செவ்வாய், 10 ஜூலை, 2018

கதம்பம் – பூங்கா – ஃபலூடா – தோசைக்கல் – வர்ண ஜாலம்


வீட்டினருகே பூங்கா:


 
Trichy corporation தளத்துக்கு சென்று தேடியதில் எங்கள் வீட்டருகேயே புதிதாக ஒரு பூங்கா திறக்கப்பட்டுள்ளதாகப் போடப்பட்டிருந்தது. இன்று சென்று பார்த்து வந்தோம். இந்த மாதம் 9ந்தேதி தான் திறந்துள்ளார்கள்.

திறக்கப்பட்ட ஓரிரு நாட்களுக்கு உள்ளாகவே விளையாடும் உபகரணங்களைப் உடைத்து விட்டனராம். ஆதலால் மூடியிருந்த கேட்டின் வழியே படங்களை மட்டும் எடுத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தோம்.

உட்கார இருக்கைகள், சுற்றி வர நடைபாதை, கழிவறைகள், தோட்டம், 8 வடிவ நடை நடக்க கற்களால் ஆன பாதை, சுத்திகரிக்கப்பட்ட நீருக்கு Aquaguard, ஊஞ்சல், சீசா, கார்ட்டூன் கதாபாத்திரங்களால் குப்பைக்கூடைகள், சுற்றி வர வண்ண விளக்குகள் என அழகாக உள்ளது பூங்கா...மக்கள் புழங்க ஆரம்பித்தால் முற்றிலும் மாறி விடும்..:))

நடைப்பயிற்சியும் வானத்தின் வர்ண ஜாலமும்:

வீட்டின் மொட்டை மாடியில் நடைபயிற்சி செய்த போது எடுத்த படங்கள். ஒவ்வொரு நாளும் ஒருவித அழகு! ஆதவனின் அழகை ரசித்துக் கொண்டே மூச்சுப்பயிற்சியும், நடைப்பயிற்சியும்.
தூய்மை இந்தியா:

சமீபத்தில் தான் எங்கள் பகுதியிலிருந்த கார்ப்பரேஷன் குப்பைத்தொட்டிகளை அகற்றி விட்டார்கள் எனவும், இனி அவரவர் குடியிருப்பிலேயே பிரித்துப் போடவேண்டும் எனவும், இது ஒரு நல்ல முயற்சி என்றும் பெருமிதத்தோடு நான் எழுதியது நினைவிருக்கலாம்..

குப்பைத்தொட்டிகளை அகற்றி விட்டால் என்ன!! நாங்கள் அதே இடத்தில் குப்பையைக் கொட்டிக் கொண்டே இருப்போம் என்று மக்கள் தங்களை யாரென்று நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

அருகிலுள்ள பள்ளிக்கு தங்கள் பிள்ளைகளைக் கொண்டு விட வரும் பெற்றோர்கள் கூட தங்கள் பகுதியிலிருந்து இங்கு கொண்டு வந்து கொட்டுகிறார்கள் எனக் கேள்விப்பட்டேன்.

இன்று முதல் வேலையாக திருச்சி கார்ப்பரேஷன் தளத்தில் புகார் செய்திருக்கிறேன். இதற்கு ஏதாவது மாற்று வழி தர அரசே ஏதாவது ஒரு முயற்சி எடுக்கிறது என்றால் ஒத்துழைப்பு கொடுத்தால் தானே!!!

அந்நியன் இருந்தால் தான் சரியாக இருக்கும் போலிருக்கிறது...:))

ஃபலூடா!!இதுவரை ஃபலூடாவை சுவைத்தது இல்லை. முதன்முறையாக நானே செய்து தான் அதை ருசிக்கணும் என்று இருந்தால் என்ன செய்ய முடியும்...:)) வாவ்!! ருசி பிரமாதம்!

எவ்வளவோ முறை மகளும் நானும் என்னவரிடம் கேட்ட போது, சேமியால்லாம் போட்டு "ஏதோ இருக்கும்" என்று சுரத்தே இல்லாமல் தான் சொல்வார்..:))

இன்று செய்து பார்த்த பின் இன்னும் நிறைய ஐடியா கிடைத்தது. அடுத்த முறை இன்னும் வித்தியாசமாக செய்து பார்க்க வேண்டும். செய்வது மிகவும் எளிது.

