறக்கத்திலிருந்து எழுப்பி விட்டு விட வேண்டும் என, எங்கள் பை ஒன்று உங்கள் தலைமாட்டில் இருக்கிறது, அதை எடுத்து கீழே வையுங்கள் எனச் சொல்லி, அவரும் அதை எடுத்து வைப்பதற்காக இறங்கிய பின்னர், பெண்மணி “கீழே வைத்து விட்டு முகம் கழுவிக் கொண்டு வாருங்கள், நீங்கள் குறட்டை விட்டால் எங்களால் தூங்க முடியவில்லை!” என்று சொல்லி, இனிமேலாவது எங்களைத் தூங்க விடுங்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்தப் பயணி பாவம். ஒன்றுமே சொல்லவில்லை.

மீண்டும் தன் படுக்கையில் படுத்துக் கொண்டு புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தார். உறக்கம் வந்தாலும் புரண்டு கொண்டே இருந்தார் – குறட்டை விட்டால் அந்தப் பெண்மணி ஏதும் செய்து விடுவாரோ என பயம் வந்து விட்டது போலும்! குறட்டை விடுவது ஒரு தப்பாய்யா… நான் வேணும்னா குறட்டை விடறேன், அதுவா வருது… நான் என்ன பண்ண முடியும்? என்று சிந்தித்தபடியே இருந்திருப்பார் என நான் சிந்தித்தேன். விட்டால் மூக்கையும் வாயையும் க்ளிப் போட்டு அடைத்து விடுவாரோ என்று தோன்றியது!  கூடவே இன்னுமொரு நினைப்பும் வந்தது! அந்தப் பெண்மணியின் கணவர் இப்படி குறட்டை விட்டால் என்ன செய்வார் பெண்மணி என நினைக்க, மேலே படுத்திருந்த பெண்ணின் கணவர் பாவம் என்று தோன்றியது!

இரயிலில் பயணித்த, அவருக்குத் தெரியாத ஒரு மனிதரையே இப்படி மிரட்டினால், கணவர் கதி என்னவாகும்? “ணங்க்” கென்று ஒரு கொட்டு வைத்து எழுப்பி உட்கார வைத்து விடுவாரோ? ஹாஹா… இப்படியும் சிலர்! என்ன சொல்ல!

நாளை மீண்டும் சந்திப்போம்… சிந்திப்போம்…


நட்புடன்

வெங்கட்
புது தில்லி

28 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் மற்றும் விஷு வாழ்த்துகள் வெங்கட்ஜி!

  ஆரம்ப வரியே பயமுறுத்துதே ஹா ஹா ஹா ஹா...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம் கீதாஜி. உங்களுக்கும் துளசிதரன் ஜிக்கும் விஷு வாழ்த்துகள்.

   ஆரம்ப வரி - ஹாஹா... எனக்கும் கொஞ்சம் பயமாகத் தான் இருந்தது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
 2. இரயிலில் பயணித்த, அவருக்குத் தெரியாத ஒரு மனிதரையே இப்படி மிரட்டினால், கணவர் கதி என்னவாகும்? “ணங்க்” கென்று ஒரு கொட்டு வைத்து எழுப்பி உட்கார வைத்து விடுவாரோ? ஹாஹா…//

  ஹா ஹா ஹா ஹா...

  வேறு ஒருவரையே அதுவும் பொது இடத்தில் இந்த மிரட்டு மிரட்டுபவர் வீட்டில் கணவரிடம் எப்படி பேசுவார் என்று நினைத்து ஒரு நிமிடம் எனக்குத் திக் என்றிருந்தது!! ஹா ஹா ஹா

  இப்படியும் சிலர் இருக்காங்கதான் ஜி.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடங்கி இருப்பதே அவருக்கு - நான் கணவரைச் சொன்னேன் - நல்லது! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

   நீக்கு
 3. அந்த கணவர் தினம் தினம் என்னென்ன துன்பங்கள் படுகிறாரோ...?

  வீட்டில் தனிப் படுக்கை தான்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தினம் தினம் என்னென்ன துன்பங்கள் படுகிறாரோ? ஹாஹா.... யாமறியேன் பராபரமே... அவரேயன்றி யாரறிவார்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 4. இப்படிப் பலரைப் பார்த்திருக்கிறேன்...

  ஆனாலும் தங்கள் கைவண்ணம் நெஞ்சில் பயத்தை உண்டு பண்ணியது...

