ஞாயிறு, 10 ஜூன், 2018

ஒரு நாள் ஒரு புகைப்படம் – புகைப்பட உலா – கவிதை தாருங்கள்!

Photo of the Day Series-1

புகைப்படங்கள் எடுப்பது எனக்குப் பிடித்த விஷயம் என்பது உங்கள் அனைவருக்குமே தெரிந்த விஷயம். பயணக்கட்டுரைகளிலும் மற்ற பதிவுகளிலும் பெரும்பாலும் நான் எடுத்த புகைப்படங்களையே பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறேன். ஒவ்வொரு சமயமும் எடுக்கும் படங்கள் அனைத்தையுமே வலைப்பூவில் பகிர்ந்து கொள்வது முடியாததாக இருக்கிறது. புகைப்படங்களை Flickr அல்லது Google Photos-ல் சேமித்து வைக்கலாம் என்றாலும் அதனைப் பார்க்க ஒருவரும் வருவதில்லை. இந்த வலைப்பூவிலேயே தினம் தினம் புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டால் இப்போது வருகின்ற சிலர் கூட வருவதை நிறுத்தி விடலாம்! தனியாக புகைப்படங்களுக்கென்று வலைப்பூ தொடங்கும் எண்ணம் வந்தாலும் செயல்படுத்த விருப்பம் இல்லை!


சரி என்னதான் செய்யலாம் என யோசித்தபோது வந்த எண்ணம் – முகநூலில் ஒவ்வொரு தினமும் நான் எடுத்த ஒரு புகைப்படத்தினை பகிர்ந்து கொள்வது! கூடவே அந்தப் புகைப்படத்தினைப் பார்த்தவுடன் தோன்றும் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வது – #Photo_of_the_day எனும் Tag Line-ல் முகநூலில் இப்படி சில படங்களைப் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறேன்! கடந்த சில நாட்களாக முகநூலில் இப்படி பகிர்ந்து கொள்ள ஆரம்பித்ததிலிருந்து சில பல Like மற்றும் கருத்துரைகள் அதில் வந்திருக்கின்றன.  முக நூலில் என்னைத் தொடராத பலரும் வலைப்பூவில் உண்டு என்பதால் வழக்கம் போல ஞாயிறன்று போடும் புகைப்பட உலாவில் படங்களைத் தொகுத்து வழங்க எண்ணம்.  அப்படி கடந்த சில நாட்கள் பகிர்ந்த புகைப்படங்கள் இங்கே ஒரு புகைப்பட உலாவாக!


படம்-1: எடுத்த இடம் – திருவரங்கம், மே 2018 – சித்திரைத் தேர் திருவிழா.

அடுத்த நொடியில் நடக்கப் போகும் ஒரு விஷயம், உங்கள் வாழ்க்கையையே புரட்டிப் போடலாம்! வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் மகிழ்வுடன் இருக்கப் பழகிக் கொள்ளுங்கள்.


படம்-2: எடுத்த இடம் – திருவரங்கம், மே 2018 – சித்திரைத் தேர் திருவிழா.

இருப்பதிலேயே சுகமான இடம் எது என்றால் அப்பாவின் தோள்கள் தான் – தோளிலே அமர்ந்து கொண்டு வேடிக்கப் பார்ப்பது எவ்வளவு ரம்மியமான விஷயம். அதற்காகவே குழந்தையாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது…. உங்களுக்கு?


படம்-3: எடுத்த இடம் – தஞ்சாவூர், மே 2018 – தஞ்சை பெரிய கோவில் உள்ளே

தோல்வியடைந்துவிடுவோமோ என்ற பயத்திலேயே நாம் கனவு காண்பதை விட்டு விடுகிறோம். ”நான் இருக்கேண்டா, பயப்படாதே” என்று சொல்கிறானோ அந்த பிங்க் உடை சிறுவன்!


படம்-4: எடுத்த இடம் – திருவரங்கம், மே 2018 – சித்திரைத் தேர் திருவிழா.

இன்னிக்கு நல்ல வியாபாரம் நடக்குமா? வீட்டில் நாலு வயிறு நிறைய பணம் கிடைக்குமா? ஆழ்ந்த யோசனையில் இருக்கிறாரோ இந்த வியாபாரி.


