சனி, 6 ஏப்ரல், 2019

காஃபி வித் கிட்டு – குழலோசை – விஸ்டாடோம் – அவன் வேற ஆள் – ஹோலியும் சரக்கும்


சுடச்சுட Gகுஜியா சாப்பிடலாம் வாங்க!

காஃபி வித் கிட்டு – பகுதி – 27


இந்த வாரத்தின் இசை:

இப்போதெல்லாம் நிறைய Instrumental Music நிறைய கேட்கிறேன். ஹரிபிரசாத் சௌராசியா, ரமணி, கன்யாகுமரி, கத்ரி கோபால்நாத், என பலரையும் கேட்டுக் கொண்டு இருக்கிறேன். பின்னணியில் மெல்லிய இசை ஒலிக்க வேலை செய்வது பிடித்திருக்கிறது. அலுவலகத்திலும் இணையம் வழி இப்படி புல்லாங்குழல் ஒலிக்க வேலை செய்ய ஆரம்பித்த பிறகு கொஞ்சம் அமைதி கிடைத்திருக்கிறது. இந்த நாளை, ராஜேஷ் சேர்த்தலாவின் ஒரு இனிமையான புல்லாங்குழலின் இன்னிசையோடு துவக்கலாம். பின்னணியில் குழல் ஒலிக்க வைத்து பதிவினை தொடர்ந்து படிக்கலாம் வாருங்கள்!ராஜா காது கழுதைக் காது – அவன் வேற ஆளு!

இப்போதெல்லாம் சில தமிழர்களை தலைநகரில் பார்க்க முடிகிறது. நம் ஊரிலிருந்து இங்கே வரும் தமிழர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விட்டது. சில நாட்களுக்கு முன்னர் சாலை வழி நடந்து வந்து கொண்டிருந்த போது இரண்டு பெண்கள் என்னை எதிர் கொண்டு வந்து கொண்டிருந்தார்கள் – தமிழில் பேசிக் கொண்டு சென்றார்கள்! அட… பரவாயில்லையே, நம் ஏரியாவில் இன்னும் சில தமிழர்கள் வந்து இருக்கிறார்கள் போலவே, என்ற எண்ணத்துடன் பேசுவதை கவனித்தேன் [ஒட்டுக் கேட்டேன்!] அவர்கள் சம்பாஷணை யாரோ ஒரு ஆண்மகனை பற்றியதாக இருந்தது – அதுவும் சினிமா/சீரியல் பற்றியதாக இருந்தது! “யேய்… அது வேற ஆள்பா, அது அமலா பால் புருஷன். இது வேற ஆளு!” என்னைக் கடந்த போது இந்த வாசகத்தினைக் கேட்ட பிறகு, புன்னகையுடன் கடந்து மனதில் ஓடும் சிந்தனைகளோடு என் போக்கில் நடந்தேன்! சினிமா/சீரியல் டிஸ்கஷன்ஸ் – சீரியஸ் டிஸ்கஷனாக எங்கும்!

வாட்ஸப்பில் ரசித்த வாசகமும் அதன் தாக்கமும்:

சமீபத்தில் ஒரு வாசகம் படிக்க நேர்ந்தது. கல்லூரி நண்பர் குழுவில் பகிர்ந்து இருந்தார். அதன் தாக்கத்தில் நான் எழுதியது கீழே!

“அமைதியான சூழலில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது அந்த நூலகம். நூலகர் பார்வை நான்கு புறமும் ஓடியது – வாசகர்களைக் கவனித்தபடியே இருக்க வேண்டியிருக்கிறதே – புத்தகங்களை சரியாக பயன்படுத்துகிறார்களா, சுட்டு விடுகிறார்களா என்பதையெல்லாம் கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும்! [நெய்வேலி நூலகத்தில் இருந்த இராகவன் எனும் நூலகர் நினைவுக்கு வருகிறார் – சிறு வயதில் எங்களுக்கு அவரைப் பார்த்தால் கொஞ்சம் நடுக்கம் வரும்! அவ்வளவு கண்டிப்பானவர்] “அட யாருப்பா அது, சோகமான முகத்துடன் ஒருவர் நம்மை நோக்கி வருகிறாரே… இவருக்கு என்ன புத்தகம் வேண்டுமோ?” என்ற எண்ணத்துடன் அவரை எதிர் கொள்கிறார் நூலகர்! வந்தவர் கேட்ட புத்தகம், நூலகரை கொஞ்சம் அதிர வைத்தது.  “தற்கொலை செய்து கொள்வது எப்படி?” என்ற புத்தகம் கிடைக்குமா என்பது தான் கேட்கப்பட்ட கேள்வி! சற்றே சீரியஸான முகத்துடன் நூலகர் கேட்ட எதிர் கேள்வி…

