செவ்வாய், 18 டிசம்பர், 2018

பீஹார் டைரி – பாடாவதி போக்குவரத்து – இறந்தவரின் உடலுடன் பேருந்து பயணம்
நம் ஊர் பேருந்து வசதி பற்றி எப்போதுமே நம்மவர்கள் குறைபட்டுக் கொள்வது வழக்கம். சரியான நேரத்துக்கு வரதில்ல, ரொம்பவே கட்டணம் அதிகம் வாங்குகிறார்கள், போக்குவரத்து ஊழியர்கள் மரியாதையாகப் பேசுவதில்லை, பாடாவதி உணவகத்தில் நிறுத்துகிறார்கள் என இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் நமது ஊர் போக்குவரத்து பற்றிய நம் மக்களின் எண்ணத்தினை. அந்த ஊரில் இல்லாதவர்கள் படிக்கும்போது, “அப்பாடா, எவ்வளவு பிரச்சனைகள் இந்த ஊர் போக்குவரத்தில் எனத் தோன்றும்”. சமீபத்தில் பீஹார் மாநிலத்திற்குச் சென்றபோது நம் ஊரின் போக்குவரத்து வசதிகள் மனதுக்குள் வந்து போனது.இறந்தவரின் உடலுடன், பேருந்தின் மேல் பயணிக்கும் உறவினர்கள்.... 

பீஹார் மாநிலத்தின் தலைநகர் பட்னா – இங்கே நகரப் பேருந்துகள் வசதி என்பது இல்லை என்றே சொல்லி விடலாம் – சமீபத்தில் தான் நகரப் பேருந்துகளை இயக்க ஆரம்பித்திருக்கிறது BSRTC. பதினைந்து நிமிடத்திற்கு ஒரு பேருந்து என மூன்று வழிகளில் நகரப் பேருந்துகளை இயக்க ஆரம்பித்திருக்கிறதாம். இந்த நகரப் பேருந்துகள் வசதி ஆரம்பிக்கப்பட்ட வருடம் 2018 – அதாவது சுதந்திரத்திற்கு 70 வருடத்திற்குப் பிறகு என்பதை நினைவில் கொள்க! அப்படி என்றால் பேருந்துகள் இல்லாத போது என்ற கேள்விக்கு விடை – டெம்பூ! பட்னா நகரம் மட்டுமல்ல, பீஹார் மாநிலத்தின் பல இடங்களுக்கு போக்குவரத்து என்பது இந்த டெம்பூ தான்! டெம்பூ என்பது வேறொன்றுமில்லை – ஆட்டோ தான்.நம் ஊர் ஆட்டோவை விட கொஞ்சம் பெரியது – ஷேர் ஆட்டோ போன்று என வைத்துக் கொள்ளலாம். ஒரு ஆட்டோவில் எத்தனை பேர் அமர்ந்து கொள்வார்கள் எனக் கணக்குக் கேட்டால் ஆட்டோவாலே கொஞ்சம் திணறுவார். எத்தனை பேர் வேண்டுமானாலும் ஏறிக் கொள்ளலாம்! எங்கள் மனதிலும், வண்டியிலும் நிறைய இடம் உண்டு என்பது அவர்கள் தாரக மந்திரமாக இருக்கலாம்! ஓட்டுனர் இருக்கையில் இரண்டு பேர் [ஓட்டுனரைச் சேர்த்து], அவரது இருக்கையின் இரண்டு பக்கத்திலும் ஒரு சின்ன ஸ்டூல் மாதிரி இணைத்து அதில் ஒவ்வொருவர்! அவர்களது பிருஷ்ட பாகத்தில் ஒரு பக்கம் மட்டுமே ஸ்டூலில் இருக்க, மற்ற பாகம் வெளிப்புறம் தொங்கியபடியே தான் அமர வேண்டும்!

