திங்கள், 31 டிசம்பர், 2012

மேகத்தினைத் துரத்தியவன் – சுஜாதா





இந்த நாவல் 1979-ஆம் ஆண்டு மாலைமதி மாத இதழுக்காக தலைவர் சுஜாதாவால் எழுதப்பட்டது. இந்த விறுவிறுப்பான நாவலை சமீபத்தில் படித்தேன். விசா பப்ளிகேஷன்ஸ் வெளியிட்ட இந்தப் புத்தகத்தினை எடுத்துப் படிக்க ஆரம்பித்த பிறகு படித்து முடிக்காமல் கீழே வைக்க முடியவில்லை. கதை என்ன என்று பார்ப்போம்....

அன்பழகன் – நண்பர்களுக்குச் சுருக்கமாய் கன்”. வயது கட்டிளம் காளை ஆகிய 18! வேலை என்று ஒன்றும் கிடையாது. அம்மா அப்பா, கூடப் பிறந்தவர்கள் என யாரும் இல்லை. தற்போது இருப்பது தூரத்து ஒன்று விட்ட சித்தப்பா வீட்டில். வேலை என்று ஒன்றும் இல்லாததால், சித்தப்பா வீட்டில் சமையலுக்கு காய்கறி வாங்கி வருவது, சுத்தம் செய்து நறுக்கிக் கொடுப்பது, சுற்று வேலைகள் செய்வது, கடைகண்ணிகளுக்குச் சென்று பொருட்கள் வாங்கி வருவது எல்லாமே அன்பான அன்பு தான். மொத்தத்தில் சம்பளமில்லா வேலைக்காரன்.

சித்தப்பா விநாயகம் பணி புரிவது ஒரு கூட்டுறவு வங்கியில், சித்தி தனம் அரசாங்க அலுவலகத்தில். தன்னுடைய சொந்த செலவுகளுக்கு – அதான் சிகரெட் பிடிப்பது போன்றவற்றிற்கு பொருட்கள் வாங்கும்போது கமிஷன் அடிப்பது தான் வழி. ஒவ்வொரு மாதமும் 100-150 ரூபாய் சம்பாதிக்க பிரம்மபிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கிறது.  அப்படி இருக்கும் சமயத்தில் சுலபமாய் பணம் சம்பாதிக்க வழி சொல்லித்தருவதாய் புதிய கேரக்டர் அறிமுகம். அது – மாணிக்கம். சொல்லித் தரும் வழி சித்தப்பா பணி புரியும் வங்கியில் கொள்ளை அடிப்பது.

மாணிக்கம் அன்பழகனிற்கு போதையை அறிமுகம் செய்து வைத்து, கூடவே கொஞ்சம் பணமும் கொடுத்து வங்கியில் இருக்கும் பாதுகாப்பு வசதிகளைப் பற்றி கொஞ்சம் கொஞ்சமாய் தெரிந்து கொள்கிறார். பாதுகாப்பு வசதிகள் பற்றித் தெரிந்த பிறகு அதை மீறி எப்படி கொள்ளை அடிப்பது என திட்டம் தீட்டுகிறார்கள். நடுவே புதியதாய் சித்தியின் தங்கை ரத்னா என்றொரு கேரக்டரும் விறுவிறுப்பாக உள்ளே நுழைகிறார்.

விநாயகம் வைத்திருக்கும் சாவிக்கொத்திலிருந்து சாவிகளை சோப்பில் அச்சு எடுப்பது, வங்கியில் இருக்கும் அபாய சங்கினை ஒலிக்காமல் தடுப்பது எப்படி என்று தெரிந்து தகவல் சொல்வது என எல்லா திட்டங்களிலும் அன்பழகனின் பங்கு முக்கியமாக இருக்கிறது. பிறகு ஒரு நன்னாளில் திட்டமிட்டபடியே, மாணிக்கமும், அன்பழகனும் வங்கியைக் கொள்ளை அடிக்கிறார்கள். அதன் பிறகு தான் திருப்பமே. 


கொள்ளை அடித்துக் கொண்டு வெளியேறும்போது அங்கே ஒரு ஜீப் வருவது தெரிய, அங்கிருந்து பணப்பெட்டியுடன் மோட்டார் சைக்கிளில் தப்பிக்கிறார்கள். ஆனாலும் துரத்திச்சென்று அவர்களைப் பிடித்து விசாரிக்க, பணப்பெட்டியை ஆற்றில் வீசி விடுகிறான் மாணிக்கம். விசாரணைக்காக ஜீப்பில் வந்த போலீஸ்காரர்களோடு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப் படுகிறார்கள். வங்கியில் கொள்ளையடித்தது இவர்கள் தான் என கைது செய்யப்படுகிறார்கள்.