“புஸ்தகத்தினை யார் திருப்பி தருவார்கள்?”

படித்ததில் பிடித்தது – நூறு ஒட்டகங்கள்:

"ஓடிக்கொண்டே இருக்கிறேன். பல பிரச்சனைகள். வீட்டில், தெருவில், ஊரில், வேலை செய்யும் இடத்தில் என எங்குமே பிரச்சனைகள். தூங்கமுடியவில்லை. எனக்கு ஒரு தீர்வு சொல்லுங்கள்" என்றவாறே முனிவரின் முன்பாக நின்றிருந்தான் அவன். அப்போது மாலை நேரம்.

முனிவர் அவனிடம் "தோட்டத்திற்கு சென்று ஒட்டகங்கள் என்ன செய்து கொண்டு இருக்கின்றன என பார்த்துவிட்டு வா" என்றார். சென்றவன் திரும்பி வந்து, "100 ஒட்டகங்களும் நின்றுகொண்டு இருக்கின்றன" என்றான். "நல்லது. அந்த 100 ஒட்டகங்களும் தரையில் படுத்தவுடன் அங்கே இருக்கிற ஓய்வறையில் நீ படுத்து தூங்கிவிட்டு காலையில் திரும்பி வா" என்றார். "சரி அய்யா" என்றவாறு தோட்டத்திற்கு போனவன் கண்களில் தூக்கமின்றி களைப்புடன் காலையில் திரும்பி வந்து "அய்யா. இரவு முழுவதும் தூங்கவே இல்லை" என்றான்.

"என்ன ஆச்சு?" என்றார் முனிவர். "சில ஒட்டகங்கள் தானாகவே தரையில் படுத்துவிட்டன. சில ஒட்டகங்களை நான் மெனக்கெட்டு படுக்கவைத்தேன். ஆனால் அனைத்து ஒட்டகத்தையும் படுக்கவைக்க முடியவில்லை. சிலது படுத்தால் சிலது எழுந்து கொள்கின்றன. அனைத்து ஒட்டகத்தையும் ஒட்டுமொத்தமாக படுக்கவைக்க முடியவில்லை. அதனால நான் தூங்குவதற்கு போகவே இல்லை" என்றான்.

முனிவர் சிரித்தபடியே "இதுதான் வாழ்க்கை. வாழ்க்கையில் பிரச்சனையை முடிப்பது என்பது ஒட்டகத்தை படுக்க வைப்பது போன்றது. சில பிரச்சனைகள் தானாக முடிந்துவிடும். சிலவற்றை நாம் மெனக்கெட்டு முடித்துவிடலாம். ஆனால் சில பிரச்சனைகள் முடிந்தால் வேறு சில பிரச்சனைகள் புதிகாக எழலாம். அனைத்து பிரச்சனையும் முடிந்தால்தான் நிம்மதியாக தூங்குவேன் என்றால் இந்த உலகத்தில் யாராலும் தூங்கமுடியாது. பிரச்சனைகள் அனைத்தும் எப்போது முடியும் என கவலைப்பட்டுக் கொண்டே இருக்காதே. தீர்க்கமுடிந்தவற்றை தீர்த்துவிட்டு, மற்றவற்றை காலத்தின் கைகளில் ஒப்படைத்துவிட்டு உனக்கான ஓய்வறையில் நிம்மதியாக இருக்க கற்றுக்கொள்" என்றார். முனிவரை வணங்கிவிட்டு சென்றவன் சிலநாள் கழித்துவந்து முனிவரிடம் "சில ஒட்டகங்கள் படுக்கவில்லை என்றாலும் நான் நிம்மதியாக படுத்து உறங்குகிறேன்" என்றான். வாழ்வில் பிரச்சனைகள் என்பது நூறு ஒட்டகங்கள் போன்றது. அனைத்தும் ஒரே நேரத்தில் படுப்பதற்கான வாய்ப்பு குறைவே. ஒவ்வொன்றும் படுப்பதற்கான காலம் உள்ளது. அப்படியே நமக்கான பிரச்சனைகள் தீர்வதற்கான காலமும் உள்ளது. ஆகவே சிலவற்றை காலத்தின் கரங்களில் ஒப்படைத்துவிட்டு, வாழ்வை அமைதியாக அனுபவிப்போம்.

