புதன், 19 டிசம்பர், 2018

மார்கழி நினைவுகள் – முழங்கை வழிவார…
மார்கழி பிறந்ததிலிருந்தே பதிவுலக நண்பர்கள் பலரும் தங்களது மார்கழி நினைவுகளை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். நெய்வேலியில் இருந்த வரை வீட்டின் அருகே இருந்த பிள்ளையார் கோவிலில் பொங்கல் வாங்கிச் சாப்பிட மட்டுமே இந்த சமயங்களில் சென்றதுண்டு! நமக்கும் சங்கீதத்துக்கும் பல காத தூரம்! ஏனோ அம்மாவுக்கு பாட்டு மேல் நிறைய ஆசை உண்டு என்றாலும், எங்களில் யாரையுமே பாட்டு கிளாஸ் போன்ற எதற்குமே அனுப்பியதில்லை. வரும் சம்பளத்தில் மூன்று பேரையும் படிக்க வைத்து, எல்லா வீட்டு செலவுகளையும் பார்த்துக் கொண்டதே பெரிய விஷயம். இதில் இசை வகுப்புக்கு எங்கே போக!

தலைநகர் வந்த பிறகும் எங்கள் பகுதி பிள்ளையார் கோவிலில் மார்கழி மாத பஜனை தினமும் நடக்கும் என்றாலும், தில்லி குளிரில் காலை நேரம் எழுந்து சற்று தொலைவில் இருக்கும் கோவிலுக்குச் செல்வது என்பது கொஞ்சம் கடினமான வேலை! குளிரில் கடகடவென பற்கள் அடித்துக் கொள்வதே பெரும் இசை! எங்கள் பகுதியில் இருந்த கணபதிராமன் எனும் பெரியவர் [75 வயதுக்கும் மேலானவர்] தான் கோவிலில் மார்கழி மாதத்தில் பஜனை பாடல்களை பாடுவார். பஜனை முடியும் சமயம் சென்று பிரசாதமாக பொங்கலை சில நாட்கள் வாங்கி உண்டது உண்டு! பாட்டு, கச்சேரி எனக் கேட்கப் போனதும் பெரும்பாலும் இல்லை. எப்போதாவது நடக்கக் கூடிய விஷயம். 

சமீப காலங்களில் இணைய வழி நிறைய இசை கேட்க முடிகிறது. நேற்று கூட திருப்பாவையிலிருந்து முதல் பாடலுக்கான நாட்டியம் ஒன்றைக் காண நேர்ந்தது. மிகவும் அழகாக நடனமாடியிருக்கிறார் அந்தப் பெண்மணி.  இணையத்தில் தேடியதில் திருப்பாவையின் எல்லா பாசுரங்களுக்கும் நாட்டியம் ஆடியிருப்பது தெரிந்தது. இன்றைக்கு மார்கழி நான்காம் நாள் – ஆழி மழைக்கண்ணா பாசுரத்திற்கான நடனத்தினை பார்க்க வசதியாக இதோ காணொளி – காணொளியில் திருவெம்பாவைக்கான நடனமும் உண்டு – ஆனால் இங்கே திருப்பாவை நான்காம் பாசுரம் மட்டும்.


மார்கழியின் நினைவுகளை பகிர்ந்து கொள்ளும்போது நண்பர் முரளி [இவரும் நெய்வேலி தான் – கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்] அவர்களின் பதிவினையும் இங்கே பகிர்கிறேன். அனுபவித்து எழுதி இருக்கிறார். நீங்களும் படிக்கலாமே!

மார்கழி நினைவுகள் – முரளி ரங்கநாதன்

கடந்த சில வருடங்களாக சென்னையில் winter என்று சொல்லும்படியாக தட்பவெப்ப நிலை நிலவுகிறது. December மற்றும் January மாதங்களில் சற்று குளிர் உடலில் போர்த்துகிறது. பல இடங்களின் குளிரை என் உடல் சந்தித்திருந்தாலும் நெய்வேலி குளிர் ரம்யமானது. யூகலிப்டஸ் மரங்களால் சூழப்பட்டு மற்றும் வீடுதோறும் மரங்கள் அடர்ந்து பனி என்பது நன்றாக பொழியும். ஆனாலும் எவரையும் எந்த தொந்தரவும் செய்யாது. பாட்டிலில் உள்ள தேங்காய் எண்ணெய் உறையும் அளவிற்கு பனியின் வீச்சு இருக்கும். பசுக்களும் பட்டிகளும் மயிர்கள் குத்திட்டு காதுகள் நிலம் நோக்க தியானம் புரியும் யோகி போல அமர்ந்திருக்கும்.

