வியாழன், 13 டிசம்பர், 2018

ஒரே நாளில் மூன்று சினிமா – மாட்டு வண்டி பயணம்
சமீபத்தில் சினிமா பார்ப்பது பற்றிய பேச்சு வந்தது. இப்போதெல்லாம் சினிமா பார்க்க விருப்பமே இருப்பதில்லை. நெய்வேலியில் இருந்த வரை சில மாதங்களுக்கு ஒரு முறை குடும்பத்தில் உள்ள அனைவருமாகச் சேர்ந்து அமராவதி திரையரங்கில் முன்பதிவு செய்து மாலைக் காட்சியை பார்த்து திரும்புவோம். பிறகு அதுவும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து போனது – முன்பதிவு செய்ததில் ஏற்பட்ட குழப்பத்தினால் மொத்தமாக நின்றது – அந்த நினைவினை முன்னரே “என் மனதைக் கொள்ளையடித்தவள்” என்ற தலைப்பில் எழுதி இருக்கிறேன்.  சமீபத்தில் தியேட்டர் சென்று படம் பார்க்கவே இல்லை – கடைசியாக பார்த்த படம் கபாலி என்று நினைவு! அவரின் அடுத்த இரண்டு படங்கள் வந்து விட்டன! அப்பாடி எவ்வளவு சுறுசுறுப்பு பாருங்க – நான் என்னைச் சொன்னேன்!

எல்லோரும் விஜய் சேதுபதி-த்ரிஷா நடித்த 96 படம் ரொம்பவே நன்றாக இருக்கிறது என்று சொன்னதால் அதைப் பார்க்கலாம் என யூட்யூபில் தேட இருந்தது. நேரம் எடுத்து அந்தப் படம் ஒரு நாள் பார்த்தேன். அடுத்த நாள் மணிரத்னம் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான செக்கச் சிவந்த வானம் படத்தினையும் யூட்யூபில் பார்த்து வைத்தேன். ஏண்டா பார்த்தோம் என்று ஆனது – இரண்டாம் படம் பார்த்து. 96 படமும் பெரிதாக ஈர்க்கவில்லை. தியேட்டர் சென்று பார்க்க வேண்டும் என்ற எண்ணமும் வரவில்லை. சமீபத்தில் வெளிவந்த 2.0 படம் கூட வீட்டினர் பார்த்துவிட்டாலும் நான் பார்க்கவில்லை. என்னமோ இப்போதெல்லாம் தியேட்டர் சென்று படம் பார்க்கும் எண்ணமே வருவதில்லை.இது இப்படி இருக்க, தில்லி பதிவர் இராமசாமி அவர்கள் தனது சிறுவயதில் சினிமா பார்த்த அனுபவத்தினை – For entertainment sake என்ற தலைப்பில் பதிவாக எழுதி இருந்தார். அந்தப் பதிவு படித்த போது என் அம்மா மற்றும் பெரியம்மாவும் தங்களது சிறு வயதில் சினிமா பார்ப்பதற்காகவே வண்டி கட்டிக் கொண்டு அடுத்த ஊருக்குச் செல்வது பற்றி அவ்வப்போது சொல்வது நினைவுக்கு வந்தது. அம்மா, பெரியம்மா எல்லாம் அப்போது பன்ரூட்டி நகரை அடுத்த சிறு கிராமமான ஒரையூரில் இருந்தார்கள். காலை உணவை சாப்பிட்ட பிறகு வீட்டில் இருந்த மாட்டு வண்டியில் புறப்படுவார்களாம் – அம்மா, பெரியம்மா, அத்தைப் பாட்டிகள், அத்தான் மன்னி [அத்தை மகனின் மனைவி], இன்னும் சில பெண்கள் என பெரிய கும்பலாக ஊரிலிருந்து புறப்படுவார்களாம்.