உள் பக்கத்தில் எதிரும் புதிருமாக இரண்டு சீட்கள் – அதில் ஒவ்வொன்றிலும் நான்கு பேராவது அமர்வார்கள். இது தவிர பின் புறம் இருக்கும் கொஞ்சம் இடத்தில் ஐந்து-ஆறு இஞ்ச் அகலமும், நான்கு அடி நீளமும் கொண்ட பலகை – அதில் ஒரு நான்கு பேர் அமர்ந்து கொள்கிறார்கள். இப்படி மொத்தமாக 16 பேர் [ஓட்டுனரையும் சேர்த்து] அமர்ந்து கொண்ட பிறகு தான் டெம்பூ நகர்கிறது. இந்த நபர்களைத் தவிர சிலர் பின் பக்கத்தில் இருக்கும் இரும்புக் கம்பியில் நின்று கொண்டு மேலே ஒரு கம்பியைப் பிடித்தபடி தொங்கிக் கொண்டும் வருகிறார்கள். கயாவிலிருந்து புத்த கயா செல்லும்போது இந்த டெம்பூ பயணம் வாய்த்தது! மாலை நேரத்தில் நானும் நண்பரும் இரண்டாவது முறையாக நகர் வலம் வந்தபோது இப்படி ஒரு டெம்பூவில் பயணித்தோம். எனக்குக் கிடைத்தது ஓட்டுனர் அருகே உள்ள ஸ்டூலில்! என்னில் பாதி வெளியே தொங்கியபடி!இந்த டெம்பூவும் நினைத்தபடி இயக்கி விட முடியாது. இது பெரிய கேங்க் – பல லோக்கல் தாதாக்கள் இதில் இறங்கி இருக்கிறார்கள். ஒரு இடத்திலிருந்து அடுத்த இடம் வரை மட்டுமே இயக்கலாம், ஒவ்வொரு ரூட்டிலும் ஐந்து முதல் பத்து இடங்களில் பத்து பத்து ரூபாய் கேங்க் லீடருக்குத் தர வேண்டும். இதைத் தவிர மாமூல் கொடுப்பதும் உண்டு. நிறைய பேருக்குக் கப்பம் கட்டம் வேண்டியிருப்பதால், ஒவ்வொரு டெம்பூவிலும் நிறைய பேரை அடைத்துக் கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது என்பது டெம்பூ ஓட்டுனர்களின் தகவல். கயாவிலிருந்து புத்த கயா வரை செல்ல மூன்று நான்கு ரூட் – அதாவது மூன்று அல்லது நான்கு இடங்களில் டெம்பூ மாற வேண்டும். ஒவ்வொன்றிலும் பத்து ரூபாய் கட்டணம்.பீஹார் மாநிலத்தின் சில நகரங்களுக்கு இடையேயான போக்குவரத்து பேருந்துகள் மூலம் என்றாலும் பெரும்பாலும் தனியார் பேருந்துகள். மாநில அரசின் பேருந்துகள் குறைவே. பேருந்திலும் நிறைய பேரை ஏற்றிக் கொள்வதோடு மூட்டை முடிச்சுகளும் ஏற்றிக் கொள்கிறார்கள். பெரும்பாலான பேருந்துகளில் மேலேயும் பயணிகள் அமர்ந்து செல்கிறார்கள். உள்ளே அமர்ந்து சென்றால் கொடுக்கும் கட்டணத்தினை விட பேருந்தின் மேல் அமர்ந்து செல்ல கட்டணம் கொஞ்சம் குறைவு – லக்கேஜ் மாதிரி மனிதர்களும் மேலே அமர்ந்து செல்கிறார்கள். பல இடங்களில் இந்த மாதிரி காட்சிகளைப் பார்க்க முடிந்தது. பேருந்தின் மேல் என்ன தான் வைப்பது என்ற கட்டுப்பாடே இல்லை!பல ஊர்களில் யாராவது இறந்து விட்டால் பேருந்தின் மீது இறந்தவரின் உடலை ஏற்றிக் கொண்டு உறவினர்கள் அடுத்த ஊருக்குச் செல்கிறார்கள் – குறிப்பாக கங்காஜி [கங்கை நதி]யின் கரைக்கு! அங்கே தான் அந்திம் சன்ஸ்கார்! அதாவது ஈமச் சடஙகுகள் கங்கைக் கரையில்! அதற்கு இறந்தவரின் உடலை பேருந்தின் மீது ஏற்றிக் கொண்டு செல்கிறார்கள். சில சமயம் உறவினர்கள் அதிகம் என்றால் பேருந்தினை வாடகைக்கு எடுத்துச் செல்வது உண்டு. பல சமயங்களில் பேருந்தின் மேல் இறந்தவரின் உடலை வைத்துக் கொண்டு அவரது உறவினர்கள் அமர்ந்திருக்க, கீழே, அதாவது பேருந்தின் உள்ளே மற்ற பயணிகள் இருக்கிறார்கள். இந்த மாதிரி இரண்டு மூன்று காட்சிகளை இப்பயணத்தில் பார்க்க முடிந்தது! அப்படி பார்த்த ஒரு காட்சி தான் மேலே படத்தில்! சிவப்பாகத் தெரிவது – இறந்தவரின் உடல் கொண்டு செல்லும் பாடை!

