வெள்ளி, 25 செப்டம்பர், 2020

வாசிப்பை நேசிப்போம் – ஜெய் மாதா (dh)தி – தமிழ் முகில் ப்ரகாசம்

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்! இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

உன்னை வீழ்த்த பயன்படுத்தப்படும் மிகப் பெரிய ஆயுதம் உன் மனம் தான். உன் மனம் தெளிவாக இருந்தால் உன்னை ஒருவராலும் வீழ்த்த முடியாது. 


***** 

முகநூலில் “வாசிப்பை நேசிப்போம்” என்றோர் குழுமும் இருக்கிறது என இரண்டு நாட்களுக்கு முன்னர் எழுதி இருந்தது நினைவில் இருக்கலாம். அக்குழுவினர் அவ்வப்போது தொடர் வாசிப்பு போட்டிகளை நடத்துகிறார்கள். தவிர குழு உறுப்பினர்கள் பலரும் தாங்கள் படித்து ரசித்த, பல நூல்களை அறிமுகம் செய்து, நூல் பற்றிய தங்கள் வாசிப்பனுபவங்களை பகிர்ந்து கொள்வார்கள். குழு நிர்வாகத்தினரின் மட்டுறுத்துலக்கு உட்பட்ட பதிவுகள் என்பதால் நிர்வாகிக்கும் குழு ஒப்புதல் அளித்த பிறகே குழுவில் வெளியாகும். தொடர்ந்து பல நூல் விமர்சனங்களை அங்கே படித்து, அதன் மூலம் புதிய நூல்களை தெரிந்து கொள்ள முடிகிறது என்பதால் அந்தக் குழுவில் நானும் உறுப்பினராக இருக்கிறேன். அங்கே வாசிப்பனுபவங்களை இதுவரை பகிர்ந்தது கிடையாது என்பதையும் சொல்லிவிடுகிறேன்! தற்போது “வாசிப்பை நேசிப்போம்” குழுவில் #Reading_Marathon2020 என்ற தொடர் வாசிப்பு போட்டி ஒன்றினை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் போட்டியில் பங்கு பெறும் விதமாக எனது “ஜெய் மாதா (dh)தி” என்ற மின்னூலை பதிவர் தமிழ்முகில் பிரகாசம் அறிமுகம் செய்திருக்கிறார். அவருக்கு எனது மனம் நிறைந்த நன்றி. அவர் செய்த அறிமுகம் கீழே! 

மூன்றாம் ஆண்டு வாசிப்புத் திருவிழா பதிவு 11 

பிரிவு : பயணம் தொடர்பானவை / கடிதங்கள் 

புத்தகம் : ஜெய் மாதா தி - வைஷ்ணோதேவி பயணம் (கிண்டில் மின்னூல்) 

ஆசிரியர் : திரு. வெங்கட் நாகராஜ் அவர்கள் 


ஆசிரியரின் வைஷ்ணோ தேவி கோயிலுக்கு சென்ற பயணம் குறித்த அனுபவங்களின் பகிர்வே இந்த மின்னூல். 

இந்த கோயிலுக்கு அன்னையை தரிசிக்க செல்ல வேண்டுமெனில், அன்னை பராசக்தியின் அழைப்பு இல்லாமல் செல்வது சாத்தியமில்லை என்று சொல்கிறார்கள். 

கோயிலுக்கு செல்பவர்கள், "(ch)சலோ (b)புலாவா ஆயா ஹே !" என்று கூறியபடி செல்வார்களாம். இதன் பொருள், "அழைப்பு வந்து விட்டது, வாருங்கள் போகலாம்" என்று அன்னையிடம் இருந்து, தங்களுக்கு கிடைத்த அழைப்பினை சொல்லிக் கொண்டே செல்வார்களாம். 

