சனி, 9 செப்டம்பர், 2017

ஒடிசா – ரகுராஜ்பூர் – ஓவியங்கள்


அரக்கு பள்ளத்தாக்குபகுதி 29

பகுதி 28 படிக்காதவர்கள் படிக்க வசதியாக.....


அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில்அரக்கு பள்ளத்தாக்குஎன்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!



பூரி ஜகன்னாத் தரிசனம் முடிந்த பிறகு அங்கிருந்து புறப்பட்டு நாங்கள் தங்கியிருந்த இடமான புவனேஷ்வர் நோக்கிய பயணத்தினைத் துவங்கினோம். ஆனால் நேரடியாக புவனேஷ்வர் செல்லாமல், வழியில் ஒரு கிராமத்திற்குச் சென்ற பிறகு செல்ல வேண்டும் என்று எங்கள் நண்பர், ஓட்டுனரிடம் சொன்னார். அந்த கிராமம், ரகுராஜ்பூர் எனும் கிராமம். கோவிலிலிருந்து புவனேஷ்வர் செல்லும் நெடுஞ்சாலை வழியே சென்றால் 15 கிலோ மீட்டர் தொலைவில் இந்த ரகுராஜ்பூர் கிராமம் இருக்கிறது.  சிறிய ஊர் என்றாலும், அந்த ஊர் மிகவும் பிரசித்தமான ஒரு ஊர். அந்த ஊரில் இருப்பவர்கள் பெரும்பாலும் கலைஞர்கள் மட்டுமே. வீட்டுக்கு வீடு கலைஞர்களின் கைவண்ணங்களைக் காண முடியும்!




ஒடிசா மாநிலத்தில் இருக்கும் பூரி ஜகன்னாத் கோவிலுக்குச் செல்லும் வாய்ப்பிருந்தால் கண்டிப்பாக இங்கேயும் ஒரு முறை சென்று வாருங்கள். கிராமத்தின் இரு முக்கிய சாலைகள் முழுவதும் ஓவியர்கள் தங்கள் வீடுகள்/கடைகளை வைத்திருக்கிறார்கள். அங்கேயே ஓவியங்கள் வரைகிறார்கள். வரைந்த ஓவியங்களை விற்கிறார்கள். வீடுகளின் வெளிச்சுவர்களிலும் அழகிய ஓவியங்களை வரைந்து வைத்திருக்கிறார்கள். நாங்கள் அங்கே சென்றபோது, ஒவ்வொரு வீட்டிலிருந்தும் அழைப்பு, “எங்கள் ஓவியங்களைப் பார்க்க வாருங்கள், வாங்கிக் கொள்ளுங்கள்” என்று அழைக்கிறார்கள். இரண்டு மூன்று வீடுகளில் ரகுராஜ்பூர் கலைஞர்களின் கைவண்ணம் கண்டு ரசித்தோம்.   



ரகுராஜ்பூர் ஓவியங்கள் மிகவும் புகழ்வாய்ந்தவை.  பல நூற்றாண்டுகளாக அங்கே ஓவியம் வரைவது மிகவும் பிரபலமான ஒன்று.  பட்டசித்ரா என அழைக்கப்படும் ஓவியங்கள், இயற்கை வண்ணங்களைக் கொண்டு வரையப்படுபவை. ரகுராஜ்பூரில் வரையப்படும் பட்டசித்ரா ஓவியங்கள், ஒரு சிறிய துணியில் அல்லது காய்ந்த பனை ஓலையில் வரையப்படும் ஓவியங்கள்.  முதலில் துணியின் மீது சாக் மற்றும் பசை கலந்து தடவி அந்த துணியை படம் வரைவதற்கு ஏற்ப தயார் செய்வார்கள்.  அதன் மேல் வண்ணமயமான ஓவியங்களை – பெரும்பாலும் கடவுளர்களின் ஓவியங்கள், அல்லது இதிகாசக் காட்சிகள் ஆகியவற்றை வரைகிறார்கள்.  பூக்கள், மரங்கள், மிருகங்கள் ஆகியவற்றையும் வரைந்து அழகு சேர்க்கிறார்கள்.  ஒவ்வொரு ஓவியத்திலும் நுணுக்கமான வேலைப்பாடுகளைப் பார்க்க முடியும்.



டஸ்ஸர் சில்க் என அழைக்கப்படும் துணிகளில், குறிப்பாக சம்பல்பூரி புடவைகளில் பட்டசித்ரா ஓவியங்களை வரைந்து தருவதும் உண்டு. சின்னச் சின்ன டஸ்ஸர் சில்க் துணிகளில் பூரி ஜகன்னாத் ஓவியங்களை வரைந்து விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள்.  பார்க்கும் அத்தனை ஓவியங்களையும் வாங்கி விடலாம் என்று தோன்றும் வண்ணம் வரைந்து இருப்பது அவர்களது தனித்திறமை! சின்னச் சின்னதாய் துணிகளில் ஓவியம், அதுவும் வண்ண ஓவியம் வரைவது ரொம்பவே கடினமான வேலை. ஓவியங்கள் வரைபவர்கள் Detail என்று சொல்வதுண்டு. அப்படிச் சொல்லும் விஷயம் இந்த ஓவியங்களில் நிறையவே உண்டு.



