திங்கள், 14 செப்டம்பர், 2020

காஃபி வித் கிட்டு – சந்தர்ப்பம் – பகல் கனவு – சும்மா இரு – தற்கொலை தீர்வல்ல – முக்தி த்வாரகா
காஃபி வித் கிட்டு – 84 


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இன்றைய நாளை நல்லதோர் வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

வாழ்க்கையை ரசிக்க சந்தர்ப்பத்தை தேடுபவர்கள் என்றுமே தேடிக்கொண்டே தான் இருப்பார்கள். கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் வாழ்வை ரசிக்க கற்றவர்களோ ஒவ்வொரு நிமிடத்தையும் நல்ல சந்தர்ப்பமாய் நினைத்து ரசித்துதான் வாழ்கிறார்கள். 

இந்த வாரத்தின் பகல் கனவு: 

நேற்று காலை துயிலெழும்போதே காலை ஏழு மணிக்கு மேல். காலை வேலைகளை முடித்துவிட்டு சற்றே ஓய்வெடுக்கலாம் என படுத்தபோது மீண்டும் நல்ல உறங்கி விட்டேன்! வீட்டிலிருந்து அழைப்பு வந்தபோது தான் மீண்டும் துயிலெழுந்தேன்! கண்டு கொண்டிருந்த கனவு கலைந்து போய்விட்டது! கனவில் கூட நான் எங்கேயோ பயணித்துக் கொண்டிருந்தேன் – கடல்/நீர் நிலை உள்ள பகுதியில் நடந்து கொண்டிருக்கிறேன். ஒரு முதியவர் நீர் நிலையில் குளிக்கச் செல்கிறாயா? ஏதேனும் கொடுத்துவிட்டுச் செல்லலாமே என்கிறார். படிகள் வழி ஏறி எங்கேயோ செல்கிறேன்! அழகான ஊராகத் தெரிகிறது. எந்த ஊர், எங்கே பயணிக்கிறேன் என்பதை எல்லாம் உணர முடியவில்லை. மக்கள் தீதுண்மிக்கு முன்பு இருந்த சூழல் போலவே பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்! இந்தக் கனவு எதற்காக, இதற்கு ஏதேனும் காரணம் இருக்குமா? பலன் இருக்குமா என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தேன்! இந்தக் கனவு பற்றி இல்லத்தரசியிடம் சொன்ன போது அவர் கேட்டது – “கனவுல கூட பயணம் தான் போவீங்களா?” அதானே! 

இந்த வாரத்தின் குட்டிக் கதை – சும்மா இரு: 

ஒரு பறவை ஒன்று, ஓர் உயரமான மரக்கிளையில் சும்மா இருந்தது. 

இதனைப் பார்த்த ஓர் முயல்… "நானும் சும்மா இருப்பேனே?" என்று யோசித்து அந்த மரத்தின் அடியில் போய் சும்மா இருந்தது. 

உடனேயே ஓர் புலி ஒன்று, அந்த மரத்திற்குப் பின்னாலிருந்து பாய்ந்து அந்த முயலை வேட்டையாடிவிட்டது. 

கருத்து: நீ சும்மா இருக்க வேண்டும் என்றால் நீ உயரத்தில் இருக்க வேண்டும். 

இந்த வாரத்தின் ரசித்த விளம்பரம்: 

இந்த வாரத்தில் நாம் பார்க்கப் போவது ஒரு ஜப்பான் விளம்பரம் – டோக்யா கேஸ் விளம்பரங்கள் மூன்று! மொத்தமாகவே 4 நிமிடங்களுக்கும் குறைவான நேரம் எடுக்கும்! மூன்றுமே மனதைத் தொடும் விளம்பரம் – அதிலும் மூன்றாவதாக வரும் விளம்பரம் மிகவும் பிடித்தது. எவ்வளவு சிறப்பாக இருக்கிறது பாருங்களேன்!

   

இந்த வாரத்தின் தகவல் – ஏழைகளின் ஊட்டி மின்னூல்: இந்திய நேரப்படி, வரும் புதன் கிழமை மதியம் 12.29 வரை எனது மின்னூல் “ஏழைகளின் ஊட்டி”-யை அமேசான் தளத்திலிருந்து இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். விருப்பம் இருப்பவர்கள் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்! மின்னூலை படிப்பவர்கள் நூல் பற்றிய உங்கள் கருத்துகளையும் மின்னஞ்சல் மூலமாக தெரிவித்தால் எனது வலைப்பூவில் பகிர்ந்து கொள்வேன்! தரவிறக்கம் செய்து கொள்ள சுட்டி கீழே. 