இறந்தவரின் உடலைக் கொண்டு செல்லக் கூட போதிய வசதிகள் இல்லை என்பது பெரும் சோகம். அதுவும் சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்த நிலை!  சாதாரண மனிதர்களின் அன்றாடப் போக்குவரத்து வசதிகளே வெகுவும் குறைவாக இருக்கும்போது இறந்தவர்களைப் பற்றியா கவலைப் படப் போகிறார்கள் இவர்கள்? பீஹார் மாநிலத்தின் பல இடங்களில் பார்த்தபோது எல்லா ஊர்களிலும் போக்குவரத்து வசதிக் குறைபாடு இருப்பது தெரிந்தது. டெம்பூ வசதியை வைத்துக் கொண்டு எத்தனை இடங்களுக்குச் செல்ல முடியும்? அதனால் தான் பீஹார் மாநிலத்திற்குள் செல்லும் பல இரயில்களில் தாங்க முடியாத கூட்டமும் தள்ளு முள்ளும் இருக்கின்றன. தலைநகரிலிருந்து பீஹார் நோக்கிச் செல்லும் இரயில்களில் பயணிப்பது என்பது பிரம்மப் பிரயத்தனம் தான்! புது தில்லி இரயில் நிலையத்தில் அந்தக் காட்சிகளைப் பார்த்து வியந்ததுண்டு.

பீஹார் மாநிலத்தில் நான் செய்த ஒரு இரயில் பயணம் பற்றி பிறிதொரு பதிவில் எழுதுகிறேன். இப்படியும் போக்குவரத்து வசதிகள் இல்லாத பல இடங்கள்/மாநிலங்கள் நம் நாட்டில் இன்னமும் இருக்கிறது என்பது வேதனையான விஷயம்.

வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

34 கருத்துகள்:

 1. பிஹார் போக்குவரத்து பற்றி என் மாமி சொல்லிக் கேட்டிருக்கிறேன். நம் தமிழ்நாடு எவ்வளவோ மேல். பல வட இந்திய மாநிலங்களில் போக்கு வரத்து கடினம் தான் என்று தோன்றுகிறது.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பல வட மாநிலங்களில் போக்குவரத்து வசதிகள் இல்லை என்பது தான் நிதர்சனம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 2. குட்மார்னிங் வெங்கட். பிஹார் மாநிலத்துக்கு சமீபத்தில்தான் போக்குவரத்து வசதி கிடைத்தது என்பது ஆச்சர்யமான தகவல். பாவம் அங்கு வாழும் மக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம் ஸ்ரீராம்.

   பீஹார் மாநிலத்துக்கு - பட்னா நகரப் பேருந்து பற்றி தான் சொல்லி இருக்கிறேன் ஸ்ரீராம். பீஹா மாநிலத்தில் நீண்ட தூரப் பேருந்துகள் உண்டு - அதுவும் பகல் வேளையில் மட்டுமே. இரவு நேரப் பயணம் இந்த மாநிலத்தில் இல்லை - இருந்தாலும் உகந்ததில்லை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 3. சில்த்தூர், வத்ராப் (ஸ்ரீவில்லிப்புத்தூர், வத்திராயிருப்பு!!!) போன்ற ஊர்களில் இது போல ரெகுலராக பஸ்ஸின் மேல் அமர்ந்து செல்லும் பயணிகளை 80 களில் கண்டதுண்டு. இப்போது அப்படி இல்லை என்றே நினைக்கிறேன். பீஹாருக்கு நாம் தேவலாம். அரசியல்வாதிகள் ஒழிக.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பேருந்தின் மேல் அமர்ந்து செல்லும் நிலை இப்போதும் வட மாநிலங்களில் இருப்பது கண்டேன். ஆனால் நம் ஊரில் இந்த நிலை இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

   அரசியல்வியாதிகள் ஒழிக!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 4. ஆமாம் வெங்கட்ஜி இன்னும் பல மாநிலங்களில் போக்குவரத்து வசதிகள் இல்லை அதுவும் சுதந்திரம் பெற்று இத்தனை வருடங்கள் ஆகியும்....வளர்ச்சி என்று மேம்பாலங்கள் எல்லாம் கட்டுகிறார்கள் ஆனால் இப்படியான இடங்களில் இறந்தவரின் உடலைக் கூடக் கொண்டு செல்ல இயலாத நிலை வருத்தமான விஷயம் ஜி.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. போக்குவரத்து இல்லை என்றால் ரொம்பவே கஷ்டம் தான். வளர்ச்சி என்றால் கிலோ என்ன விலை என்ற நிலை தான் பல இடங்களில்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 5. மிகவும் பின்தங்கிய மாநிலமாக இருக்கிறதே... இங்கும் ஆட்சியாளர்கள் வாழத்தான் செய்கின்றார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிகவும் பின் தங்கிய மாநிலம் தான் கில்லர்ஜி. பல விஷயங்கள் இங்கே கொடுமை. ஆனால் அரசியல்வியாதிகள் நிறையவே சம்பாதிக்கிறார்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

