சனி, 17 பிப்ரவரி, 2018

கதம்பம் – பொங்கல் கோலம் – தமிழகத்தில் குளிர் – திருவரங்கம் தோசைக்கல் – முருங்கைக்கீரை அடை – ரஜினி மக்கள் மன்றம்


தமிழகத்தில் குளிர்:



தலைநகரின் குளிருக்குப் பழக்கப்பட்ட எனக்கு, தமிழகத்தில் இருப்பவர்கள் டிசம்பர்-ஜனவரி மாதங்களில் இருக்கும் குளிர் அதிகம் என்று சொல்லும்போது ”அட இது என்ன பெரிய குளிர்” என்று தோன்றும்! தில்லியின் குளிர், பனிப்பொழிவு அதிகம் இருக்கும் இடங்களில் இருப்பவர்களுக்கு, இது ஒன்றுமே இல்லை என்று தோன்றுவது போலவே! தமிழகத்தில் இருக்கும் மிதமான குளிருக்கே பலரும் ஸ்வெட்டர், மஃப்ளர், குரங்கு குல்லாய் என இருப்பதைப் பார்த்தால் கொஞ்சம் வேர்த்தது! திருச்சி N.S.B. சாலையில் இருந்த கடையில் பொம்மைக்கு பட்டுப்பாவடை-தாவணியும் குரங்கு குல்லாயும் அணிவித்து இருந்தார்கள்! ரொம்ப குளிர் ஜாஸ்திப்பா!
 
பொங்கல் கோலங்கள்


பொங்கல் ரெடியாகிட்டு இருக்கு..... வாங்க வாங்க...


பொங்கல் வாழ்த்துகள்....


பொங்கல் வாழ்த்துகள்....

பொதுவாக பொங்கல் சமயத்தில் தமிழகத்தில் இருந்தால் கையில் கேமராவுடன் பொங்கல் கோலங்களை புகைப்படம் எடுக்கச் செல்வது வழக்கம் – மகளும் கூடவே வருவார். இந்த முறை ஏனோ எடுக்கச் செல்லவில்லை. சாதாரணமாக வெளியே உலா வந்தபோது கோலங்களை பார்த்து ரசித்ததுடன் சரி.  மொபைலில் எடுத்த ஒன்றிரண்டு கோலங்களின் புகைப்படங்கள் மட்டும் இங்கே…..

திருவரங்கமும் தோசைக்கல்லும்


தோசைக்கல் இங்கே, மாவு எங்கே?....

திருவரங்கம் கோவிலுக்குள் கிடைக்கும் தோசைக்கல் ரொம்பவே பிரபலம். சரியாக நான் புறப்படும் நாளன்று தலைநகர் தில்லியிலிருந்து நண்பரின் அழைப்பு – “புறப்பட்டாச்சா? எனக்கு Flat-ஆ இருக்கும் தோசைக்கல் வேணும். கண்டிப்பா வாங்கிட்டு வர… ஊத்தப்பம் செய்யணும், குழிவான கல்லுல சரியா வராது….” என்று நளமஹாராஜாவிடம் இருந்து! அதற்காகவே கோவிலுக்குச் சென்று எப்போதும் வாங்கும் கடைக்காரரிடம் சென்று பேசி வாங்கினேன். இங்கே கிடைக்கும் தோசைக்கல் இரயில் தண்டவாளத்தில் செய்யப்படுபவை! மிகவும் தரமானவை. ”நன்கு தடிமனான கல்லாக வாங்கிக் கொண்டால் தலைமுறைக்கே வரும்!” As per the Shopkeeper! என்னிடமும் அப்படி திருவரங்கத்தில் வாங்கிய தோசைக்கல் தான் இருக்கிறது! இந்த நான்-ஸ்டிக் சமாச்சாரமெல்லாம் உடம்புக்கு நல்லதில்லைங்கோ”! கடைக்காரர் சொன்ன இன்னுமொரு விஷயம் – “அமெரிக்காவுக்கே இங்கே இருந்து தோசைக்கல் எடுத்துட்டு போறாங்க” சார்!

மணீஸ் கஃபே - முருங்கைக்கீரை அடை:


முருங்கைக்கீரை அடை...