பின்னோக்கிப் பார்க்கலாம்: 

எனது வலைப்பூவில் இதே நாளில் 2015-ஆம் வருடம் எழுதிய ஒரு பதிவு – முக்தி த்வாரகா. பஞ்ச த்வாரகா பயணக் கட்டுரையின் ஒரு பகுதியாக, முக்தி த்வாரகா பற்றி எழுதிய பதிவு. அப்பதிவிலிருந்து சில வரிகள் இங்கே. 

யுத்தம் முடிந்த பிறகு தனது இராஜ்ஜியத்திற்கு திரும்பினான் கண்ணன். கூடவே காந்தாரியின் சாபமும்! காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லையே. காலம் ஓடியது. கண்ணனும் மூப்படைந்தான். எதிரிகளே இல்லை என்ற நிலை வந்ததால் யாதவ குலம் மதுவில் மூழ்கியது. மது என்னும் அரக்கனை வென்றவன் என்பதால் மதுசூதனன் என்ற பெயர் பெற்ற கண்ணனின் பிரஜைகள் மதுவில் மூழ்கினார்கள். அவர்களுக்காகவே பலத்த சண்டையும் உயிர்ச் சேதங்களும் உண்டாகின. 


முதுமையில் தனிமை கொடுமை. கிருஷ்ணனுக்கும் அந்த கொடுமை. பிரபாஸ தீர்த்தம் என அழைக்கப்படும் இவ்விடத்தில் அரச மரத்தின் கீழே ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது ஜரா எனும் வேடன் கிருஷ்ணரின் பாதங்களை மானின் பாதங்கள் [பறவையின் அலகு எனவும் சிலர் சொல்வதுண்டு] என நினைத்து அம்பு விட அது கிருஷ்ணரின் பாதங்களில் புகுந்தது. வேட்டையாடிய மானை எடுத்துக் கொள்ள வந்த வேடன் தான் அம்பு எய்தது கிருஷ்ணனின் பாதங்களில் எனத் தெரிந்ததும் சோகத்துடன் அவரது பாதங்களுக்கு அருகேயே மண்டியிட்டு தவறு செய்தமைக்கு மன்னிக்க வேண்ட “எது நடந்ததோ அது என்னுடைய விருப்பத்தின் பேரிலேயே நடந்தது” என்று ஜராவினை ஆஸ்வாஸப்படுத்தினாராம். 

முழுபதிவும் படிக்க ஏதுவாக சுட்டி கீழே. 


இந்த வாரத்தின் படித்ததில் பிடித்தது – தற்கொலை தீர்வல்ல - கவிதை: 


நண்பர் சேஷாத்ரி அவர்களின் கவிதை ஒன்று இந்த வாரத்தில் படித்ததில் பிடித்ததாக! கவிதையின் தலைப்பு – “தற்கொலை தீர்வல்ல!” உண்மையான வார்த்தைகள். பிரச்சனைகள் பல வந்தாலும் கலங்காது எதிர்கொள்ள வேண்டியது நம் கடமை அல்லவா! வாருங்கள் பிடித்த கவிதையைப் படிக்கலாம்! 

என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா? பதிவு பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்! 

வேறு ஒரு பதிவுடன் மீண்டும் சந்திக்கும் வரை... 

நட்புடன் 


வெங்கட் நாகராஜ் 
புது தில்லி

26 கருத்துகள்:

 1. வாசகம் அருமை ஜி
  குட்டிக்கதை ஸூப்பர் உண்மை.
  காணொளி கண்டேன் ஜி
  மின்நூல் தரவிறக்கம் செய்வேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. காலை வணக்கம் ஐய்யா.
  சந்தர்ப்பம் பற்றிய மேற்கோளும் சும்மா இருப்பது குறித்த கதையும் ஒன்றி சிந்தனையை தூண்டியது.
  சும்மா இருப்பவரைத் தேடி சந்தர்ப்பம் வருவதில்லை. அப்படி வந்தாலும் அதை சும்மா இருப்பவருக்கு அடையாளம் காண முடியாது.
  எனவே ஒவ்வொரு செயலும் நம்மை அறிதலில் ஒரு அடி எடுத்து வைப்பதாக இருக்கவேண்டும்.
  பயனமே தங்களுக்கு இயல்பான மகிழ்வளிக்கும் செயல், அதனால் விளையும் நூல்களை படித்து மகிழ்வதே எங்களுக்கான இயல்பான நிறைவு.
  வெகு சீக்கிரம் நீங்கள் பயனத்தைத் தொடர வாழ்த்துகிறோம்.
  மின் நூலுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அரவிந்த்.

   பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. இனிய காலை வணக்கம் வெங்கட். காஃபி வித் கிட்டு வெகு சுவாரஸ்யம்.. அருமையான வாசகத்துடன் ஆரம்பித்திர்ருக்கும் பதிவு. தங்களுக்கு வந்த பகல் கனவு வெகு சுவாரஸ்யம். குடும்பத்தில் கேட்பதில் அர்த்தம் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம் வல்லிம்மா. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. மூன்று காணொளிகளும்மிக அன்பு மயம். சிறப்பு. முயல் கதை சொல்லும் உண்மையும் மிகச்சிறப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காணொளிகள் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. "கனவுல கூட பயணம் தான் செல்வீர்களோ" 6 மாதமாக பயணங்கள் இல்லாமல் முடக்கிப்போட்ட கொரானா உங்களை பகல் கனவு காண வைக்கிறது. ஆமாம் கனவில் தனியாகத்தான் பயணித்தீர்களோ? அல்லது குடும்பமும் கூட வந்தார்களா?
  தற்கொலை தீர்வல்ல. உண்மை. ஆனால் தறிக்கொலை செய்து கொண்டவர்களுக்கு அது தீர்வு. தற்கொலை செய்யத் துணிபவர்கள் இதை படிக்க மாட்டார்கள். ஆனால் இந்த எண்ணம் எழாதவாறு நாம் நம்முடைய பிள்ளைகளை கவுன்சலிங்  செய்யலாம். அது மட்டுமே நம்மால் முடியும்.

   Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஜெயகுமார் சந்திரசேகரன் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. என்னவொரு அழகிய கனவு...!

  சும்மா இருப்பது பற்றி வடிவேலு அவர்களின் நகைச்சுவையும், சும்மா இருக்கும் போதும் கேட்கலாம்...!

  தற்கொலை ஒருநொடி பைத்தியக்காரத்தனம்...

  "ஏழைகளின் ஊட்டி" தரவிறக்கம் செய்வேன்... நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அழகான கனவு - நன்றி தனபாலன்.

   சும்மா இருப்பது கடினம் தான்.

   பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. எல்லாமே நன்றாக உள்ளன. முயல்குட்டிக் கதை படிச்சாப்போல் இருக்கே! இந்த யூ ட்யூப் சாவகாசமாப் பார்க்கணும். இப்போ எலக்ட்ரீஷியன் வந்திருக்கார். பின்னர். கணினியை மூடணும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாம்மா..

   காணொளி முடிந்த போது பாருங்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. கதம்பம் அருமை. உங்களுக்கு பயணம் இல்லாத வேறு கனவு வந்திருந்தால் வியப்படைந்திருப்பேன் வெங்கட் ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி இராமசாமி ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. அனைத்தும் அருமை.
  காணொளி மிக நன்றாக இருக்கிறது.
  அன்பை வெளிபடுத்தும் விதம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்.
  மின்னூலுக்கு வாழ்த்துக்கள்.

  கவிதை நன்றாக சொல்லி இருக்கிறார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் பகுதிகள் அனைத்தும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 10. வணக்கம் சகோதரரே

  இந்த வார காஃபி வித் கிட்டு நன்றாக உள்ளது. வாசகம் அருமை. தங்களுக்கு அதிகாலையில் வந்த கனவு ஸ்வாரஸ்யமாக இருந்தது. முயல்குட்டிக் கதையின் கருத்து அருமை. கேஸ் விளம்பரம் சிறப்பாக இருக்கிறது. பின்னோக்கிச் சென்று படித்து வந்தேன். முக்தி துவாரகா பதிவு நன்றாக உள்ளது. கவிதையும் சிறப்பு. அருமையான கதம்பத் தொகுப்பை தந்த இந்த வாரப் பகிர்வுக்கு மிக்க நன்றிகள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

   காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 11. வாசகம் அற்புதம். Pandemic முடிந்தால் free ஆக இருக்கும். அது தான் கனவாக உள்ளது. கதை எதார்த்தமான உண்மை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கயல் இராமசாமி மேடம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 12. நல்ல தொகுப்பு! பயணம் செய்ய முடியாத உங்கள் ஏக்கம் கனவாக வெளிப்பட்டு விட்டதோ? முயல் குட்டி கதை "If you want to take rest, you should rest others" என்னும் வாக்கியத்தை நினைவு படுத்தியது.  

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி பானும்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 13. பதில்கள்
  1. வாழ்த்தியமைக்கு நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....