வங்கிக் கொள்ளை வழக்கு நீதிமன்றத்திற்கு வர, அதில் மாணிக்கம் மேல் எந்த தவறும் இல்லை என்று சாமர்த்தியமாக வாதாடி அதே சமயம் எல்லா குற்றமும் புரிந்தது அன்பழகன் மட்டுமே என்று நிரூபிக்கப்படுகிறது.  வழக்கறிஞர் யாரென்று கேட்டால், நம்ம வசந்த் தான்!  இப்போது தான் திருப்பமே. இப்படி செய்த தவறை சாமார்த்தியமாக வழக்காடி ஒருவர் மீது மட்டுமே சுமத்தியது சரியில்லை என்று ரத்னா வசந்த்-இடம் முறையிட ரத்னாவுக்காக இந்த வழக்கினை மேல் முறையீடு செய்ய முடிவு செய்கிறார் –வசந்த்.

அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதை மிகவும் விறுவிறுப்பாகச் சொல்லி இருக்கிறார் தலைவர் சுஜாதா. ஆரம்பத்திலிருந்தே இந்த திருட்டில் மாணிக்கம்-அன்பழகன் தவிர வேறு ஒருவரும் முக்கிய பங்கு வகித்திருக்க வேண்டும் என்ற கோணத்தில் முன்னேறுகிறது.  அந்த மூன்றாவது நபர் யார், அவருக்கு அன்பழகன் மேல் என்ன வெறுப்பு என்பதெல்லாம் தான் கதையின் போக்கில் மாற்றத்தினையே கொண்டு வருகிறது.

அந்த நபர் யார், எதனால் வெறுப்பு என்பதைத் தெரிந்து கொள்ள நீங்கள் செய்ய வேண்டியது இது தான் – மேகத்தினைத் துரத்தியவன்ஐ நீங்களும் துரத்துங்கள் – அட படியுங்கள் எனச் சொல்ல வந்தேன். 

மாலைமதியில் வெளி வந்த இந்த நாவலை சில பதிப்பகங்கள் வெளியிட்டு இருக்கின்றன.  நான் படித்தது விசா பப்ளிகேஷன்ஸ் வெளியீடு – இரண்டாம் பதிப்பு – விலை 35/-. 

மீண்டும் வேறு “படித்ததில் பிடித்ததுபதிவில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

14 கருத்துகள்:

  1. என்னிடம் இருக்கே... நான் படிச்சுட்டேனே.....!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. இந்தக்கதை நானும் படிச்சிருக்கேன். பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி லக்ஷ்மிம்மா.

      நீக்கு
  3. மலைமதி 75 ம் வருடத்திலிருந்து வாங்கி படித்து இருக்கிறேன். இந்த கதை படித்த நினைவு இல்லை.
    உங்கள் கதை விமர்சனம் படிக்கும் ஆவலை தூண்டுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  4. படித்ததில் பிடித்தது - பகிர்வு அருமை .. பாராட்டுக்கள்..

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!.

      உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      நீக்கு
  5. மேகத்தை துரத்தியவனை நானும் துரத்த ரெடியா இருக்கேன்.

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா.

      உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      நீக்கு
    2. மேகத்தினையேத் துரத்தியவனை தாங்களும் துரத்திப்பிடித்து படித்துச் சொன்னது அருமை. பாராட்டுக்கள். ;)

      நீக்கு
    3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      நீக்கு
    4. 70 களில் மேகலா என்ற மாதப்புத்தகத்தில், முதலில் வெளியானது இந்த நாவல்.
      வாங்கி படித்துவிட்டு நானே பைண்டிங்கும் செய்து இன்று வரை பாதுகாத்து வைத்திருக்கிறேன்.எத்தனை தடவை வாசித்தாலும் சுஜாதா நாவல்கள்
      தெவிட்டாதவை .பகிர்வுக்கு நன்றி.

      நீக்கு
    5. //எத்தனை தடவை வாசித்தாலும் சுஜாதா நாவல்கள் தெவிட்டாதவை//

      உண்மை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரதேசி Alfy!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....