தோசைக்கல்லின் கதை!!இரண்டு நாட்களுக்கு முன்னர் இரும்பு தோசைக்கல் ஒன்றை வாங்கினேன். அதில் எண்ணெயும் உப்பும் தடவி வைத்து, அரிசி களைந்த தண்ணீர் விட்டு வைத்து என்று தினமும் பழக்கி வருகிறேன்.

என் திருமணத்தின் போது அம்மா தோசைக்கல் வாங்காமல், பணம் தரேன்! உன் மாமியாரிடம் சொல்லி ஸ்ரீரங்கத்திலேயே வாங்கிக்கோ!! அங்க தான் நல்லா இருக்கும் என்று சொன்னார்.

இதைத் திருமணமானவுடன், டெல்லிக்குப் போவதற்கு முன்னால் மாமியாரிடம் சொல்லவும், என்கிட்ட இருக்கற கல்லை எடுத்துண்டு போ!! இப்ப தான் வாங்கிப் பழக்கப்படுத்தறேன், என்று சொல்லித் தந்தார்.

நானும் டெல்லிக்குப் போனவுடன், ஒருநாள் அடைக்கு ஊறவைத்து அரைத்திருந்தேன். எங்கள் குடியிருப்பிலேயே இருந்த நண்பர் மாறனை வேறு சாப்பிட அழைத்திருந்தோம். நானும் அடையை கல்லில் வார்த்து விட்டு எடுக்க நினைத்தால், வந்தால் தானே!!!!

படாதபாடு!! என்னென்னவோ செய்து பார்த்து, இறுதியில் பக்கத்து வீட்டு கவிதாவிடம் தோசைக்கல்லை வாங்கி, என்னவரும் நானும் சேர்ந்து அடையை வார்த்து எடுத்தோம்...:)) இது திருமணமான புதிது என்பதை நினைவு கொள்க!!! அப்புறமெல்லாம் இதெல்லாம் நடக்குமா!!..:))

அதன்பிறகு வெங்காயம் தேய்த்து, புளி தேய்த்து ஒருவாறு அதைப் பழக்கினேன். டெல்லியில் இருந்த வரை அந்தக் கல் தான். அருமையாக இருக்கும். மறந்து கூட அதில் சப்பாத்தியோ, ப்ரெட்டோ செய்ததில்லை.

ஸ்ரீரங்கம் வந்த பின் நான்ஸ்டிக் தவா தான் உபயோகப்படுத்தறேன். ஒரு வருடத்துக்கு மேல் அந்த தவா வருவதில்லை.

அதனால் இரும்புக்கல்லை வாங்கியாச்சு. உங்களிடம் ஏதாவது டிப்ஸ் இருந்தால் சொல்லுங்களேன்.

ஏனிந்த சோதனையோ!!

நேற்று காலை முதல்
மனதே சரியில்லை!
வேலையும் ஓடவில்லை!
திரும்பத் திரும்ப அதையே
மனது அசைப் போட்டுக் கொண்டிருக்கிறது!!

என்ன இந்த முறை
இப்படியாகி விட்டதே!!
இது நாள் வரை ஓரளவு
சரியாகத் தானே இருந்தது!
சரியாக சொல்லவில்லையோ!!
இல்லை கவனிக்கலையோ!

பெரிதாக எந்த எதிர்பார்ப்பும்
வைத்துக் கொள்ளவில்லை!!
அதற்காக இப்படியா???
புத்தம் புதிது!!
அதற்கேற்ற இணை
கிடைப்பதும் கடினம்!!

மாற்றவும் இயலாது!!
கொடுத்த பணமும் வீண்!!
அந்த மனிதரை மனதார
சபித்துக் கொண்டிருந்தேன்.

யாரையென்றா கேட்கிறீர்கள்??? கண்டுபிடியுங்களேன்???