திருவரங்கத்தில் ராஜகோபுரத்திலிருந்து கோவிலுக்குப் போகும் பாதையில் இருக்கும் ஒரு சிறிய உணவகம் மணீஸ் கஃபே. 1983-இல் ஆரம்பிக்கப்பட்ட உணவகம். இன்றைக்கும் கடை நடத்துகிறார்கள். தினம் தினம் ஏதாவது ”இன்றைய ஸ்பெஷல்” என எழுதி வைத்திருப்பார்கள். பெரும்பாலும் பார்த்தபடி செல்வதோடு சரி. இந்த முறை சென்றபோது முருங்கைக்கீரை அடை எனப் பார்க்க, நேரே உள்ளே சென்றுவிட்டோம். முருங்கை அடை, முறு முறு ரவா தோசை, நாட்டு வெல்லம் போட்ட காஃபி என திவ்யமான உணவு. பாசத்துடன் ஒரு பெண்மணி பரிமாற இன்னும் சுவை கூடியது. கை கழுவ உள்ளே போன இடத்தில் பார்த்தால், 1983-ஆம் ஆண்டு விலைப்பட்டியல் கண்ணில் பட்டது. அவர்கள் அனுமதியோடு புகைப்படம் எடுத்துக் கொண்டேன்! எவ்வளவு விலை குறைவு என நீங்களே பாருங்களேன்! திருவரங்கம் சென்றால் ருசிக்க வேண்டியது நிறைய உண்டு – அவற்றில் ஒன்று இங்கே உணவு!

ரஜினி மக்கள் மன்றம்:



திருவரங்கத்தில் பெரும்பாலான கடைகளில் மேற்கண்ட விளம்பரம் காணப்படுகிறது – “ரஜினி மக்கள் மன்றத்தில் உறுப்பினராகச் சேர இங்கே அணுகவும்!” எல்லாம் விளம்பர மயம்! நிறைய இடங்களில் வானளாவிய ரஜினி பதாகைகள் – தைப்பூசத்திற்கு வந்திருக்கும் பக்தர்களை வருக வருக என வரவேற்கிறோம் என ஒரு பதாகையில் ரஜினி கைக்கூப்பியபடி – கோபுரத்தின் உயரத்திற்கு ஈடாக வைத்திருந்தார்கள்.  என்று தணியும் இந்த சினிமா மோகம்!

செல்ஃபி புள்ள – சாம்பாரில் முக்கிய பன்:

இந்த முறை சென்னையிலிருந்து தில்லி வந்த போது ஜெட் ஏர்வேஸ்-இல் முன்பதிவு செய்திருந்தேன். வந்து பார்த்தால் International Flight – Boing! 2 – 4 – 2 என சீட் அமைப்பு. Boarding Pass வாங்கும்போது, அந்த யுவதி, “We are going fully packed Sir…  Would you like to upgrade from Economy to Executive by paying just 11500 rupees extra?” என்றார்! புன்னகையுடன் மறுத்தேன்! அப்படி Executive Class-ல் பயணிக்க நினைத்திருந்தால் முன்னரே பதிவு செய்திருப்பேனே! உள்ளே சென்றபோது பார்த்தால், முக்கால் வாசி இடங்கள் காலி! இதுவும் வியாபார யுக்தி!

பெரும்பாலானவர்களுக்கு International Flight-ல் முதல் பயணம் போலும்! ஒரே செல்ஃபி மயம்! சரி நாமும் ஒன்று எடுத்துக் கொள்வோம் என எடுத்துக் கொண்டேன்! வழக்கம்போல, புன்னகையுடன் வந்த கபோம் என்ற பெண், “வெஜ்-ஆ, நான்-வெஜ்-ஆ?” என்ற கேள்வி கேட்க, வெஜ் என்றேன்! வந்தது சாம்பார்/Dhதாலில் முக்கிய வடை அளவு பன், ஒரு புளிப்பு [புளி] மிட்டாய், 10 ரூபாய் Kitkat மற்றும் தேநீர்! இவங்க “Free Meals” என்று சொல்லி இப்படிக் கொடுப்பதற்கு கொடுக்காமல் இருப்பது நலம்! வடிவேலு மாதிரி “ஆணியே புடுங்க வேண்டாம்…” என்று சொல்ல நினைத்தேன் – சொல்லவில்லை!

