வெள்ளி, 28 டிசம்பர், 2018

பீஹார் டைரி – பட்னா அருங்காட்சியகம் – புத்தரின் அஸ்தி இருக்கும் பேழைபுத்தரின் அஸ்தி இருக்கும் பேழை 
நடுவில் சிறியதாக இருப்பது...அருங்காட்சியகத்தின் வெளியே....

பட்னா நகரில் இரண்டு அருங்காட்சியகங்கள் – ஒன்று பட்னா அருங்காட்சியகம் மற்றொன்று பீஹார் அருங்காட்சியகம். இரண்டில் பழமையானது பட்னா அருங்காட்சியகம் தான். நாங்கள் சென்ற போது இந்த இரண்டு அருங்காட்சியகங்களுக்கும் சென்று வந்தோம். இரண்டிலும் நிறைய புராதனச் சின்னங்களையும், சிலைகளையும் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள் – இரண்டிலும் தனித்தனியான விஷயங்கள் இருந்தாலும், சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட பீஹார் அருங்காட்சியகம் சுத்தமாக பராமரிக்கப்படுகிறது – திறந்து ஒரு வருடம் தான் ஆகிறது என்பதால் இத்தனை சுத்தமாக இருக்கலாம்! பட்னா அருங்காட்சியகத்தின் நிலையைப் பார்த்தபோது இந்தப் புதிய அருங்காட்சியகமும் சில வருடங்களில் மோசமான பராமரிப்பில் பாழடைந்து போகலாம் என்று தோன்றியது.


Lt. Governor Sir Edward Gait
அருங்காட்சியகம் அமைத்தவர்தாரா....
பன்னிரெண்டாம் நூற்றாண்டின் சிலை...


சரி வாருங்கள் முதலில் பட்னா அருங்காட்சியகம் சென்ற போது எங்களுக்குக் கிடைத்த அனுபவங்களைப் பார்க்கலாம். பீஹார் அருங்காட்சியகத்தில் வாங்கிய நுழைவுச் சீட்டு பட்னா அருங்காட்சியகத்திலும் செல்லும் என்று சொல்லி இருந்தார்கள். ஆனால் அங்கே போன பிறகுதான் தெரிந்தது – உள்ளே நுழைய மட்டும் தான் அந்த அனுமதி என்பது. கேமராவிற்கு இங்கே தனிக் கட்டணம் உண்டு. அதைத் தவிர புத்தர் கேலரி என ஒன்று இங்கே உண்டு – அதற்கு நீங்கள் போக வேண்டுமெனில் ஒருவருக்கு நூறு ரூபாய் தனியே தர வேண்டும் என்று சொன்னார்கள். சரி வந்தது தான் வந்து விட்டோம் புத்தர் கேலரியும் பார்க்கலாம் என அதற்கான நுழைவுச் சீட்டையும் வாங்கிக் கொண்டு அருங்காட்சியகத்தின் உள்ளே சென்றோம்.


பேழையின் முன்னர் நானும் நண்பரும்.... 


மின்னஞ்சலில் படம் அனுப்பி வைக்கச் சொன்ன சிறுவர்கள்...

அருங்காட்சியகத்தின் உள்ளே செல்லும்போது இது உருவான கதையும் பார்த்தபடியே போகலாம். 1917-ஆம் வருடம், அப்போதைய பீஹார் மற்றும் ஒடிசாவின் Lt. Governor Sir Edward Gait என்பவர் தான் இந்த அருங்காட்சியகம் உருவாகக் காரணமாக இருந்தவர். இவரது முழு உருவச் சிலை அருங்காட்சியகத்தின் வெளியே இருக்கும் பூங்காவில் அமைந்திருக்கிறது. இந்த அருங்காட்சியகத்திற்காக ஒரு அழகிய கட்டிடத்தினைக் கட்டி இங்கே பல வரலாற்றுச் சிறப்பு மிக்க பொருட்களை காட்சிப் படுத்தியதில் அவரது பங்கு சிறப்பு மிக்கது. இங்கே கிட்டத்தட்ட 45000 பொருட்களுக்கு மேல் காட்சியில் இருக்கிறதாம். அனைத்தும் இங்கே ஒழுங்காக வைக்க இடம் இல்லை என்பதால் சிலவற்றை சரியாக காட்சிப்படுத்தாமல் மூடி வைத்திருக்கிறார்கள்.


லட்டு கோபால்... 


வஜ்ரவாராஹி மற்றும் சக்ரசம்வர சிற்பம்...