நெய்வேலியில் மார்கழி என்பது ஒரு அமைதியான கோலாகலம். அதிகாலை நான்கரை மணி அளவில் பண்டாரம் ஒருவர் தெருவில் மணி அடித்துக்கொண்டு சங்கு ஊதிக்கொண்டு பீடை விரட்டிச்செல்வார். சிறிதாக கிலி ஏற்படுத்தும். அவர் தெருவைக்கடந்ததும் எழுந்துக்கொண்டு வெதுவெதுப்பாக 'pipe' ல் வரும் நீரில் குளித்து விட்டு அரை கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு காலை உதைத்து வலது 'wrist' ஐ முறுக்கி scooter ல் செல்வது போல் ஓடி விடுவேன்.அடுத்த அரை மணி நேரம் முதல் 45 நிமிடங்கள் வரை திருப்பாவை/திருவெம்பாவை ராகம். பிறகு நெய்பெய்து முழங்கை வழிவார பொங்கல் பிரசாதம் உண்ணல்.

திருப்பாவை ஜோராகச் சொன்னால்தான் பிரசாதம் என்று அன்று மாமா கட்டளையிட்டதால்தான் இன்று சற்றேனும் பாடல்கள் உள்தங்கியிருக்கின்றன. அவற்றின் எளிமையான பிரம்மாண்டத்தை இப்பொழுது நன்றாக உணர முடிகிறது.

'ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி" என்று ஒரு பாடலில் அறிவியலைப் பேசுகிறாள்.

"வாயினால் பாடி மனதினால் சிந்திக்க" என்று நோன்பில் மனமும் உடலும் சேர்வதே முறை என்கிறாள்.

"வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று" என்று வான சாஸ்திரத்தை உரைக்கிறாள்.

"அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த" என்று ozone layer ஐப்பற்றி குறிப்பிடுகிறாள்.

"கூடியிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்" என்று தாயுள்ளத்தோடு கூடியிருத்தலே உள்ளம் குளிர ஒரே வழி என்கிறாள். பற்றை விடு என்று பயமுறுத்தவில்லை.

"சிறுபேர் அழைத்தனவும் சீறி யருளாதே" என்று, கண்ணனை ஒருமையில் பேசிப்பின், கோபம் கொள்ளாதே என்று அவனை உரிமையில் கேட்கிறாள்.

"உன்தன்னோடு உறவேல் நமக்கிங்கு ஒழிக்க இயலாது" என்று இறைவனுக்கும் நமக்குமான bond can never broken என்கிறாள்.

"எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே யாவோம்" என்று இறைவனை தன் (ஆயர் ) குலத்திலே கட்டி விடுகிறாள். யசோதை கயிற்றினால் கண்ணணைக்கட்ட ஆண்டாள் பாக்களால் கட்டி விடுகிறாள்.

அலட்டல் இல்லாத எளிய தமிழ். மண்டையை உடைக்காத தெளிந்த ஞானம். "எங்கும் திருவருள் பெற்று" என்று all inclusive விண்ணப்பம். சப்கா சாத், சப்கா விகாஸ்.

-  முரளி.

என்ன நண்பர்களே, மார்கழி நினைவலைகளை ரசித்தீர்களா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.
 
வேறு ஒரு பதிவில் மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

38 கருத்துகள்:

 1. மகிழ்வான காலை வணக்கம் மற்றும் இனிய நாள் வணக்கம் வெங்கட்ஜி

  ஆஹா மார்கழி நினைவுகளா...வரேன் அப்புறம்...கிச்சன் வேலை முடியலை இன்னும்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
 2. குட்மார்னிங் வெங்கட். பற்கள் டைப் அடிப்பது எனக்கு ஆபீஸ் டைப்ரைட்டரைதான் நினைவுபடுத்தும்! மறுபடியும் ஆபீஸ்!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா.... அலுவலகம் தான் எப்போதும்.... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 3. எனக்கு(ம்) மார்கழி நினைவுகள் என்று பெரிதாக ஒன்றும் கிடையாது. போர்வைக்குள் முடங்கி கிடந்த நினைவுகள் மட்டும்தான். கோவிலுக்கு அதிகம் சென்றவன் / செல்பவன் அல்ல. எனவே அந்த நினைவுகளும் இல்லை எனக்கு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்போ, டாண்ணு போன உடனேயே எப்படி 'புளியோதரை' தருவார்? 'பொங்கல்தான் ஆஞ்சநேயர் தருவார்' ஹா ஹா

   நீக்கு
  2. ஹாஹா.... எனக்கும் கோவில் நினைவுகள் அவ்வளவாக இல்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
  3. டாண்ணு போன உடனே..... :) அதானே....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 4. நண்பர் முரளியின் எழுத்தில் தியான செய்யும் யோகி வர்ணனை சூப்பர்.