கல்லூரி ஆட்டோ கிராஃப்:



கல்லூரி நண்பர்களின் ஒரு WhatsApp குழு இருக்கிறது. அதில் கல்லூரி முடிவில் வாங்கிய ஆட்டோகிராஃப் பக்கங்களை பகிர்ந்து கொண்டிருந்தார்கள். நானும் அப்படி ஒன்று வாங்கினேனே எனத் தேடினால் கிடைத்தது – எங்கள் பிரிவில் 47 பேர் – 37 பெண்கள் 10 ஆண்கள்! ஆனால் நான் ஆட்டோகிராஃப் வாங்கியது வெறும் மூன்று பேரிடம் மட்டுமே – இரண்டு ஆண்கள், ஒரே ஒரு பெண்! மற்றவர்களிடம் ஏன் வாங்கிக் கொள்ளவில்லை என யோசித்துக் கொண்டிருக்கிறேன்! நீங்கள் வாங்கி இருக்கிறீர்களா? இன்னமும் அந்த ஆட்டோகிராஃப் புத்தகத்தினை வைத்திருக்கிறீர்களா? சொல்லுங்களேன்!

உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லலாமே!

மீண்டும் ச[சி]ந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

58 கருத்துகள்:

  1. கதம்பம் நல்லாருக்கு. பெண் கோலம் போட்டிருந்தாளா பொங்கலுக்கு? மனீஸ் கபே குறித்துக்கொண்டேன். நல்லா இல்லைனா உங்கள் பின்னூட்டத்திலும் எழுதிவிடுவேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்மா கோலம் போட, பெண் கலர் கொடுத்தார். ஏற்கனவே ஒரு கதம்பம் பதிவில் வெளியிட்ட நினைவு.

      நல்லா இல்லைன்னா! :) எழுதுங்கள் நெ.த.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  2. ஶ்ரீரங்கம் கோவில் கடையில் வாங்கின தண்டவாளக்கல் தோசைக்கல் நன்றாக இல்லை. என் நண்பன் எனக்கு அவன் ஊரிலிருந்து ஒரு தண்டவாளக்கல் வாங்கி இங்கு கொண்டுவந்து கொடுத்தான். அதில் தோசை வார்க்க ஆரம்பித்தபின் நான்ஸ்டிக் கல் சும்மாத்தான் இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருவரங்கத்தில் வாங்கும் எல்லா தோசைக்கற்களும் நன்றாக இருக்க வேண்டிய அவசியமில்லை. பல மெலிசாக இருக்கும். நல்ல எடையுள்ளவை தான் தோசை வார்க்க நன்றாகவும், நீண்ட நாட்களும் வரும். தவிர, தோசை வார்க்கும் கல்லை சப்பாத்தி, பராட்டா போன்றவை தயாரிக்க பயன்படுத்தக்கூடாது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  3. பொங்கல் கோலங்கள் அழகு.. அருமை..

    இந்த மணீஸ் கபே விலைப்பட்டியல் முன்பு Fb ல் வந்திருந்தது..
    ஸ்ரீரங்கத்தில் தான் மணீஸ் கபே என்பதை இன்று தெரிந்து கொண்டேன்..

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனது தளத்தில் கூட ஒரு முறை அவர்களது பதாகை ஒன்றை வெளியிட்டு இருக்கிறேன் - “பொறுமை இருப்பவர்கள் மட்டும் உள்ளே வரவும்” என்று எழுதி வைத்திருப்பார்கள்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  4. எங்கள் வீட்டில் மங்கிக் குல்லாய் எல்லாம் போட்டுக் கொண்டு குளிர் குளிர் எனும்போது எனக்கும் தோன்றும். நான் இதெல்லாம் போட்டுக்கொள்வதில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழகத்தில் குரங்குக் குல்லாயுடன் இருப்பவர்களைப் பார்த்தால் எனக்கு வேர்க்க ஆரம்பிக்கிறது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. அப்படியா? இங்கு வாங்கும் தோசைக்கற்கள் அவ்வளவு சிறப்பானவையா? இங்கு ஆறு மாதத்திற்கொருமுறை தோசைக்கல் வாங்கி கொண்டிருக்கிறோம். அமைய மாட்டேன் என்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஶ்ரீராம், சென்னை, கந்த கோட்டம் அருகே தேவராஜமுதலித் தெருனு நினைக்கிறேன். இரும்புப் பாத்திரங்கள் மட்டுமே விற்பார்கள். அங்கே விதவிதமான அளவுகளில் தோசைக்கற்கள் கிடைக்கும். செங்கோட்டைக் கல் எனப்படும் தட்டையான தோசைக்கல். குழிவானது, அடைக்கல் என்று கிடைக்கும். நல்ல கனமாக இருக்கும். எனக்குக் கல்யாணத்தின் போது கொடுத்த தோசைக்கல்லே நல்ல கனமாக இருக்கும். என்றாலும் அதன் பின்னர் கந்த கோட்டத்தில் வாங்கிய கல்லையேப் பத்து வருஷங்களுக்கு மேலாகப் பயன்படுத்துகிறேன். தூக்க முடியாது. தோசை வார்த்து முடித்த பின்னர் அடுப்பிலேயே இருக்கும். நன்கு ஆறிய பின்னரோ அல்லது இரவில் தோசை வார்த்தால் மறுநாளோ தான் அடுப்பிலிருந்து எடுக்க முடியும். அவ்வளவு கனம்! நான் ஸ்டிக் சும்மா ஷோவுக்காக இருக்கு! பயன்படுத்துவது இல்லை.

