வெள்ளி, 21 டிசம்பர், 2018

பீஹார் டைரி – சாப்பிட வாங்க – சிலாவ் கா காஜாசிலாவ் கா காஜா....
சிலாவ் கிராமத்தில் காஜா வாங்கும் ஓட்டுனர் பிண்டூ!பீஹார் தலைநகர் பட்னாவிலிருந்து நாளந்தா செல்லும் வழியில் வரும் ஒரு சிறிய ஊர் தான் சிலாவ். இங்கே தயாரிக்கப்படும் ஒரு வகை காரம் மற்றும் இனிப்பு தான் இந்த காஜா. பீஹார் செல்லப் போகிறோம் என்று அலுவலகத்தில் தெரிந்தவுடனேயே எல்லா பீஹார் மாநில நண்பர்களும் சொன்ன ஒரு விஷயம் – “சிலாவ் கா காஜா” நிச்சயம் சாப்பிட்டுப் பாருங்கள் என்பது தான். சிலாவ் எனும் சிறு ஊரில் செய்யப்படும் காஜா எனும் இந்தத் தின்பண்டம் ரொம்பவே புகழ் பெற்ற ஒன்று. பீஹார் தலைநகரம் பட்னாவிலேயே கிடைக்கிறது என்றாலும் சிலாவ்-சிற்றூரில் வாங்கினால் தான் நன்றாக இருக்கும் – நாளந்தா போகும் வழியில் நிச்சயம் நீங்கள் வாங்கிச் சாப்பிடுங்கள் என்று சொல்லி இருந்தார்கள்.


நம்கீன் காஜா....

இந்த காஜா இரண்டு வகைகளில் கிடைக்கிறது – ஒன்று நம்கீன் [அதாவது உப்பு மட்டும் சேர்த்தது] மற்றது இனிப்பு. நன்கு மொறுமொறுப்பாக இருக்கும் இந்த காஜாவிற்கு இத்தனை புகழ் என்று கேட்டபோது, சரி வாங்கி சாப்பிட்டுத்தான் பார்க்கலாமே என நினைத்திருந்தேன். பீஹார் மாநிலத்தின் தலைநகரில் உலா வந்த போது ஒரு கடையில் சிலாவ் கா காஜா என்ற பெயரோடு சாலையோரத்தில் வைத்து விற்றுக் கொண்டிருந்தார்கள். அங்கே சென்று பார்த்து, சில புகைப்படங்களை மட்டும் எடுத்துக் கொண்டு நகர்ந்து விட்டேன். அங்கே வேறு சில பீஹார் மாநிலத்தின் பாரம்பரிய இனிப்பு வகைகளும் வைத்திருந்தார்கள். வைத்திருந்ததை, ஈக்கள் மொய்த்துக் கொண்டிருக்க, வாங்கி சுவைக்க மனம் வரவில்லை.


சிலாவ் எனும் சிற்றூரின் குறுகிய சாலை....

சரி எப்படியும் நாளந்தா செல்லும் போது வாங்கிக் கொள்ளலாம் என்று முடிவு செய்தேன். எங்களுக்கு வாகன ஓட்டியாக வந்த பிண்டூ என்பவரிடம் சிலாவ் வழியாகச் செல்லும்போது காஜா வாங்க வேண்டும் என்றும் சொல்லி வைத்திருந்தேன். நாளந்தா செல்லும் வழியில் சிலாவ் எனும் பதாகை பார்த்த உடன் அவரிடம் நினைவூட்டினேன். நினைவிருக்கிறது என்று சொல்லி அந்த குறுகிய சாலையின் ஒரு ஓரத்தில் வண்டியை நிறுத்தினார். எவ்வளவு வாங்க வேண்டும் என்று கேட்க, கால் கிலோ போதும் என்று சொன்னோம் – அதுவும் நம்கீன், இனிப்பு இரண்டும் கலந்து – அதுவே பத்து பன்னிரெண்டு காஜா கிடைக்கும் என்பதால் கால் கிலோ போதும் என்று சொல்லி விட்டோம். பார்க்க பெரிதாக இருந்தாலும், எடை குறைவானது தான் இந்த காஜா.