ஒரையூரிலிருந்து புறப்பட்டவர்கள் அடுத்ததாக நிற்பது புதுப்பேட்டை கிராமத்தில் இருக்கும் ஒரு ஆசிரியர் வீட்டில் – ஒரையூர் பள்ளியில் ஆசிரியராக இருந்த தம்பதியினர் [திரு சிவஞானம்- திருமதி புவனேஸ்வரி] வீட்டு திண்ணையில் அமர்ந்து மதிய உணவைச் சாப்பிட்ட பிறகு பன்ரூட்டி நோக்கி பயணிப்பார்களாம். பன்ரூட்டியில் அந்த நாட்களிலேயே மூன்று சினிமா தியேட்டர்கள் இருந்தனவாம்.  முதல் தியேட்டரில் மதிய நேரக் காட்சி பார்த்த பிறகு, அடுத்த திரையரங்கில் மாலைக் காட்சி, மூன்றாவது திரையரங்கில் இரவுக் காட்சி – இப்படி ஒரே நாளில் மூன்று சினிமாக்களைப் பார்த்து வருவது அவர்களது வழக்கமாக இருந்திருக்கிறது! ஒரே நாளில் மூன்று சினிமா – நினைத்தாலே பிரமிப்பாக இருக்கிறது! என்னால் ஒரு படத்தினைக் கூட முழுதாக பார்க்க முடிவதில்லை – கொஞ்சம் நேரத்திலேயே போரடித்து விடுகிறது.

மூன்று படங்களையும் பார்த்து மீண்டும் மாட்டு வண்டியில் புறப்பட்டு புதுப்பேட்டை ஆசிரியர் வீட்டுத் திண்ணையில் கொஞ்சம் நேரம் படுத்து உறங்கிய பிறகு, கருக்கலில் அங்கிருந்து புறப்பட்டு விடிய விடிய ஒரையூர் வீட்டுக்கு வந்து சேர்வோம் என்று சொல்வார்கள்.  இந்த வாரம் ஒரு நாள் பெரியம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தபோது அவர்களிடம் எப்படி பெரியம்மா ஒரே நாளில் மூன்று படம் பார்த்தீர்கள் என கேட்டேன். எப்போதோ, சில சமயங்களில் தான் இப்படி சினிமா பார்க்க வாய்ப்பு கிடைக்கும். அப்படிக் கிடைக்கும்போது முழுவதாக மூன்று படமும் பார்த்துவிட வேண்டும் – இல்லை என்றால் அதன் பிறகு எப்போது அனுமதி கிடைக்கும் என்று சொல்ல முடியாது என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

அதுவும் அந்த நாட்களில் இப்போது இருப்பது போல பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லையே – இருந்த ஒரே பொழுதுபோக்கு சினிமா தான்! அதுவும் எல்லா சினிமாக்களும் பார்க்க அனுமதியும் கிடைக்காது! கிடைத்தபோது பார்த்து விடுவோம் என்று சொல்லிக் கொண்டிருந்தார். இப்போது இருப்பது மாதிரி, நமது வீட்டிற்குள் அமர்ந்தபடியே எந்த சினிமாவையும் பார்க்க வசதி இல்லையே! இப்போது Amazon Prime, Netflix என பல விஷயங்கள் வந்துவிட்டன. வீட்டினுள் இருந்தபடியே – தியேட்டர் போலவே பார்க்க Home Theatre வசதிகள் கூட சிலர் வீட்டில் செய்து வைத்திருக்கிறார்கள். வாய்ப்பு கிடைக்கும்போது பார்க்க வேண்டும் என்பதால் ஒரே நாளில் மூன்று சினிமா!

என்னால் நிச்சயம் ஒரே நாளில் மூன்று படங்கள் இல்லை – இரண்டு படங்கள் கூட பார்க்க முடியாது என்று தோன்றுகிறது. உங்களுக்கு இப்போது அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் பார்க்க முடியுமா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!

நட்புடன்

வெங்கட்
புது தில்லி

50 கருத்துகள்:

