சனி, 2 ஜூன், 2018

தமிழகத்திலிருந்து தஹிக்கும் தலைநகருக்கு……



சூரிய அஸ்தமனக் காட்சி - திருவரங்கத்திலிருந்து....

மூன்று வாரங்கள் தலைநகரிலிருந்தும் வேலைப்பளுவிலிருந்தும் தப்பித்து குடும்பத்துடன் தமிழகத்தில் இருந்த பின்னர் இந்த வாரம் தலைநகர் திரும்பி இருக்கிறேன். கடைசி ஒரு வாரம் தமிழகத்தில் தினம் தினம் மழை கொஞ்சம் பெய்ததால் வெய்யிலின் கொடுமை அவ்வளவு தெரியவில்லை -  தலைநகரின் சூடு அனுபவித்த எனக்கு தமிழகத்தின் வெய்யில் அவ்வளவு அதிகமாகத் தெரியவில்லை. மூன்று வாரங்கள் தமிழகத்தில் – விழுப்புரம், திருச்சி, சிவகங்கை, தஞ்சாவூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்குச் சென்று வர முடிந்தது இந்தப் பயணத்தில். தலைநகரிலிருந்து நேரே விழுப்புரம் – அப்பாவின் சதாபிஷேக விழாவில் கலந்து கொண்டு பின்னர் திருச்சி. நடுவே சிவகங்கை பயணம் – இரண்டு நாட்களுக்கு!



குலதெய்வம் சாஸ்தா அபிராமேஸ்வரர்....

பின்னர் பாண்டிச்சேரி இரண்டு நாட்கள் – கல்லூரி நட்புகளைச் சந்திக்கத் திட்டமிருந்தபடியே குடும்பத்துடன் சென்று வந்தேன் – நாங்கள் படித்தது நெய்வெலி என்றாலும், சந்திக்கத் தேர்ந்தெடுத்தது புதுச்சேரி எனும் பாண்டிச்சேரியை! மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார் எங்கள் கல்லூரித்தோழியும் அவரது மூத்த சகோதரியும். இரண்டு நாட்களும் புதுச்சேரியில் சில இடங்களைப் பார்த்ததோடு, கடற்கரையிலும் நல்ல ஆட்டம் போட முடிந்தது – அதுவும் குழந்தைகளுக்குத் தான் எத்தனை உற்சாகம் கடலைப் பார்த்தவுடன்! பெரியவர்களே கடலைப் பார்த்துவிட்டால் சிறுவர்களாகிவிடுவதுண்டே!


புதுச்சேரி கடற்கரையிலிருந்து....
கடலைப் பார்த்துக் கொண்டே இருப்பது பிடித்த விஷயம் எனக்கு!


ஓணான் எனப்படும் ஒடக்கான்....
புதுச்சேரியில் எடுத்த புகைப்படம்...

சில நட்புகளை 27 வருடங்களுக்குப் பிறகு பார்த்தேன்! ஆமாம் 91-ஆம் ஆண்டில் பார்த்த சிலரை 2018-ஆம் ஆண்டு இந்த சந்திப்பில் தான் பார்க்க முடிந்தது.  மொத்தம் 14 பேர் – குடும்பத்தினருடன் சேர்த்து 35 பேர்! மிகவும் இனிமையான சந்திப்பாக அமைந்தது. சந்திப்பு பற்றிய விவரங்களையும், புதுச்சேரி அனுபவங்கள் பற்றியும் பின்னர் விரிவாக எழுதுகிறேன். நிறைய படங்கள் எடுத்திருக்கிறேன் – இங்கே ஒரே ஒரு படம் மட்டும் இப்போதைக்கு – கொங்குத் தமிழில் ஒடக்கான் என அழைக்கப்படும் ஓணானின் ஒரு படம் இங்கே! படம் எடுக்கப்பட்ட இடம் ஆரோவில், புதுச்சேரி!