விஸ்டாடோம் – பயணத்தினை இனிமையாக்கும் இரயில் பெட்டிகள்:இரயில் பயணம் யாருக்குத் தான் பிடிக்காது? மலைப்பகுதிகள், பாதை முழுவதும் இருக்கும் அருவிகள், இயற்கைக் காட்சிகள் என பார்த்தபடியே பயணிப்பது மிகவும் ரம்மியமான விஷயம்! ஆனால் இருக்கும் ஒரு சில ஜன்னலோர இருக்கைகள் நமக்குக் கிடைத்தால் மட்டுமே நன்கு ரசிக்க முடியும்! இரயிலில் இருக்கும் அனைவரும், பாதையில் இருக்கும் இயற்கை அழகை இரசிக்க முடியாது அல்லவா! அந்த கவலை சில இரயில்களில் இனி இல்லை!

குறிப்பாக விசாகப்பட்டினம்-அரக்கு இரயில், கால்கா-ஷிம்லா இரயில், மும்பையிலிருந்து கொன்கன் வழிசெல்லும் ஒரு இரயில் ஆகிய இரயில்களில் இப்போது விஸ்டாடோம் என அழைக்கப்படும் பெட்டிகளை இணைத்து இருக்கிறார்கள் – இப்படி picturesque பாதைகளில் ஓடும் இரயில்களில் இப்படியான பெட்டிகளை இணைக்க ஆரம்பித்து இருப்பது மிகவும் பாராட்டுக்குரிய விஷயம். சாதாரண பெட்டிகள் போல அல்லாது பெரிய ஜன்னல்கள், கண்ணாடி மேற்கூரைகள் கொண்ட பெட்டிகளாக இருக்கின்றன என்பதால் அனைவரும் இயற்கை அழகை ரசித்தபடியே பயணிக்கலாம்! இது ஒரு நல்ல விஷயம். பாராட்டப்பட வேண்டிய விஷயம்! முடிந்தால் இப்படி ஒரு பெட்டியில் பயணிக்க வேண்டும்!

இந்த வாரத்தின் சாலைக் காட்சி:

சமீபத்தில் தான் ஹோலி பண்டிகை முடிவடைந்தது. ஹோலி ஸ்பெஷலான Gகுஜியா வாங்கலாம் என ”கலேவா” இனிப்பகத்திற்குச் சென்றேன். ஒரு கிலோ நானூறு ரூபாய்க்கு விறுவிறுவென விற்றுக் கொண்டிருந்தார்கள் கடையில் – நிறைய கூட்டம். பெட்டிபெட்டியாக வாங்குபவர்கள் வரிசையில் நானும் சேர்ந்தேன். வாங்கிக் கொண்டு வரும் வழியில் தில்லி அரசு நடத்தும் சரக்குக் கடைகள்! ஏதோ இலவசமாகத் தருவது போல சரக்கு வாங்க நிற்கும் கூட்டம் இனிப்பான Gகுஜியாவை வாங்க நின்ற கூட்டத்தினை விட அதிகமாக இருந்தது! அடுத்த நாள் ஹோலி அன்று கடை வேறு விடுமுறை! அதனால் முதல் நாளே வாங்கி வைக்க வேண்டுமென்பதால் அத்தனை கூட்டம் அங்கே! அமாவாசையும் வாழைக்காயும் போல ஹோலியும் சரக்கும் பிரிக்க முடியாதவை ஆயிற்றே!