  இத்தகையோரிடமிருந்து கடவுள் தான் காக்க வேண்டும் - இரயில் பயணத்தை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கடவுள் தான் காக்க வேண்டும்! அதே அதே...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   நீக்கு
 5. குறட்டையிலேயே ராக, பேதங்கள், ஏற்ற இறக்கங்கள், ஆரோஹண அவரோஹணங்களைக் கண்டு பிடித்துக் கொண்டிருந்தால் பொழுது போயிடும். காலம்பரயும் ஆயிடும். அந்தப் பெண்மணி ரசனையே இல்லாதவர் போல! எங்க வீட்டுக்கு வந்த உறவின் முறை இளைஞர் ஒருவர் விட்ட குறட்டையால் எங்க வீட்டுக் கூடமே எதிரொலியால் நடுங்கியது. இப்போ நினைத்தாலும் சிரிப்போம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குறட்டையுடன் எதிரொலியும் சேர்ந்து கொண்டால்! ஹாஹா. செமயா இருக்கும். ஒரு சமயம் இரண்டு நண்பர்களுடன் இராத் தங்கல் - தவிர்க்க முடியாமல்! இரண்டு பேரும் மாற்றி மாற்றி விட்ட குறட்டையில் நான் இராத்திரி முழுவதும் உறங்கவில்லை! புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தேன். காலையில் இருவரும் சொன்னார்கள் - “நல்லா தூங்கினீங்களா, இங்கே நல்ல உறக்கம் வரும் தெரியுமா?”... ஹாஹா..

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 6. இப்படியும் சிலர்
  விரைவில் அவரது கணவர் குறட்டை விடத் தொடங்கட்டும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா... நல்ல விஷயம் - கணவர் குறட்டை விடத் தொடங்கட்டும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
  2. அப்புறம் டிடி சொன்ன மாதிரியாகிவிடும்...

   நீக்கு
  3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   நீக்கு
 7. குறட்டை இதை தவிர்க்க பலராலும் இயல்வதில்லை என்ன செய்வது பாவம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாவம் தான். குறட்டையை அடக்குவது அவர் கையில் இல்லையே!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 8. நானும் இந்த மாதிரி குறட்டை அனுபவங்களை வெளியிடங்களில் தூங்கும்போது அனுபவித்திருக்கிறேன் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெரும்பாலானவர்கள் அனுபவித்திருக்கக் கூடும். ஆனால் இப்படி மிரட்டி இருக்க மாட்டோம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   நீக்கு
 9. குறட்டையை தவிர்க்க முடியாது.
  அந்த அம்மாவின் கோபத்திற்கு குறட்டை விடுபவர் விழித்து தான் இருக்க வேண்டும் பாவம் மனிதர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்த இரவில் அம்மனிதரை பார்க்க பாவமாக இருந்தது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 10. தெரியாத ஒரு மனிதரையே இப்படி மிரட்டினால், கணவர் கதி என்னவாகும்?.... நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம், அப்பெண்ணின் கணவர் நிலை நினைக்கும்போதே கலக்கம் தான்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 11. சிலர் ரயிலில் சப்தத்தை விட அதிகமாக குறட்டை விடுவதால் இரவு பாதுகாப்பு அதிகம். ஏனெனில் குறட்டை சத்தத்தில் தூக்கம் வராதவர்கள் எல்லாம் செக்யூரிட்டி டூட்டி பாப்பார்கள்.

  //அந்தப் பெண்மணியின் கணவன் நல்ல உறக்கத்தில் இருக்க/அல்லது உறங்குவது போல நடிக்க...// இதிலென்ன சந்தேகம். அவரும் நம்மைப் போலத்தானே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. செக்யூரிட்டி ட்யூட்டி பார்க்க நல்ல ஆள் கிடைத்தார்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   நீக்கு
 12. வீட்டை விட்டு வெளியில் வந்தால் நாலும் நடக்கலாம்ன்னு சொல்வாங்க.


  அதை அந்த பெண்மணிக்கு யாராவது எடுத்து சொல்லி வளர்த்திருக்கலாம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பொதுவாக ஹரியானக்காரர்கள் பேசுவது கொஞ்சம் கடுமையாகவே இருக்கும். பேச்சு விதமே அப்படிதான். இந்தப் பெண்மணி கொஞ்சம் ஓவர்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   நீக்கு
 13. மிகவும் ரசிக்கும்படியான சம்பவங்கள். உங்கள் சொற்கள் அந்த சம்பவங்களை இன்னும் அழகாக அலங்கரித்திருக்கின்றது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி!

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....