சனி, 21 ஜூலை, 2018

கதம்பம் – தொடர் ஓட்டம் – மிஸ்டர் டெல்லி - நால்வர் அணி – நைட்டி – மால்புவா – அன்பான அழைப்பு


ராஜா காது கழுதைக் காது


 
இரண்டு நாட்கள் முன்னர் காலை நடையின் போது பிர்லா மந்திர் அருகே சில தமிழ் பெண்மணிகளை – பத்து பதினைந்து நாட்கள் பயணத்தில் வந்திருப்பவர்கள் – பார்த்தேன். தொடர்ந்து பயணித்ததில் ரொம்பவே அலுத்துப் போய்விட்டார்கள் போலும். அவர்களுக்குள் பேசிக் கொண்டது….

முதல்ல வீட்டுல போய் விழணும்…. போதும்பா இந்த டூரு…. உட்கார கூட விடாமா ஓட விடறாங்க…. இப்படியா பதினைஞ்சு நாளுக்கு தொடர்ந்து ஓடிட்டு இருக்க மாதிரி Tour Book பண்ணுவாரு…. கொஞ்சமாவது யோசிக்கவேணாம்!

மிஸ்டர் டெல்லி:காலை நடையின் போது புதியதாக வர ஆரம்பித்திருக்கும் ஒரு ஸ்வாரஸ்ய மனிதரைக் காண முடிந்தது. சராசரிக்கும் குறைவான உயரம், ரொம்பவும் குண்டு அல்லது ஒல்லி என்று சொல்ல முடியாத உடல். ஆனால், அவருக்குள் ஒரு நம்பிக்கை – தான் பாடி பில்டர் போன்று இருப்பதாக நம்பிக்கை. எதிரே அவர் நடந்து வருவதைப் பார்த்தாலே எனக்கு சிரிப்பு வந்து விடுகிறது. இரு கைகளையும் அக்குளில் கட்டி வந்தது போல வைத்துக் கொண்டு நடக்கிறார்! அவரைப் பார்க்கும்போதெல்லாம் “பாடியே இல்லையே எதுக்கு இந்த பில்டப்பு” என்று வடிவேல் குரல் கேட்கிறது மனதுக்குள்!  இருக்கட்டும் – மிஸ்டர் டெல்லி மாதிரி இருக்கேன் என்ற நம்பிக்கை அவரை மிஸ்டர் டெல்லி ஆக்கட்டும்!

நால்வர் அணி:

நடைப்பயணத்தின் போது ஒரு நால்வர் அணியைப் பார்க்கிறேன் – பெரும்பாலான நாட்களில் இந்த நால்வர் அணியினைப் பார்க்க முடியும். நான்கு பேரும் காரில் வந்து பூங்கா அருகே இறங்கிக் கொண்டு நடப்பவர்கள். இதில் அனைவருமே ஐம்பதைக் கடந்தவர்கள். ஒருவருக்கு எழுபது வயதுக்கு மேல் இருக்கலாம். அந்த எழுபது வயதுக்காரர் நடுவில் இருக்க, பக்கத்து ஒருவராக இருவரும், பின்புறம் ஒருவருமாக 70 வயதுக்காரரை பாதுகாத்தபடியே வருவார்கள். ஒருவர் தனது கைக்குட்டையால் விசிறி விட்டுக் கொண்டே வருவார். பின்புறம் இருப்பவர், வயதானவர் விழுந்து விடக்கூடாது என்ற எண்ணத்துடன் முதுகில் கைவைத்தபடியே வருவார். பெரும்பாலும் எதுவுமே பேசிக் கொள்ளாமல் மௌன நடை தான். அவர்களது நட்பு காணும்போது மனதுக்குள் ஒரு மகிழ்ச்சி! அந்த முதியவருக்குப் பார்வை கிடையாது என்பதும் ஒரு தகவல்!

ஓடிய ஓட்டம் என்ன?

காலை நேரத்தில் நாங்கள் பூங்காவினை நோக்கி நடக்கும் சமயத்தில் எதிர் புறத்தில் ஒரு பெண்மணி – 65-வயதுக்கு மேலிருக்கலாம் – தோல்கள் சுருங்கி முதுமை வந்துவிட்டது – என்றாலும் அவர் மனதில் இன்றும் இளமை. கைகளில் நீண்ட குச்சி ஒன்று, மற்றும் கைக்குட்டை. பல சமயங்களில் வேக நடை என்றால் சில சமயங்கள் Sprint எனும் வேக ஓட்டம்! இப்படி சுறுசுறுப்பாக இருக்கும் அந்த முதிய பெண்மணியைப் பார்க்கும்போது நமக்கும் மனதுக்குள் உற்சாகமும் தெம்பும் – இந்த வயதில் இப்படி ஓடுகிறார்களே நம்மாலும் முடியும் என்ற ஒரு நம்பிக்கை! தொடர்ந்து நன்றாக இருக்கட்டும்….