இதே நாளில் – பின்னோக்கிப் பார்க்கலாம்:

வலைச்சர ஆசிரியராக இருந்த வாரம் – எனக்கும் வாய்ப்பளித்த சீனா ஐயா இன்று நம்மிடையே இல்லை! வலைச்சர ஆசிரியராக இருந்த போது, இந்த வலைப்பூவிலும், வலைச்சரத்திலும் தினம் தினம் பதிவுகள் எழுதியது நினைவில்! அப்படி இந்த வலைப்பூவில் இதே நாளில் 2012-ஆம் ஆண்டு எழுதிய ஒரு பதிவு…


என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

46 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!

  முதல் படம் பார்த்ததும் மாவடு போல இருந்தது ஹா ஹா ஹா ...குஜியா!!! பார்க்கிறேன்.

  நானும் இப்போது இன்டெர்னாஷனல் இசை கேட்கத் தொடங்கியிருக்கிறேன் ஜி. இப்பத்தான். இதற்கு முன் நம் இந்திய இசை..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸாரி வெங்கட்ஜி. இன்ஸ்ட்ருமென்டல் என்பதை இன்டெர்னாஷனல் என்று தவறுதலாக வாசித்துவிட்டேன்....வெங்கட்ஜி....அது கம்ப்யூட்டர் திரை வேறு டக்கென்று மேலும் கீழும் ஜம்ப் ஆனது ! அட நம்ம வெங்கட்ஜி ஏதோ ஒரு இசை பகிர்ந்திருப்பார் அதான் இப்படி டான்ஸ் ஆடுதுனு! நினைச்சேன்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

   கீதா

   நீக்கு
  2. காலை வணக்கம் கீதாஜி!

   ஹாஹா... மாவடு மாதிரியா இருந்தது! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
  3. ஆஹா டான்ஸ் ஆடுகிறதா தளமும்? சில சமயங்களில் இப்படி சில தளங்கள் ஆடுகிறது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

   நீக்கு
 2. வெங்கட்ஜி! நீங்கள் கேட்கும் கலைஞர்கள் சூப்பர். ஜெயந்தி குமரேஷ் வீணை ரொம்ப நல்லாருக்கும். அது போல மாண்டலின் ஸ்ரீநிவாஸ், அக்கரை சுப்புலஷ்மி வயலின்....சிட்டிபாபு, ராஜேஷ் வைத்யா நல்லாருக்கும் ஜி.

  ராஜேஷ் சேர்த்தலா ரொம்ப நன்றாக வாசிப்பார் காணொளி அப்புறம் கேட்கிறேன்..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புல்லாங்குழல் கேட்க அமைதி கிடைத்திருக்கிறது//

   ஆஹா உண்மை ஜி இங்கு பட்டாசு வெடிக்கும் சமயம் நம் செல்லம் மிகவும் டென்ஷன் ஆவாள். ரெஸ்ட்லெஸ்ஸா அங்குமிங்கும் போவாள்.....அப்போது புல்லாங்குழல் இசை போட்டுவிட்டால் அப்படியே அமைதியாகிப் படுத்துவிடுவாள். உடம்பு நடுங்கல் ரெஸ்ட்லெஸ்னெஸ் அடங்கிவிடும்.

   கீதா

   நீக்கு
  2. ராஜேஷ் சேர்த்தலாவும் கேட்டுக் கொண்டிருக்கிறேன். இன்னும் சில இளைஞர்கள் மிகச் சிறப்பாக வாசிக்கிறார்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

   நீக்கு
  3. வெடிச் சப்தத்தில் செல்லங்கள் படும் அவதி... மனதில் வேதனை தான்.

   குழலோசை மனதுக்கு அமைதி....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

   நீக்கு
 3. படித்ததில் பிடித்தது மிகவும் நல்ல தத்துவம். பிடித்தது!

  ரயில் ரொம்ப அழகாக இருக்கிறது. ஷிம்லா டு கால்கா ரயில் மோட்டர் காரில் பயணித்திருக்கிறேன் முழுவதும் கண்ணாடிதான். என்றாலும் மீண்டும் பயணிக்க வேண்டும். இதைப் பார்த்ததும் தோன்றிவிட்டது. குறிப்பாக கொங்கன்.

