அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட நட்பின் இழப்பு… பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
நாட்கள் தான் எத்தனை வேகமாக ஓடுகின்றன. 2024-ஆம் வருடம் இப்போது தான் ஆரம்பித்தது போல இருந்தது - ஆனால் வருடம் முடிந்து 2025-ஆம் வருடத்தின் ஆறாம் நாளில் இன்றைக்கு இருக்கிறோம். எத்தனையோ விஷயங்களைச் செய்ய வேண்டும் என நினைத்தாலும் நாம் நினைத்தபடி செயலாற்ற இயலுவதில்லை. சென்ற வருடத்தின் தொடக்கத்தில் உடல் நிலை பாதிப்பு என்றால் இந்த வருடத்தின் தொடக்கம் நட்பின் இழப்பு. சென்ற வருடம் தனிப்பட்ட முறையில் எந்த சுற்றுலாவும் செல்லவில்லை என்பதும் கடந்த பத்து வருடங்களில் நிகழாத ஒரு நிகழ்வு! ஆம் சென்ற வருடம் ஒரே ஒரு முறை அலுவலகப் பயணமாக உத்திராகண்ட் தலைநகர் டேராடூன் சென்றதைத் தவிர சொந்த பயணமாக, சுற்றுலா என ஒன்றுமே செல்லவில்லை! தமிழகம் வந்து சென்றதெல்லாம் குடும்ப நிகழ்வுகளுக்காக அல்லது பெற்றோரை கவனித்துக் கொள்ள என்பதாகவே இருந்தது! தமிழகப் பயணங்கள் சுற்றுலா கணக்கில் வராது அல்லவா!
சென்ற வருடத்தின் தொடக்கத்தில் இந்த வருடம் முழுவதும், தினம் ஒரு பதிவு என்ற கணக்கில் எழுத வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அதனை செயல்படுத்த இயலவில்லை. சென்ற வருடத்தில் நான் எழுதிய/வெளியிட்ட மொத்த பதிவுகள் 251 மட்டுமே! வருடத்தில் பல நாட்கள் பதிவிடாமலேயே கழிந்தன. தொடர்ந்து பதிவுகளே வெளியிடாமல் இருந்தது ஒரு விதத்தில் எனக்கே ஆச்சரியம் தான். நண்பர்களில் சிலரேனும் பதிவுகள் வரவில்லையே என விசாரித்ததிலிருந்து நமது எழுத்துக்கு இன்னமும் வரவேற்பு இருக்கிறது என்பதையும் எனக்கு உணர்த்தியது. இதோ இந்த வருடம் தொடங்கி ஆறாம் நாள். இந்த மாதத்தில் இது வரை இரண்டு பதிவுகள் - இது மூன்றாம் பதிவு! முடிந்த வரை எழுதவே எண்ணுகிறேன் - எழுதும் வசதிகளும், வாய்ப்புகளும் அமைந்தால் நிச்சயம் எழுதுவேன். எழுத விஷயங்களுக்கு பஞ்சமே இல்லை என என்னைச் சுற்றி நிகழும் நடப்புகள் உணர்த்துகின்றன.
இந்த நாளின் வாசகம் சொல்லும் கருத்தினைப் போல மாற்றங்களிலிருந்து தான் வளர்ச்சி தொடங்குகிறது. எல்லா நாளும் ஒரே போல இருந்துவிடப் போவதில்லை. சில தீமைகள் நடந்தாலும் அதிலும் சில நன்மைகள் இருக்கலாம். சென்ற வருடத்தின் நிகழ்வுகளை மறந்து இன்றைய வாழ்க்கையை வாழலாம். நாளைய தினம் நன்றாகவே இருக்கும் என்ற நம்பிக்கையுடன் நாட்களைக் கடக்கலாம் வாருங்கள். முடிந்த வரை பதிவுகள் தொடர்ந்து எழுதலாம். முடிந்த வரை நண்பர்கள் அனைவரது பதிவுகளையும் படிக்கலாம். புத்தக வாசிப்பும் தொடர வேண்டும். அனைத்தும் நல்லதாகவே நடக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்த நாளை, வாரத்தை, மாதத்தை, ஆண்டை துவக்குவோம்! தொடர்ந்து சந்திப்போம்… சிந்திப்போம்…
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
6 ஜனவரி 2025
பதிவுகள் தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் சார்💐🙏
பதிலளிநீக்குஎத்தனையோ விஷயங்களைச் செய்ய வேண்டும் என நினைத்தாலும் நாம் நினைத்தபடி செயலாற்ற இயலுவதில்லை. //
பதிலளிநீக்குஉங்களுக்கு நேரம் கிடைக்கும் போது மனம் ஒத்துழைக்கும் போது relaxed ஆக, எழுதுங்கள் ஜி. எல்லாம் நல்லதாகவே நடக்கும்.
