செவ்வாய், 5 செப்டம்பர், 2017

பூரி ஜகன்னாத் – மரச் சிலைகளின் கதை…


அரக்கு பள்ளத்தாக்குபகுதி 26

பகுதி 25 படிக்காதவர்கள் படிக்க வசதியாக.....


அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில்அரக்கு பள்ளத்தாக்குஎன்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!


பூரி ஜகன்னாத் - ஒரு ஓவியமாக....

சென்ற பகுதியில் பூரி ஜகன்னாத் கோவில் பற்றிச் சொல்லும் போது இக்கோவிலில் இருப்பது மரத்திலால் ஆன சிலைகள் என்று குறிப்பிட்டிருந்தேன்.  ஏன் மரச் சிலைகள் என்பதற்கும் ஒரு காரணமும் கதையும் உண்டு.  அக்கதையையும் மற்ற சில விவரங்களையும் இப்பகுதியில் பார்க்கலாம்.  


மரச் சிலைகள் ஏன் – ஒரு கதை….

இப்பகுதியில் இருந்த ஒரு பழங்குடியினரின் தலைவரால் “நில மாதவர்” என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தவர் பூரி ஜகன்னாத்! அவரைத் தவிர வேறு எவரும் நில மாதவவரைப் பார்த்ததில்லை. அத்தனை அழகிய ரூபமாம் அவருக்கு. ஒரு அடர்ந்த காட்டுக்குள், ரகசிய குகைக்குள்ளே வைத்து பூஜித்து வந்தார் அந்த பழங்குடித் தலைவர். அதே சமயத்தில் மால்வா பகுதியின் ராஜாவாக இருந்தவர் இந்த்ரத்யும்னன் – அவருக்கு ஒரு ஆசை – விஷ்ணுவை அவரது அதி அழகிய ஸ்வரூபத்தில் பார்க்க வேண்டும் என்ற ஆசை! எங்கே தேடினாலும் அப்படி அழகிய ஸ்வரூபத்தில் பார்த்த திருப்தியில்லை மன்னருக்கு. கவலையில் மூழ்கிய அவருக்கு ஒரு கனவு வருகிறது. நில மாதவர் ரூபத்தில் இருக்கும் விஷ்ணுவே மிக அழகானவர் என்ற செய்தி கனவில் கிடைக்க, ராஜ புரோஹிதரின் தம்பியான வித்யாபதி என்பவரை அனுப்பி வைக்கிறார்.

நில மாதவரைப் பார்க்க வந்த வித்யாபதி, விசாரித்துப் பார்த்ததில், பழங்குடித் தலைவரைத் தவிர வேறு யாருமே நில மாதவரைப் பார்த்ததில்லை என்ற செய்தி கிடைக்க, என்ன செய்வது எனத் திட்டமிடுகிறார். அவருக்கு ஒரு நல்ல வழி தோன்றுகிறது. பழங்குடித் தலைவரின் மகளைத் திருமணம் செய்து கொள்கிறார். சரி மாப்பிள்ளையாச்சே, நம்மை அழைத்துச் சென்று காட்டுவார் என்று பார்த்தால் அப்போதும் மறுக்கிறார் தலைவர். தனது மனைவியான பழங்குடித் தலைவரின் பெண் மூலமாகத் தொடர்ந்து கேட்டு வர, ஒரு சமயத்தில் பழங்குடித் தலைவர் ஒப்புக் கொள்கிறார் – நில மாதவரைக் காண்பிக்க! ஆனால் செல்லும் வழி ரகசியமாக இருக்க வேண்டும் என்பதற்காக, வித்யாபதியின் கண்கள் கட்டப்படுகின்றன. அதற்கும் ஒரு வழி செய்கிறார் வித்யாபதி. செல்லும் வழியெங்கும் கடுகு விதைகளைத் தூவியபடியே சென்று, நில மாதவரைத் தரிசனம் செய்கிறார் – அப்படி ஒரு அழகு! அந்த நிமிடமே முடிவு செய்கிறார், ராஜாவுக்குத் தகவல் அனுப்ப. தூவிய கடுகு விதைகள் முளைக்க, காட்டுக்குள் இருக்கும் ரகசிய குகையையும் கண்டுபிடித்து விடுகிறார்.

ராஜாவுக்குத் தகவல் அனுப்ப, ராஜாவும் வருகிறார் புண்ணிய யாத்திரையாக – அதிரூப சுந்தரனாக இருக்கும் விஷ்ணுவின் வடிவமான நில மாதவரைத் தரிசிக்க வந்து சேரும்போது அவருக்குத் தகவல் கிடைக்கிறது – அதிர்ச்சி தரக்கூடிய தகவல்! அந்தத் தகவல் – “நில மாதவரை”க் காணவில்லை என்ற தகவல் தான் அது! மனதுடைந்த நிலையில் அங்கேயே சில தினங்கள் இருக்க, அவருக்கு ஒரு அசரீரியின் குரல் கேட்கிறது. கடற்கரைக்கு வந்தால் ஒரு பெரிய மரத்தின் தண்டுப்பகுதி மிதந்து வரும். அதைக் கொண்டு எனது அதிரூப சுந்தர வடிவத்தினைச் செய்து அதை நீர் வழிபடலாம் என்றது அக்குரல்! விரைந்து கடற்கரைக்கு வர, அப்படியே கடலலைகளில் மிதந்து வரும் மரத்தின் தண்டுப்பகுதி கிடைக்கிறது! அதிலிருந்து கடவுளின் அழகிய ரூபத்தினைச் செதுக்கலாம் என்றால், அப்படி அழகான ரூபத்தைப் பார்த்தவர் யாருமே இல்லையே! மரத்தினைச் செதுக்கி அழகிய வடிவமாக வடித்து ராஜாவையும் திருப்திப் படுத்த ஒருவரும் முன்வரவில்லை.