  சீனா ஐயா வலைப்பூ வாசித்ததுண்டு. நம்மிடையே இல்லை என்பது வருத்தம்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கும் இந்த விஸ்டாடோம் இரயில் பெட்டியில் பயணிக்க ஆசையுண்டு! நேரமும் வாய்ப்பும் கிடைத்தால் பயணிக்க முடியும்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
  2. நூலகர் பதில் ரசித்தேன் இதை நேற்று சொல்ல விட்டுப் போனது.

   கீதா

   நீக்கு
  3. தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

   நீக்கு
 4. குட்மார்னிங்.

  புல்லாங்குழல் சாஸ்திரிய இசை போலில்லாமல் தென்றல் வந்து தீனும் எனும் இளையராஜா இசை போல தொடங்குகிறது. ஆனால் 'ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்' ஆரம்ப இசை போலவும் இருக்கிறது. எம் எஸ் ஜி யின் வயலினும் நன்றாய் இருக்கும். மாலி புல்லாங்குழல்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம்.

   இப்போதெல்லாம் பலர் மெலடி எனும் வகையில் பல பாடல்களை இணைத்து பாடுகிறார்களே அது போல இருக்கலாம்!

   தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 5. உங்களுக்கு ஹிந்தியும் நன்றாகத்தெரியும் என்பதால் அவர்கள் பேசுவதும் கேட்டிருக்குமே... அதில் ஏதாவது சுவாரஸ்யமாய்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா.... ஸ்வாரஸ்ய சம்பாஷணைகள் - சில எழுத முடியாதவை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 6. "புத்தகத்தினை யார் திருப்பித்தருவார்கள்?"

  ஹா... ஹா... ஹா... சமூகக்கவலை பற்றியெல்லாம் கவலைப்படாமல் அவரவர் கவலை அவரவர்களுக்கு! தஞ்சையில் சிறுவயதில் நூலகராய் இருந்திருக்கிறேன். அதாவது நூலகர் நூலகத்தைத் திறந்து வைப்பது முதல் பார்த்துக்கொள்வது வரை பலவேலைகளை என்னைச் செய்ய வைத்திருக்கிறார். அவர் ஓபி அடிப்பார். சாவியை என்னிடம்தான் இருக்கும். அதில் சில சுவாரஸ்யமான அனுபவங்கள் உண்டு.

  பாரீஸுக்கு போ புத்தகத்தை இங்குதான் அடித்தேன்! ஆனால் என்னையே அவர் காவலராகப் போட்டபிறகு அந்தக் காரியங்கள் செய்வதில்லை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சமூகக் கவலையை விட அவர் கவலை அவருக்குப் பெரிது!

   ஆஹா நூலகராகவும் நீங்கள்! மகிழ்ச்சி. பாரீஸுக்கு போ புத்தகத்தினை அடித்தீர்களா! :) நூலக ஸ்வாரஸ்ய அனுபவங்கள் - முடிந்தால் பகிரலாமே!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
  2. முன்பே பகிர்ந்திருக்கிறேனே...!!

   நீக்கு
  3. ஓ.... படித்த நினைவில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 7. ஒட்டகக் கதை படித்திருக்கிறேன். புதிய ரயில்பெட்டியின் தோற்றம் கவர்ச்சியாய் இருக்கிறது. பயணிக்க ஆசை. குஜியா பார்க்க நன்றாய்த்தான் இருக்கிறது. ஆனால் இதுபோன்ற டால்டா அல்லது எண்ணெய், நெய் ஒழுகும் பண்டங்கள் சாப்பிட்டால் எனக்குத் தலைவலி வந்து விடும்!!! ஹா... ஹா... ஹா....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. டால்டா/நெய் ஒழுகும் பண்டங்கள் சாப்பிட்டால் தலைவலி வருமா... அடடா....