Natural History Gallery, Stone Sculpture Gallery, Orissan Stone Sculpture, Indian Stone Art Tradition, Terracota Gallery, Budda Relic Gallery, Bronze Galley, Mahapandit Rahul Sankrityayana Gallery, Art Gallery & war-weapon Gallery, Painting Gallery, Patliputra Gallery மற்றும் Rajendra Gallery எனத் தனித்தனியாக இரண்டு மாடிகளில் அருங்காட்சியகத்தினை பிரித்து இருக்கிறார்கள். இங்கே இருந்த பல சிற்பங்களை புகைப்படம் எடுத்திருக்கிறேன். முடிந்த போது தனிப்பதிவுகளாக வெளியிடுகிறேன். நிறைய விஷயங்களை இந்த அருங்காட்சியகத்தில் தெரிந்து கொள்ள முடிந்தது. புத்தரின் வாழ்க்கை வரலாறைக் கூட ஓவியங்களாக வரைந்து வைத்திருக்கிறார்கள். அவ்வளவு அழகு அந்த ஓவியங்கள்.


பைரவர், பைரவி சிற்பங்கள்....


தீபம், பிள்ளையார் அவருக்குப் பின்னே ஐந்து தலை நாகமான வாசுகி...

சிற்பங்கள், ஓவியங்கள், முழு உருவத்தில் பதப்படுத்தப்பட்ட மிருகங்களின் தோல்கள், பறவைகள், சின்னச்சின்ன பொருட்கள் என அனைத்தையும் பாதுகாத்து வைப்பது என்பது ரொம்பவே கடினமான வேலை. நம் வீட்டிலேயே பொருட்களை அலங்காரமாக வைத்து, அதனைச் சுத்தமாக வைக்க எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது. இவ்வளவு பெரிய அருங்காட்சியகத்தினைப் பராமரிப்பது ரொம்பவும் கடினமான வேலை தான். ஆனாலும், அரசாங்கம் நினைத்தால் எதையும் செய்ய முடியும். அரசாங்கமும் நினைப்பதில்லை, அவர்கள் பராமரிப்பிற்காக பணியில் அமர்த்திய பணியாளர்களும் நினைப்பதில்லை என்பதை அங்கே கண்கூடாகப் பார்க்க முடிந்தது.
புத்தர்பிரானின் சாம்பல், அவர் பயன்படுத்திய சிறு வெள்ளித்துண்டு, ஒரு இலை மற்றும் கண்ணாடி மணி ஆகியவற்றை ஒரு பேழையில் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். கி.மு. ஐந்தாம் நூற்றாண்டின் முதற் பகுதியில், தற்போதைய வைஷாலி எனும் இடத்தில், அப்பகுதியை ஆண்ட லிச்சாவி மன்னர்கள் அமைத்த ஸ்தூபாவிலிருந்து இந்த பேழை கிடைத்ததாகச் சொல்கிறார்கள். ஸ்தூபாவினை 1958-59-ஆம் வருடங்களில் அகழ்வாராய்ச்சி நடத்தியபோது கிடைத்ததாகச் சொல்கிறார்கள். உண்மையிலேயே அப்பேழையினுள் இருப்பது புத்தர் பிரானின் சாம்பல் தானா என்ற ஆராய்ச்சிக்குள் போகாமல் இருப்பது நமக்கு நல்லது! சில விஷயங்களை ஆராய்ச்சி செய்வது முடியாத காரியம்! இன்றைக்கு சற்றேறக்குறைய 2600 ஆண்டுகளுக்கு முன்பான சம்பவம் – நேற்றைய விஷயமே நமக்குத் தெரியாத போது – இதனை எப்படிச் சரியா தவறா எனச் சொல்வது!


புத்தர் பிரான்....


மச்சந்தர்நாத்....

இந்தப் பேழை, இன்னும் சில சிற்பங்கள் ஆகியவற்றை தான் தனியாக பூட்டிய அறைக்குள் வைத்துப் பாதுகாக்கிறார்கள். எல்லோருக்கும் இங்கே செல்ல அனுமதி இல்லை. நூறு ரூபாய் கொடுத்து நுழைவுச் சீட்டு வாங்கி அங்கே சென்றால் எங்களை ஒரு பெரிய பூட்டு வரவேற்றது! அங்கே இருந்தவரிடம் கேட்டால், நுழைவுச் சீட்டு வாங்கி இருக்கிறீர்களா எனக் கேட்டு, ஒரு இளைஞரை அழைத்தார். அவர் வந்து கதவைத் திறந்து எங்களுக்கு மட்டும் பேழை மற்றும் சிற்பங்களைக் காண்பித்து, விளக்கங்களும் சொல்லி, நாங்கள் அங்கே சில நிழற்படங்கள் எடுத்துக் கொள்ளவும் உதவி செய்தார். இந்தப் பேழை மட்டும் தான் அங்கே சிறப்பு. மற்ற சிற்பங்கள் வெளியில் இருக்கும் சிற்பங்கள் போலவே தான். சில ஓவியங்களும் ரொம்பவே சாதாரணமாக எங்களுக்குத் தெரிந்தது.