கவலையில் ஆழ்ந்தார் ராஜா இந்த்ரத்யும்னன். ராஜாவின் கவலையைத் தாங்க முடியாத விஷ்ணுபகவானே ஒரு வயதான தச்சர் வடிவத்தில் வருகிறார். இந்த மரத்தில் என்னால் அழகிய ரூபத்தில் விஷ்ணுவை வடிக்க முடியும் என்று ராஜாவிடம் சொல்ல, சில நிமிடங்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு ராஜா ஒத்துக் கொள்கிறார். ஆனால் அந்த தச்சர் சில நிபந்தனைகளைச் சொல்கிறார் – அது, தன்னை ஒரு அறையில் அடைத்து வைக்க வேண்டும் என்றும், இருபத்தி ஒரு நாட்களுக்கு அவரை யாரும் தொந்தரவு செய்யக்கூடாது என்றும், அறைக்கதவுகளை எக்காரணம் கொண்டும் திறக்கவே கூடாது என்பது தான் அந்த நிபந்தனைகள்! ஒத்துக் கொண்டு ராஜாவும் வயதான தச்சரை ஒரு அறைக்குள் அனுப்பி கதவைச் சாத்துகிறார்கள். எக்காரணம் கொண்டும் தச்சரைத் தொந்தரவு செய்யக்கூடாது என்று ராஜா கட்டளையிடுகிறார்.

பதினைந்து நாட்கள் கடக்கின்றன. உள்ளிருந்து சத்தமே வரவில்லை. கருணையே வடிவாகக் கொண்ட ராஜாவின் மனைவி Gகுந்தீசாவிற்கு மனக்கவலை. உள்ளே சென்ற வயதான தச்சருக்கு உணவு கூட கொடுக்கவில்லையே, அவருக்கு என்னவாயிற்றோ, சத்தம் கூட வரவில்லையே, அவர் உணவில்லாமல் இறந்து விட்டாரோ என்றெல்லாம் கவலை. வேறு வழியில்லை. ராஜாவிடம் கதவைத் திறக்கக் கட்டளையிடுகிறார். வேறு யாராவது சொல்லி இருந்தால் சிரச்சேதம் செய்திருப்பார் ராஜா! சொல்வது மனைவி. வேறு வழியில்லை. அறையின் கதவுகளைத் திறக்கச் சொல்கிறார் ராஜா. அறைக்குள் பார்த்தால் அதிர்ச்சி! 21 நாட்கள் முடிவதற்கு முன்னர் திறந்ததால், தச்சர் மாயமாகி இருந்தார். அறைக்குள் முழுமையாக முடிவடையாத நிலையில் நான்கு மரச்சிலைகள் – ஜகன்னாத், பாலபத்ரா, சுபத்ரா மற்றும் சுதர்சனர் சிலைகள்!

அச்சிலைகளைக் கொண்டு கோவில் அமைக்கிறார் ராஜா இந்த்ரத்யும்னன். அக்கோவிலே பூரி ஜகன்னாத் கோவில். தற்போது இருக்கும் கோவில் பிற்காலத்தில் வேறு ராஜாக்களால் அமைக்கப்பட்டவை/புனர் நிர்மாணம் செய்யப்பட்டவை. சிலைகள் மரத்தினால் ஆனவை என்பதால், பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை சிலைகள் மீண்டும் வடிக்கப்பட்டு, பழைய சிலைகள் அகற்றி புதிய சிலைகளை வைப்பார்கள். பழைய சிலைகள், கோவிலுக்குள்ளே இருக்கும் ஓரிடத்தில் புதைத்து விடுவார்கள்.  இந்த நிகழ்வு மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.  அது பற்றிய விவரங்கள் அடுத்த பதிவில்.  பூரி ஜகன்னாத் பற்றி ஒரு பதிவில் சொல்லி விட முடியாது என்பதால், இன்னும் ஒன்றிரண்டு பதிவுகள் வரலாம்!

தொடர்ந்து பயணிப்போம்!

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

18 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. அற்புதமான சிலைகள்.. தரிசிக்கணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

      நீக்கு
  3. அறிந்து கொண்டேன்.. படம் அழகு..

    வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  5. பூரி ஜகன்னாதர் கோவிலில் மரச் சிலைகள் உள்ள காரணம் பற்றிய அறியாத தகவல்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி! தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  6. கதைகள் ஸ்வாரஸ்யமாக இருக்கிறதே! கோலாகலம் பற்றியும் அறிய ஆவல்!! நல்லதகவல்கள்!படம் அழகு! அப்படிக் கம்ப்ளீட் செய்யப்படாததால்தான் இறை உருவம் இப்படி இருக்கிறதோ?!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  7. ஓவியம் அழகு.. கதை சொன்ன விதம் நன்று.. 5ம் நம்பர்:) பஸ் பிடிச்சு வந்தேன்:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

      நீக்கு
  8. சுவாரஸ்யமான புராணக் கதையை அறியத் தந்ததற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  9. அழகு என்பது காண்பவர் கண்களைப் பொறுத்தது என்று ஒரு ஆங்கிலச் சொல்வழக்கு பழங்குடியினருக்கு மிக அழகாகத் தோன்றி இருக்கும் சிலைகளோ அவை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா....

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....