கரந்தை ஜெயக்குமார் ஐயா மற்றும் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா....
தஞ்சை பெரிய கோவிலில்....

சிவகங்கையில் இருக்கும் மனைவியின் மாமா வீட்டில் இரு நாட்கள். அங்கே இருந்த போது சில கோவில்களுக்குச் சென்று வந்தோம். இல்லத்தரசி பிறந்த ஊர் – மேலும் ஒவ்வொரு பள்ளி விடுமுறையிலும் சென்று வந்த ஊர் என்பதால் அவர் சிறு வயதில் பார்த்த இடங்களுக்கெல்லாம் சென்று பார்த்து, எனக்கும் மகளுக்கும் காண்பித்து மகிழ்ந்தார். அது பற்றி முகநூலில் எழுதிய விஷயங்கள் கதம்பம் பதிவாக வெளியிடப் படலாம்! வேலு நாச்சியாரின் அரண்மனைப் பகுதியில் இருக்கும் கோவிலுக்கும் சென்று வந்தோம். மிகவும் அமைதியான சூழலில் இருந்த கோவில் ரொம்பவே பிடித்திருந்தது. மேலும் இங்கே பார்த்த சிவன் கோவிலில் அறுபத்தி மூவரின் பஞ்சலோக/வெண்கலச் சிலை போல வேறு எங்கும் அறுபத்தி மூவர் சிலைகள் பார்த்ததில்லை. இந்தக் கோவிலும் சமஸ்தானத்தினைச் சேர்ந்தது தான் – சமீபத்தில் கும்பாபிஷேகம் ஆனது!


கரந்தை ஜெயக்குமார் ஐயா மற்றும் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா....

தஞ்சை பெரிய கோவிலில்....


தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் புத்தர் சிலை....


இந்தப் பயணத்தில் இன்னுமொரு ஆசையும் நிறைவேறியது. தஞ்சைப் பெரியகோவிலுக்குச் சென்று நின்று நிதானித்து புகைப்படங்கள் எடுக்க வேண்டும் எனும் ஆசை – காலை புறப்பட்டு கோவிலுக்குச் சென்று படங்கள் எடுத்துக் கொண்ட பிறகு தஞ்சை பதிவர்கள் திரு கரந்தை ஜெயக்குமார் மற்றும் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா அவர்களையும் சந்திக்க முடிந்தது. முனைவர் ஐயா ஒரு தகவல் பொக்கிஷம் – தஞ்சை பெரிய கோவில் பற்றியும் சுற்று வட்டாரக் கோவில்கள் பற்றியும் தேவாரத் திருவுலா பற்றியும் நிறைய தகவல்கள் பகிர்ந்து கொண்டார். தஞ்சை பெரிய கோவில் சிற்பங்களில் மூன்று இடங்களில் புத்தர் சிலை இருப்பதைக் காண்பித்தார் – அவர் சொல்லாவிடில் எனக்கு நிச்சயம் தெரிந்திருக்காது! மூன்று இடங்களிலும் படங்கள் எடுத்துக் கொண்டேன்.  தஞ்சை பெரிய கோவில் படங்கள் தனிப்பதிவாக வெளியிடுகிறேன்.


திருவரங்கம் - சித்திரைத் திருவிழா சமயத்தில் பக்தர்கள்....



நடுவே திருவரங்கம் கோவிலின் சித்திரைத் திருவிழா – தேரோட்டம் மற்றும் முதல் நாள் மாலை நடக்கும் வழிபாடுகளை புகைப்படம் எடுத்திருக்கிறேன். முதல் நாள் மாலை சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து வரும் பக்தர்கள் செய்த ஒரு விஷயம் – ரொம்பவே கலவரப் படுத்தியது – அந்த விஷயம் பற்றி பிறகு எழுதுகிறேன்! ஒரு புகைப்படம் மட்டும் இங்கே உதாரணத்திற்கு! தேர்த் திருவிழா சமயத்திலும் நிறைய புகைப்படங்கள் எடுத்திருந்தேன்.  திருவரங்கம் வரும் சமயத்தில் எப்படியும் ரிஷபன் ஜியைப் பார்த்து விட முடியும் – வீட்டின் அருகிலேயே அவர் வீடும் இருப்பதால். கீதாம்மாவை தான் பார்க்க முடியவில்லை – அடுத்த பயணத்தில் பார்த்து விட வேண்டும். கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று இப்பவே சொல்லி இருப்பார்!