 1. குட்மார்னிங் வெங்கட். 96 படம் யூ டியூபிலேயே வந்து விட்டதா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம் ஸ்ரீராம். நான் பார்த்தபோது இருந்தது. இப்போதும் இருக்கலாம் - தேடுங்களேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
  2. இங்கேயும் யூவில் தான் பார்த்தேன் அதிரா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. என் அப்பாவின் அம்மா தஞ்சைக்கு அருகே பெரும்பண்ணையூர் என்கிற கிராமத்தில் இருந்தார். அவ்வப்போது தஞ்சைக்கு வருவார். தங்கி இருக்கும் சில நாட்களில் ஏகப்பட்ட படங்கள் பார்த்து விடுவார். ஒரு நாளைக்கு ஒரு படம்தான்! அப்படிப் பார்க்கும் நேரங்களில் துணைக்கு மூன்றாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த என்னையும் அழைத்துச் செல்வதுண்டு. எனக்கு அப்போதெல்லாம் தியேட்டரில் படம் பார்த்தால் தலைவலி வந்துவிடும். எனவே பெரும்பாலும் தவிர்த்து விடுவேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தியேட்டரில் படம் பார்த்தால் தலைவலி வருமா.... ஓ. எனக்கு அந்த மாதிரி பிரச்ச்சனை இருந்ததில்லை. ஆனாலும் பார்த்த படங்கள் குறைவே.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 3. என்னாலும் ஒரே நாளில் வீட்டில் அமர்ந்தே கூட இரண்டு படங்கள் என்ன, ஒரு படத்தையே முழுசாக பார்க்க முடியாது! நீங்கள் சொன்னது போல அந்தக் காலத்தில் வேறு பொழுது போக்குகள் கிடையாது. அதுதான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை தான். நமக்கு ஒரு படம் பார்க்கவே இப்போது பொறுமை இல்லை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 4. ஒரே நாளில் மூன்று படம்
  இக்காலத்திலும் கூட வியப்புதான்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 5. அது என்னமோ படம் பார்க்க அவ்வளவு ஆவல் இல்லை. ஆனாலும் த்ரில்லர், நகைச்சுவைப் படங்கள் என்றால் பார்ப்பேன். எல்லோருமே அமேசான் பிரைமிலும், நெட் ஃப்ளிக்ஸிலும் படங்கள் பார்த்ததாகச் சொல்லுகின்றனர். எப்படினு தெரியலை. அதுக்கு ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்யணுமா? இல்லைனா இலவசமா? யூ ட்யூபில் வரும் பெரும்பாலான படங்கள் இலவசமாகப் பார்க்க முடியுமா? நான் எப்போதாவது ஒரு சில கச்சேரிகள், பாடல்கள் கேட்பதோடு சரி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யூட்யூப் இலவசம் தான். அமேசான் ப்ரைம் மற்றும் நெட் ஃப்ளிக்ஸ் கட்டண சேவைகள். மாதா மாதம் கட்டணம் அல்லது வருடாந்திர கட்டணம் உண்டு.

   யூவில் தேவையில்லாத விஷயங்களும் நிறையவே உண்டு - பார்க்காத வரை நல்லதே!

   நீக்கு
  2. கீதாக்கா சொல்ல நினைச்சேன் வெங்கட்ஜி சொல்லிட்டார்...கட்டணச்சேவை என்பதை.

   கீதாக்கா எனக்கும் த்ரில்லர் மற்றும் நகைச்சுவை அதுவும் நல்ல நகைச்சுவைப்படங்கள் தான் பிடிக்கும்...மற்றவை எல்லாம் பார்க்கும் பொறுமை இல்லை...

   கீதா

   நீக்கு
  3. கட்டணச் சேவையாக இப்படி நிறைய தளங்கள் இருக்கின்றன. வெளிநாடுகளில் இந்த வசதிகளைப் பயன்படுத்துபவர்கள் அதிகம். நம் ஊரில் இலவசமாகக் கிடைப்பது தான் பலருக்கும் பிடித்திருக்கிறது! படம் வெளி வரும் நாளே தமிழ் ராக்கர்ஸ் தளங்களில் வந்து விட்டதா எனப் பார்ப்பவர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 6. உங்க பழைய பதிவையும் படிச்சுட்டு வந்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ... மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..

   நீக்கு
 7. அருமையான பதிவு வெங்கட். அந்தக் காலம் அப்படித்தான் இருந்தது.
  எந்தச் சமயத்தில் அனுமதியோ அந்த நேரத்துல தான் கடைக்குப் போபவதோ, சினிமா பார்ப்பதோ செய்ய முடியும். மாட்டுவண்டியில் பயணம் செய்து திண்ணையில் உறங்கி,மூன்று படம் பார்த்தவர்களை நினைத்தால் மகிழ்வாக இருக்கிறது.

  நான் பார்ப்பதென்றால் பழைய படம் தான் யூடியூபில் பார்த்து விடுவேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை தான். அனுமதி கிடைத்த போது தானே பார்க்க முடியும்.