GI Tag என ஒன்று உண்டு – அதாவது Geographical Indications Tag. சென்னை நகரில் அமைந்திருக்கும் Intellectual Property Appellate Board எனும் அமைப்பு தான் இந்த GI Tag தருகிறது. ஒரு பொருள் எந்தப் பகுதியில் பாரம்பரியமாக தயாராகிறதோ அந்தப் பொருளுக்கு இந்த மாதிரி GI Tag கிடைக்கிறது. It acts as the "claim to fame" for a state, as the tag identifies a product as originating from a particular location and conveys an assurance of quality and distinctiveness to the fact of its origin. அந்த ஊரில் பழைமை வாய்ந்த, தரம் வாய்ந்த பொருள் என்பதற்கான அடையாளம் இந்த GI Tag.  19-ஆம் நூற்றாண்டுகளிலேயே இந்தப் பகுதியில் காஜா தயாரித்ததற்கான குறிப்புகள் வரலாற்றுச் செய்திகளில் உண்டு என்கிறார்கள். சிலாவ் காஜாவிற்கும் இந்த GI Tag சமீபத்தில் தான் கிடைத்திருக்கிறது.அழகாய் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் சிலாவ் கா காஜா....

இன்னுமொரு செவி வழி செய்தியும் இந்த காஜா பற்றி சொல்வதுண்டு. கௌதம புத்தர் நாளந்தா, ராஜ்கீர் வழியாக புத்தகயா சென்றபோது இந்த சிலாவ் கிராமத்தின் வழியாகச் சென்றதாகவும் சிலாவ் கிராமத்தில் செய்யப்படும் இந்த காஜாவினை கௌதம புத்தருக்கு வழங்கியதாகவும் சொல்கிறார்கள். இந்த காஜா என்பது, இந்தப் பகுதியில் இருக்கும் சா எனும் சமூகத்தினைச் சேர்ந்த சமையல் கலைஞர்களால் செய்யப்படுகிறது என்று சொல்கிறார்கள். இந்தப் பகுதியில் செய்யப்படும் காஜாவுக்கு மட்டும் என்ன சிறப்பு என்று கேட்டால் – இந்தப் பகுதியில் கிடைக்கும் தண்ணீருக்கு தனிச் சுவை உண்டு என்றும், இந்தப் பகுதியின் தட்பவெப்பமும் அதற்கு உறுதுணையாக இருக்கிறது என்றும், அதனால் தான் இங்கே செய்யப்படும் காஜா மொறுமொறுவென, பரல் பரலாக இருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.

காஜா எதில் செய்யப்படுகிறது எனக் கேட்டால் மைதா மற்றும் சர்க்கரைப் பாகு என்கிறார்கள். மைதா மாவில் செய்யப்படும் காஜாவை எண்ணையில் பொரித்து எடுத்த பிறகு சர்க்கரைப் பாகை அப்படியே மேலே ஊற்றுகிறார்கள். அப்படி ஊற்றிய பின் இனிப்பு காஜா, சர்க்கரைப் பாகு ஊற்றாமல் இருந்தால் அது நம்கீன் காஜா. நாங்கள் வாங்கிய கால் கிலோவிலேயே பத்து பன்னிரெண்டு காஜா கிடைத்தது – ஆளுக்கு இனிப்பில் ஒன்றும், நம்கீன் சுவையில் ஒன்றும் சாப்பிட்ட பிறகும் மீதி இருந்தது. மொறுமொறுவென இருப்பதால், மேலே விழாமல் சாப்பிடுவது கொஞ்சம் கடினம். இனிப்பு காஜா சாப்பிட்டால், கையெல்லாம் பிசுபிசுப்பு! இந்த புகழ்பெற்ற சிலாவ் கா காஜாவின் விலையொன்றும் அதிகம் இல்லை – கிலோ 120 ரூபாய் தான். மொறுமொறுவென, பரல் பரலாக, சுவையாக இருக்கும் இந்த காஜா எப்படிச் செய்வது என்று பார்க்க விரும்பினால், இணையத்தில் காணொளிகள் உண்டு. அப்படி ஒரு காணொளி இங்கே தந்திருக்கிறேன்.
சிலாவ் எனும் சிற்றூரில் கிடைக்கும் காஜா பற்றிய தகவல்கள் உங்களுக்குப் பிடித்திருக்கும் என நம்புகிறேன். மேலும் சில பீஹார் மாநிலத் தகவல்களை வேறு பகிர்வில் கொடுக்கிறேன். பதிவு பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்!

வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி


64 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி! இந்த நாள் மகிழ்ச்சியாய் அமைந்திடட்டும்!!

  கீதா

  பதிலளிநீக்கு
 2. குட்மார்னிங் வெங்கட்.