துணியில் ஓவியம்...


புத்தரின் திருமணம் - ஓவியமாக...

அருங்காட்சியகத்தில் சில சிறுவர்களையும் பார்க்க முடிந்தது. நமது புராதன சின்னங்களைப் பார்க்க சிறுவர்களும் வருவதில் மகிழ்ச்சி அடைந்தேன். நான்கு சிறுவர்கள் அங்கே நான் படங்கள் எடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து, “அங்கிள் எங்களை ஒரு படம் எடுத்து WhatsApp-ல் அனுப்ப முடியுமா?” எனக் கேட்டார்கள். இல்லை கண்ணுங்களா, என்னால் இப்போது அனுப்ப இயலாது, கேமராவிலிருந்து அலைபேசிக்கு அப்போதே அனுப்ப இயலாது என்று சொல்ல, சரி எடுத்துக் காண்பியுங்கள், பிறகு மின்னஞ்சலிலாவது அனுப்பி வையுங்கள் என்றார்கள். அவர்களை படம் எடுத்துக் காண்பிக்க, அவர்களுக்கும் பிடித்திருந்தது. மின்னஞ்சல் முகவரி எழுதித் தாருங்கள் எனச் சொல்ல, எங்கள் யாரிடம் பேனா இல்லை. சரி பரவாயில்லை எனச் சொல்லி, அங்கிருந்து நகர்ந்தேன்.

சில நிமிடங்கள் வேறு அரங்கில் பார்வையிட்டு திரும்பி வந்த போது படிக்கட்டு அருகே எனக்காக அந்த இளைஞர்கள் காத்திருந்தார்கள். யாரிடமோ பேனா, ஒரு சிறு காகிதத் துண்டு வாங்கி அதில் அவர்களது மின்னஞ்சல் முகவரியை எழுதித் தந்தார்கள். தில்லி திரும்பிய பிறகு நினைவாக அவர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அந்தத் துண்டுச் சீட்டை எனது கேமரா பையினுள் போட்டு வைத்தேன். தில்லி வந்த பிறகு அந்தச் சீட்டு காணவில்லை! அடடா… அந்த இளைஞர்கள், என்னிடமிருந்து மின்னஞ்சல் வரவில்லை என கஷ்டப்பட்டு இருப்பார்களே என இப்போதும் தோன்றுகிறது. என்ன செய்ய, கேமரா பையை கையாளும்போது எங்கேயோ விழுந்து விட்டது அந்தத் துண்டுச் சீட்டு. பாவம் அந்த இளைஞர்கள்…. இதற்காக மீண்டும் பட்னா செல்ல முடியாது. அப்படியே சென்றாலும், அந்த இளைஞர்களைச் சந்திக்க முடியுமா என்ன!

அருங்காட்சியகம் பற்றிய தகவல்கள் மற்றும் அங்கே எடுத்த சில நிழற்படங்களை இங்கே பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி. இன்னும் சில படங்கள் உண்டு. அவை தனிப்பதிவாக – விரைவில்!

வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

40 கருத்துகள்:

 1. குட்மார்னிங் வெங்கட்... நீளமான பதிவு போல... இதோ படிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய காலை வணக்கம் 🙏 ஸ்ரீராம்.

   சற்றே நீளமான பதிவு தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. லெப்.கவர்னர் சிலையாய் பார்த்தால் கிளைவ் நினைவுக்கு வருகிறார். அப்பவே ஷார்ட்ஸ் பிரபலம் போல... கோட் போட்டு மறைச்சிருக்கார்!!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஷார்ட்ஸ் கோட்டு போட்டு மறைத்திருக்கிறார்..... ஹாஹா....

   கிளைவ் தான் எனக்கும் நினைவுக்கு வந்தார்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
  2. ஸ்ரீராம் எனக்கும் க்ளைவ் நினைவுக்கு வந்தார்....இப்படியான படம் தானே நம்ம ஹிஸ்டரி புக்குல இருந்த நினைவு...

   ஷார்ட்ஸ்....கோட்/ ஹா ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
  3. ஹாஹா... உங்களுக்கும் க்ளைவ் தான் நினைவுக்கு வந்தாரா?