      நீக்கு
    2. அங்கேயே ஒரு செட்டியார் கடையில் கந்தகோட்டத்துக்கு நேரே நின்றால் இடப்பக்கம், கோபுர வாயிலில் நின்றால் வலப்பக்கம் உள்ள தெருவில் பெருங்காயம் கிடைக்கும்.நல்ல வாசனையாக இருப்பதோடு நீண்ட நாட்களுக்கும் வரும். முன்னெல்லாம் அங்கே இருந்து தான் வாங்கிப் பயன்படுத்துவேன்.

      நீக்கு
    3. அம்பேரிக்காவுக்கே இங்கே இருந்து தோசைக்கல் போகுது ஸ்ரீராம். அன்றைக்கு கடைக்காரர் Pack செய்து அனுப்ப வைத்திருந்தார். அமெரிக்காவிலிருந்து வந்த சிலர் வாங்கிக் கொண்டு இருந்தார்கள்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    4. முன்பு கிடைத்த அளவு கனமான கற்கள், இப்போதும் கிடைக்கின்றன - ஆனால் தூக்க பயந்து கொண்டு யாரும் வாங்குவதில்லை.

      சென்னையில் கிடைக்கும் இடங்கள் சொன்னது நல்லது - ஸ்ரீராம் அவர்களுக்குப் பயன்படும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
    5. முன்பெல்லாம் கட்டி பெருங்காயம் தான் பயன்படுத்தினோம். இப்போது கிடைப்பது இல்லை - அதுவும் தில்லியில்! எல்லாம் பொடி மயம்! ராம்தேவ் பாபாவின் தயாரிப்பில் கூட பொடி தான்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
    6. இப்போவும் ஶ்ரீரங்கம் கோபால ஐயங்கார் கடையில் கட்டிப்பெருங்காயம் இளகிய நிலையில் கிடைக்குது ஶ்ரீராம். 2012 இல் 30 ரூக்கு விற்றது இப்போ60 ரூக்குவிற்கிறார்கள். என்றாலும் ஒரு பாக்கெட் வாங்கினால் ஒரு மாதத்துக்கும் மேல் வரும். அதையே ஊற வைச்சும் விட்டுக் கொண்டால் இன்னும் சில நாட்கள் கூட வரும். நல்ல மணம். அவங்களே பெருங்காயப் பவுடரும் விற்கின்றனர்.

      நீக்கு
    7. கோபால ஐயங்கார் கடை - அடுத்த முறை கேட்டுப் பார்க்கிறேன். பெருங்காயத் தூளில் பாதிக்கு மேல் மைதா மாவு தான்! எப்போதாவது அதன் Content படித்துப் பாருங்கள்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
    8. ஆமாம், அதனால் தான் நான் கடையில் விற்கும் எல்.ஜி.பெருங்காயத் தூள் வாங்குவதில்லை. மற்ற ப்ரான்ட்களும் வாங்குவதில்லை. கோபால ஐயங்காரிடமே லூஸாகப் பெருங்காய்த் தூள் கிடைக்கும். அதை வாங்கிப்பேன். எப்போவானும் யாருக்காகவாது எல்.ஜி. பெருங்காயத் தூள் வாங்கறாப்போல் ஆயிடும். அது மாதிரி இப்போ விசேஷத்துக்கு வாங்கினது இருக்கு! :)

      நீக்கு
    9. ஆமாம் கீதாக்கா சொன்னது போல் செங்கோட்டைக் கல் பிரஸித்தி...நாங்கள் எங்கள் வீட்டில் முன்பு அதுதான் வாங்குவது...
      கீதாக்கா ஆமாம் கந்தசாமி கோயில் பக்கத்துலதான்...நான் இப்பவும் அங்கதான் வாங்கறது...