நைட்டி – நல்லதா கெட்டதா?

எங்கள் வீட்டின் அருகிலேயே Chசுக்G தரம்ஷாலா என ஒன்று இருப்பதைப் பற்றியும் அங்கே பல சுற்றுலாப் பயணிகள் வந்து தங்குவது பற்றியும் முன்பே எழுதி இருக்கிறேன். சில நாட்கள் முன்னர் அங்கே வந்திருந்தவர்கள் இரவு ஒன்பது மணிக்கு தங்களது உடமைகளை பேருந்தில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். மதுரைப் பக்கத்திலிருந்து வந்தவர்கள் என்பது அவர்கள் வைத்திருக்கும் கட்டைப் பை விளம்பரங்களிலிருந்து தெரிந்தது. ஆண்கள் அனைவருமே கைலி – முட்டி வரை மடித்துக் கட்டி இருக்க, பெண்கள் அனைவருமே மாவு மெஷினுக்கு உரை போட்ட மாதிரி இருக்கும் நைட்டியில்! நைட்டியோட ஊரையே சுத்துவாங்க போல! சாலை வழிப் பயணித்த அனைவருமே அவர்களையே பார்த்துக் கொண்டு சென்றார்கள்.  இரவு உடையில் இப்படி வெளியே பயணிப்பது சரியல்ல – அதுவும் வடமாநிலங்களில் என்பது புரிந்து கொண்டால் நல்லது! ஆனால் அவர்களிடம் யார் சொல்வது!

மால் புவா!!!ராஜஸ்தான் மற்றும் ஒடிசாவின் ஒரு பாரம்பர்ய உணவு மால்புவா – சர்க்கரைப் பாகில் ஊற வைத்த இந்த மால்புவா நன்றாகவே இருக்கும் என்றாலும் அதிகம் சாப்பிட முடியாது – திகட்டி விடும்! நேற்று நண்பர் வீட்டில் ஆடி வெள்ளி என்பதால் பூஜை வைத்திருந்தார்கள். பூஜை முடிந்த பிறகு டின்னர் – இரண்டாவது தான் நமக்கு முக்கியம்! இட்லி- வடை, சட்னி-சாம்பார், சர்க்கரைப் பொங்கல், பூரி-சப்ஜி, தயிர்சாதம்-ஊறுகாய்! இது தான் மெனு! கூடவே மால்புவா மற்றும் ஐஸ்க்ரீம்! ஐஸ்க்ரீம் சாப்பிடுவதை நிறுத்தி விட்டேன் என்பதால் மால்புவா மட்டும் எடுத்துக் கொண்டேன்! அத்தனை ஒரு தித்திப்பு! வாவ். ஆனால் இரண்டாவது முறை கொடுத்தும் வேண்டாம் என்று சொல்லி விட்டேன் – ஓவர் இனிப்பு உடம்புக்கு ஆகாது! :)

இந்த நாள் இனிய நாள்!!

நேற்று இரவு நண்பர் வீட்டில் இருக்கும்போது தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு – அதுவும் வெளிநாட்டு அழைப்பு. ஹலோ என்று சொல்ல, அந்தப் பக்கத்திலிருந்து இனிமையான, பாசமான ஒரு குரல்! “ரிஷபனா?” என்ற குரல் கேட்டவுடன் தெரிந்து விட்டது யார் என்று! இல்லைம்மா, நான் டெல்லியிருந்து வெங்கட் என்று சொன்னவுடன் “என்ன கண்ணா எப்படி இருக்கடா?” என்று பாசத்துடன் கேட்டார் – திருச்சிக்கு எப்ப கண்ணா போகப்போற?” என்றும், குடும்பத்தினர் அனைவருடைய நலம் பற்றியும் விசாரித்தார். சில நிமிடங்களுக்குள் இணைப்பு சரியில்லாமல் போக துண்டிக்கப்பட்டது.  பேசியது யார் என்று உங்களுக்குத் தெரிகிறதா? சொல்லுங்களேன். ரிஷபன் ஜியுடைய எண் என நினைத்து எனக்கு அழைத்துவிட்டார். அவருடன் நீண்ட நாட்கள் கழித்துப் பேசியதில் மகிழ்ச்சி.