விரைவில் வேறு சில கதம்பச் செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

ஆதி வெங்கட்

32 கருத்துகள்:

 1. தளம் இன்று பழமை போல இடது ஓரமாகத் திறந்தது. ஒரு கமெண்ட் போட்டதும் வழக்கம்போல சரியானது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா... இந்தப் பிரச்சனையை எப்படிச் சரி செய்வது.... டெம்ப்ளேட் மாற்றலாம் என்றால் நிறைய நேரம் எடுக்கும். பலதும் சரி செய்ய வேண்டியிருக்கும். ஏதும் செய்ய முடியுமா பார்க்க வேண்டும் - அடுத்த வார இறுதியில்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. கதம்பச் செய்திகளை முகநூலிலேயே வாசித்திருந்தேன். இங்கும் ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 3. மக்கள் மனது வைத்தாளே நாடு சுத்தம் பெறும் மோடி நினைத்து பயனில்லை.

  பக்கத்து வீட்டு கவிதாவின் பெயரை இன்றும் நினைவில் வைத்து இருப்பது ஆச்சர்யமே சகோ.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெண்களுக்கு அனைத்தும் இனைவில் இருக்கும்..:) மக்கள் மனது வைத்தால் தான்...மிகவும் உண்மை சார்..

   நீக்கு
 4. சுத்தம் எல்லாம் தானாக வரணும். மக்கள் தானாகத் திருந்தினால் தான் உண்டு. நம் மக்களைத் திருத்துவதும் கஷ்டம்! தோசைக்கல் தண்டவாளக் கல் நன்றாக தோசை வார்க்கவும், எடுக்கவும் வரும். புளியைத் தேய்த்துவிட்டு, தோசைக்கல்லில் சில நாட்கள் வெங்காயத்தை நறுக்கி எண்ணெய் விட்டு வதக்கிக் கொண்டு இருந்தால் சீக்கிரம் பழகும். வெங்காயத்தைச் சாப்பிடக் கூடாது! தூக்கித் தான் எறியணும். ஃபலூடா எனக்கும் பிடித்தமானது. வீட்டில் தான் செய்வேன் குழந்தைகள் இருந்தவரை. கடைசியா 2013 இல் செய்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தோசைக்கல்லை பழக்கிட்டேன் மாமி..உங்கள் கருத்துக்களுக்கு நன்றி மாமி..

   நீக்கு
  2. தோசைக்கல் பழக்குவது பற்றி சொல்ல வந்தேன் கீதாக்கா சொல்லிட்டாங்க ஆதி. சேம் மெத்தட். யெஸ் தண்டவாளக் கல் தோசை வார்க்க நன்றாக வரும். அது போலவே ஆப்பச் சட்டியும் நன்றாக வரும்...

   கீதா

   நீக்கு
  3. தண்டவாளக் கல் நல்லது....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 5. http://geetha-sambasivam.blogspot.com/2014/05/blog-post.html என்னோட செய்முறை. 2014 ஆம் வருடம் செய்திருக்கேன். 13 என நினைவில்லாமல் சொல்லி இருக்கேன். :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   நீக்கு
 6. ஃபலூடாவுக்கு ஐஸ்கிரீம் கடைலேர்ந்துதானே? நல்லா வந்திருக்கு.

  நான், நான்-ஸ்டிக் கல்தான் ரொம்ப வருடங்களாக உபயோகப்படுத்திக்கொண்டிருந்தேன். நண்பன் எனக்கு தண்டவாளக்கல் வாங்கித்தந்தான். அதில் தோசை வார்த்துச் சாப்பிட்டபிறகு வேறு எதிலும் தோசை வார்த்தால் பிடிக்கறதில்லை. ஆனால் கல்லை அங்கு விட்டுவிட்டு வந்துவிட்டேன். ஶ்ரீரங்கத்தில் கோவில் கடையில் ஏமாற்றி கனமான கல்லைத் தள்ளிவிட்டுட்டான். அது சரியா வரலை.

  வானத்தின் படங்கள் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐஸ்கிரீம் கடையில் வாங்கியது தான்..கோவில் கடையில் நானும் ஒரு கல் வாங்கி ஒழுங்கா இல்லை..

   நீக்கு
 7. பூங்காவில் விளையாட்டு உபகரணங்களை உடைத்தல், குப்பையைத் தெருவில் கொட்டுதல் எல்லாம் மக்கள் மனநிலை மாறவில்லை என்பதையே காட்டுகிறது. ஃபலூடா படம் மிகவும் கவர்ச்சி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி சார்..