   யூட்யூபில் நிறைய பழைய படங்கள் கிடைக்கின்றன. நேரம் கிடைக்கும்போது நானும் பார்ப்பதுண்டு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

   நீக்கு
 8. அந்தக்காலம் மாட்டு வண்டிப் பயணம்.. இப்போ நாமும் பிளேனில் போய் அடுத்த ஊர் பார்ப்பதைப்போல இருந்திருக்கும், என்ன அப்போ நடந்ததைத்தான் இப்பவும் செய்கிறோம் நாம், ஆனா கால மாற்றம் விஞ்ஞான வளர்ச்சியால் மாற்றிச் செய்கிறோம் அவ்வளவே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அக்காலத்தில் மாட்டு வண்டி - இக்காலத்தில் விமானம் :) இக்கால விமானங்கள் சில மாட்டு வண்டி போல தான் இருக்கிறது - ஒழுங்காக பராமரிக்கப் படாமல் மாட்டு வண்டியாகி இருக்கிறது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

   நீக்கு
 9. 96 படத்தை ஒரு பட்டிமன்றமாகக்கூட விமர்சிக்கலாம், படத்தில் குறை இல்லை சூப்பர் மூவி அழகிய தருணங்கள், மனதை என்னவோ பண்ணும் விதமான காட்சிகள் எல்லாம் ஓகே ஆனா முடிவு மட்டும் எனக்குப் பிடிக்கவே இல்லை, த்ரிஷா செய்தது தப்போ தப்பு.

  தன் கணவர் நல்லவராம், குழந்தை இருக்காம் அது ஓகே, அப்போ நி எதுக்கு இப்போ வி சேதுவுடன் தனியே சுற்றி அவர் மனசை இன்னும் நோகடிக்கிறார், விருப்பமில்லாததுபோல போயிருக்கலாமே.. அவரை உண்மையில் விரும்பியிருந்தால், அவருக்கு ஒரு திருமண ஏற்பாட்டைச் செய்திருக்கலாம், இது தான் தான் மனைவி என்பது போல அவரின் ஸ்ருடண்ட்ஸ் க்குச் சொல்லி இருந்ததையும் கெடுத்துப் போட்டுப் போய் விட்டா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. அவர் திரும்பவும் அவவின் உடுப்பைச் சேர்த்து வைக்கிறார்.. அது எவ்ளோ கொடுமை:(..

  செகச் சிவந்த வானம். பெரிய எதிர்பார்ப்புடன் பார்க்க ஆரம்பிச்சோம் ஆனா பாதியிலேயே நிறுத்தியாச்சு.. பிடிக்கவில்லை.

  இப்போ நாம் ஒரு படம்கூட முழுசாகப் பார்க்க முடியாதுதான், அதுக்கு காரணம் வசதி வாய்ப்பு... பின்பு பார்க்கலாமே எனும் தைரியம், அந்நாளில் பார்க்காமல் விட்டால் திரும்ப பார்க்க முடியாது என்பதனால்.. கஸ்டப்பட்டு இடுப்பு உளையும் முதுகு வலிக்கும் நித்திரை தூக்கி அடிக்கும்.. கால் விறைக்கும்.. அப்பவும் கஸ்டப்பட்டுப் பார்த்திருப்பார்கள் .. விட்டால் பார்க்க முடியாதெல்லோ ஹா ஹா ஹா.

  ஊரில், நல்ல விசேசங்கள் நடக்கும் வீடுகளில் விடிய விடிய படம் போடுவார்கள்... அதுவும் ஜெனரேட்டர் பிடிச்சு[கரண்ட் தடைப்பட்டிருந்த காலங்கள்].. அப்போ கும்பலில் கோவிந்தாவாக தூங்கி தூங்கி விழுந்து எழும்பி பார்த்ததிலும் ஒரு மகிழ்ச்சி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 96 - பட்டிமன்றமே வைக்கலாம்! ஹாஹா... சில முடிவுகள் சினிமாவில் கூட சரியாக இல்லை. வாழ்க்கையிலும். எனக்குப் பிடிக்கவில்லை. நிகழ்வில் நடக்க முடியாதவற்றை சினிமாவிலும் ரசிக்க முடிவதில்லை. வி.சேது கேரக்டர் செரியான லூசு கேரக்டராகத் தோன்றியது. அவங்க தான் கல்யாணம் பண்ணிக்கிட்டு குழந்தையோட இருக்காங்களே - அப்பறமும் என்னத்துக்கு இப்படி என்று தான் தோன்றியது.