   ஷார்ட்ஸ்-கோட் - நல்ல காம்பினேஷன் இல்லையா... ட்ரை பண்ணினா பெரிய ஃபேஷன் ட்ரெண்டா மாறலாம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.

   நீக்கு
 3. மின்னஞ்சலில் அந்தச் சிறுவர்களுக்கு படம் அனுப்பி விட்டீர்களா என்று கேட்க நினைத்தேன். துண்டு சீட்டு காணாமல் போய்விட்டது என்று படித்ததும் வருத்தமாகி விட்டது. இதை நீங்கள் பதிவில் சொல்லாமல் இருந்திருக்கலாமோ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மின்னஞ்சல் அனுப்ப முடியாததில் எனக்கும் வருத்தம்தான். அதனை வெளியிடவே இங்கே பகிர்ந்து கொண்டேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 4. அருங்காட்சியகங்கள் சரிவர பராமரிக்கப்படாமல் இருப்பது வேதனை ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 5. இனிய காலை வணக்கம்! லேட் அரைவல்...

  நேற்று நெட் போய் இதோ இப்பத்தான் சரியாச்சு...அதான்..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய காலை வணக்கம் 🙏 கீதாஜி.

   ஓ.... அதான் லேட்.... இணையம் இப்படி படுத்தினால் கஷ்டம் தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. மின்னஞ்சல் தொலைந்தது வருத்தமாக இருக்கிறது. உங்களது வலைப்பூ முகவரியாவது அவர்களிடம் கொடுத்து இருக்கலாம் ஜி.

  கூகுளாண்டவர் இப்படங்களை அவர்களை கூகுளில் இப்படங்களை காண அருள் புரிவானாக...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவர்களுக்கு அனுப்ப முடியாமல் போனது எனக்கும் வருத்தம் தான் கில்லர்ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. புத்தரின் அஸ்தி இருக்குமிடம் தகவல் புதுசுண்ணே. புத்தர் ஜீவசமாதிதானே அடைஞ்சிருப்பார். அப்புறம் எப்படி அஸ்தி?!

  உண்மையா பொய்யான்னு ஆராய்வது கடினம்தான். ஆனா, இது நம்பிக்கை சார்ந்த விசயமாச்சுதே! அதான் சின்ன டவுட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சில விஷயங்களை ஆராய்ந்து பார்ப்பதில் பலனில்லை. நம்பிக்கை இருப்பவர்கள் நம்பிக்கை வைக்கட்டும். சில வரலாறுகள் சிதைக்கப்பட்டு வேறு விதமாக எழுதி வைத்திருப்பதும் காரணமாக இருக்கலாம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   நீக்கு
 8. Hi, அந்த துண்டு சீட்டையும் உடனே புகைப்படம் எடுத்து வைத்திருந்து இருக்கலாம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் முதல் வருகையோ சண்முகம் ஜி.... மிக்க மகிழ்ச்சி.

   அந்தச் சீட்டையும் புகைப்படம் எடுத்து வைத்திருக்கலாம்... - கலாம்! அப்போது தோன்றவில்லையே... இனிமேல் அப்படிச் செய்ய வேண்டும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சண்முகம் ஜி!

   நீக்கு
  2. நான் தினமும் உங்கள் வலைத்தளத்தை படித்துவிடுவேன். ஆனால் இதுதான் என் முதல் கமெண்ட்.

   நீக்கு
  3. தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சண்முகம் ஜி.

   நீக்கு
 9. உங்கள் இந்தப் பதிவை சிறுவர்கள் என்றாவது ஒரு நாள் பார்ப்பார்கள்... பார்க்க வேண்டும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பார்த்தால் மகிழ்ச்சி. ஆனால் பார்க்க வாய்ப்பில்லை. அவர்கள் ஹிந்திக்காரர்கள் - தமிழ் வலைப்பூவை பார்க்க வாய்ப்பில்லை என்று தான் தோன்றுகிறது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 10. உங்களோட மெயில் ஐடியையும் அந்தச் சிறுவர்களிடம் கொடுத்திருக்கலாமோ? பாவம், குழந்தைகள்! ஏமாந்து போயிருப்பார்கள். நல்ல பதிவு. புத்தரை எரித்தார்களா என்ன? அப்படிப் படிச்சதா நினைவில் இல்லை. இதைத் தவிர்த்தும் புத்தரின் பல் ஶ்ரீலங்காவில் இருக்குனும் சொல்லுவாங்க! புத்த கயா போனீங்களா? நீங்க எழுதி நான் படிக்கலையோ? அல்லது படிச்சது நினைவில் இல்லையோ? தெரியலை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனது மெயில் ஐடி கொடுத்திருக்கலாம்... பாவம் தான் குழந்தைகள்.