   விசாகப்பட்டினத்திலிருந்து அரக்கு பள்ளத்தாக்கு செல்லும் இரயிலிலும் இந்த விஸ்டாடோம் பெட்டி உண்டு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 8. பழைய பதிவில் என் பெயர் இல்லாத குறையை நிவர்த்தி செய்தேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா... மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 9. புல்லாங்குழல் இசையை கேட்டுக் கொண்டே பதிவை படித்தேன். அனைத்தும் அருமை.
  மிக கவர்ந்தது:-

  //தீர்க்கமுடிந்தவற்றை தீர்த்துவிட்டு, மற்றவற்றை காலத்தின் கைகளில் ஒப்படைத்துவிட்டு உனக்கான ஓய்வறையில் நிம்மதியாக இருக்க கற்றுக்கொள்" //

  காலத்தின் கையில் தான் இருக்கிறது சில தீர்வுகள் என்பது உண்மை.
  இயற்கை அழகை ரசித்துக் கொண்டே பயணிக்கும் ரயில் பிடித்து இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 10. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 11. அனைத்தும் அருமை...

  நூறு ஒட்டகங்கள் மிகவும் கவர்ந்தது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நூறு ஒட்டகங்கள் - உங்களைக் கவர்ந்ததில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 12. சினிமாவும், சீரியலும் தமிழகத்தை சீரழித்து விட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சினிமாவும் சீரியலும் - 100% உண்மை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 13. குஜியா சாப்மிடணும்னு ஆசை வந்துவிட்டது. ஹோலியின்போதுதானே மெல்லிய குழலாக பெரிய ஜிலேபி மாதிரி பண்ணுவார்கள்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹோலி என்றாலே குஜியா தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 14. நூறு ஒட்டகங்களும், நூலகர் பதிலும் என்னைக் கவர்ந்தது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 15. எங்க ஊர் பக்கத்துல சூரியகலா, சந்திரகலான்னு ஒரு இனிப்பு இருக்கு. அதுமாதிரியே இருக்கு. கிட்டத்தட்ட கெட்டியான பாதுஷாக்குள் பால்கோவா மாதிரியான இன்னொரு இனிப்பு இருக்கும். பார்க்க முதல் பதத்துல இருக்கும் இனிப்பு போலவே இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சூரியகலா, சந்த்ரகலா - அதே மாதிரி என்றாலும் இங்கே கொஞ்சம் சுவை வேறு மாதிரி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

   நீக்கு
 16. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு
 17. பிடித்ததை முதல்லே சொல்லிடலாம். முனிவர் சொன்ன ஒட்டகக் கதை . கதை மிக அருமை. இருந்தாலும் ஏதோ ஒரு குறை தெரிகிறது. அது என்னன்னு டக்ன்னு சொல்ல முடியலே. அவ்வளவு தான்.
  ருஜியா இருப்பதால் குஜியா ஆனதோ?

  வண்ணப்பொடியைத் தூவற கண்மண் தெரியாத அந்த குஷிக்கு துணையாக இருக்கும் என்பதினால் 'சரக்கா'? எதுக்கு எது பொருந்திப் போகும் என்பதெல்லாம் இப்போ சொல்ல முடியாமையே இருக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ருஜியா இருப்பதால் குஜியா! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜீவி ஐயா.

   நீக்கு
 18. இந்தியில் இந்த மாதிரி இரயில் பெட்டிகளா......

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்தியாவில் என்று தானே கேட்க வந்தீர்கள்? ஆமாம். தற்போது மூன்று மார்க்கங்களில் இந்த பெட்டிகளுடன் இரயில்கள் இயங்குகின்றன - விசாகப்பட்டினம்-அரக்கு, கால்கா-ஷிம்லா மற்றும் கொங்கன் இரயில்வேயில் ஒன்று.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   நீக்கு
 19. காஃபி வித் கிட்டு அனைத்தும் அருமை.

  ரயில் பெட்டி அழகாக இருக்கிறது போகும் வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை.

  ஒட்டகக் கதை மிக நன்றாக இருக்கிறது ஜி.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாய்ப்பு கிடைத்தால் சென்று வாருங்கள். ஆந்திராவில் கூட இந்த மாதிரி பெட்டி கொண்ட இரயில் இருக்கிறது. விரைவில் ஊட்டி செல்லும் இரயிலிலும் இம்மாதிரி பெட்டி இணைக்கப்போவதாக தகவல். நடந்தால் நம் ஊரிலேயே இப்படி பயணிக்கலாம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....