செவ்வாய், 13 பிப்ரவரி, 2018

சாப்பிட வாங்க: அரிநெல்லிக்காய் ஊறுகாய் மற்றும் சாதம்





நெய்வேலியில் இருந்த போது வீட்டிலேயே அரிநெல்லிக்காய் மரம் இருந்தது. பந்தல் போட்டமாதிரி கொத்துக் கொத்தாய் நெல்லிக்காய் காய்த்துத் தொங்கும். சாதாரண அரிநெல்லி மரங்களை விட சற்றே உயரமாக வளர்ந்த மரம்! அரிநெல்லி மரத்திற்கு அத்தனை வலு கிடையாது. கிளைகளை பிடித்து இழுத்தாலே உடைந்து விடும் தன்மை கொண்டது. இருந்தாலும் சிறு வயதில் மரத்தின் உச்சி வரை சரசரவென்று ஏறிவிடுவது எனக்கு வழக்கமாக இருந்தது – உடைந்து விடும், கீழே விழக்கூடும் என்ற எண்ணமோ பயமோ வந்ததே இல்லை – அப்போது நானும் முப்பது கிலோவிற்கு மேல் இருக்க மாட்டேன் என்பது வேறு விஷயம்!




போட்டிருக்கும் ட்ரவுசர் பாக்கெட்கள் இரண்டிலும் பழுத்த நெல்லிக்காய்களை நிரப்பிக்கொண்டு கீழே இறங்கி வந்து சுத்தம் செய்து, உப்பு, மிளகாய் பொடி சேர்த்து கொஞ்சம் ஊற வைத்து சாப்பிடுவோம் – இதில் எங்கள் குழு முழுவதுமே அடக்கம் – குழு என்பது, நானும், சகோதரிகள் மட்டும் அல்ல, பக்கத்து வீட்டு சிறுவர்/சிறுமியரும் அடக்கம். நெய்வேலியை விட்டு வந்த பிறகு அந்த நினைவுகள் எல்லாம் யோசிக்க மட்டுமே முடிகிறது. தலைநகர் தில்லியில்/வடக்கில் இந்த அரிநெல்லிக்காய் கிடைப்பதில்லை. முழு நெல்லிக்காய் மட்டுமே கிடைக்கிறது என்பதால் சுவைக்க முடிவதில்லை.

இந்த முறை திருச்சி சென்ற போது ஒரு பெரியவர் மூட்டையில் அரிநெல்லிக்காய் வைத்து விற்ற்க் கொண்டிருக்க, ஆவலுடன் அரை கிலோ ருபாய் 30/- கொடுத்து வாங்கிக் கொண்டேன்! தில்லிக்குப் புறப்படும் நாளில் வாங்கியதால், பாதியை நான் எடுத்துக் கொண்டு வர, மீதியை அம்மணி வைத்துக் கொண்டார்! அம்மணி ஊறுகாய் போட, நான் பாதியை ஊறுகாயாகவும், மீதியைப் பயன்படுத்தி அரிநெல்லிக்காய் சாதமும் செய்தேன். இன்றைய பதிவாக, அரிநெல்லி ஊறுகாய் மற்றும் சாதம் செய்வது பற்றிப் பார்க்கலாம்!

அரிநெல்லிக்காய் ஊறுகாய்

தேவையான பொருட்கள்:

அரிநெல்லிக்காய் - 1/4 கிலோ
உப்பு - 1/2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - சிறிதளவு
கடுகு - 1/4 தேக்கரண்டி
நல்லெண்ணை - 2 தேக்கரண்டி

எப்படிச் செய்வது?



சூடான நீரில் சுத்தம் செய்த நெல்லிக்காய்களை போட்டு பத்து நிமிடங்கள் வைக்கவும். பத்து நிமிடத்தில் வெந்து விடும். அதை தண்ணீரிலிருந்து வடிக்கவும். முழுதாகவும் உபயோகிக்கலாம், அல்லது துண்டங்களாகவும் வெட்டி விதைகளை எடுத்து விடலாம்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்க்கவும். வெடித்ததும் பெருங்காயம் சேர்க்கவும். அதனுடன் நெல்லியை சேர்த்து உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து பிரட்டவும். இரண்டு நிமிடத்தில் இறக்கி விடலாம். சுவையான ஊறுகாய் தயார். பத்திரப்படுத்தி ஒரு வாரம் வைத்திருக்கலாம்.

அரிநெல்லிக்காய் சாதம்



நெய்வேலியில் இருந்த போது அம்மா செய்து கொடுத்த நினைவு. நான் இதுவரை செய்ததில்லை என்பதால் இணையத்தில் தேட, காமாட்சி அம்மாவின் “சொல்லுகிறேன்” தளத்தில் கிடைத்தது. செய்து பார்த்து விட்டேன். நன்றாகவே இருந்தது. பல வருடங்களுக்குப் பிறகு அரிநெல்லிக்காய் சாதம் – என் கைப்பக்குவத்திலேயே சாப்பிட்டதில் மகிழ்ச்சி.