விரைவில் வேறு சில கதம்பச் செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

பின் குறிப்பு: இன்றைய பதிவுக்காக, யோசித்துக் கொண்டிருந்த போது ஃப்ரூட் சாலட் பதிவுகள் நினைவுக்கு வந்தன – கடைசியாக எழுதிய ஃப்ரூட் சாலட் பதிவு – சென்ற செப்டம்பரில்! ஒரு வருடம் ஆகப் போகிறது நிறுத்தி!

40 கருத்துகள்:

 1. குட்மார்னிங் வெங்கட்.

  ரொம்பநாளைக்கு அப்புறம் ராகாககா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம் ஸ்ரீராம்.

   ரொம்ப நாளைக்கு அப்புறம் ராகாககா! ஆமாம். சில விஷயங்கள் காதில் விழுந்தாலும் ஏனோ எழுதவே இல்லை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. //இரு கைகளையும் அக்குளில் கட்டி வந்தது போல வைத்துக் கொண்டு நடக்கிறார்! //

  ஹா.... ஹா... ஹா....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவர் மிஸ்டர் டெல்லியா, இல்லை மிஸ்டர் பல்லியா?!!

   நீக்கு
  2. முதலில் ஹாங்கரில் மாட்டியது போல என்று தான் எழுத நினைத்தேன்! :)))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
  3. மிஸ்டர் டெல்லியா, இல்லை மிஸ்டர் பல்லியா? ஹாஹா... நல்ல கேள்வி! அவரை நாளை பார்க்கும்போது சிரித்து வைக்கப் போகிறேன்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 3. உற்சாக நடைபோடும் கண்ணில்லாத, வயதான பெண் போன்றவர்கள் நமக்கு உண்மையிலேயே கிரியா ஊக்கி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கிரியா ஊக்கி - உண்மை. புடவை கட்டிக் கொண்டு ஓடும் அந்தப் பெண்மணியைப் பார்க்கும் போது நமக்குள்ளும் ஒரு உந்துதல் - நடை/ஓட்டத்திற்கான ஒரு உந்துதல் வருவது உண்மை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 4. நம்மூர்ல பொது இடங்களில் டிராயருடன் வரும் ஆண்களை இப்போதெல்லாம் அதிகம் பார்க்கிறேன். எரிச்சல் வரும். என்ன செய்ய, இது அவர்கள் விருப்பம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பொது இடங்களில் அரை குறை உடையுடன் வரும் ஆண்கள் - அது தான் அவர்களுடைய பாரம்பரிய உடை என்று சொல்பவர்களும் உண்டு!

   அவரவர் விருப்பம் - உண்மை தான்! நம்மால் ஒன்றும் செய்ய முடியாது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
  2. ஐயோ ஸ்ரீராம் ... என்னைக் கவுத்துட்டீங்களே..... நான் அனேகமா எல்லா இடங்களுக்கும் டிராயரில்தான் செல்வேன். என் பையன், இதை நிறுத்துங்க என்று பல முறை சமீப காலங்களில் சொல்லிட்டான். என்ன செய்யறதுன்னு யோசிக்கிறேன்.

   நீக்கு
  3. அட உங்களை கவுத்தாச்சா.... வீட்டுக்குள் அணிந்து கொள்வதில் தவறில்லை. வெளியே செல்லும் போது தவிர்க்கலாம்! - பார்ப்பவர் பார்வையில் தான் கோளாறு என்று சொன்னாலும் இடம் பொருள் ஏவல் பார்ப்பது நல்லது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 5. மால்புவா இனிப்பா... படம் பார்த்து காரமோ என்று நினைத்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிப்பே தான். நன்றாகவே இருக்கும். சென்னையில் கிடைக்கிறது என்றாலும் அத்தனை சுவை இல்லை. முயற்சிக்கலாம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
  2. மால்புவாவுக்குப் பெயர் போனது புஷ்கர் தான். சமீபத்தில் ஃபெப்ரவரியில் குஜராத் போனப்போ அகமதாபாதில் வாங்கிச் சாப்பிட்டோம். அத்தனை ருசி இல்லை. :))))

