வெள்ளி, 8 ஜூன், 2018

குஜராத் போகலாம் வாங்க – பயணத்தின் முடிவு – நல்ல மனம் வாழ்கஇரு மாநில பயணம் – பகுதி – 49

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


Riverfront, Ahmedabad

அழகிய விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஆற்றங்கரையில் [Riverfront, Ahmedabad] சில மணித்துளிகள் இருந்து இயற்கையை ரசித்துக் கொண்டிருந்த பிறகு எங்கள் தங்குமிடத்திற்குத் திரும்பியபோது இரவு மணி 10.30-க்கு மேல். அடுத்த நாள் காலையில் அஹமதாபாத் நகரிலிருந்து நான் தலைநகர் தில்லிக்கும் கேரள நண்பர்கள் திருவனந்தபுரத்திற்கும் செல்ல வேண்டும். எங்கள் விமான நேரங்களுக்கிடையே ஒரு மணி நேரத்திற்கும் மேல் என்பதால் நான் முதலில் புறப்பட வேண்டும். அவர்கள் ஒரு மணி நேரம் கழித்துப் புறப்படுவார்கள். காலை நேரத்தில் அறையைக் காலி செய்யும் போது கணக்கு வழக்கு பார்க்க முடியாது என்பதால் முதல் நாள் இரவிலேயே அறை வாடகை பாக்கியும் கொடுத்து, பயணத்திற்கான எங்கள் பங்கினையும் கணக்கிட்டு கொடுக்கல் வாங்கல்களை முடித்துக் கொண்டோம்.உறங்கச் செல்லலாம் என நினைத்து விளக்குகளை அணைத்து நித்ரா தேவியை அணைத்துக் கொள்ள முயல, அவள் எங்கள் பிடிக்குள் வரவில்லை. இந்தப் பயணத்தில் கிடைத்த அனுபவங்களைப் பேசியபடியே இருந்தோம். சில நிமிடங்களுக்குப் பிறகுதான் உறங்கினோம். அதிகாலையில் நான் எழுந்து குளித்துத் தயாராக, மற்ற நண்பர்களும் ஒருவர் ஒருவராகத் தயாராக வேண்டும். இரண்டு அறைகள் என்பதால் பிரச்சனை இல்லை. எங்களுக்கு இந்தப் பயணத்தில் கிடைத்த இன்னுமொரு நட்பு எங்களுக்கு வாகனம் தந்த நிறுவனத்தின் உரிமையாளர் Dதர்ஷன் Bபாய்! பயணத்திற்கான மொத்தை தொகையும் முதல் நாள் இரவு தான் கேட்டிருந்தேன் – நாங்கள் கொடுத்த முன்பணத்தினைக் கழித்துக் கொண்டு சொல்லுங்கள் எனக் கேட்டபோது அவர் சொன்ன விஷயம்…..“நீங்கள் எங்கே போய்விடுவீர்கள், நான் தான் எங்கே போய்விடப் போகிறேன். உங்கள் நண்பர் குரு அவர்கள் தான் ஏற்பாடு செய்திருக்கிறார் – அதனால் எனக்குத் தரவேண்டிய தொகை பற்றிய கவலையை விடுங்கள். நான் கணக்குப் பார்த்து உங்களுக்குச் சொல்கிறேன் – ஒன்றும் அவசரமில்லை. நாளை காலை உங்களை அழைத்துச் செல்ல ஒரு வாகனமும் பிறகு ஒரு மணி நேரம் கழித்து வேறொரு வாகனமும் அனுப்புகிறேன் – அதற்கு எந்தக் கட்டணமும் நீங்கள் கொடுக்கத் தேவையில்லை. என்னுடைய WA எண்ணிற்கு ஒரு முறை நீங்கள் ஒரு தகவல் அனுப்பினால், அதே எண்ணில் கணக்கு வழக்குகளை நான் அனுப்பி வைக்கிறேன் – எனது வங்கி எண்ணையும் அனுப்பி வைக்கிறேன் – அதில் பணம் செலுத்தினால் போதுமானது” என்று சொன்னார்.  நல்ல மனம் கொண்ட தர்ஷன் அவர்களுக்கு நன்றி மீண்டுமொரு முறை இங்கே சொல்லிக் கொள்கிறேன்.தில்லி வந்த பிறகு கூட நான்கைந்து முறை கேட்டுக் கொண்ட பிறகு தான் கணக்கு எண்ணையும் கொடுக்க வேண்டிய பணம் பற்றியும் தகவல் அனுப்பினார் – அதற்கு பதினைந்து நாட்களுக்கு மேல் ஆனது! தகவல் கிடைத்த அன்றைக்கே அவரது வங்கிக் கணக்கிற்கு பணத்தை அனுப்பி வைத்து தகவல் சொன்னேன். கூடவே அவரை அழைத்து பணம் போட்ட விஷயத்தினை மீண்டும் சொல்லி எங்களது நன்றியையும் தெரிவித்துக் கொண்டேன்.  