   புத்த கயா சென்றிருந்தேன் இந்தப் பயணத்தில். அது பற்றி இன்னும் இங்கே எழுதவில்லை. எழுதுவேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 11. சிற்பங்கள் எல்லாமே அருமையாக இருக்கு.

  புத்தர் சாம்பல் அவர் பயன்படுத்திய வெள்ளிக் குச்சி என்பதைப் பற்றி கேள்வி வந்தது படித்து வரும் போது நீங்களே சொல்லிட்டீங்க ஜி ஆராயக் கூடாதுன்னு ஹா ஹா ஹா ஹா...நீங்கள் சொல்லியிருக்கும் வரிகளை நானும் ஆமோதிக்கிறேன்...

  ஆனால் நல்ல அனுபவம் ஜி. பாதுகாப்பது பராமரிப்பது என்பது மிக மிகக் கடினமான வேலைதான்...

  பாவம் அந்தப் பசங்க இல்லையா...எதிர்பார்த்துக் கொண்டிருப்பாங்களோ...

  படங்கள் எல்லாமே நல்லாருக்கு ஜி

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்த சிறுவர்களுக்கு மின்னஞ்சலில் படம் அனுப்பாதது எல்லோருக்கும் வருத்தம் தந்திருக்கிறது.

   ஆராய்ச்சி - சில சமயங்களில் ஆராய்ச்சி நல்லதல்ல!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 12. புத்தரின் அஸ்தி இருக்கும் அமைப்பு அழகாக இருக்கிறது.

  அந்த சிறுவர்களின் மெயில் குறிப்பு தொலைந்தது உண்மையில் வருத்தமாகத்தான் உள்ளது. அவர்கள் நால்வரும் உள்ள புகைப்படம் அவர்களுக்கு பெரிய பரிசாக இருந்திருக்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெரிய பரிசு - உண்மை. ஆனால்... என்னுடைய கவனக் குறைவு - என்ன சொல்ல!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   நீக்கு
 13. எங்களை மீண்டும் பீகார் அருங்காட்சியகம் அழைத்து சென்றதிற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுடன் அங்கே பயணித்ததில் எங்களுக்கும் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

   நீக்கு
 14. அழகிய படங்களுக்கும் செய்திகளுக்கும் நன்றி ! பாரிசில் Guimet Museum ல் இதே போன்ற சிலைகளையும் பேணுகிறார்கள். இச் சிறுவர்கள் விடயத்தில் பெரிய ஏமாற்றமே! இப்படியான நிலையில் நான் என் மின்னஞ்சலையும் கொடுத்து ஞாபகமூட்டும்படி கூறுவது வழக்கம். புத்தரின் சாம்பல் ஆராயக்கூடாது தான், பல நமது சமய விடயங்கள் போல் ஆனாலும் இலங்கையில் கண்டியில் தலதா மாளிகையில் உள்ள புத்தரின் பல், எரித்த உடலில் இருந்து எடுத்தார்களா? இறக்குமுன் எடுத்து வைத்தார்களா? எனும் சந்தேகமுண்டு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நினைவுபடுத்தச் சொல்வது நல்ல விஷயம்.

   பல விடயங்களை ஆராய்ச்சி செய்யாமல் விடுவது நல்லது - உண்மை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி யோகன் பாரிஸ்.

   நீக்கு

 15. "யோகன் பாரீஸ் "
  கண்டியில் தலதாமாளிகையில் இருந்த பல்லுக்கு என்ன நடந்தது? என்பது பற்றி அறிய விரும்பினால் திரு.ஞானம் பாலச்சந்திரன் அவர்கள் எழுதிய "பொய்மையும் வாய்மையிடத்து"
  என்ற நூலில் பதில் இருக்கிறது படித்துப்பாருங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   நீக்கு
  2. மிக முக்கியமான நாவல். உண்மைத் தகவல்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட அருமையான நாவல். இலங்கை வரலாற்றையே திருப்பிப் போடக் கூடிய தகவல் அந்த நாவலில் உள்ளது
   ஞானம் வெளியீடு.

   நீக்கு
  3. மேலதிகத் தகவலுக்கு நன்றி ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முருகாநந்தன் ஐயா.

   நீக்கு
 16. Complete with regard to every detail. Painstaking effort. Enjoyed the writing and the visit.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கயல் இராமசாமி மேடம்.

   நீக்கு
 17. தற்போதுதான் இப்பதிவினைக் காணும் வாய்ப்பினைப் பெற்றேன். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....