      பெருங்காயத் தூள் நான் இங்கு மேற்குமாம்பலத்தில் அல்லது பாரிஸ் கார்னரில் கட்டி, தூள் அங்குதான் வாங்கறேன். நாட் எல்ஜி..

      கீதா

      நீக்கு
    10. கோபால் ஐயங்கார் கடைக்கு அடுத்த முறை வரும்போது போய்விட வேண்டியது தான். வீட்டிலும் சொல்கிறேன் வாங்கிப் பார்க்க.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
    11. செங்கோட்டைக் கல் - இது எனக்கு புதுசு!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  6. கோலங்கள் அழகு.

    மணீஸ் கபே வரும் ஆசை வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆசை வந்து விட்டதல்லவா.... நீங்களும் திருவரங்கம் வந்துவிடுங்கள்.... வரும்போது சொன்னால் நானும் சந்திக்க முயல்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  7. ஆட்டோகிராஃப் வாங்காத மாணவப்பருவமும் ஒரு பருவமா? நானும்! ஆனால் இப்போது எங்கிருக்கிறதோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் கல்லூரியில் தான் வாங்கினேன் - அதுவும் மூன்றே பேரிடம்! :(

      உங்களுடைய ஆட்டோகிராஃப் எங்கே இருக்கிறது என தேடிப் பாருங்கள்... ஒரு பொக்கிஷம் இல்லையா?

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  8. //இங்கே கிடைக்கும் தோசைக்கல் இரயில் தண்டவாளத்தில் செய்யப்படுபவை! மிகவும் தரமானவை.. //

    இரயில் தண்டவாளத்திலிருந்து தோசைக் கல்லா?.. 'காக்கா முட்டை' படம் ஞாபகத்திற்கு வந்தது.. அங்கு ரயில் கரி என்றால் இங்கு தண்டவாளமா?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழைய தண்டவாளங்களை விலைக்கு வாங்கி அடித்து தருகிறார்கள். காக்கா முட்டை படம்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜீவி ஐயா.

      நீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    கதம்பம் படிக்க படிக்க வெகு நேர்த்தியாய் சுவையாய் இருந்தது. குளிர் பொம்மை அவ்வளவு அழகாயிருந்தது.முதலில் சட்டென பார்த்தவுடன் நிஜமான பெண்குழந்தைக்கு செய்யபட்ட அலங்காரம் என நினைத்து விட்டேன்.
    கோலங்கள் மிக அழகாயிருந்தது. பொறுமையுடன் போட்டவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    கல்லில் சுட்ட தோசையின் சுவை நான்ஸிடிக்கில் வராது! உண்மை.
    மனீஸ் கபே விற்பனை பட்டியல் பார்க்கவாவது அங்கு வர வேண்டும்.குறித்துக்கொண்டேன்.
    பள்ளி. கல்லூரி தோழமைகளை என்றுமே மறக்க இயலாது. அதற்காகத்தான் ஏதாவது எழுதி வாங்கி வைத்துக் கொள்கிறோம். ஆனால் நம்வாழ்வு பயணத்தில் அது வழி மாறி சென்று விடுகின்றது. பகிர்வுக்கு நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பள்ளி கல்லூரி தோழமைகளை என்றுமே மறக்க இயலாது என்பது உண்மை. இன்றைக்கும் கல்லூரி தோழமைகள் சிலருடன் நட்பு தொடர்கிறது. மற்றவர்களையும் தேடிக்கொண்டிருக்கிறோம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு
  10. என் நண்பன் எனக்கு அவன் ஊரிலிருந்து ஒரு தண்டவாளக்கல் வாங்கி இங்கு கொண்டுவந்து கொடுத்தான். -- நெல்லை

    ஊருக்கு ஊர் தண்டவாளக்கல்லா?.. தண்டவாள ஸ்டீல் அந்தளவுக்குக் கேட்டபாரில்லாமல் போச்சா?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஊருக்கு ஊர் தண்டவாளக் கல்! :) எனக்குத் தெரிந்து திருவரங்கத்தில் மட்டும் தான்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜீவி ஐயா.

