வியாழன், 12 ஜூலை, 2018

சாப்பிட வாங்க - நண்பரின் பிடிவாதம் – தோசக்காயா பச்சடி
சென்ற சனிக்கிழமை இரவு திருப்பதி தேவஸ்தானத்தின் தலைநகர் கோவிலுக்குச் சென்று தரிசனம் முடித்து வீடு திரும்பிய போது இரவு 09.30 மணி. தஹிக்கும் தலைநகரின் சூட்டுக்கு இதமாய் ஒரு குளியல் போட்டு, படுத்தபோது இரவு 09.50. அலைபேசியில் அழைப்பு – யார் என்று பார்த்தால் ஹைதையில் இருக்கும் ஒரு தெலுங்கு நண்பர். சரி ஏதாவது விஷயம் இருக்கும் – அதனால் தான் இந்த நேரத்தில் அழைக்கிறார் என எடுத்து பேசினால் – முதல் கேள்வி – ”தில்லியில் இருக்கியா? தமிழகத்திலா? வேற எங்கேயுமா?” அவருக்கும் நம்மள பத்தி எப்பவும் ஊர் சுத்தற ஆளுன்னு ஒரு தப்பான நினைப்பு போல! தில்லியில் தான் இருக்கிறேன் என்று சொல்ல, தலைநகரில் இருக்கும் ஒரு இடத்தினைச் சொல்லி, ”உங்கள் வீட்டிலிருந்து எவ்வளவு தூரம் அந்த இடம்?” என்று கேட்டார்.

”இரண்டு கிலோமீட்டர் இருக்கும்” என்று சொன்னவுடன், உடனே புறப்பட்டு வா என்றார். எனக்கோ அலுப்பு, தூங்கினால் போதும் என இருந்தது – சூடு, அன்றைய தினத்தின் அலுவல்கள் தந்த அலுப்பு என எல்லாம் சேர்ந்து, “நான் இப்பதான் வெளியிலிருந்து வந்து படுத்தேன், நாளைக்கு சந்திக்கலாம்” என்று சொல்ல, “இல்லை இல்லை, இப்போதே புறப்பட்டு வா, எனக்கு நாளைக்கு காலையிலேயே விமானத்தில் முன்பதிவு செய்து இருக்கிறது, இப்போதே வந்து பார்” என்று அன்புத் தொல்லை. சரி அடுத்த முறை வரும்போது பார்க்கலாம் என்று சொல்ல, “அட வீட்டிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தானே, பத்து நிமிடத்தில் வந்துவிடலாம், வா” என்று மீண்டும் சொல்ல, வேறு வழியில்லாமல் அவர் சொன்ன இடத்திற்குச் சென்றேன்.

அங்கே சென்று அவரைச் சந்தித்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம். நேரம் போய்க் கொண்டே இருந்தது. 11.00 மணிக்கு மேல் ஆனபிறகும் அவர் என்னை விடுவதாய் இல்லை. நானாகவே, ”சரி நேரமாயிற்று, உங்களுக்கும் நாளை காலையில் விமானம் பிடிக்க வேண்டும், எனக்கும் உறக்கம் வருகிறது, புறப்படுகிறேன்” என்று சொல்ல, கொஞ்சம் இருக்கச் சொல்லி, பேசிக் கொண்டிருந்தவர், தனது பையிலிருந்து மூன்று “தோசாக்காயா” என்று தெலுங்கில் அழைக்கப்படும் Madras Cucumber தந்தார். ஹைதையிலிருந்து எடுத்துக் கொண்டு வந்திருக்கிறார் – நண்பர்களுக்குத் தருவதற்காகவே கொண்டு வந்தாராம் – தலைநகரில் கிடைக்காத விஷயம் என்பதால், எனக்கும் தருவதற்காகத் தான் அந்த நேரத்தில் என்னையும் அழைத்ததாகச் சொன்னார்.”வீட்டுக்குக் கொண்டு செல்ல ஏதுவாய் பை எதுவும் இல்லையே”, எனச் சொல்ல, பேண்ட் பாக்கெட்டில் போட்டு எடுத்துக் கொண்டு செல்லலாமே என்கிறார்! கைகளில் இரண்டு அலைபேசிகள், கண்ணாடி என இருக்க, வேறு வழியில்லாமல் பேண்ட் பாக்கெட்டில் போட்டு [நல்ல வேளை பெரிய பாக்கெட்! – ஜீன்ஸாக இருந்தால் நிச்சயம் அப்படிச் செய்திருக்க முடியாது!] – ஆனால் பாக்கெட் உப்பிக் கொண்டு விநோதமாக இருந்தது – இரவு நேரம் தானே யாரும் பார்க்க மாட்டார்கள் என அப்படியே புறப்பட்டேன் – அவரிடம் விடை பெற்ற பிறகு தான்! இரவு 11.30 மணிக்கு மேலாகி விட்டதால், ஆட்டோவும் கிடைக்காமல், பொடி நடையாக வீட்டுக்கு வந்து சேர்ந்தேன் – இரண்டு பாக்கெட்டுகளிலும் உருண்டை உருண்டையாக தோசக்காயாவுடன்! இப்ப தோணுது, பேசாம, கைக்குட்டையில் கட்டிக் கையில் பிடித்துக் கொண்டு வந்திருக்கலாம் என!