   செ.சி.வா - ரத்த வெள்ளம் - டப்டப்புன்னு சுடற சத்தம் தான் நிறைய! அதுவும் இரண்டரை மணி நேரத்தில் இத்தனை கொலைகளா!

   நீண்ட கருத்துரை - உங்கள் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

   நீக்கு
  2. எனக்கு செசிவா சுத்தமாகப் பிடிக்கலை...என் மைத்துனர் பெண் தியேட்டருக்கு அழைத்த்டுச் சென்றுவிட்டாள் வீட்டில் என்றால் பார்த்திருக்கவே மாட்டேன்....தியேட்டர் அடுவும் அவள் மணிரத்னம் பிரியை வேறு....போர் போர் போர் ஒரு காட்சி கூடப் பிடிக்கலை...

   96 பார்க்கவெ இல்லை....நான் படம் பார்ப்பதே மிக மிக அபூர்வம்.

   கீதா

   நீக்கு
  3. ஏதோ ஆர்வக் கோளாறில் பார்த்த படம் செ.சி.வா. 96 எல்லோரும் சொன்னார்களே, அதுவும் குறிப்பாக என் கல்லூரி நண்பர் ரொம்பவே பாராட்டிச் சொன்னாரே என்பதற்காக பார்த்தேன் - எனக்கு பிடிக்கவில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 10. அப்போதெல்லாம் திரைப்படங்கள் பார்ப்பதை விட அதற்குரிய முஸ்தீபுகள் செய்வதில் கிடைக்கும் அனுபவங்கள் அலாதியானது. திரைப்படங்கள் மறந்தாலும் சில அனுபவங்கள் வாழ்நாளுக்கும் மறக்க முடியாதவையாக இருக்கும்.

  நாம் இருவரும் முழு திரையரங்கையும் இருநூத்தைம்பது ரூபாய்க்கு குத்தகைக்கு எடுத்து பார்த்த அந்த பாடாவதி பட அனுபவத்தையும் மறக்க முடியுமா என்ன.

  (சும்மா இருந்தவனை சொறிஞ்சு விட்டுடீங்களேய்யா!)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா... முஸ்தீபுகள் - உங்கள் மறக்க முடியாத அனுபவங்களையும் எழுதலாமே அண்ணாச்சி. விரைவில் எழுதி அனுப்புங்கள்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   நீக்கு
  2. அப்போதெல்லாம் திரைப்படங்கள் பார்ப்பதை விட அதற்குரிய முஸ்தீபுகள் செய்வதில் கிடைக்கும் அனுபவங்கள் அலாதியானது.//

   யெஸ் யெஸூஊ அண்ணாச்சி...

   நாம் இருவரும் முழு திரையரங்கையும் இருநூத்தைம்பது ரூபாய்க்கு குத்தகைக்கு எடுத்து பார்த்த அந்த பாடாவதி பட அனுபவத்தையும் மறக்க முடியுமா என்ன.// ஹா ஹா ஹா ஹா ஹா

   ஆ ஆ ஆ ஆ இது எப்போ..என்ன படம்? வெங்கட்ஜி அதைப் பத்தி நீங்களோ அல்லது அண்ணாச்சியோ எழுதுங்க...

   கீதா

   நீக்கு
  3. ஹாஹா... அது ஒரு பாடாவதி படம் கீதா ஜி. அந்த படம் பார்த்த அனுபவம் பற்றி எழுதி இருக்கிறேன் - கீழே சுட்டி தந்திருக்கிறேன். நீங்க அந்த பதிவு படிக்கவில்லை என நினைக்கிறேன் - ஏனெனில் உங்கள் கருத்துரை அப்பதிவில் இல்லை! 2013-ல் எழுதிய பதிவு!

   https://venkatnagaraj.blogspot.com/2013/01/blog-post_28.html

   படிச்சுட்டு உங்கள் கருத்துகளை அப்பதிவிலேயே சொல்லுங்களேன்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 11. 96 படம் என்னையும் அவ்வளவா ஈர்க்கவில்லை.. உனக்கு வயசாகிட்டுதும்மான்னு வீட்டுல கிண்டலிங்க்

  ஒருவேளை அதுதான் நிஜமோ?!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வயசாகிட்டுதும்மா! :) சந்தேகமில்லாமல் அது தான் காரணம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   நீக்கு
 12. 3 படங்கள் - இன்றைய படங்கள் என்றால் சிரமம் தான் ஜி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்றைய படங்கள் - ஒன்று கூட பார்க்க முடிவதில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 13. உங்கள் படைப்பு அருமை. என்னுடைய பதிவு உங்கள் பழைய நினைவுகளை பதிவு செய்ய தூண்டியது குறித்து மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

   நீக்கு
 14. சற்றே சிரமம்தான். இதுவரை நான் அவ்வாறு பார்த்ததில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 15. பழைய படங்கள் , மூன்று படம் பார்ப்பது என்பது ஆச்சிரியம் தான். பெரிய படமாய் இருக்கும் , நிறைய நேரம் ஓடும்.