தேவையான பொருட்கள்:

அரிநெல்லிக்காய் – 15 முதல் 20.
பச்சை மிளகாய் – இரண்டு [காரம் வேண்டாமெனில் ஒன்று கூட போதும்]
இஞ்சி – ஒரு சிறு துண்டு
மஞ்சள் பொடி – வண்ணம் கொடுக்க!
பெருங்காயம் – வாசனைக்கு!
உப்பு – தேவையான அளவு!
தாளிக்க – கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு & ofcourse தாளிக்க நல்லெண்ணையும் தேவை.
மானே தேனே பொன்மானே எல்லாம் போட்டுக்கலாம் – அதாங்க கருவேப்பிலை, கொத்தமல்லி! வேர்க்கடலை கூட சேர்க்கலாம்.

உதிரியாக வடித்த சாதம் – இரண்டு கப்.

எப்படிச் செய்யணும் மாமு?

நெல்லிக்காயை துருவிக் கொள்ளவும்.



வாணலியை அடுப்பில் வைக்கவும் [அடுப்பு பத்தவைக்கணும்னு சொல்லணுமா?] நல்லெண்ணை விட்டு காய்ந்ததும், கடுகு போடவும், அது சூடு பொறுக்காமல் டப் டிப் என வெடித்ததும், சிம்மில் வைத்து, கடலைப் பருப்பு, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை போட்டு வறுக்கவும். பிறகு இஞ்சி, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். துருவி வைத்திருக்கும் அரிநெல்லிக்காயைப் போட்டு சுருள வதக்கிக் கொள்ளவும். கருவேப்பிலை சேர்க்கவும். தேவையான அளவு உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயம் மற்றும் வறுத்த வேர்க்கடலையையும் போட்டு சிறிதளவு வதக்க வேண்டும்!  இந்த கலவையை ஆறிய சாதத்தில் போட்டுக் கலந்தால் அரிநெல்லிக்காய் சாதம் ரெடி!

பத்து நிமிடத்தில் தயாராகி விடும் என்பதால் செய்வது சுலபமும் கூட!

திருச்சியிலிருந்து கொண்டு வந்ததில் பாதியை அம்மணி சொல்லி இருக்கும் செய்முறையில் ஊறுகாயாகவும், மீதியை “சொல்லுகிறேன்” காமாட்சி அம்மா சொன்ன மாதிரி சாதமாகவும் செய்தாயிற்று! ஊறுகாய் படம் அம்மணி போட்ட ஊறுகாய்! சாதம் நான் செய்தது!

என்ன நண்பர்களே, அரிநெல்லிக்காய் கிடைத்தால் இப்படிச் செய்து பார்க்கலாம் தானே!

இப்பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!

மீண்டும் ச[சி]ந்திப்போம்….

நட்புடன்

வெங்கட்
புது தில்லியிலிருந்து….

26 கருத்துகள்:

  1. ஹை வெங்கட்ஜி அரி நெல்லிக்காய் என்றதும் நா ஊறல்....என் மாமியார் வீட்டில் அரி நெல்லி மரம் உண்டு. இப்போது அது இறந்து மீங்கும் வளர்கிறது. கொத்தாகக் காய்த்துத் தொங்கும் அழகு செமையா இருக்கும்....என் மாமியார் இதில் ஊறுகாய், ஜூஸ் என்று செய்வார். நானும் திருமணமான புதிதில் அவரிடமிருந்து கற்றுக் கொண்டேன்.

    உங்கள் வீட்டுச் செய்முறையையும் பார்க்கிறேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தலைநகரில் இந்த நெல்லிக்காய் கிடைப்பதில்லை. பெரிய நெல்லிக்காய் மட்டும்தான். உங்கள் மாமியார் வீட்டில் மரம் இருக்கிறது என அறிந்து மகிழ்ச்சி. பதிவர் ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி அவர்களது வீட்டிலும் இம்மரம் உண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  2. யெஸ் என் மாமியார் அரி நெல்லிக்காய் சாதமும் செய்வார்...

    ஊறுகாய் இதே தான் மாமியார் வெந்தயப்பொடியும் சேர்ப்பார்....

    சாதமும் இதேதான்...சிவப்பு மிளகாயும் பச்சை மிள்காயுடன் சேர்ப்பார்...டேஸ்ட் அபாரமாக இருக்கும்...மாமியார் இஞ்சி போட்டதில்லை...காமாட்சி அம்மாவின்/உங்கள் குறிப்புகளையும் நோட் செய்து கொண்டேன்...வெங்கட்ஜி நன்றி!!!