   நீக்கு
 8. பூங்கா நன்றாக இருக்கிறது பயன்பாட்டுக்கு இல்லை என்றால் எப்படி?
  சுத்தமாய் உடைக்காமல் பாதுகாத்த்தால் திறந்து வைப்பார்கள்.

  எல்லாம் முகநூலில் படித்து விட்டேன்.
  அனைத்து செய்திகளும் அருமை.
  படங்கள் நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பயன்பாட்டுக்கும் இருந்தால் தான் நன்றாக இருக்கும்...நன்றி கோமதிம்மா..

   நீக்கு
 9. வெங்கட் அண்ணா மாதிரி எனக்கும் ஃபலூடாமேல் அவ்வளவா ஈடுபாடில்லை....

  தோசைக்கல் பழகிட்டுதா?!

  குப்பையை எங்க வேணும்ன்னாலும் கொட்டுறதுதான் இந்திய குடிமகனின் கடமை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தோசைக்கல் பழக்கியாச்சு ராஜி.. நேற்று அடை வார்த்தேன்..

   நீக்கு
 10. அழகிய படங்கள்...ரசித்தேன்..

  எங்க வீட்டில் இரும்பு தோசைக்கல், கடாய் தான்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி..

   நீக்கு
 11. சரியாக வந்தால் நம் திறமை இல்லையென்றால் ஆடுகளம் சரியில்லை என்னும் கதைதான்

  பதிலளிநீக்கு
 12. அடடா! இந்த தோசைக்கல்லை பழக்குவது எதிர் வீட்டு நாயை பழக்குவதை விட கஷ்டம் போல இருக்கே!

  பதிலளிநீக்கு
 13. பூங்கா உபகரணங்களை பாதுகாக்க நுழைவுக்கட்டணம் போடுவது ஓரளவிற்கு பலன் தரும் என்று நினைக்கிறேன்.

  அல்லது CCTV பொருத்தி வைத்தால் சேதம் செய்பவர்கள் கொஞ்சமேனும் பயப்படுவர். CCTV பதிவு மூலம் அவர்களை பிடித்து அபராதமும் தண்டனையும் விதிக்கலாம்.

  திருச்சி மாநகராட்சிக்கு இந்த ஆலோசனையை சொல்லுங்கள்.

  //அந்த மனிதரை மனதார
  சபித்துக் கொண்டிருந்தேன்.//

  தையல்காரர் கொடுத்த துணியை சரியாக தைக்கவில்லையா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மஹேஷ்.

   நீக்கு
 14. துளசி: கதம்பம் அருமை. ஃபெல்லூடா இதுதான் முதலில் கேள்விப்பட்டுப் பார்க்கிறேன். சாப்பிட்டதில்லை. படங்கள் அருமை.

  கீதா: வான் படங்கள் செமையா இருக்கு ஆதி. நான் எப்போதுமே இரும்புக் கல்தான் எல்லாவற்றிற்கும் பயன்படுத்துகிறேன்.

  ஃபெல்லூடா ரொம்பவே பிடிக்கும். ஆனால் என்ன சாப்பிட முடியாது. டேஸ்ட் மட்டும்தான். வீட்டில் தான் செய்வேன். சில சமயம் கடை ஐஸ்க்ரீம். ரொம்பவே ப்ளான்ட் என்றால் வீட்டிலேயே ஐக்ஸ்க்ரீமும் செய்து...நிறைய ஃப்ளேவர் செய்யலாம். நல்லாருக்கும். சமீபகாலங்களில் தான் செய்வதில்லை.

  சுத்தம் என்பது எல்லாம் சுய விழிப்புணர்வு வர வேண்டும். உங்கள் முயற்சி வெற்றியடையட்டும்.

  ஏன் ப்ளௌவுஸ் சரியா தைக்கப்படலைஆ? இணை என்றால் ப்ளௌஸ் தான்...ஏனென்றால் பொதுவாகவே ப்ளௌஸ் சரியாகத் தைத்து வருவது என்பது ரொம்பவே கஷ்டம். இத்தனைக்கும் உங்களை போல எதிர்பார்ப்பும் ரொம்ப கிடையாது...ஸோ டெய்லரா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....