      நீக்கு
    2. இல்லை வெங்கட், மதுரையிலும் இரும்புப் பாத்திரக்கடைகளில் தண்டவாளக்கல்லில் செய்யப்பட்ட தோசைக்கற்கள் கிடைத்தன. முன்னெல்லாம் இரவு ஒன்பது மணிக்கு விற்றுக் கொண்டு வருவார்கள். என்னுடைய தோசைக்கல் அப்படித் தான் 2 ரூக்கு வாங்கினதாக என் அம்மா சொல்வார். அந்தக் கல்லை சென்னையை விட்டு வரும்போது யாரோ கேட்டார்கள் என்றதால் கொடுத்துவிட்டேன். என்றாலும் இப்போதும் மனம் அந்தக் கல்லில் தான் இருக்கிறது!:) பழகிய கல்! அதே போல் திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையிலும் தோசைக்கல் பிரபலம். தட்டையான தோசைக்கல் அங்கே நிறையக் கிடைக்கும். அப்போதே அரைத்து அப்போதே வார்க்கும் தோசைக்கு அந்தக் கல் நன்றாக இருக்கும். எங்க அப்பா வீட்டில் இருந்தது. கோயிலுக்குக் கொடுத்துட்டோம். :) தூக்க முடியாது! ஒரே நேரம் நான்கு தோசைகள் வார்க்கலாம்.

      நீக்கு
    3. பெரிய செவ்வகக் கல் - நான்கு தோசைகள் வார்க்கும் கல்லை உணவகங்களிலும், இங்கே நடக்கும் விழாக்களிலும் பார்த்ததோடு சரி. தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வந்திருக்கிறேன் - ஒரு விழாவில்....

      பழகிய கல்லை யாருக்காவது கொடுப்பதென்றால் நிறைய பேருக்கு கஷ்டம் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..

      நீக்கு
    4. வெங்கட்ஜி இங்கு சென்னையில் கேஸ்ட் அயர்ன் தோசைக்கல் வாணலி கிடைக்கிறது. சதுர வடிவிலும் ஹோட்டலில் இருப்பது போலவும் கிடைக்கிறது ஜி. நல்ல பெரிதாக இருக்கும். கீதாக்கா சொல்லியிருப்பது போல் மீடியம் சைசில் 4 தோசை வார்க்கும் அளவில் இருக்கிறது.

      கீதா

      நீக்கு
    5. கேஸ்ட் அயர்ன் என்பதால் கொஞ்சம் பயமும் உண்டு - கீழே போட்டால் உடைந்து விடும். வாணலி - என்னிடம் இருப்பது கல்கத்தா வாணலி!
      பெங்காலி நண்பரை வாங்கி வரச் சொன்னேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  11. //நீங்கள் வாங்கி இருக்கிறீர்களா? இன்னமும் அந்த ஆட்டோகிராஃப் புத்தகத்தினை வைத்திருக்கிறீர்களா? சொல்லுங்களேன்!//

    நான் நிறைய தமிழ் எழுத்தாளர்கள்-- என் காலத்து தமிழ்ச் சான்றோர்களிடம் வாங்கி பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தமிழ்ச் சான்றோர்களிடம் வாங்கி பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்..// ஆஹா பொக்கிஷம் அல்லவா.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜீவி ஐயா.

      நீக்கு
  12. கதம்பம் அருமை வெங்கட்ஜி! ஆட்டோகிராஃப் இப்போது என்னிடம் எதுவும் இல்லை என்றாலும் சில பழைய நண்பர்களைச் சென்ற வருடம் சந்தித்தேன்...எங்கள் ஊரிலும் தோசைக்கல் இது போன்றவை ஃபேமஸ். அது போல நாடன் கத்தி என்று இரும்புக் கத்திகள் இங்கு நன்றாகக் கிடைக்கும்.