  // பற்றை விடு என்று பயமுறுத்தவில்லை //

  :))))

  அவர் எழுத்து ரசனையாக இருந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பர் நல்ல திறமைசாலி....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 5. ரசனையான எழுத்து உங்கள் நண்பர் எழுத்து. திருப்பாவையை ஆழ்ந்து அனுபவித்துப் படித்து உணர்ந்திருக்கார். காணொளியை மத்தியானமா வந்து பார்க்கிறேன். இப்போ நேரம் இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   நீக்கு
 6. தங்களது நண்பரது நடையும் ரசிக்க வைத்தது. வாழ்த்துகள் ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

   நீக்கு
 7. மார்கழி !! தினத்துக்கு ஒரு கோலம் போடவும், சமையலுக்குமே சரியா இருக்கு. இதில் எங்கே காலையில் கோவிலுக்கு போறது?! மாலையில்தான் கோவிலுக்கு போறது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   நீக்கு
 8. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி.

   நீக்கு
 9. தெருவில் மணி அடித்துக்கொண்டு சங்கு ஊதிக்கொண்டு பீடை விரட்டிச்செல்வார். சிறிதாக கிலி ஏற்படுத்தும்.//

  ஹையோ எனக்கும் இது இந்தச் சத்தம் கிலி எழுப்பும்...பிடிக்காது. ஏதோ ஒரு நெகட்டிவ் போலத் தோன்றும்..

  முரளி அவர்களின் எழுத்து ரொம்ப நல்லாருக்கு....

  பற்றை விடு என்று பயமுறுத்தவில்லை.// செம....

  //அலட்டல் இல்லாத எளிய தமிழ். மண்டையை உடைக்காத தெளிந்த ஞானம். //

  அதே அதே....

  நல்ல எழுத்து வெங்கட்ஜி. முரளி அவர்களுக்கு வாழ்த்துகள்! பாராட்டுகள்!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கிலி ஏற்படுத்தும் ஒலி தான் அண்ட ஒலி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
 10. மார்கழி நினைவுகள் இனிமை. உங்கள் நண்பர் தான் ரசித்ததை அழகாக பகிர்ந்திருக்கிறார்.
  எனக்கும் மார்கழி நினைவுகள் உண்டு, ஆனால் இப்போது பகிர முடியவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முடிந்த போது பகிர்ந்து கொள்ளுங்கள்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி.

   நீக்கு
 11. வணக்கம் சகோதரரே

  தங்களது மார்கழியின் நினைவுகள் அருமை. காலை குளிரும், ஆண்டாளின் பக்தி பாமாலையும் எப்போதுமே மார்கழியோடு இணைந்தது. தங்கள் நண்பரின் இனிமையான எழுத்துக்கள், பாமாலை பற்றிய விளக்கங்கள் அருமையாக இருந்தது. நல்ல எழுத்துக்களில் மார்கழியை விமர்சித்த அவருக்கு வாழ்த்துக்கள். சிறுவயதில் (பிறந்த வீட்டில்) காலை எழுந்து வாசலில் கோலமிட்டு, பசு சாண பிடிமானத்தில் பூசணிப் பூ வைத்து அதை நினைவாக மாலை நேரத்தில் வரட்டியாக தட்டி காய வைத்து மாதம் முழுவதும் சேகரித்ததெல்லாம் நினைவுக்கு வருகிறது.மகிழ்வான காலங்கள் அது. தற்சமயம் நினைத்து மட்டுமே பார்க்க முடிகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் நினைவுகளையும் முடிந்தால் எழுதுங்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி.

   நீக்கு
 12. நண்பர் முரளி அவர்களின் மார்கழி நினைவுகளும் திருப்பாவை நினைவுகளும் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   நீக்கு
 13. முரளி நல்லா எழுதியிருக்கிறார், ஆனால் தவறுகள் இருக்கின்றன. மூட நெய் பெய்வது ஒரே ஒரு நாள்தான். அது கூடாரை வெல்லும் சீர் அன்றுதான். அதற்கு மறுநாள் தயிர் சாதம். மற்ற நாட்களில் வெண் பொங்கல். எங்கேயிருந்து நெய் கையில் பெய்யும்? 'கூடியிருந்து'-அடியார்கள் அனைவரும் கூடியிருந்து பகவானைப் பாடணும் என்பது கருத்து. வீட்டார்களோடு கூடியிருப்பதல்ல. இறைவனை 'உன் தன்னோடு உற்றோமே ஆவோம்' என்றது உன் அடியார்களாகவே நாங்கள் இருந்து உனக்குப் பிடித்தவர்களாகிவிடுவோம் என்ற அர்த்தம். இதில் 'ஆயர் குலம்' என்றெல்லாம் அர்த்தம் வராது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 14. //உன்தன்னோடு உறவேல் நமக்கிங்கு ஒழிக்க இயலாது" என்று இறைவனுக்கும் நமக்குமான bond can never broken என்கிறாள்.//

  "உன் தன்னோடு உறவு நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது" - அதைத் தகர்த்துவிட்டாலும் சேர்ந்துகொள்ளும். தகர்க்கவே இயலாது. Bond can never BE broken. 'இயலாது' அல்ல.