அன்னை பராசக்தியின் மூன்று அவதாரங்களான மஹாகாளி, மஹாலஷ்மி மற்றும் சரஸ்வதி ஆகிய மூவரும் ஒன்று சேர்ந்து, அவர்களது தெய்வீக சக்திகளை ஒருமுகப்படுத்த, அப்போது தோன்றிய ஒளிப்பிழம்பில் இருந்து தோன்றிய பெண் தெய்வமே வைஷ்ணோ தேவி. 

அன்னையை தரிசிக்க செல்லும் பாதையை பல வகைகளில் கடக்கலாம் என்கிறார் ஆசிரியர். 

1, குதிரை சவாரி செய்து அன்னையை அடையலாம். 

2, நடந்து சென்று அன்னையை தரிசிக்கலாம். 

3, வயதானவர்களுக்கு டோலி வசதி உண்டு. 

4, பேட்டரியில் இயங்கும் வண்டிகளும் உண்டு. 

மேற்சொன்ன வசதிகளை தவிர, "பிட்டூ" என்று சில மனிதர்கள், நமக்காக, நமது உடைமைகளையும், சிறு குழந்தைகளையும் நமக்காக தூக்கிக் கொண்டு, நம்முடன் நடந்து வருவார்கள். 

(B)பாண் கங்கா : வைஷ்ணோ தேவி, அம்புகள் எய்து, கட்ராவில் உருவாக்கிய கங்கை. 

அத்வாரி குகை (ஆதி குமாரி குகை): இந்த குகையின் அமைப்பானது, எப்படி இருக்கிறது எனில், நுழைவு வாயில் நன்கு, அகலமாக, விசாலமாக இருந்தாலும், உள்ளே செல்லச் செல்ல, பாதை மிகவும் குறுகலாகி, வெளியே வருகையில், தவழந்தபடி தான் வரவேண்டி இருக்குமாம். தனக்கு தொந்தரவு தந்த (b)பைரோன் நாத் என்பவரிடம் இருந்து மாயமாகி, அன்னை வைஷ்ணோ தேவி ஒளிந்து கொண்ட இடம் தான் இந்த அத்வாரி குகை. 9 மாதங்கள், வைஷ்ணோ தேவி இங்கிருந்ததாக சொல்லப்படுகிறது. குகையில் இருக்கையிலும், தேவிக்கு பைரோன் நாத் தொந்தரவு தர, குகையில் தன்னுடைய சூலாயுதம் கொண்டு, துளை போட்டு, அங்கிருந்தும் புறப்படுகிறார். மீண்டும், பைரோன் நாத், அன்னையை விடாமல் தொடர்ந்து தொந்தரவு தர, தன் உண்மை சொரூபத்தைக் காட்டி, பைரோன் நாத்தை அழிக்கிறார். தன் தவறுணர்ந்து மன்னிப்பு கோரும் பைரோனுக்கு அருள் பாலிக்கிறார் அன்னை. அன்னை, பைரோன் நாத்திற்கு என்ன வரமளிக்கிறார் எனில், அவன் தலை விழுந்த இடத்தில், அவனுக்கோர் கோயில். இந்தக் கோயிலில் பைரோன் நாத்தை வழிபட்டால் தான், அன்னை வைஷ்ணோ தேவியை காண மேற்கொண்ட பயணம் முழுமையடையும். ஆக, தனக்கு தொந்தரவு செய்தவனையும் கூட, அன்னை, குணமுள்ளவனாக்கி, அவனது மதிப்பையும் கூட உயர்த்தியிருக்கிறார். 

இந்த கோயிலில் அன்னையின் திருவுருவ சிலை கிடையாது. அன்னையின் அம்சங்களான மஹா காளி, மஹா லஷ்மி, மஹா சரஸ்வதி ஆகிய மூன்று தெய்வங்களை குறிக்கும் மூன்று பிண்டி தான் வைஷ்ணோ தேவி அன்னையின் உருவமாக வழிபடப்படுகிறது. அன்னை குடியிருக்கும் மலை கூட, ஒரே அடிப்பாகம் கொண்ட மூன்று மலைகளாகத் தான் காட்சி அளிக்குமாம். எனவே இம்மலை திரிகூட மலை என்று அழைக்கப்படுகிறது. 