மூன்று வாரம் தமிழகத்தில் இருந்து விட்டு இந்த வாரத்தில் தலைநகரில் விமானம் தரையிறங்கும் போது இரவு 10.30 மணி! வெளிப்புறத்தில் 40 டிகிரி என்று தகவல் தந்தார் விமானப் பணிப்பெண்! பகலில் 40 டிகிரி என்று சொன்னால் கூட ஒத்துக் கொள்ளலாம்! இரவில் அதுவும் 10.30 மணிக்கு! இங்கே இது சாதாரணமப்பா! தஹிக்கும் வெய்யிலில், வேர்வை மழையில் நனையத் தயாராகிவிட்டேன் அப்போதே! இந்தப் பயணம் பற்றிய தகவல்கள், பதிவுகள் கொஞ்சம் கொஞ்சமாக எழுதி வெளியிடுகிறேன். இப்போதைக்கு ஒரு சில தகவல்கள் மட்டும்!

பதிவு பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டம் வாயிலாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
   
மீண்டும் ச[சி]ந்திப்போம்…
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

42 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி

    கீதா

    பதிலளிநீக்கு
  2. படங்கள் அட்டகாசம்!!
    கடல் நிலவு கோயில் கோபுரம் ஓணான் அட்டகாசம்...

    ஹைஃபைவ் வெங்கட்ஜி! கடலைப் பார்த்துக் கொண்டே இருப்பது எனக்கும் ரொம்பப் பிடிக்கும். ஒவ்வொரு அலையும் வித்தியாசமாய் இருப்பது போலத் தோன்றும். தூரத்தே ஆழமான கடல் அழகு வானைத் தொடுவது போன்ற அந்த ஹொரைசன் என்று பலதும் அழகு.

    பதிவு வாசிக்கிறேன்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிலவு - ? சூரியனின் அஸ்தமனக் காட்சி என எழுதி இருக்கிறேனே கீதா ஜி!

      ஒவ்வொரு அலையும் வித்தியாசமாய் - அதே அதே....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. குட்மார்னிங் வெங்கட். சென்னையிலும் டெல்லி அளவு இல்லாவிட்டாலும் இரண்டு மூன்று நாட்களாக 105 டிகிரி. அனல் பறக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் ஸ்ரீராம்.

      சென்னையிலும் அனல் பறக்கும் வெய்யில்! பல இடங்களில் இப்படித்தான் இருக்கிறது போலும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. அப்பாவுக்கு சதாபிஷேக நிகழ்வா!! அட! அப்போதே சொல்லியிருந்தீர்கள் 80 என்று ஹேப்பி பர்த்டே.

    அப்பாவுக்கு எங்கள் நமஸ்காரங்கள் ஜி!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீதா ஜி! விழா சிறப்பாகவே நடந்து முடிந்தது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. எதிர்க்கட்சியினர் சதியால் நெடுஞ்சாலைத்துறையினரை வைத்து எங்கள் ஏரியா இணைய இணைப்பைத் துண்டித்துள்ளனர்!!!!! இதற்கெல்லாம் அடங்காத ஆளாய் மொபைல் வழி வந்திருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா ஸ்ரீராம் இணையம் போச்?!!!

      நாளைக்கெல்லாம் ஷெட்யூல் பண்ணிட்டீங்களா?!!!

      கீதா

      நீக்கு
    2. ஆமாம் கீதா... புதன் வரை கவலை இல்லை. அதற்குள் சரியாகி விடாதா என்ன?!!!