    கீதா: முதலில் தோசைக் கல்...ஜி நான் "நான்ஸ்டிக்" ஸ்டிக் ஆக மாட்டேன்....எஸ் தடா...நம் வீட்டிலும் தண்டவாளச் சட்டிகள், தோசைக் கல் தான்..கேஸ்ட் அயர்ன். கனமாகப் பல நாட்கள் உழைக்கும் நீங்கள் சொல்லியிருப்பது போல். கொஞ்சம் கனமாக இருக்கும்...கீழே போடாமல் பார்த்து ஹேண்டில் செய்யணும் உடைந்துவிடும். இரும்பு வாணலி தாவாக்களும் கிடைக்கின்றன என்றாலும் நான் கேஸ்ட் அயர்ன் தான்..அது போல வீட்டில் கேரளத்து இரும்புக் கத்திதான் காய் கட் செய்ய, தேங்காய் உடைக்க, அப்புறம் இரும்பு அறுவாள்மனை, தேங்காய்த் துருவி என்று......கல் அழகா இருக்கு. அங்கு வந்தால் கடையில் பார்க்க வேண்டும்..

    ஆட்டோ கிராஃப் இன்னும் இருக்கிறது என்னிடம். என் வகுப்பு மாணவர்கள் எழுதிக்கொடுத்தது. எங்கள் வகுப்பில் எம் ஏ யில் நாங்கள் 7 பெண்கள் மற்றவர் எல்லோரும் ஆண்கள். ஆண் நண்பர்களுடன் பழகுவதில் எனக்குக் கூச்சம் இருந்ததில்லை. முருங்கை அடை..ஆஹா அங்கு வரும் வாய்ப்பு கிடைத்தால் சாப்பிடனும் இந்த உணவகத்தில்..

    கோலங்கள் நல்லாருக்கு.

    கமலும் கூட ஆங்காங்கே இப்படி அவரது ரசிகர்கள் மீட்டிங்க் போட்டு உறுப்பினர்கள் சேர்க்கிறார் என்று தெரியவருகிறது.

    கதம்பம் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாடன் கத்தி - ஆஹா, இது கேள்விப்படாத விஷயம். கிடைத்தால் வாங்க வேண்டும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
    2. நாடன் கத்தி என்பது வேறு ஒன்றுமில்லை ஜி நானும் அதுதான் வீட்டில் பயன்படுத்துகிறேன். மரப்பிடியுடன் இரும்புக் கத்தி...நல்ல ஷார்ப்பாக இருக்கும். அவ்வப்பொது கல்லில் உரசிக் கொள்ளலாம்...காய் கட் பண்ண மிகவும் சௌகரியமாக இருக்கும். இங்கு சென்னையிலும் சந்தைகளில் கிடைக்கிறது. ஸ்ரீரங்கத்திலும் கண்டிப்பாகக் கிடைக்கும். பாருங்கள்

      கீதா

      நீக்கு
    3. மரப்பிடியுடன் இரும்பு கத்தி - இது எல்லா இடத்திலும் கிடைக்கிறது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  13. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  14. என்னிடமும் நான் பள்ளி நாட்களில் வாங்கிய ஆட்டோகிராஃப் நோட்டு இருக்கிறது. அதிலேயே திரு டிடிகே அவர்களிடமும் நடிகர் ரவிச்சந்திரனிடமும் ஆட்டோகிராஃப் வாங்கினேன். வைச்சிருக்கேன் இன்னமும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா நீங்கள் பள்ளியில் படிக்கும்போது வாங்கிய ஆட்டோகிராஃப் நோட்டு இன்னமும் இருக்கிறதா.... வாவ்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  15. தண்டவாளம் செய்யப் பயன்படுத்தும் இரும்பிலே செய்வாங்கனு கேள்வி. ஆனால் சொல்வது என்னமோ தண்டவாளக் கல் என்று தான். அதே போல் சீனாச்சட்டி என்னும் சட்டியும் காய்கள் வதக்கப் பயன்படும். காய்கள் சீராக வதங்கும். மொறுமொறு என்றிருக்கும். அதில் தான் ஐந்து குழித் தட்டில் துணி போட்டு இட்லி வார்ப்பேன். இப்போவும் துணி போட்டுத் தான் இட்லி வார்ப்பது. ஆனால் அந்தச் சீனாச்சட்டியை இப்போதெல்லாம் தூக்க முடியலை என்பதால் வேறே சட்டி (ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில்) ஏழு குழி உள்ளது வாங்கி வைச்சிருக்கேன். அதிலே துணி போட்டு இட்லி வார்ப்பேன். ஸ்பாஞ்ச் போலத் தான் இட்லி வரும்! :) எத்தனை பேர் வந்தாலும் துணி போட்டுத் தான் இட்லி வார்ப்பது! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துணி போட்டு இட்லி வார்ப்பது - பெரும்பாலான வீடுகளில் விட்டுப்போன பழக்கம். நீங்கள் இன்னமும் தொடர்வது மகிழ்ச்சி அளிக்கிறது! நெய்வேலியில் நண்பர் வீட்டில் இப்படி இட்லி - பெரிய பெரிய இட்லி சாப்பிட ஒரு போட்டி நடந்தது நினைவுக்கு வருகிறது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.....