மலை ஏறுபவர்களுக்கு ஏற்படும் கை, கால் வலிகளுக்கு, எண்ணெய் தடவி நீவி விட, கட்ரா நகரின் மலைப்பாதை முடியும் இடங்களில் எண்ணெய் குப்பிகளோடு ஆட்கள் இருப்பார்களாம். சமீப காலத்தில், இந்த பணிக்கு, இயந்திரங்கள் வந்து விட்டனவாம். மனிதர்களின் பிழைப்பை, இந்த இயந்திரங்களின் வருகை கெடுத்து விட்டதாக வருத்தத்துடன் குறிப்பிடுகிறார் ஆசிரியர். 

கட்ரா நகரில் இருக்கும் இன்னும் சில பார்க்க வேண்டிய இடங்களையும் ஆசிரியர் குறிப்பிடுகிறார். 

மொத்தத்தில், நேரில் சென்று பார்த்து வந்தது போல ஒரு உணர்வை ஏற்படுத்துகிறார் ஆசிரியர்.இவர் கொடுத்துள்ள போக்குவரத்து வசதிகள் குறித்த தகவல்கள், நடக்க இயலாதவர்களுக்கு கிடைக்கும் உதவிகள் என பல விஷயங்களையும் தொகுத்து அளித்துள்ளார். ஆசிரியருக்கு மனமார்ந்த நன்றிகள். 

விரைவில், அன்னையிடம் இருந்து அழைப்பு வரும் என்ற நம்பிக்கையோடு... 


-        தமிழ் முகில் பிரகாசம் 

***** 

வாசிப்பை நேசிப்போம் முகநூல் குழுவில் எனது மின்னூலை அறிமுகம் செய்திருக்கும் தமிழ்முகில் பிரகாசம் அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை எனது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ”ஜெய் மாதா (dh)தி” மின்னூலை அமேசான் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ள முடியும் – கிண்டில் அன்லிமிட்டட் கணக்கு இருப்பவர்கள் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். மற்றவர்கள் ரூபாய் 70/- செலுத்தி தரவிறக்கம் செய்து கொள்ளலாம். தரவிறக்கம் செய்து கொள்ள இங்கே  செல்லலாம்! 

உங்களுடைய கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்! நாளை மீண்டும் வேறோரு பதிவுடன் சந்திக்கும் வரை… 

நட்புடன், வெங்கட் நாகராஜ் 

புது தில்லி.

26 கருத்துகள்:

 1. சில தரிசனங்கள், அந்தப் பகுதி பயணங்கள்லாம் சட்னு கிடைத்துவிடாது. உங்களுக்கு அமைந்திருக்கிறது. வாழ்த்துகள்.

  பயண நூல் விமர்சனம் நன்று

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சட்டென்று சில பயணங்கள் அமைந்து விடுவதில்லை - உண்மை! நான் திருப்பதி சென்று 30 வருடங்களுக்கு மேலாகிவிட்டது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.

   நீக்கு
 2. நலம் வாழ்க..
  வெங்கட்... வெகு நாட்களுக்குப் பிறகு வந்திருக்கிறேன்...

  வாழ்க வளமுடன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சற்றே இடைவெளிக்குப் பிறகு உங்கள் வருகை - மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. வாசிப்பை நேசிப்போம் குழுவினருக்கும், தங்களுக்கும் வாழ்த்துகள் ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்தியமைக்கு நன்றி கில்லர்ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. அணைவருக்கும் காலை வணக்கம்.
  தங்களின் நூல்கள் சிறந்த வறவேற்பை பெருவது மிக்க மகிழ்ச்சி.
  இதுதான் அணைத்து பயன நூல்களையும் ஒரே பெரும் நூலாக பேப்பர் பேக்கில் வெளியிடும் தருணம் என கருதுகிறேன் ஐய்யா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அரவிந்த்.