   நீக்கு
  3. புஷ்கர் மால்புவா - ஆமாம். ஆனாலும் சமீப காலங்களில் அவ்வளவு சுவை அங்கேயும் இல்லை என்று ராஜஸ்தானி நண்பர்கள் சொல்கிறார்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 6. டெலிபோனில் பேசியது வல்லிம்மா... சரியா?!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவங்களே தான்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
  2. "கண்ணா" என்னும்போதே வல்லி தான் என்பது தெரிந்து விடும். :)

   நீக்கு
  3. ஆமாம். குரலும் கண்டுபிடித்து விட சுலபம் தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 7. பதில்கள்
  1. ஆஹா.... ஷாஜஹான் ஜி! வணக்கம். நலமா? பார்த்து/பேசி ரொம்ப நாளாச்சு. தமிழ்ச் சங்கம் பக்கம் வருவதில்லை என்பதால் உங்களையும் பார்க்க முடியவில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. நடை பயண காணோட்டமும் அருமை...

  // என்ன கண்ணா // எனும் போதே வல்லிசிம்ஹன் அம்மா ஞாபகம் வந்தது... அவர் பேச்சில் பாசத்துடன் ஒரு பரிவும் இருக்கும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வல்லிம்மா வே தான் தனபாலன். அவருடன் பேசுவது மகிழ்ச்சியான விஷயம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 9. நைட்டி இப்பொழுது டூட்டி ட்ரெஸாகி விட்டது ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. டூட்டி ட்ரெஸாகி விட்டது! உண்மை தான் கில்லர்ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
  2. எனக்கென்னமோ நைட்டியுடன் சுத்தும் பெண்களைப் பார்த்தால் கொஞ்சம் கஷ்டமா இருக்கும். நான் நைட்டி எல்லாம் பயன்படுத்தியதே இல்லை. சல்வார், குர்த்தாவும் யோகா செய்யும் சமயங்களில் மட்டுமே! நைட்டி மேலே ஒரு அழுக்குத் துண்டையும் துப்பட்டா போல் நினைத்துப் போட்டுக் கொள்கின்றனர்! இது தான் நாகரிகத்தின் வெளிப்பாடு என நினைப்பார்கள் போல!

   நீக்கு
  3. நாகரிகத்தின் வெளிப்பாடு - இருக்கலாம்.

   மேலே ஒரு அழுக்குத் துண்டு - ஹாஹா... தில்லியில் பார்த்த பெண்களும் அப்படியே!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   நீக்கு
 10. 10-15 நாள் டூர்னா ரொம்பவே டயர்ட் ஆகிவிடும்.

  மால்புவா - ஒரு தடவை பஹ்ரைனில் சாப்பிட்டிருக்கிறேன்.

  கதம்பம் ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை. சிலர் நம்மால் முடியும் என புறப்பட்டு விடுகிறார்கள் ஆனால் முடியாமல் ரொம்பவே திண்டாடுவார்கள். பார்த்ததுண்டு.

   பஹ்ரைனில் மால்புவா - உங்களுக்குப் பிடித்ததா என்று சொல்லவில்லையே....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 11. நெல்லைத்தமிழன் அவர்கள் விருப்ப ராஜாகாது கழுதை காது வந்து விட்டது.
  டெல்லி வெயிலில் தொடர்ந்து பயணம் செய்வது கஷ்டம்தான்.

  நால்வர் அணி படித்த்வௌடன் மனது கஷ்டமாய் இருந்த்டஹு அவருக்கு பார்வை இல்லை என்று. கடவுள் அருளால் நல்ல ந்ண்பர்கள் கிடைத்து இருக்கிறார்கள்.
  தக்குடு சொல்வார் நைட்டியை பேசாமல் தேசிய உடையாக மாற்றிவிடலாம் என்று.பள்ளிவாசல்(பள்ளிக்கு குழந்தைகளிய கொண்டுவிட நைடியுடன் வருகிறார்கள் ), கடை எல்லாம் பெண்கள் நைட்டியுடன் சுற்றுவதை சொல்லி ஒரு பதிவு போட்ட போது.
  இனிமையான் பாசமான குரல் வல்லி அக்காதான்.
  நான் மகன் வீட்டில் இருக்கும் போது இரண்டு முறை பேசினார்கள்.

  மால்புவா சாப்பிட்டது இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம். பலருக்கும் பிடித்த பகுதி அது - இப்போதெல்லாம் எழுதுவதில்லை. நீண்ட நாட்கள் கழித்து தான் எழுதி இருக்கிறேன்.