  புத்தரும் சுவைத்த காஜா பற்றிய விவரங்கள் சுவி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம் 🙏 ஸ்ரீராம்.

   புத்தர் சுவைத்த காஜா சுவை....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 3. காஜாவைப் பார்க்கும்போதே ஒரு மாதிரி அது எப்படி இருக்கும் என்பதை யூகிக்க முடிந்தது. நீங்கள் சொல்லியிருக்கும் விவரங்களும் சரியாய் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றாக இருக்கும். சென்னையில் கிடைக்கலாம்.... கிடைத்தால் சுவைத்துப் பாருங்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 4. பார்க்க பெரிதாக இருந்தாலும், எடை குறைவானது தான் இந்த காஜா.//

  ஆமாம் ஜி ஃப்ளஃபியாக இருக்கும்...கிட்டத்தட்ட் இதன் உள்ளே மசாலா வைத்தால் பஃப் என்று சொல்லலாம் என்பது போல இருக்கும். என் மாமி டாட்டா நகரில் இருந்தவர் அங்கு இருந்தவரை வாங்கி வந்திருக்கார். இப்ப சென்னையில் செட்டில் ஆகிவிட்டார். ஆனால் அவர் சிலாவில் வாங்கியதில்லை. பாட்னாவில்தான்...நல்ல கடையிலிருந்து. அதுவே நன்றாக இருக்கும்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சென்னை போன்ற ஊர்களில் இது கிடைப்பதில்லையா கீதா / வெங்கட்?

   நீக்கு
  2. ஃப்ளஃபியாக .... அதே தான். பட்னா நகரில் நான் பார்த்த கடையில் நடைபாதையில் வைத்திருந்ததால் வாங்கவில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
  3. சென்னையில் கிடைக்கலாம். ஆன்லைன் மூலம் கிடைக்கிறது. முயற்சிக்கலாம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 5. முதல் கமெண்ட்டில் சுவை என்பது சுவி என்று வந்து விட்டதற்கு காரணம் காஜா அல்ல, என் அவசரம்தான்!!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா.,.. அவசரம் - :) புரிந்து கொள்ள முடிந்தது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 6. மைதா மற்றும் சர்க்கரைப் பாகு என்கிறார்கள். மைதா மாவில் செய்யப்படும் காஜாவை எண்ணையில் பொரித்து எடுத்த பிறகு சர்க்கரைப் பாகை அப்படியே மேலே ஊற்றுகிறார்கள்.//

  ஆமாம் ஜி. பிறந்த வீட்டில் அம்மாவின் அம்மா மைதா சிப்ஸ் அதாவது டைமன்டாக கட் செய்து உப்பு போட்டு பொரிப்பார். அதை உப்பு போடாமல் சர்க்கரை பாகில் நனைப்பதும் உண்டு. ஆனால அவர் செய்வது சும்மா மைதா சப்பாத்தி போல் செய்து கீறல் போட்டு பொரித்துவிடுவது.

  இது ஊட்டி வர்கி போலவும் இருக்கும். கொஞ்சம் கூடுதலக டால்டா அல்லது நெய் அல்லது வெண்ணை உள்ளே தேய்த்து செய்யனும் என்பதால் இதைச் செய்து பார்க்கலை. ஆனால் பாம்பே காஜா செய்ததுண்டு...

  கௌதமபுத்தர் சாப்பிட்டுருக்கார் என்பது சுவாரஸ்யமான தகவல்.

  வீடியோ பார்க்கிறேன் ஜி..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. டைமண்ட் பிஸ்கெட் அம்மா செய்வார் - மிக்சரில் சேர்க்க. ஆந்திர காஜா ஆதி செய்து சாப்பிட்டது உண்டு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
  2. ஆந்திரா காஜா செய்து பார்க்கலை...அதே போல இந்த பீஹார் காஜாவும் செய்யனும்...

   கீதா

   நீக்கு
  3. செய்து பார்த்து சொல்லுங்கள் கீதாஜி.

   தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. காணொளி சுவாரஸ்யம். எளிதாகத் தயாரிக்கிறார்கள். பாண்ட் ஷர்ட் போட்டு மர்ந்திருப்பவர் முதலாளி போலும். கடனே என்று அருகில் அமர்ந்திருக்கிறார். பணம் எண்ணுகிறார். செல் நோண்டவில்லை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. செல் நோண்டவில்லை. ஹாஹா....