   பேப்பர் பேக் நூலாக - வெளியிடும் எண்ணம் இதுவரை இல்லை! முடிந்த வரை மின்னூலாக வெளியிடவே எண்ணம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. எனது விமர்சனத்தை வலைப்பூவில் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் சகோதரரே. மின்னூல்களை இலவச தரவிறக்கம் கொடுத்து உதவியமைக்கு மனமார்ந்த நன்றிகள். மற்ற நூல்களையும் தரவிறக்கம் செய்து வைத்துள்ளேன். இனி தான் வாசிக்க வேண்டும். உங்கள் எழுத்துப் பணி மென்மேலும் சிறக்க என் மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனது மின்னூல் குறித்து வாசிப்பை நேசிப்போம் குழுமத்தில் எழுதியதற்கு நன்றி தமிழ்முகில் பிரகாசம் ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. வணக்கம் சகோதரரே

  வழக்கம் போல் வாசகம் அருமை. மின்னூல் விமர்சனம் அருமையாக இருக்கிறது. தங்களது நூலை அழகாக விமர்சனம் செய்திருக்கும் பதிவர்,தமிழ்முகில் பிரகாஷ் அவர்களுக்கும், அருமையாக தெய்வீக பதிவாக எழுதிய உங்களுக்கும் என்றென்றும் என் மனமார்ந்த வாழ்த்துகளும், நன்றிகளும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

   வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   மின்னூல் குறித்த வாழ்த்துகளுக்கு நன்றி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. அருமை. வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்தியமைக்கு நன்றி நாகேந்திர பாரதி ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. பதில்கள்
  1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. நல்லதொரு விமரிசனம். சுருக்கமாகவும் அதே சமயம் முக்கியத் தகவல்களுடனும் உள்ளது. அழைப்பு வந்தால் தான் எந்தக் கோயிலுக்குமே போக முடியும் என்பது என் நம்பிக்கை. இல்லைனா போகவே முடியறதில்லை. உங்கள் அனுபவங்கள் சிறப்பானவை. விளக்கமான தெளிவான எழுத்துக்கும் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   நீக்கு
 10. அருமையான வாசகம் சார்.
  நினைவில் நான் வைத்திருக்க வேண்டிய வாசகம்...

  உங்க பதிவை வாசித்து நானும் வாசிப்பை நேசிப்போம் குழுவில் உறுப்பினராகிவிட்டேன்.

  வைஷ்ணோ தேவி கோயில் பதிவுகள் எப்போதோ வலைப்பூவில் வாசித்த நினைவு லேசாக இருக்கிரது.

  தரிசனம் முடித்துவிட்டு டெல்லி திரும்பும்போது இரவு நேர
  பஸ் பயணத்தில் ட்ரைவர்க்கு அருகில் உட்கார்ந்ததாகவும் ட்ரைவர் மிக வேகமாக ஓட்டியதாகவும் நீங்கள் எழுதியதை வாசித்த நினைவு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி திருப்பதி மஹேஷ்.

   வாசிப்பை நேசிப்போம் குழுவில் நீங்களும் உறுப்பினர் ஆனது குறித்து மகிழ்ச்சி.

   நீங்கள் வாசித்திருக்கலாம் - சொன்ன தகவல் சரியே!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 11. உங்களின் நூலை நன்கு ரசித்து, படித்து எழுதியுள்ளார். அவருக்கு நன்றி. உங்களுக்கு பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாராட்டியமைக்கு நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 12. மின் நூல் விமர்சனம் நன்றாக இருக்கிறது . வாழ்த்துகள் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்தியமைக்கு நன்றி மாதேவி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 13. அருமையான வாசகம்.
  உங்கள் மின் நூல் விமர்சனம் நன்றாக செய்து இருக்கிறார்.
  கோவிலுக்கு செல்பவர்களுக்கு வேண்டிய செய்திகள் இருக்கிறது.
  வைஷ்ணவதேவி கோவில் போன நினைவுகள் வந்து செல்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகமும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....