      நீக்கு
    3. அடடா.... இணையம் இல்லாவிட்டால் ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது இப்போதெல்லாம்! விரைவில் சரியாகட்டும் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    4. இணையம் போச்!

      பதிவுகள் Schedule செய்து வைப்பது நல்ல விஷயம். இந்த முறை தமிழகம் வரும் முன்னர் மாதம் முழுவதற்குமான பதிவுகளை Schedule செய்து வைத்திருந்தேன். தமிழகத்தில் இணையத்தில் உலவுதல் இயலாது! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
    5. புதன் வரை கவலை இல்லை! அதற்குள் சரியாகட்டும்.... இல்லை என்றால் பதிவுலகமே டல்லடிக்கும்! உங்கள் பதிவுகளுக்கு தினம் தினம் வரும் கருத்து மழை இல்லாவிட்டால் கஷ்டம் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. அப்பாவுக்கு நமஸ்காரங்கள். பயணங்களே இனிமையானவை. அதில் பழைய நட்புகளைச் சந்திப்பது அதனினும் இனிமை. முகநூலில் பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணங்கள் இனிமையானவை - 100% உண்மை.

      நட்புகளைச் சந்தித்த தருணங்கள் மறக்க முடியாதவை ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. தஞ்சை பெரிய கோவில்... ஆஹா... எங்கள் ஊர்.. கங்கை கொண்ட சோழபுரம் போகவில்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இம்முறை தஞ்சை மட்டும் தான் சென்று வந்தேன். அடுத்த முறை கங்கை கொண்ட சோழபுரம் செல்ல வேண்டும். பார்க்கலாம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  8. இரவே 40 தில்லியில் ஹயோ!!! தெரிந்த விஷயம்தான் என்றாலும் வாசிக்கும் போது ஹையோ என்றுதான் தோன்றுகிறது..

    ஆதி சிவங்கங்கை மண்ணில் பிறந்தவரா அட! சிவகங்கை சுற்றியுள்ள கோயில்கள் அனைத்தும் அழகாக இருக்கும்.

    பாண்டிச்சேரி அருமையான ஊர். நட்பூக்களைச் சந்தித்தது மகிழ்வான விஷயம்.

    திருவரங்க விழா பக்தர்கள் படம் ஏதோ சொல்லுகிறது உங்கள் பதிவு வரட்டும் அந்தக் கலவரம் என்ன என்று அறிந்திடலாம்.

    முனைவர் ஐயா நிஜமாவே தகவல் பெட்டகம். கரந்தை சகோ இருவரையும் சந்தித்தது மகிழ்ச்சி கோயில் படங்கள் செமையா இருக்கு. இன்னும் வருமே!!!

    கீதாக்கா க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நிச்சயம். ஹா ஹா ஹா ஹா

    நிலவுப் படம் ஓணான் செம! அட்டகாசம்! மழ மழனு வரும் பத்திரிகைகளில் வரும் படங்கள் போன்று ரிச் படங்கள்!! ரசித்தோம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெரிந்த விஷயம் என்றாலும் ஒவ்வொரு வருடமும் வெய்யில் அதிகம் என புலம்புவது நம் கடமையாயிற்றே! :)

      நிலவுப் படம் - மீண்டும் சொல்ல வேண்டியிருக்கிறது - அது சூரியன்!

      மற்ற படங்களும் ரசித்தமைக்கு மிக்க நன்றி கீதா ஜி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. ஆஹா இனி நிறைய தகவல்கள் எதிர் பார்க்கலாம் ஆவலுடன் நானும் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவல்கள் - முடிந்த வரை சொல்கிறேன் ஜி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  10. ஸ்ரீரங்கத்துப் பதிவரையே சந்திக்க முடியாதபோது பெங்களூர் வாசி நானெம்மாத்திரம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெங்களூர் வரும் வாய்ப்பு இதுவரை அமையவில்லை ஐயா. அமைந்தால் உங்களையும் சந்திக்கலாம். சில விஷயங்கள் நம் கையில் இல்லை ஜி.எம்.பி. ஐயா.