   எளிதாக இருக்கிறது என்றாலும் எனக்குச் செய்யத் தோன்றவில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 8. நம்ம ஊரு ஜீரா போளி தான் அங்கே காஜா என்கிறார்கள்! இஃகி, இஃகி! இதிலே காரம் எனச் சொல்வதை மி.பொடி, ஓமம் போட்டுத் தயாரித்து ஊர்ப் பயணங்களுக்கு எடுத்துச் செல்வது உண்டு. ஆனால் பெரும்பாலும் கோதுமை+மைதா கலவை. தனி மைதாவில் அதிகம் செய்வதில்லை. இனிப்பு மட்டும் மைதாவில் உண்டு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. போளி போல இருக்காதே கீதா அக்கா.. இது பொலபொல என்று உதிரும் டைப்!

   நீக்கு
  2. ஜீரா போளியும் உதிரும்படித் தான் செய்வார்கள். தொட்டால் பொலபொலவெனத் தான் இருக்கும். சுருள் போளி என்றும் சொல்வார்கள். நிறையப் பதிர் போட வேண்டும். நெய்யும் அரிசிமாவுமாகக் குழைத்துக் கொண்டு மடித்து மடித்துப் போடணும். இப்போல்லாம் அவ்வளவு போட்டால் உடம்புக்கு ஒத்துக்காது என்பதால் நான் போடுவதில்லை.என் பெரிய நாத்தனார் இப்போவும் அப்படித் தான் பண்ணுகிறார்.

   நீக்கு
  3. கீசா மேடம்.... 'சுருள் போளி' வேறு... ஜீரா போளி வேறுன்னு நினைக்கறேன். இல்லை ரெண்டும் ஒன்று என்று சொன்னால், நாளைக்கே உங்க ஊருக்கு வந்து சாப்பிட்டுப் பார்க்கிறேன்.

   நீக்கு
  4. இது நம்ம ஊர் ஜீரா போளி போல அல்ல கீதாம்மா... இது வேறு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
  5. ஆமாம் - இந்த காஜா பொலபொலவென உதிரக் கூடியது. போலவே இதில் ஜீரா அதிகம் சேர்ப்பதில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
  6. நம் ஊரில் செய்வதற்கும் இதற்கும் வேறுபாடு இருக்கிறதும்மா. நான் நம் ஊர் ஜீரா போளியும், இந்த பீஹார் காஜாவும் சாப்பிட்டதால் இரண்டுமே வேறு வேறு என்பது தெரிந்தது.

   தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
  7. ஹாஹா... நல்ல போட்டி - நானும் சுருள் போளி ஜீரா போளி இரண்டும் சாப்பிட ரெடி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
  8. அடடா... செய்ய மாட்டேன் என்று சொன்னால் எப்படி... நெல்லைத்தமிழன் மட்டுமல்ல நானும் சாப்பிட வரலாம் என இருந்தேனே! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
  9. @Venkat, அட? உங்களுக்கு இல்லைனு சொல்வேனா? நெ.த.வுக்குத் தான் இல்லைனு சொன்னேன். :)

   நீக்கு
  10. ஆஹா,.. மகிழ்ச்சி.... போனாப் போகுது... அவருக்கும் கொடுக்கலாம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   நீக்கு
 9. மும்பையில் இதைக் காஜா என்பது போல் கர்நாடகாவில் வேறொரு பெயர். மறந்து விட்டது. ஆனால் அதில் சர்க்கரைப் பாகு சேர்க்காமல் அஸ்கா சர்க்கரையை நைசாகப் பொடி செய்து மேலே தூவுவார்கள். பாதாம், முந்திரியும் பொடியாக நறுக்கித் தூவுவார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அக்கா கர்நாடகா சிரோட்டி காஜா....நீங்க முந்தைய கமென்டில் சொல்லிருப்பது போல அரிசி மாவு நெய் கலந்து தேய்த்து தேய்த்து மடித்து மடித்து சிரோட்டி அல்லது ஜீரா போளிசெய்யறது போலத்தான்....

   என் மாமியார் பழக்கம் சரஸ்வதி பூஜை அன்று பால் பூரி செய்வது கிட்டத்தட்ட சிரோட்டி போலத்தான் ஆனால் மடிப்புகள் பொர பொரன்னு இருக்காது. நான் சில சமயம் அதையே சிரோட்டி போல நிறைய மடிப்புகள் என்று செய்யறதுண்டு அப்படிப் பழகியதுதான் இந்த சிரோட்டி காஜா, நார்மல் காஜா, ஜீரா போளி, பால் பூரி எல்லாம்...