சரி நண்பர் பாசத்தோடு தந்ததால், வாங்கிக் கொண்டு வந்தாயிற்று. தோசாக்காயா வைத்து என்ன செய்வது? ஆந்திரப் பயணங்களில் சாப்பிட்டதுண்டு என்றாலும் இது வரை அதைப் பயன்படுத்தி சமையல் செய்ததில்லை. சரி கூகிள் ஆண்டவரைக் கேட்கலாம் எனக் கேட்டால் நிறைய குறிப்புகள் கிடைத்தன – பெரும்பாலானவை தெலுங்கில் – நமக்குத் தெரிந்த தெலுங்கை வைத்து ஒரு மாதிரி குண்ட்சா புரிந்து கொண்டு செய்தது தான் “தோசக்காயா பச்சடி”!  எப்படி செய்யணும்னு பார்க்கலாமா? [வேற வழியில்ல, நீங்களும் பார்த்து/படித்துத்தான் ஆகணும்!]

தேவையான பொருட்கள்:

தோசக்காயா எனும் வெள்ளரிக்காய் – 1, தனியா – 2 ஸ்பூன், வெந்தயம் – 1 ஸ்பூன், கடுகு – 1 ஸ்பூன், ஜீரகம் – 1 ஸ்பூன், உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன், சிவப்பு மிளகாய் – 5 [காணொளியில் பார்த்த அம்மாயி பத்து சொன்னாங்க, நமக்கு அவ்வளவு காரம் ஆகாது சாமி!], நூனா என தெலுங்கில் அழைக்கப்படும் எண்ணை, உப்பு, பெருங்காயம், கருவேப்பிலை, கொத்தமல்லி, கொஞ்சம் புளி – அம்புட்டுதேன்.

எப்படிச் செய்யணும் மாமு?

தோசக்காயாவை தோல் சீவி, சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணை [நான் நல்லெண்ணை பயன்படுத்தினேன்] விட்டு, காய்ந்ததும், கடுகு போட்டு – அது வெடித்த பிறகு தனியா, ஜீரகம், வெந்தயம், மிளகாய், பெருங்காயம் போட்டு வதக்கவும். அதனை ஆற வைக்கவும். மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.  

அதனுடன் நறுக்கி வைத்த காயை போட்டு மைய அரைத்துக் கொள்ளவும். ஊற வைத்த புளியையும், கொட்டை இல்லாமல் போட்டு அரைத்துக் கொள்ளலாம்.

பிறகு வாணலியில் இன்னும் ஒரு ஸ்பூன் எண்ணை விட்டு, அது காய்ந்ததும், கொஞ்சம் கடுகு போட்டு, வெடித்த பிறகு உளுத்தம்பருப்பு, கருவேப்பிலைப் போட்டு வதக்கி, அரைத்து வைத்திருக்க்கும் விழுதையும் சேர்த்து கலக்கவும். சிம்மில் வைத்து சிறிது நேரம் வதக்கினால், எண்ணை பிரிந்து வரும்போது அடுப்பை நிறுத்தி விடலாம். கொத்தமல்லி தழைகளைத்தூவி அலங்கரிக்கலாம்! தோசக்காயா பச்சடி ரெடி!

சூடான சாதத்தில் இந்த பச்சடியை போட்டு பிசைந்து சாப்பிடலாம். சப்பாத்தியுடனும் பயன்படுத்தலாம்! உங்கள் ஊரில் கிடைத்தால் செய்து பாருங்களேன்!

மீண்டும் ச[சி]ந்திப்போம்…
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

44 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் ஆதி, வெங்கட்ஜி

  சாப்பிட வந்தாச்சு காலை 5.30க்கே ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலைல 05.30க்கே சாப்பிட வந்தாச்சு.... ஹாஹா...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 2. பேன்ட் பாக்கெட் உப்பிக் கொண்டு// ஹா ஹா ஹா ஹா ஹா நினைச்சு சிரிச்சுட்டேன் ஜி

  இங்கும் தோசக்காயானுதானே சொல்லறோம்...சந்தையில் கிடைக்கிறது

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படியே இரண்டு கிலோமீட்டருக்கு மேல் நடந்தே வந்ததை நினைத்தாலும் இப்போதும் சிரிப்பு தான்.