  அதிரா சொல்வது மேல்கால்வலி வரும் தான்.
  வேரு வழி இல்லை இதை விட்டால் இப்போ பார்த்தால்தான் என்பதால் பார்த்து இருப்பார்கள் கஷ்டங்களை பொறுத்துக் கொண்டு.
  சினிமா போவது என்றால் ஒரு படம் தான் அதற்கு வீட்டிலிருந்து சுண்டல், முறுக்கு, அப்பம், தண்ணீர் எல்லாம் சுமந்து செல்வோம்.இடைவேளையில் எல்லாம் எடுத்து எடுத்து கொடுத்துக் கொண்டு இருப்பார்கள் அம்மா. அது போக அங்கு விற்பதை கேட்டு வேறு அடம் பிடிப்போம். அம்மா திட்டி, கெஞ்சி, கொஞ்சி மனதை மாற்றி விடுவார்கள் . பெரிய பிள்ளைகள் ஆனதும் வீட்டிலிருந்து கொண்டு போவதை சாப்பிட வெட்கபட்டதால் விட்டு விட்டுவிட்டார்கள். தேனி ஊரில் இருக்கும் போது மாட்டு வண்டியில் சினிமா போய் இருக்கிறோம்.71 ல் 72ல் எல்லாம் மாட்டு வண்டி உண்டு.80வது வருடம் வரை மாட்டுவண்டிகள் உண்டு. கோவையில் இருக்கும் போது மருதமலைக்கு அம்மா தங்கைகளுடன் மாட்டு வண்டியில் போய் இருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் நினைவுகளை மீட்டெடுக்க இப்பதிவு உதவியதில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 16. Good writing skills. Ease in communicating the message in clarity.

  Ram (vijay sethupathy) worships her(Trisha). Seeing and thinking about her is enough for him. But she doesn't idolize Ram.She just loves him. The rationale behind the end.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கயல் இராமசாமி மேடம்.

   நீக்கு
 17. நான் சின்ன வயசிலே மாட்டு வண்டிகளைப் பார்த்திருக்கேன். அநேகமாய் அவை பாரம் இழுக்கும் மாட்டு வண்டிகள். குதிரை வண்டிப் பிரயாணம் உண்டு. அதில் பயணித்து மதுரை சினிமா தியேட்டர்களில் படம் பார்க்கப் பெரியப்பா வீட்டினரோடு சென்றது உண்டு. ஆனால் மாட்டு வண்டியில் பயணம் கல்யாணம் ஆகித் தான். என் மாமனார் வீட்டில் அவங்கல்லாம் வண்டி கட்டிக் கொண்டு சாப்பாடெல்லாம் கொண்டு போய்ப் பக்கத்து ஊரான எரவாஞ்சேரி டூரிங் தியேட்டரில் படம் பார்த்தோம். நாச்சியார் கோயிலில் படம் பார்த்தோம் என்பார்கள். ஆச்சரியமாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் அம்மாவின் கிராமத்திற்கு ஒரு முறை சென்றபோது மாட்டுவண்டியில் பயணம் செய்திருக்கிறேன். அம்மாவின் வீட்டிலேயே இருந்ததால் அவர்களுக்கு இந்த வண்டி பயணம் பழக்கம். எங்களுக்கு அப்படி இல்லை - கஷ்டமாக இருந்தது அந்த வண்டியில் பயணிப்பது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 18. அது ஒரு காலம் வேலை விட்டு வந்ததும் அன்று மாலையே ஏதாவதுஒரு தியேட்டருக்குச் சென்று எதோ படம்பார்ப்பது வழக்கமாய் இருந்தது அப்போது நானும் என் நண்பனும் தனியே ரூமில் தங்கி இருந்தோம் மனைவி மகன் யாரும் வந்திருக்காத சமயம் திருச்சியில் அல்லிமால் தெருவில்குடி இருந்தோம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அல்லிமால் தெரு - எத்தனை அழகான பெயர் - திருச்சியில் இந்த மாதிரி, ரெட்டை மால் தெரு, ஒத்தைமால் தெரு என எத்தனை தெருப் பெயர்கள்.... இந்தத் தெருக்களுக்குச் சென்றதுண்டு. இப்போதெல்லாம் இங்கே நிறைய கடைகள் வந்துவிட்டன.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு
 19. வெங்கட்.... நான் கல்லூரி படித்த காலத்தில், 6 மணிக்காட்சி அலைகள் ஓய்வதில்லை, 9 மணிக் காட்சி பன்னீர் புஷ்பங்கள் பார்த்துவிட்டு ஹாஸ்டல் நண்பர்களுடன் (சிலர் அடுத்த காட்சிக்குப் போய்விட்டார்கள்) இரவு ஹாஸ்டல் கேட்டின் மீது ஏறி உள்ளே வந்ததை நினைவுபடுத்தியது. அதேபோல தொடர்ந்து மூன்று நாட்கள் மதுரையில் முதல் மரியாதை 6 மணிக்காட்சிக்குச் சென்றிருக்கிறேன் (ரத்தக்கண்ணீரும் கல்லூரி ஹாஸ்டல் இருந்த இடத்துக்குப் பக்கத்து தியேட்டரில் பார்த்திருக்கிறேன்).