   நீக்கு
 6. தினம் தினம் பயணிகள் எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்பதை நினைத்தால் வேதனையாக இருக்கிறது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம். அவர்களது வேதனை கொடியது. எப்படியெல்லாம் பயணிக்கிறார்கள் எனப் பார்க்கும்போதே கஷ்டமாக இருந்தது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 7. பீஹாரின் போக்குவரத்து வசதிகள் எவ்வளவு பின் தங்கிய நிலையில் இருக்கிறது என்பதை உங்கள் விரிவான பகிர்வின் மூலம் அறிய முடிகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிறையவே கஷ்டம். மக்களும் இப்படி கஷ்டப்பட பழகி விட்டார்கள் எனத் தோன்றியது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு
 8. பீஹார் மக்கள் நிலை மனதை கஷ்டபடுத்துகிறது.
  அரசாங்கம் அந்த நிலையை மாற்றக் கூடாதா?
  மக்களின் கஷ்டம் தீர இறைவன் தான் வழி செய்ய வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அரசியல்வாதிகள் மாற்றம் தருவதில்லை. மக்களும் அவரவர் தலைவருக்குப் பின்னர் இருக்கிறார்களே தவிர, தேவைகளுக்கு ஒன்றும் செய்வதில்லை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 9. என் நாத்தனார் கணவர் கடிஹாரில் லேபர் என்ஃபோர்ஸ்மென்ட் அலுவலகத்தில் வேலை செய்ததால் பிஹார் நிலைமை ஓரளவு அறிந்துள்ளேன். அதே போல் மின்சாரமும் அங்கே எல்லா ஊர்களுக்கும் கிடையாது. கடிஹாரில் பல நாட்கள் மின்சாரம் இல்லாமலே இருந்தோம் என்பார்கள்.இப்போக் கொஞ்சம் பரவாயில்லை எனக் கேள்வி. இந்தியாவில் முக்கியமாய் வட இந்தியாவில் உத்தரப்பிரதேசத்திலும் இப்படிப் பல கிராமங்கள் இருக்கின்றன. அயோத்தி போனப்போ நேரிலே பார்த்தோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம். இன்னமும் பல ஊர்களில் மின்சாரம் இருப்பதில்லை - குறிப்பாக கிராமங்களில். நகரங்களில் நிலைமை பரவாயில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 10. பயண வேதனையைப் பகிர்ந்த விதம் மனதில் நின்றது. இறந்தவரின் உடலுடன் என்றபோது மனம் கனத்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பார்க்கும்போதே கஷ்டமாகத் தான் இருந்தது எங்களுக்கும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 11. இந்த நிலைமைக்கு அங்குள்ள மக்களும் பொறுப்பேற்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை தான் அண்ணாச்சி. அனைவருமே பொறுப்பு தான்! அரசியல்வியாதிகளின் பொறுப்பு அதிகம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   நீக்கு
 12. வடநாட்டு போக்குவரத்து பத்தி நானும் கேள்விப்பட்டிருக்கேன். நாகரீகம், சுத்தம், கல்வி, சமூகம் சார்ந்த வளர்ச்சியில் தென்னிந்தியாவை வட இந்தியா எட்டிப்பிடிக்க இன்னும் பலகாலமாகும் போல!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வட இந்தியா முழுவதும் இப்படி அல்ல - சில மாநிலங்கள் குறிப்பாக பீஹார், உத்திரப் பிரதேசம் போன்றவை....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

   நீக்கு
 13. பிஹார் இவ்வளவு பின் தங்கிய மானிலமா. பாவம் இந்த மக்கள். ஆனால் நம் மக்களின் பொறுமைக்குத் தான் அளவே இல்லையே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

   நீக்கு
 14. பிஹார் இவ்வளவு பின் தங்கிய மாநிலம் என்பதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை...

  பாவம் அந்த மக்கள்... ஆனாலும் அவர்கள் தங்களை
  மாற்றிக் கொள்ள விரும்பவில்லை என்று தெரிகிறது..
  இது தான்.. இவ்வளவு தான் என்று ஆகி விட்டார்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி.

   நீக்கு
 15. பீஹார் மட்டுமல்ல பெரும்பாலும் எல்லா வட மாநிலங்களிலும் இந்நிலைதான் ஒரு முறை ஆந்திரா விஜய நகரத்திலிருந்து ஒரிஸ்ஸா சுநாபேடா செல்லும்போது ஆடு கோழிகள் எல்லம் எங்களுடன் பயணித்தன.......!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு
 16. படங்களைபார்த்தாலே மிகவும் சிரமமான பயணம்தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....