   தோசைக்காய்னு தான் சென்னையிலும் சொல்கிறார்கள். மற்ற பகுதிகளில் கிடைப்பதாகத் தெரியவில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி

   நீக்கு
 3. பாண்டிச்சேரியில் எங்களுடன் தங்கியிருந்த மகனின் நண்பர் யானம் பகுதியைச் சேர்ந்தவர். ஆந்திராவில் ஒரு கால் யானத்தில் ஒரு கால் என்று இருந்தவர். அவர் அவர் அம்மாவிடம் கேட்டு சொல்லவும் செய்து பார்த்தேன். ஜீரகம் சேர்க்கலை மற்றபடி இதே தான். பிடித்திருந்தது.

  இப்ப உங்கள் குறிப்பையும் எடுத்துக் கொண்டுவிட்டேன். ஜீரகமும் சேர்த்துச் செய்து பார்த்திடலாம்....

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா... நீங்களும் செய்து பார்த்து இருக்கிறீர்களா? ஜீரகம் செய்து செய்தாலும் நன்றாகத்தான் இருந்தது. இதே பச்சடிக்கு நிறைய தெலுங்கு வெர்ஷன் பார்க்கக் கிடைக்கிறது யூவில்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 4. குட்மார்னிங் வெங்கட். திரும்பி வரும்போது பொடிநடையாகவே..... அடடே... அதுவும் அந்த தூக்கம் வரும் நேரத்தில்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம். பொடி நடையாகவே.... வேறு வழியில்லை. ஆட்டோவோ, பேட்டரி ரிக்‌ஷாவோ கிடைக்கவில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 5. படத்தைப் பார்த்தால் வெள்ளரிக்காய் போலவே இல்லையே... சாத்துக்குடி போல இருக்கு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் பார்த்தால் சாத்துக்குடி போலத்தான் இருக்கிறது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 6. வெள்ளரியை இந்த வகையில் இதுவரை சாப்பிட்டதில்லை. பார்ப்போம். பெரும்பாலும் பச்சையாக சாலடாக காலை வேளையில் சாப்பிடுவதுதான்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்த வெள்ளரி வேறு - இது வேறு. சாதாரண வெள்ளரியில் இப்படிச் செய்து பார்க்க வேண்டும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 7. அதுசரி, கதைதான் கே வா போ க்கு அனுப்ப மாட்டேன் என்கிறீர்கள்... திங்கறகிழமைக்காவது அனுப்பலாம் இல்லை வெங்கட்... இந்தக் கேள்வி திருமதி வெங்கட்டுக்கும் சேர்த்துதான்...!​

  :)))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா... கதை எழுத எனக்குத் தெரியாது ஸ்ரீராம். படிக்க மட்டும் தான் தெரியும்!

   திங்கற கிழைக்கு ஒரு பதிவு - அனுப்ப முயற்சிக்கிறேன் விரைவில்! வீட்டிலும் சொல்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 8. எல்லாம் சரி தோசக்காயாவுக்கு எங்கு போவது ஜி ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா... நல்ல கேள்வி. நம் ஊரில் சில இடங்களில் கிடைக்கிறது. கிடைக்காதவர்கள் என்ன செய்ய முடியும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 9. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 10. தோசாக்காய் பச்சடி நன்றாக இருக்கிறது. படத்தைப் பார்த்து ஸ்ரீராம்
  சொன்னது போல நானும் சாத்துகுடி என்று நினைத்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சாத்துக்குடி போலத்தான் இருக்கிறது....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 11. உளுத்தம்பருப்பு போடாமல் இருந்தால் இரண்டு மூன்று நாடகளுக்கு இருக்கும் நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உளுத்தம்பருப்பு இல்லாமல் இருந்திருந்தால்.... நான் பொதுவாக இரண்டு மூன்று நாட்களுக்கு வைத்துக் கொள்வதில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 12. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 13. தூங்கினவரை எழுப்பி வரச்சொல்லி கொடுக்கும் பொருளா இது?

  நீங்கள் வெள்ளரியைக் குறிப்பிடுகிறீர்களா? இது கேரளாவில்தானே உபயோகப்படுத்துவார்கள்? நாங்கள் இதை வைத்து கூட்டு செய்திருக்கிறோம். அது நீள் வட்ட வடிவமாகவல்லவா இருக்கும். இது விளாம்பழம் மாதிரி உருண்டையாக இருக்கிறது?

  எதைத்தான் துவையல் செய்வது என்று இல்லையா? இருந்தாலும் எஞ்சாய்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா... தூங்கினவரை எழுப்பி வரச் சொல்லி கொடுக்கும் பொருளே அல்ல... ஆனாலும் நட்புக்காக போகத் தானே வேண்டியிருந்தது....