  இப்போதான் எந்தப் படமும் 15 நிமிடங்களுக்குமேல் பார்க்க முடிவதில்லை (பாகுபலி மாத்திரம் விதிவிலக்கு)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கல்யாணம் ஆகி அம்பத்தூர் வந்தப்போ அங்கே தியேட்டர் இல்லை. இரண்டு டூரிங் தான். ஒண்ணு எங்க வீட்டுப் பக்கம். அங்கே இரவுக்காட்சி தினம் தினம் இரண்டு படங்கள்! அநேகமாய் இரண்டாவது படம் ஹிந்தியாக இருக்கும். எப்போதாவது அதிர்ஷ்டவசமாக இரண்டும் தமிழாக இருக்கும். காசு என்னமோ ஒரு படத்துக்குத் தான் வாங்குவாங்க! ஆனால் பலரும் இரு படங்கள் பார்ப்பார்கள்.

   நீக்கு
  2. ஒரே நாளில் இரண்டு படங்கள் கூட நான் பார்த்ததில்லை. அது போல ஒரே படத்தினை இரண்டு முறை தியேட்டரில் சென்று பார்த்தது இல்லை என்று நினைவு. தொலைக்காட்சியில் சில படங்கள் ஒரு முறைக்கும் மேல் பார்த்ததுண்டு - மௌனராகம் மாதிரி!

   இப்போதான் எந்தப் படமும் 15 நிமிடங்களுக்கு மேல் பார்க்க முடிவதில்லை - அதே அதே இங்கேயும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
  3. ஆஹா... இது நல்லா இருக்கே - ஒரு படத்திற்கு காசு வாங்கிக் கொண்டு இரண்டு படங்கள்! இந்த மாதிரி வசதி இப்போது இருக்க வாய்ப்பில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 20. இப்போ எல்லாம் ஒரு படம் பார்க்கவே பொறுமை இருப்பதில்லை. ரொம்ப நல்ல படமாக த்ரில்லராக இருந்தால் மட்டும் அல்லது நல்ல நகைச்சுவைப் படமாக இருந்தால் மட்டுமே பார்க்கும் பொறுமை உண்டு இல்லைனா பார்ப்பதே இல்லை...

  வீணை எஸ் பாலச்சந்தரின் பொம்மையைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பொறுமை - எனக்கும் இப்படித்தான் - எப்போதாவது படங்களைத் தேடி பார்ப்பதுண்டு - ஆனால் பாதியிலேயே நிறுத்தி விடுவது தான் வழக்கம்.

   வீணை பாலச்சந்திரின் பொம்மை படம்... பார்த்ததில்லை. பொம்மை 2 எனும் படம் இணையத்தில் கிடைக்கிறது. பொம்மை கல்யாணம் எனும் சிவாஜி படம் கூட யூவில் கிடைக்கிறது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....