  //ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி// - இதில் அறிவியலை மட்டும் பேசலை. மழை பொழியவைக்கும் தேவதையை (அவனிலும் கண்ணன் தான் உள்ளத்தில் உறைகிறான் என்பது அர்த்தம்) கூப்பிட்டு, நீ நாட்டில் இருக்கும் நல்ல தண்ணீர் உள்ள குளங்கள் ஏரிகளிலிருந்து நீரை முகர்ந்துகொண்டு எங்களுக்கு மழையாகப் பெய்துவிடாதே... நல்ல ஆழ்கடலுள் சென்று அங்கிருந்து தண்ணீரை முகர்ந்து எங்களுக்கு நன்றாக சப்தம் எழுப்பி (இடி இடித்து) 'சோ' என பெரு மழையாகப் பெய்துவிடு என்கிறாள்.

  பாடலை எல்லோரும் புரிந்துகொள்ளுமாறு எழுதும்போது, அதன் மூல அர்த்தம் மாறிவிடுவதால் இதனைக் குறிப்பிட்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நெல்லைத்தமிழரே:

   தங்களின் கருத்துக்கு நன்றி. என் பதிலுரை கீழே.

   "மூட நெய் பெய்வது ஒரே ஒரு நாள்தான்" - வெண்பொங்கலிலும் நெய் வழியும். எங்கள் ஊரின் பெயரிலேயே நெய் இருந்ததால் மார்கழி முழுதும் வழிந்தது. மேலும் காலை ஆறு மணிக்கு அங்கே தயிர் சாதம் தந்ததில்லை.

   "கூடியிருந்து" - உலகம் உய்யப்பாடிய தாயார் வீட்டை மட்டும் எப்படி விலக்குவார்?

   "ஆயர் குலம்" - பிறிதொரு சமயத்தில் இதற்கு விரிவாக வ்யாக்யானம் எழுகிறேன்.

   "bond can never broken" - Yes, 'be' was left out inadvertently

   "//ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி// - இதில் அறிவியலை மட்டும் பேசலை" - அறிவியலைப் பற்றி மட்டும் பேசியதாக நான் எங்கும் குறிப்பிடவில்லை. என் அழுத்தம் ஆண்டாளின் அறிவியல் வீச்சில் இருந்தது. "ஓர்தன்மை அணுவை சதகூறிட்ட கோணிலும் உளன்" என்று கம்பர் நாராயணனைக் குறிப்பிடும்போது நான் அதிலுள்ள கம்பரின் அறிவான அணுவைப்பிளக்க முடியும் என்ற ஞானத்தை மட்டுமே அனைவர்க்கும் பரப்ப விரும்புவேன். மற்றவற்றைக் குறிப்பிட பலர் உள்ளனர். தமிழை சமயத்தில் சமயத்தில் மட்டுமே அடைக்க விரும்பவில்லை.

   "நீ நாட்டில் இருக்கும் நல்ல தண்ணீர் உள்ள குளங்கள் ஏரிகளிலிருந்து நீரை முகர்ந்துகொண்டு எங்களுக்கு மழையாகப் பெய்துவிடாதே" - இந்த உரை ஏற்புடையதல்ல.

   தமிழையும், சமயத்தையும், அறிவியலையும் நான் மிகவும் நேசிப்பதால் என் ஒரு பகுதி உரை பாடலின் மூல அர்த்தத்தை சிதைக்காது.

   நீக்கு
  2. உங்கள் கோணத்திலிருந்து இதனை நான் பார்க்கவில்லை முரளி... வாழ்த்துகள்.

   By the by, உங்கள் பெயரும் என்னுடைய பெயரும் ஒன்றுதான். :-)

   நீக்கு
  3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
  4. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளி.

   நீக்கு
 15. மார்கழி நினைவுகள் மிகவும் சுவாரஸ்யமான ஒன்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

   நீக்கு
 16. Margazhi writing took me back to my place.Remembered colourful kolams, bhakthi,music. Margazhi poove song beautiful song. Goosebumps everytime I listen to it.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கயல் இராமசாமி மேடம்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....