    அமராவதி சென்றிருந்த போது பௌத்த ஸ்தூபி இருந்த அந்த வளாகத்திற்குள் அத்தனை அரி நெல்லி மரங்கள்...காய்த்துக் குலுங்கியது... இந்த ஸீஸனில் தான் போயிருந்தோம்...வளாகத்தின் ஒரு பகுதி முழுவதும் இம்மரங்கள் தான்...யாரும் எடுப்பதாகத் தெரியலை..அங்கிருந்த காவலரிடம் அனுமதி பெற்று...நான் கணிசமாக எடுத்துக் கொண்டேன்..வீட்டிற்கு வந்து ஊறுகாய், சாதம், ஜூஸ், ஸூப் என்று செய்தேன்.... ...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரிநெல்லிக்காய் சூப் இது வரை செய்ததில்லை/ருசித்ததில்லை. அடுத்த முறை தமிழகம் வரும்போது செய்து பார்க்க வேண்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  3. சென்ற வாரம் கடைக்குச் சென்றிருந்தபோது அங்கே அரி நெல்லிக்காய் இருந்தது..
    நான் தான் வாங்குவதற்கு மறந்து விட்டேன்..

    நாளை சென்று பார்க்க வேண்டும்.. இருந்தால் ஊறுகாய் தான்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த நாள் சென்ற போது கிடைத்ததா ஜி? செய்து பார்த்திருந்தால் சொல்லுங்களேன்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  4. பதில்கள்
    1. சுவை தான். இந்த நாக்கு இருக்கிறதே இப்படிச் சுவைகளைக் கேட்டுக் கொண்டே தான் இருக்கிறது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

      நீக்கு
  5. அரி நெல்லிக்காய்.... இதையெல்லாம் மறந்து எவ்வளவு காலமாகிவிட்டது. இதைப் பார்த்தவுடனேயே இளமைக் காலங்கள் ஞாபகம் வராதவர் யாரேனும் இருக்கமுடியுமா?

    நெல்லி ஊறுகாய் யம்மி. கொஞ்சம் எண்ணெய் குறைவா இருந்தால், அப்படியே ஸ்பூனால் எடுத்துச் சாப்பிடலாம். படம் பார்த்தவுடன், மனது மோர் சாதத்தைத் தேடுகிறது.

    அரிநெல்லி சாதம் சாப்பிட்டதேயில்லை. எப்போ அரி நெல்லி கிடைத்து எப்போ செய்து சாப்பிடுவது? மனதில் வைத்துக்கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரி நெல்லிக்காய் - இளமைக்காலங்கள் ஞாபகம் வராதவர் யார்? அதானே... இனிமையான நினைவுகளல்லவா அவை....

      எண்ணெய் குறைச்சலா இருந்தால், அப்படியே எடுத்துச் சாப்பிடலாம் - நான் செய்தது கொஞ்சம் எண்ணெய் குறைவாக இருந்ததால், அப்படி எடுத்துச் சாப்பிட்டே காலி!

      முடிந்த போது/கிடைக்கும் போது செய்து சாப்பிட்டு பாருங்கள்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  6. @துரை செல்வராஜு சார் - அரி நெல்லி குவைத்தில் கிடைத்ததா? மிக ஆச்சர்யமா இருக்கே. இங்கெல்லாம் நான் பார்த்ததேயில்லை. சாதாரண நெல்லிக்காய் வருடம் முழுவதும் பார்த்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்...

      சென்ற வாரம் கடைக்குச் சென்ற போது அரி நெல்லிக்காயைப் பார்த்தேன்...
      கால் கிலோ பாக்கெட் போட்டு வைத்திருந்தார்கள்..

      மற்ற பொருட்களை வாங்கிக் கொண்டு அறைக்குத் திரும்பியதும் தான் அரிநெல்லியை மறந்து விட்டது புரிந்தது..

      திரும்பச் செல்ல வேண்டுமென்றால் ஒன்றரை கி.மீ..

      அடுத்த வாரம் இருந்தால் - வாங்கிக் கொள்ளலாம் என்று இருந்து விட்டேன்..