   கீதா

   நீக்கு
  2. மற்றொரு முறை மைதா பூரிகளாக இட்டுக் கொண்டு ஒவ்வொரு பூரியிலும் இந்த அரிசி நெய் பேஸ்ட் தடவி 4, 5 பூரிகளை அடுக்கி ஒரு சின்னதாக அழுத்தித் தேய்த்துவிட்டு சுருட்டி அப்புறம் கட் செய்து காஜா செய்தால் சிரோட்டி போல உள்ளே பல அறைகளாக க்ரிஸ்பாக....அக்கா உங்களுக்குத் தெரிஞ்சுருக்கும்...உங்களுக்குத் தெரியாததா என்ன!! நீங்க செஞ்சும் இருப்பீங்க...

   நீங்க சொன்ன காரணத்துனாலதான் நானும் இப்ப செய்வதில்லை. சென்னையில் இருந்த வரை யாராவது கேப்பாங்க செஞ்சு கொடுப்பேன்..

   கீதா

   நீக்கு
  3. இனிப்புகளில் தான் எத்தனை எத்தனை வகை. இப்படியே இனிப்பு சாப்பிட்டுக் கொண்டிருந்தால் என்னாவது! :) அதனால் தான் கொஞ்சமாக சாப்பிட வேண்டியிருக்கிறது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
  4. சிரோட்டி காஜா என்பது ஆந்திராவில் செய்யப்படும் காஜா போன்றதா? இந்தப் பெயரில் காஜா சாப்பிட்டதில்லை. தேடிப் பார்க்க வேண்டும்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
  5. நீங்கள் சொல்லி இருக்கும் செய்முறையை ஆதியிடம் படிக்கச் சொல்கிறேன். செய்து பார்க்கலாம்! :) எனக்கு இத்தனை பொறுமை இல்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 10. பதில்கள்
  1. நம் ஊரில் இந்த சிலாவ் கா காஜா கிடைக்குமா எனத் தெரியவில்லை. கிடைத்தால் ருசித்துப் பாருங்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 11. நம்ம ஊரில் காஜா பீடி பேமஸ் அதைப்போல் அங்கும் இதுபோல...
  அடுக்கி வைத்த அழகுக்கு ஒரு சபாஷ் ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காஜா பீடி - இதுதான் எனக்கும் நினைவுக்கு வந்தது - இந்த இனிப்பின் பெயர் கேட்ட போது!

   ஆமாம் ஜி. ரொம்பவே அழகாய் அடுக்கி இருக்கிறார்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

   நீக்கு
 12. புத்தர் கஜாவை சுவைத்த விவரம் ஒரு புதிய தகவல்.உப்பு கஜாவின் சுவை எனக்கு பிடிக்கவில்லை.இனிப்பு காஜாவின் சுவை எனக்கு பிடிக்கும்.கடைக்காரர்கள் அதை ஒரு சுகாதாரமான முறையில் வைத்திருந்தால் நான் இன்னும் அதிகமாக அனுபவித்திருப்பேன்.மிகவும் சுவாரஸ்யமான வலைப்பதிவு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்லாம் செவி வழி செய்திகள் தானே... உண்மையாக நடந்திருக்குமா என்பது புத்தருக்கே வெளிச்சம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி!

   நீக்கு
 13. அம்மா மைதா இனிப்பு துக்கடா என்பார்கள். சீனீ பாகில் போட்டு எடுத்து வைப்பார்கள், இவர்கள் சீனி பாகை மேலே ஊற்றுகிறார். காரம் போட்டும் காரத்துக்கடா செய்வார்கள். நானும் முன்பு அடிக்கடி செய்வேன் மைதா சேர்க்க வேண்டாம் என்றது விட்டு விட்டேன். இப்போது இந்த காணொளி பார்த்தவுடன் செய்ய ஆசை வந்து விட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. துக்கடா எனும் பெயர் கேட்டிருக்கிறேன் மா. மைதா அதிக அளவில் எடுத்துக் கொள்வது சரியல்ல தான். காணொளி பார்த்ததும் செய்ய ஆசை வந்துவிட்டதா... ஹாஹா... செய்து பார்த்து சொல்லுங்கள் மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 14. கீதா சொல்வது போல் வட்டமாய் இட்டு அதை துண்டங்கள் செய்து பொரித்து எடுப்போம். நாலு துண்டங்க்களை சேர்த்து இவர் போடுகிறார். மாயவரத்தில் இருக்கும் போது இது போன்ற இனிப்பை ஒரு அம்மா எடுத்து வருவார்கள் அவர்கள் நீட்டமாய் நாலு மடிப்பு மடுத்த இந்த இனிப்பை கொண்டு வருவார்கள். பயங்கர இனிப்பாய் இருக்கும், என் மகன் விரும்பி வாங்கி சாப்பிடுவான், அவர்கள் தேன்மிட்டாய், இலந்தவடை, பொரி உருண்டை மட்டும் இந்த இனிப்பு கொண்டு வருவார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் மா... இவர் நான்கு அல்லது ஐந்து துண்டங்களை ஒரு பக்கத்தில் மட்டும் சேர்த்து எண்ணையில் போடுகிறார். நன்றாகவே இருந்தது.