      நன்றி.

      நீக்கு
  11. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  12. படங்கள் அருமை.
    பதிவர்கள் சந்திப்பு அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துப் ப்கிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  13. படங்கள் அனைத்தும் மிக அழகாக இருக்கின்றன. இங்கு கேரளத்தில் மழை. எனவே வெயில் தெரிவதில்லை.

    முனவைர் ஐயா மற்றும் நண்பர் கரந்தையாரை சந்தித்தது மகிழ்ச்சி. அது போன்று நம் பழைய கல்லூரி நட்புகளைச் சந்திப்பதும் மகிழ்வான விஷயம்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேரளத்தில் மழை - கொடுத்து வைத்தவர்கள்.... வேறென்ன சொல்ல :))

      தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி.

      நீக்கு
  14. தங்கள் அப்பாவுக்கு வணக்கங்கள் வெங்கட்ஜி

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

      நீக்கு
  15. வணக்கம் சகோதரரே

    தங்கள் கொண்டிருந்த தமிழக பயணங்கள் நல்லவிதமாக அமைந்தது மிக்க மகிழ்ச்சி. படங்கள் ஒவ்வொன்றும் மிக அழகாக உள்ளது.

    தங்கள் குடும்பத்தினருடன் பழைய நண்பர்களை சந்தித்து அளவளாவி மகிழ்ந்தது தங்களுக்கு மிகுந்த மனநிறைவை தந்திருக்கும். அத்துடன் வலையுலக நண்பர்களையும் சந்தித்தது அளவுக்கடங்காத மகிழ்ச்சியையும் தந்திருக்கும். வாழ்த்துக்கள்.

    சதாபிஷேகம் கண்டிருக்கும் தங்கள் பெற்றோர்களுக்கு என் பணிவான நமஸ்காரங்கள்.

    தங்களின் தமிழக சுற்றுலாவில் பிற இடங்களில் கண்ட விபரங்கள் வரும் பதிவுகளில் வருவதை நானும் எதிர்நோக்குகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு
  16. அன்பு வெங்கட்,
    ஒரே வெப்பமாகக் கடந்து,வெப்பத்திலியே புகுந்திருக்கிறீர்கள். ஸ்ரீரங்கம் மட்டும் குளிர்ந்திருக்கிறது.
    ஆதியும்,குழந்தையும் பெற்றோரும்
    அன்பால் பூரித்திருப்பார்கள்.
    தஞ்சை படங்கள் மிக அழகு.
    இந்த ஊரில் நான் மிஸ் செய்யும் ஒரே இடம்
    கடற்கரை.
    கணக்கில்லாமல் கடலைப் பார்க்க முடியும்.
    அந்த அலைகளும் நம் எண்ண அலைகளும் ஒன்று போலத் தோன்றும்.

    பதிவர்களைச் சந்தித்தது மிக மகிழ்ச்சி.
    இனியாவது உங்கள் பதிவுகளை ஒழுங்காகப் படிக்கிறேன்.
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது பதிவுகளைப் படியுங்கள் வல்லிம்மா....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

      நீக்கு
  17. தங்களைச் சந்தித்ததும் உரையாடியதும் மிகுந்த மகிழ்வினைத் தந்தன ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களைச் சந்தித்ததில் எனக்கும் மகிழ்ச்சி ஐயா.

      தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  18. கலைச் சித்தரின் காமிரா வழி எடுக்கப்பட்ட எங்கள் படங்களுக்கு நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் சில படங்கள் இருக்கின்றன. விரைவில் உங்களுக்குத் தனியாக அனுப்பி வைக்கிறேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  19. மகிழ்ச்சியான தருணங்களின் மலரும் நினைவுகளோடு அழகான படபிடிப்பு. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....