      நீக்கு
    2. அமீரகத்தில் கிடைக்கிறது என்பதைக் கேட்டு எனக்கும் ஆச்சர்யம். இப்படி ஒரு நெல்லிக்காய் இருப்பதே வடக்கத்தியர்களுக்குத் தெரியவில்லை! முழு நெல்லிக்காய் தான் இங்கே அதிகம் பயன்படுத்துவார்கள் - ஊறுகாய், முரப்பா என செய்வார்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
    3. மறதி - இப்போதெல்லாம் நிறைய மறக்கிறது! நேற்று அலுவலத்திற்குச் செல்லும்போது வீட்டைப் பூட்டிக்கொண்டு இறங்கி பேருந்து நிறுத்தம் வரை சென்ற பிறகு தான் பர்ஸ் எடுத்துக் கொள்ளாதது நினைவுக்கு வந்தது! நல்லவேளை பேருந்தில் ஏறியிருந்தால் கஷ்டம்..... மீண்டும் வீட்டுக்கு வந்து பர்ஸ் எடுத்துக் கொண்டு சென்றேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  7. சிறு வயதில் பள்ளி அருகில் உள்ள தோழி வீட்டில் அரி நெல்லிக்காய் மரம் இருக்கும்.

    மதிய உணவு இடைவேளையில் அவள் வீட்டுக்கு போய் மரத்தை மொட்டை அடிப்போம்.
    தோழி பிரேமாவின் நினைவு வந்து விட்டது.

    அப்புறம் மதுரையில் சகோதரி வீட்டில் உண்டு , திருவெண்காட்டில் இருக்கும் போது சாரின் நண்பர் வீட்டிலிருந்து பெரிதாக அரி நெல்லிக்காய் வரும் அதை துருவி சாதம், ஊறுகாய் எல்லாம் போடுவேன். சாருக்கும் மிகவும் பிடிக்கும் அரி நெல்லிக்காய்.

    இப்போதும் எங்கும் கண்டாலும்
    வாங்கி விடுவேன்.

    ஊறுகாய், சாதம் செய்முறை , படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரி நெல்லிக்காய் பதிவு பலருக்கும், உங்களுக்கு உட்பட, பழைய நினைவுகளை மீட்டெடுக்க உதவியிருக்கிறது. சிறு வயது நினைவுகளை அசைபோடுவது ஸ்வாரஸ்யம் தான்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  8. ஆகா சாப்பிட்டுப் பார்க்கத் தூண்டுகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிடைத்தால் செய்து சாப்பிட்டுப் பாருங்கள்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  9. //பழுத்த நெல்லிக்காய்களை நிரப்பிக்கொண்டு கீழே இறங்கி வந்து சுத்தம் செய்து, உப்பு, மிளகாய் பொடி சேர்த்து கொஞ்சம் ஊற வைத்து சாப்பிடுவோம் //

    படிக்கும்போதே பற்கள் கூசுகின்றன! எங்கள் வீட்டில் முழு நெல்லிக்காய் மரம் இருந்தது. அதில் ஏறி உலுக்கி காய்களை பெருக்குவது வழக்கம். அரி நெல்லிக்காய் என்று சொல்கிறீர்கள். நாங்கள் அரை நெல்லிக்காய் என்று சொல்வோம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பற்கள் கூசுகின்றன. அதிகம் சாப்பிட்டாலும் பற்கள் கூசும். ஆனால் அந்த வயதில் அதுவே பேரின்பமாக இருந்தது!

      அரை நெல்லிக்காய் - இப்படியும் சிலர் சொல்வதுண்டு.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  10. அரி நெல்லிக்காய் சாதம், ஊறுகாய் குறிப்புகளுக்கு நன்றி!
    தஞ்சையிலும் இங்கு துபாயிலும்கூட கிடைக்கும். எப்போதும் ஊறுகாய்தான்! எப்போதாவது சாதமும் ரசமும் செய்வதுண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரிநெல்லிக்காய் ரசம் - இதுவரை சாப்பிட்டதில்லை. முடிந்தால் குறிப்பு தாருங்களேன்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

      நீக்கு
  11. அரி நெல்லிக்காய் சாதம் செய்து பார்த்துதான் சாப்பிட வேண்டும்,
    அது இல்லாமல் தங்கள் எழுத்தே அரி நெல்லிக்காய் சாதம்
    சாப்பிட்ட திருப்தியை கொண்டு வந்து விட்டதாய்,,,,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்தபோது செய்து சாப்பிட்டுப் பாருங்கள். நன்றாகவே இருந்தது.

      எழுத்தே சாப்பிட்ட திருப்தியை - தன்யனானேன்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விமலன்.

      நீக்கு
  12. முகப்புத்தகம் வழியே வந்த கருத்துரை:

    Natarajan Vk அதி அற்புதம், ருசிக்கோ ஈடு இணையில்லை. வழக்கம்போல எங்களுக்கு ஒரு பாட்டல் கொடுக்க கோவை அரசி தீர்மானம் செய்துள்ளமை யாம் செய்த பாக்யம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருச்சி வந்தால் கிடைக்கும்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வி.கே.என். சித்தப்பா..

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....