   இலந்தவடை, தேன் மிட்டாய், பொரி உருண்டை, இஞ்சி மொரப்பா - இவை பற்றி சமீபத்தில் கல்லூரி நட்புகளின் குழுவில் பேசிக் கொண்டிருந்தோம். இங்கேயிருந்து யு.எஸ். வாங்கிச் சென்றார் ஒரு தோழி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 15. அடுக்கிவைத்தள்ள விதம் சாப்பிட ஆசையைத் தூண்டுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 16. Presented the information beautifully. I liked both the varieties. Buddha tasted, we too tasted. Good.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கயல் இராமசாமி மேடம்.

   நீக்கு
 17. காஜா படங்கள் ஆஜா, ஆஜா, வந்து காஜா, காஜா -ன்னு கூப்பிடுது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா கா ஜா ந்னு கூப்பிடுதா உங்கள! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   நீக்கு
 18. ரொம்ப அட்ராக்டிவ் ஆக இல்லை வெங்கட். ஆனாலும் புதிய தகவல்தான்.

  மைதாமாவில் பொரித்து ஜீனிப்பாகு போட்டுத் தருவது... வித்தியாசமான ஷேப்தான். நம்மூரில் பாதுஷாவும் அதே செய்முறைதானே (ஆனால் முன்னது பேக்கரியில் கிடைக்கும் பஃப் மாதிரி இருக்கு)

  ஆமாம்... இந்த மைதாவே சமீபகாலங்களில்தானே வந்தது... இது எப்படி புத்தருக்கு.......

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒரு முறை சுவைத்துப் பார்க்கலாம் - தவறில்லை! :)

   புத்தருக்கு எப்படி - எல்லாம் செவி வழி செய்திகள் தானே... புத்தரே வந்து சொன்னால் தான் உண்மையா எனத் தெரியும்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 19. படத்தை பார்த்து நம்ம ஊரு பப்ஸ்ன்னு நினைச்சுட்டேன் :-(

  ஆனா, இது கடிக்க கொஞ்சம் கஷ்டமா இருக்கும்ன்னு நினைக்குறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. போல பொலவென உதிரக்கூடிய பதார்த்தம் இது. கடித்துச் சாப்பிடுவது கடினமான வேலை இல்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   நீக்கு
 20. புதியதொரு இனிப்பு வகை. ஊட்டி வர்கி போல இருக்கிறது. ஊட்டி வர்கி சாப்பிட்டதுண்டு. ஆனால் மைதா என்பதால் அதிகம் வாங்குவதில்லை.

  தகவலுக்கு மிக்க நன்றி வெங்கட்ஜி. குடும்பத்தில் ஒரு துக்க நிகழ்வு பயணம் ஸோ பதிவுகள் வாசிக்க முடியலை. மற்றபடியும் இப்போதெல்லாம் பதிவுகள் வாசிக்கத் தாமதமாகத்தான் ஆகிறது...

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குடும்பத்தில் துக்க நிகழ்வு - அன்னாரது ஆன்மா சாந்தியடைய எனது பிரார்த்தனைகளும்.

   முடிந்த போது பதிவுகளை வாசியுங்கள் ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   நீக்கு
 21. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!

  இன்று பதிவைக் காணலையே வழக்கமான நேரத்திற்கு? தாமதமாகுமோ!!!ஜி?

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா... கொஞ்சம் தாமதம் - முதல் நாள் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியது லேட் - அதனால் Schedule செய்து வைக்க முடியவில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 22. பதில்கள்
  1. கிடைத்தால் ருசித்துப் பாருங்கள் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 23. மைதாவில் பாகு ஊற்றுவது, மிளகாய்பொடிகாரம் சேர்ப்பது இங்கும் செய்வார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....