ஒவ்வொரு ஓவியம் வரைவதற்கும் பல மணி நேரங்கள் பிடிக்கும் – அத்தனை நுணுக்கமான ஓவியங்கள் அவை. ஒடிசா மாநிலத்தின் பூரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய கிராமம் ரகுராஜ்பூர். இந்த கிராமத்தில் தான் பல ஓவியர்கள் தங்களது ஓவியங்களை வரைவதும், அவற்றை விற்பதை தங்களது வாழ்வாதாரமாகச் செய்கிறார்கள். பட்டசித்ரா ஓவியங்கள் தவிர, பனைஓலை, கற்கள், மரம் ஆகியவற்றிலும் ஓவியங்கள் வரைகிறார்கள், பேப்பர் கூழ் பொம்மைகள், முகமூடிகள், கொட்டைப்பாக்கு ஓவியங்கள் ஆகியவையும் இங்கே பிரபலம்.



நண்பர் சில ஓவியங்களை, வாங்கிக் கொள்ள, நான் காரியத்தில் கண்ணாயிருந்தேன். வேறென்ன புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தேன்! நுணுக்கமான ஓவியம் என்பதால் கொஞ்சம் விலை அதிகமாகத் தான் இருக்கும். என்றாலும் அவர்களோடு பேசி, விலை குறைக்கச் சொல்லலாம். கட்டுப்படியானால் தருவார்கள். அதற்கென்று அடிமட்ட விலை சொன்னால் தரமாட்டார்கள்! வாங்கவில்லை என்றாலும், ஓவியங்களைப் பார்ப்பதற்காகவேனும் நிச்சயம் அங்கே சென்று வாருங்கள். ரகுராஜ்பூரில் நான் எடுத்த புகைப்படங்களை ஒரு ஞாயிறில் ஏற்கனவே பகிர்ந்து கொண்டிருந்தேன்.  பார்த்து ரசிக்காதவர்கள் இப்போது ரசிக்கலாம். அதற்காக, அப்பதிவின் சுட்டியைக் கீழே தந்திருக்கிறேன்!




அந்த ஊரில் எடுத்த புகைப்படங்களின் தொகுப்பு என்னுடைய முகநூல் பக்கத்தில் இருக்கின்றது. பார்க்க விருப்பம் இருந்தால், இங்கே சென்று பார்க்கலாம்!



ஓவியங்களைப் பார்த்ததோடு, கலைஞர்களோடு பேசிக் கொண்டிருந்த பிறகு அங்கிருந்து புறப்பட்டோம். புவனேஷ்வர் நோக்கிய பயணம் தொடர்ந்தது. அடுத்ததாய் எங்கே சென்றோம், என்ன பார்த்தோம் என்பதை வரும் பகுதியில் சொல்கிறேன்.

தொடர்ந்து பயணிப்போம்!

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

20 கருத்துகள்:

  1. கலைஞர்களின் கைவண்ணத்தில் இறையழகுடன் கலையழகையும் காண முடிந்தது. அனைத்தும் இயற்கையாகவும், மிக அழகாகவும் உள்ளன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  2. அற்புதமான ஓவியங்களைப் பதிவில் வழங்கி ரகுராஜ்பூர் கலைஞர்களைப் பற்றிச் சொல்லியது அருமை.

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  3. ஜெய்பூரிலுமிம்மாதிரி ஓவியங்களை வரைந்து விற்பதைக்கண்ட நினைவு நானுமோரிரு ஓவியங்கள் வாங்கிப் பரிசாகக் கொடுத்தேன் ஆனால் அவற்றின் மதிப்பு தெரியாதவர்களிடம் கொடுத்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவ்வகை ஓவியங்கள் பராமரிக்க கொஞ்சம் கடினம். மதிப்புத் தெரிந்தவர்க்அள் மிகக் குறைவு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  4. படங்கள் அருமை! இதை வரைய நிறைய கற்பனையும் பொறுமையும் தேவை என எண்ணுகிறேன். பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை. பொறுமை நிறையவே தேவை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  5. படங்களும் தகவல்களும் அருமை....நான் முகநூலில் பார்க்கிறேன் ஜி...

    கீதா: ஆம் வெங்கட்ஜி....டிடெய்ல்ஸ்...நுணுக்கங்கள்..அதற்குத்தான் விலையே..... கஷ்டப்பட்டு வரைகிறார்கள்...எவ்வளவு திறமை..ஓவியங்கள் அனைத்தும் அழகு...பட்டச்சித்ரா ஓவியம் பற்றிய தகவல்கள் சிறப்பு. இதையும் லிஸ்டில் போட்டு விட்டேன் ஜி..தொடர்கிறோம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நுணுக்கமான வேலை தான். நேரமும் அதிகம் எடுக்குமே.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி.

      நீக்கு
  6. ஓவியங்கள் அழகு. (டைப் அடித்தால் ஓவியா அழகு என்று வருகிறதே, ஏன்?!!!!! :P)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓவியா :). ஓவியாவுக்கு மாறியாச்சா?

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  7. ஓவியங்களின் நுணுக்கமான கலைத்திறன் அசர வைக்கின்றது. ஓவியங்களைச்சுற்றி இருக்கும் பார்டர்கள் கூட எத்தனை அழகு! இந்த பார்டரை வரையக்கூட மிகவும் பொறுமை வேண்டும்! இந்த மாதிரி ஓவியங்களை நான் சில வருடங்களுக்கு முன் இங்கே உங்கள் பதிவில் பார்த்திருக்கிற மாதிரி நினைவு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதற்கு முன்னர் வெளியிட்ட ரகுராஜ்பூர் ஓவியங்கள் பற்றி பதிவிலேயே எழுதி இருக்கிறேன். சுட்டியும் கொடுத்திருக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

      நீக்கு
  9. அழகான ஓவியங்கள்.
    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....