   வெள்ளரி மாதிரி தான். உருண்டையாக இருக்கும் இது - பெரும்பாலும் ஆந்திராவில் இப்படித்தான் கிடைக்கிறது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 14. தோசைக்காய் செகந்தராபாதில் இருக்கும்போது சாப்பிட்டோம். அவ்வளவாப் பிடிக்கலை. சென்னையில் அவ்வப்போது கிடைத்தாலும் வாங்கினது இல்லை. சௌசௌ வாங்கி வெங்கட் சொன்னாப்போல் செய்து பார்க்கலாமோனு நினைக்கிறேன். நம்ம வழி தான் எப்போவும் தனிஈஈஈஈஈஈஈ வழியாச்சே! :))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா ஹா கீதாக்கா சௌ சௌ, மஞ்ச பூஷணி அப்புறம் மிக்ஸட் காய்கள் நு இது செய்யலாம் கா. நல்லாருக்கும். டிஃபன் பாக்ஸ் கட்ட சௌகர்யம்னு போன வாரம் சௌ சௌல செஞ்சேன்....தோல் மட்டும் தொகையல் செய்வேன் சில சம்யம் காய் அது கெட்டுடும் நு இப்படி தொக்கு / பச்சடி போல செஞ்சு வைச்சுருவேன் ஈசியா இருக்கு....

   கீதா

   நீக்கு
  2. செள செள துவையல் அவ்வப்போது என் வீட்டில் செய்கிறார்கள். பசங்களுக்கும் பிடிக்கும். எனக்கும் இப்போல்லாம் பிடிக்கிறது. அதனை தி.பதிவுக்கு எழுதலாம்னா, ஏற்கனவே இரண்டு மூன்று துவையல் எழுதியாச்சு.

   இதற்கு தொட்டுக்க ரெய்த்தா நல்லா இருக்கும்.

   நீக்கு
  3. தோசைக்காய் சிலருக்குப் பிடிக்காது. நான் ஏற்கனவே விஜயவாடாவில் சாப்பிட்டிருந்ததால் பிடித்தது.

   சௌசௌவில் இப்படிச் செய்து பார்க்கலாம்... ஹாஹா... செய்து பாருங்கள். நானும் இங்கே கிடைத்தால் செய்து பார்க்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   நீக்கு
  4. ஆஹா கீதா ஜி! நீங்க ஏற்கனவே செய்து இருக்கீங்களா.... அப்படின்னா நானும் செய்து பார்க்கிறேன் விரைவில்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

   நீக்கு
  5. இந்த மாதிரி சாதங்களுக்கு ராய்த்தா நல்ல காம்பினேஷன். நானும் செய்வதுண்டு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 15. இந்த தோசக்காயை பெங்களூருவில் பார்த்ததுண்டு. இது ஆந்திரா ஸ்பெஷல் போலிருக்கிறது. சப்ஜி சமையலை இன்று பார்த்துத் தெரிந்துகொண்டேன். நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முத்துசாமி ஐயா.

   நீக்கு
 16. தமிழில் என்ன சொல்லிக் கேட்பது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தோசைக்காய் தான் சொல்லிப் பார்த்திருக்கேன். வெங்கட் என்ன சொல்றார்னு பார்க்கலாம்.

   நீக்கு
  2. தோசைக்காய் என்றே கேட்கலாம். எனக்குத் தெரிந்து அப்படித்தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு
  3. நான் பார்த்த இடங்களில் இதைத் தோசைக்காய் என்றே அழைக்கிறார்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 17. வெள்ளரிக்காவுக்கு தோசக்காய்ன்ன்னு பேரா?!

  அங்கலாம் பிளாஸ்டிக் கவர் இல்லையா?!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்.

   பிளாஸ்டிக் கவர் உண்டு - அவர் தங்கியிருந்த இடத்தில் இல்லை. நான் எடுத்துக் கொண்டு செல்லவில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

   நீக்கு
 18. வெங்க்ட்ஜீ இப்ப நீங்க எங்க இருக்கீங்க டில்லியிலா? நான் அதற்கு பக்கதில் இருக்கும் அமெரிக்காவில்தான் இருக்கிறேன் வரீங்களா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. டிக்கெட் ப்ளீஸ்... நீங்க டிக்கெட் அனுப்பி கூப்பிட்டா வராமலா இருக்கப் போகிறேன்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   நீக்கு

 19. தோசாக்காய் பச்சடியை அன்று இரவே செய்தீர்களா அல்லது அடுத்த நாள் செய்தீர்களா? அதை சொல்லவே இல்லையே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா... அன்றிரவு அல்ல அடுத்த நாள் தான் செய்தேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....