படம்-5: எடுத்த இடம் – திருவரங்கம், மே 2018 – சித்திரைத் தேர் திருவிழா.

பக்தியின் உச்சம் – “நீ எதைக் கொடுத்தாலும் அதை கண்மூடி ஏற்றுக் கொள்கிறேன்” கோவிந்தா கோஷம் சுற்றிலும் முழங்க, தன்னிலை மறந்த நிலையில் இருந்த ஒரு பக்தர். அவர் கையில் கொடுக்கப்பட்டது ஒரு எரியும் கல்பூரம் – கொடுத்தது அவர் அருகில் இருந்த மனிதன்!


படம்-6: எடுத்த இடம் – திருவரங்கம், மே 2018 – சித்திரைத் தேர் திருவிழா.

மே மாத வெய்யிலுக்கு – அதுவும் கத்திரி வெய்யிலுக்கு கேட்கவா வேண்டும் – கொளுத்தித் தள்ளுகிறது! அந்த சமயத்தில் தேர்த் திருவிழா பார்க்க வந்தவர்களிடம் விற்பனை செய்கிறார் – விற்பனைப் பொருள் விசிறி! உழைத்து உழைத்து, வெய்யிலில் திரிந்து கருத்துப் போன உழைப்பாளி.

இந்தப் படங்களை தினம் ஒன்றாக முகநூலில் வெளியிட்டு, சில நாட்கள் படத்திற்குப் பொருத்தமாக கவிதை தாருங்களேன் என கேட்க, சில கவிதைகள் எழுதி இருந்தார்கள். உதாரணத்திற்கு ஒரு கவிதை – படம் எண் நான்கிற்கு நிஷாந்தி பிரபாகரன் அவர்கள் எழுதியது..

வானவில் வர்ணங்களாய்
ஊது குழல் தரு உந்து சக்தி

இளம் சிட்டுக்களின்
இசை மீட்டல்

வான் தொட வைக்கும்
வாழ்க்கை போராட்டம்

முடிவிலிகள் இல்லாத
முகவரியாய்
வாடி நிற்கும் வண்ண மகன்.

படங்களில் உங்களுக்குப் பிடித்த படத்திற்குப் பொருத்தமாய் ஒரு கவிதை எழுதலாமே – பின்னூட்டத்தில்….

பகிர்ந்து கொண்ட படங்கள் உங்களுக்குப் பிடித்திருந்ததா என்பதையும் சொல்லுங்களேன்.

மீண்டும் ச[சி]ந்திப்போம்…
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

36 கருத்துகள்:

 1. குட்மார்னிங் வெங்கட். படங்கள் முகநூலில் பார்த்தேன். வரிகள் வசீகரம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம். முகநூலில் பார்த்ததை இங்கே மீண்டும் தொகுப்பாக - முகநூலில் தொடராதவர்களுக்காகத் தர வேண்டியிருந்தது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. 4) ​வாழ்க்கை
  கருப்பு வெள்ளையில் இருந்தாலும்
  விசிறிகள் வண்ணங்களில்!​

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த வரிகள் ஆறாம் படத்திற்குத் தானே! :)

   வாழ்க்கை கருப்பு வெள்ளையில் - விசிறிகள் வண்ணங்களில்! என்ன ஒரு முரண் இல்லையா....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 3. 3) கண்கள் மூடி இருப்பது
  கடவுள் தெரிவதால் அல்ல
  கை எரிவதால்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா... இந்த வரிகள் ஐந்தாவது படத்திற்கு!

   கண்கள் மூடி இருப்பது கடவுள் தெரிவதால் அல்ல - கை எரிவதால்!!!