எப்போது குஜராத் வந்தாலும் சொல்லுங்கள், நான் வண்டி அனுப்பி வைக்கிறேன் என்றார்.  இப்படி பாசத்தோடு சொல்ல ஒரு நண்பர் அங்கே இருக்கிறார் என்பதை நினைக்கும்போது கொஞ்சம் கர்வமாகக் கூட இருக்கிறது – நட்பின் பலம் அறிந்து!விமானம் மூலம் நான் தில்லி வந்து சேர்ந்த சில மணி நேரம் கழித்து நண்பர்கள் திருவனந்தபுரம் சென்று சேர்ந்தார்கள். நல்லபடியாக வந்து சேர்ந்த தகவல்களை பரிமாறிக் கொண்டோம். பயணம் இனிதாகவே நிறைவுற்றது. இந்தப் பயணத்தில் பார்த்த இடங்கள் பல – ஒவ்வொரு இடத்திலும் கிடைத்த அனுபவங்கள், தகவல்கள், எடுத்த புகைப்படங்கள் என அனைத்தையும் இந்தப் பயணத்தொடரில் கொடுக்க முயற்சித்திருக்கிறேன் – அதில் வெற்றி பெற்றிருக்கிறேனா என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும். எத்தனை எத்தனை இடங்கள் பார்த்திருக்கிறோம் – எத்தனை கிலோமீட்டர் தொலைவு பயணித்து இருக்கிறோம் என்று நினைக்கும்போது வியப்பாக இருக்கிறது! தில்லி – அஹ்மதாபாத் – தில்லி பயணம் விமானத்தில் என்றாலும் மற்ற இடங்கள் அனைத்தும் சாலை வழிப்பயணம் தான்!தில்லி – அஹமதாபாத் – மொதேரா - பாடண் – கட்ச் – Bபுஜ் – த்வாரகா – சோம்நாத் – தியு – சாசன் Gகிர் – அஹமதாபாத் – தில்லி! இது தான் நாங்கள் பயணித்த பாதையாக இருந்தது! ஏழு நாட்கள் மொத்த பயணம் முடித்து எட்டாம் நாள் காலையில் தான் தலைநகர் திரும்பினேன். பயணித்தது ஐந்து பேர் என்பதால் மொத்த செலவும் பிரித்துக் கொண்டதில் தனித்தனியாக செலவு அதிகமில்லை! கிடைத்த அனுபவங்களைப் பார்க்கும் போது செலவு நிச்சயம் அதிகமில்லை என்பதை இங்கே சொல்லியாக வேண்டும். ஒத்த எண்ணங்களைக் கொண்ட ந[ண்]பர்கள் உடன் பயணிக்கும்போது எந்த சூழலையும் எதிர்கொள்ள முடியும் என்பதால் இப்படி நண்பர்களோடு பயணிப்பது பிடித்திருக்கிறது. ஆதலினால் தொடர்ந்து பயணிப்போம்.இந்தப் பயணத்தில் என்னுடன் பயணித்த கேரள நண்பர்கள், வாகனம் ஏற்பாடு செய்து கொடுத்த நண்பர் குரு, வாகன நிறுவனத்தின் உரிமையாளர் Dதர்ஷன் Bபாய், ஏழு நாட்களும் எங்களுடனேயே இருந்த ஓட்டுனர் முகேஷ், தங்குமிட உரிமையாளர்கள், சிப்பந்திகள் என பலருக்கும் இந்த நேரத்தில் மீண்டும் ஒரு முறை நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் ஒரு முக்கியமான நன்றி நவிலல் – பயணத்தில் கிடைத்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள, அதனைப் படித்து ஒவ்வொரு பதிவுக்கும் கருத்துத் தெரிவித்த உங்களுக்கும் மனம் நிறைந்த நன்றி! தொடர்ந்து எனை ஊக்குவிக்கும் உங்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!குஜராத் பயணம் இந்தப் பகுதியுடன் முடிவுக்கு வந்திருக்கிறது – அடுத்த பயணத் தொடர் உண்டா?  என்ற கேள்விக்கு பதில் வரும் திங்களன்றைய பதிவில் சொல்கிறேன்! இப்போதைக்கு டாடா பை பை!