   வெயிலில் பயணம் கஷ்டம் தான்மா.

   நைட்டி - தேசிய உடையாக.... ஹாஹா. ந்ல்ல காமெடி!

   வாய்ப்பு கிடைத்தால் மால் புவா சாப்பிட்டு பாருங்கள்மா...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   நீக்கு
 12. பெண்களுக்கு போட்டியா இப்ப ஆண்களும் ஷார்ட்ஸ் போட்டுக்கிட்டு கோவில், ஹாஸ்பிட்டல், கடைன்னு வர ஆரம்பிச்சுட்டாங்க. மொத்தத்துல யாரும் சரியில்ல

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மொத்தத்துல யாரும் சரியில்ல! நீங்கள் சொன்னது சரி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

   நீக்கு
 13. கண் தெரியாத முதியவரைக் கண்ணும் கருத்துமாக அழைத்துச் செல்லும் நண்பர்களுக்குத் தலை தாழ்ந்த வணக்கம். மனிதம் இன்னும் செத்துவிடவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மனிதம் இன்னும் செத்துவிடவில்லை. இப்படியான நிகழ்வுகள் பார்த்து தான் நம்மை தேற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 14. துளசி : கதம்பம் அருமை. அந்தப் பெரியவர் அதுவும் கண் தெரியாதவர் பாவம். நல்ல நட்பு. மால்புவா பற்றி கேட்டதுமில்லை சாப்பிட்டதுமில்லை. இப்போதுதான் தெரிந்து கொண்டேன். அனைத்தும் ரசித்தேன். பேசியது யாரென்று தெரியவில்லையே..

  கீதா: பேசியவர் வல்லிமா ...

  நடைப்பயிற்சி அந்த நட்பு செம.ஆனால் அவர் பாவம் பார்வை இல்லாதவர் என்றது கஷ்டமாக இருந்தது. அதே போல் அந்த 65 வயது பெண்மணி போல் ஆமாம் நல்ல உத்வேகம் நமக்கும் கிடைக்கும் அவரைப் போன்றோரைப் பார்த்தால்..

  மால்புவா...ஆஹா மிகவும் பிடிக்கும். வெளியில் சாப்பிட்டதில்லை. செய்தது உண்டு. செம டேஸ்ட்..என் டெல்லி தங்கை நன்றாக இருக்கு என்று சொன்னாள்...ஆனால் நான் இனிப்பு கொஞ்சம் குறைவாகவே தான் போடுவேன். திகட்டாமல் சாப்பிடலாம். நான் பொதுவாகவே எந்த இனிப்பு செய்தாலும் கொஞ்சம் குறைவாகத்தான் போடுவது வழக்கம். இப்போதெல்லாம் இது போன்ற ஸ்வீட்ஸ் செய்யும் வாய்ப்பு இல்லை...

  இங்கெல்லாம் நைட்டி போட்டுக் கொண்டு பெண்கள் ரோட்டில் நடப்பதுண்டு...சுற்றுலாவில் செல்வதைக் கூடப் பார்த்திருக்கிறேன். மேலே துப்பட்டா போட்டுக் கொண்டு. சிலர் சுற்றும் போது வேறு ட்ரெஸ் பஸ்ஸில் (குழுவாக வரும் போது) ஏறும் போது நைட்டிக்கு மாறி ஏறுவார்கள். பார்த்ததுண்டு.

  அந்த பைல்வான் சிரிப்பு வந்துவிட்டது உங்கள் வர்ணனை...டக்கென்று பார்த்தால் விக்ரம் போல இருக்கிறார்....

  எல்லாம் ரசித்தோம் ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. டக்கென்று பார்த்தால் விக்ரம் போல இருக்கிறார்.... கீதாஜி, இது விக்ரம் படமே தான். இணையத்திலிருந்து எடுத்து இங்கே பகிர்ந்தேன். பூங்காவில் வருபவரை படம் எடுக்க முடியாது! :)

   மால்புவா - இனிப்பு குறைவாக இருந்தாலும் கூட அதிகம் சாப்பிட முடியாது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 15. நகைச்சுவை,பாசம்,நம்பிக்கை,இனிப்பு என
  அழகான பதிவை பகிர்ந்துள்ளீர் நண்பரே,
  தொடருங்கள் நண்பரே,வாழ்த்துகள்...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அஜய்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....