   Just for information, இந்தப் படம் எடுக்கப்பட்டது நீட்டிய கைகளில் கற்பூரம் வைக்கப்பட்டதற்கு முன்னர்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 4. 2) பாதி குழல் வித்திருக்கேன்..
  நானும்
  வாழ வழி வச்சிருக்கேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த வரிகள் நான்காம் படத்திற்கானது! :)

   ”நானும்” எனும் வார்த்தை இல்லாமலே கூட இருவரிக் கவிதையாக அமைக்கலாம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 5. 2) காசு கிடைச்சு என்ன செய்ய
  ஸ்கூல்
  ஃபீசு கட்ட வழியில்ல..
  வாழ வழி வச்சுருக்கேன்
  பாதி குழல் வித்துருக்கேன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான்காம் படத்திற்கான மேம்படுத்தப்பட்ட வரிகள் சிறப்பு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 6. இரண்டு என்று நான் போட்டிருப்பது படம் எண் நான்கிற்காக... மன்னிக்கவும்! இரண்டுக்கு அதாவது நான்கிற்கு இரண்டாவதாகப் போட்டிருப்பது முதலாவதின் (சிந்தனை) நீட்சி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா.... எண்கள் மாறி இருக்கவே எனக்கும் கொஞசம் குழப்பம்!

   சிந்தனை நீட்சி நன்றாகவே இருந்தது ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. 3) ஏத்தி விட்டவங்க
  இறக்கி விட
  மாட்டாங்களா?
  சிரிடா...
  நம்பிக்கைதான் வாழ்க்கை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதானே..... ஏற்றி விட்டு புகைப்படம் எடுத்த அப்பா, இறக்கி விடாமலே போய்விடுவாரா என்ன! நம்பிக்கை தான் வாழ்க்கை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 8. 1) ஹா... ஹா... ஹா...
  குழந்தையும் தெய்வமும் ஒன்று
  என்று இதனால்தான் சொல்றாங்களா?
  சாமியையும் தூக்கிகிட்டுதான் போறாங்க...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சாமியையும் தூக்கிட்டு தான் போறாங்க! அதே தான்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 9. நல்ல முயற்சி நான்கு பேரை எழுத வைக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான்கு பேரை எழுத வைக்கும்! அதே தான் எனது எண்ணமும். பார்க்கலாம் எப்படி, எத்தனை பேர் எழுதுவார்கள் என!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 10. படங்களே கவிதையாய் இருக்கிறது.
  நிஷாந்தி கவிதையும் , ஸ்ரீராம் கவிதையும் நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படங்களே கவிதையாக - மகிழ்ச்சி கோமதிம்மா....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 11. இப்பவே வேஷம் போடப் பழக்குகிறார்கள் முதல் படம் பார்த்ததும்தோன்றியது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்பவே வேஷம் போடப் பழக்குகிறார்கள் - எப்போதும் போல உங்கள் சிந்தனை வித்தியாசமாக!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு
 12. கவித்துவமான படங்கள். ஸ்ரீராமின் வரிகளும் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு
 13. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 14. அற்புதமான புகைப்படங்கள். சிறு விளக்கம் கூடுதல் சிறப்பு தொடர வாழ்த்துக்களுடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சற்றே இடைவெளிக்குப் பிறகு தங்களது வருகை. மிக்க மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   நீக்கு
 15. அழகிய படங்கள்..
  கண்ணையும் கருத்தையும் கவர்கின்றன...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஐயா.

   நீக்கு
 16. புகைப்படங்கள் அருமை.

  அப்பாவுக்கு பாவம் அதிகச் சுமை ஏன்?
  நானே சுமப்பேன் என் சுமையை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நானே சுமப்பேன் என் சுமையை! நன்று.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி!

   நீக்கு
 17. சிறப்பான தொகுப்பு. கவிதை எழுத வேண்டுமென்றால் நிறைய யோசிக்க வேண்டும். அது நமக்கு சரிபடாது. பதிவு அருமை. புகைப்படம் எடுப்பது ஒரு கலை. ஒருக்கால் உங்களுக்கு விருது கூட கிடைக்கலாம். தொடர்ந்து பகிர்ந்து கொள்ளுங்கள்.

  நமது வலைத்தளம் : பயணங்கள் பலவிதம் - 08 #கொட்டகலை #கொழும்பு #பயணம் #அனுபவம் #Kotagala #Colombo #Travel #Travelling #Experience #SIGARAM #SIGARAMCO #சிகரம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சிகரம் பாரதி.

   நீக்கு
 18. படங்கள் எல்லாம் அருமை வெங்கட்ஜி! நிஷா அவர்களின் கவிதையும் அருமை...
  ரசித்தோம் அனைத்தையும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதாஜி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....