நட்புடன்

வெங்கட்
புது தில்லி

16 கருத்துகள்:

 1. குட்மார்னிங் வெங்கட். தர்ஷன் பாய் குணம் வியக்க வைக்கிறது. முதல் படமும் அதைவிட கடைசிப் படமும் டாப்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதல் படம் அலைபேசியில் எடுத்தது. அத்தனை சரியாக வரவில்லை! :(

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. வணக்கம் சகோதரரே

  படங்கள் நன்றாக உள்ளது கடைசி படம் மிகவும் அழகாய் இருக்கிறது. சென்ற பயணங்களை பற்றி விவரித்து எழுதுவதும் ஒரு கலைதான். உங்கள் பயணக் கட்டுரைகள் மூலம் நாங்களும் பல ஊர்களை சுற்றிப்பார்த்து பல கலைநயம் மிகுந்த இடங்களை ரசித்து பல கோவில்களை தரிசித்து உடன் பயணித்த அனுபவத்தை பெற்று மகிழ்ந்தோம். அதற்கு தங்களுக்கு என் மனம நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

  இனி அடுத்த பயணங்களிலும் பின் தொடர்கிறோம். மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பயணத்தில் கூடவே வந்ததில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   நீக்கு
 3. இரண்டாவது புகைப்படத்தைப் பார்த்ததும் பேளூர், ஹலேபேட் நினைவிற்கு வந்தன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இரண்டாவது படம் எடுக்கப்பட்ட இடம் - மொதேரா சூரியனார் கோவில்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 4. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 5. உங்கள் வழியில் நாங்களும் பல இடங்களை பார்த்தாச்சு...

  மிக மகிழ்ச்சி ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

   நீக்கு
 6. மிக அருமையான பயணம், அனுபவங்கள். நல்ல மனிதர்கள் சந்திப்பு. நிறைவான பயணம். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 7. எங்களையும் உங்களோடவே கூட்டி போன மாதிரி இருந்துச்சுண்ணே. இரண்டாவது படம் பேளூர், ஹலேப்பேடு மாதிரி இருக்கே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இரண்டாவது படம் - மொதேரா சூரியனார் கோவில்.....

   பயணத்தில் உடன் வந்ததில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

   நீக்கு
 8. அருமையான பயண்ம் வெங்கட்ஜி! உங்கள் அனுபவங்கள் வெகு சிறப்பு என்பதில் ஐயமில்லை. தொடர்கிறோம்..

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....