      நீக்கு
    2. உண்மை தான். துணி போட்டு வார்க்கும் இட்லிகள் பெரிதாகவே இருக்கும். ஐந்து சாப்பிடும் இடத்தில் மூன்றே போதுமானது!

      நீக்கு
    3. உண்மை தான். ஆனால் போட்டி போட்டுக்கொண்டு 15-க்கு மேல் சாப்பிட்டேன் அப்போது! :) இப்போது நினைக்க மட்டுமே முடியும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
    4. கீதாக்கா, வெங்கட்ஜி எங்கள் வீட்டிலும் துணி போட்டுத்தான் இப்போதும் வார்க்கிறேன். அருமையாக வரும். எளிதாகவும் வரும்.

      அது போல் உளுந்து இப்போதும் நான் எங்கள் ஊரில் பயன்படுத்தியது போல் கறுப்பு தொலி உளுந்து பாதி உடைத்ததுதான் ஊறப்போட்டுக் களைந்து பயன்படுத்துகிறேன். தோசை செம கிரிஸ்பாக வரும். இட்லியும் துணியில் செய்வதால் செம ஸாஃப்டாக வரும்...

      கீதா

      நீக்கு
    5. கருப்பு உளுந்து களைவது - நான் கூட செய்திருக்கிறேன் சிறு வயதில். இப்போது அப்படி கருப்பு உளுந்து பயன்படுத்துபவர்கள் மிகவும் குறைவு தான். வெள்ளை உளுந்து தான் பலரும் பயன்படுத்துகிறார்கள்.....

      நீங்களும் இட்லி - துணி போட்டுதான் செய்கிறீர்கள் என அறிந்து மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  16. அத்தனையும் நல்லா இருக்கு.. மகள் வரைந்த படம் அழகு.. அதிலும் மாட்டின் மூக்குத்தான் கொஞ்சம் சிரிப்பை வர வைக்குது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகள் வரைந்த படம் அல்ல. தெருவில் பார்த்த கோலம் என எழுதி இருக்கிறேனே....

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

      நீக்கு
  17. முகப்புத்தகம் வழியே....

    Sreemathi Ravi: என்னிடம் autograph புத்தகம் இன்றும் இருக்கிறது.
    வகுப்பில் இருக்கும் அனைவரின் புத்தகத்திலும் என்னுடைய செய்தி இருக்கிறது .
    நீளமாக எழுதித் தர வேண்டும் என்ற கோரிக்கையோடு எல்லாரும் என்னிடம் எழுதி வாங்கிக் கொண்டார்கள். எழுதத் தெரியாத மற்றவர்களுக்காக ghost writing ம் எழுதிக் கொடுத்திருக்கிறேன்.

    ஆனால் என்னுடைய புத்தகத்தில் எனக்கு நெருக்கமான மிகக் குறைந்த பேர்களிடமிருந்து எழுதி வாங்கியதுதான் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Ghost writing - ஆஹா....

      வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீமதி ரவி.

      நீக்கு
  18. ரொம்ப நாளைக்குப் பிறகு, வெங்கட் தளத்திலும், மீண்டும் படிக்கக்கூடிய அளவில் நிறைய செய்திகளோடு பின்னூட்டங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப நாளைக்குப் பிறகு - ஆமாம்! எப்பவாது தான் படிக்கக் கூடிய அளவில் இருக்கும்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  19. கல்லூரி ஆட்டோகிராஃப் இன்றும் என்னிடம் உள்ளது. ஒரு பாவிப்பயபுள்ள எப்படி ஆசீர்வதித்திருந்தான் தெரியுமா! "Wife is a knife, that cuts your life" என்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா என்ன ஒரு வில்லத்தனம்.... அப்படி எழுதி இருந்ததை அண்ணிகிட்ட சொல்லி இருக்கீங்களா?

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....