எனக்கும் அந்த வரி பொருந்தும்.
பதிவில் சொல்லியிருக்கும் கருத்துகளேதான். கடைசியில் சொல்லியிருக்கும் கருத்துகள்....
நம்மை நாம் கட்டாயப்படுத்திக் கொள்ளாமல் போகும் flow ல் போலாம்... எழுதவில்லை என்ற ஒரு குற்ற உணர்வோ இல்லை டென்ஷனோ, ஏற்படக் கூடாது என்பதிலும் நான் உறுதியாக இருக்கிறேன்.
//இந்த நாளின் வாசகம் சொல்லும் கருத்தினைப் போல மாற்றங்களிலிருந்து தான் வளர்ச்சி தொடங்குகிறது. எல்லா நாளும் ஒரே போல இருந்துவிடப் போவதில்லை.//
அதேதான. வாசகம் அருமை.
கீதா
// நாளைய தினம் நன்றாகவே இருக்கும் என்ற நம்பிக்கையுடன் நாட்களைக் கடக்கலாம் வாருங்கள். //
பதிலளிநீக்குஆம்... உண்மை...
//தமிழகப் பயணங்கள் சுற்றுலா கணக்கில் வராது அல்லவா!// அப்படி ஒரு பயணத்தில் நீங்கள் எழுதியிருந்ததை வைத்து நாங்கள் 'அழகிய மணவாளம்' சென்றோம். கூட்டிச் சென்ற டிரைவர், அந்த ஏரியாதான் தனக்கு என்று சொல்லி, 1 மணிக்குத்தான் கோயில் நடை சாத்துவார்கள் என்று சொல்லி 12:05க்கு அங்கு சென்றால், நடை முன்பே சாத்திவிட்டார்கள். நீங்கள் சென்றிருந்தபோது நடந்தது போல எங்களுக்கும் சுந்தரராஜப் பெருமாளைச் சேவிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவை ரசித்தேன். ஆம். உண்மை.
/எத்தனையோ விஷயங்களைச் செய்ய வேண்டும் என நினைத்தாலும் நாம் நினைத்தபடி செயலாற்ற இயலுவதில்லை. /
கடவுளருளால் நாட்கள் நகர்ந்து செல்கின்றன. எனக்கும் சென்ற வருடம் விரைவாக ஓடி விட்டதைப் போலத்தான் உணர்கிறேன். நம் நினைப்புகள் என்றுமே அதுவாக நடப்பதில்லை. கடவுளின் விருப்பப்படி நடந்தால் உண்டு.எல்லாம் அவன் செயல் என மனதை சமாதானப்படுத்திக் கொள்கிறேன்.
/மாற்றங்களிலிருந்து தான் வளர்ச்சி தொடங்குகிறது. எல்லா நாளும் ஒரே போல இருந்துவிடப் போவதில்லை. சில தீமைகள் நடந்தாலும் அதிலும் சில நன்மைகள் இருக்கலாம். சென்ற வருடத்தின் நிகழ்வுகளை மறந்து இன்றைய வாழ்க்கையை வாழலாம். நாளைய தினம் நன்றாகவே இருக்கும் என்ற நம்பிக்கையுடன் நாட்களைக் கடக்கலாம் /
உண்மை. நல்ல வரிகள். தங்களது மன உளைச்சல்கள் புரிகிறது. இனி நடப்பவை நல்லதாக நடக்க வேண்டுமென இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன் . பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
'நாளைப்பொழுது என்றும் நல்ல பொழுதாகும் என்று நம்பிக்கை கொள்வாய்' என்று ஒரு தமிழ் சினிமா பாடல் உண்டு. நம்புவோம். எல்லாம் சரியாகும்.
பதிலளிநீக்குசில சமயங்களில் விதிவசத்தால் சிதறும் கவனங்கள் இடர்கள் களையப்பட்டதும் அதனதன் இடத்தில் வந்து அமரும். நேரம் கிடைக்கும்போது கொஞ்சம் கொஞ்சமாக எழுதி சேமித்துக் கொண்டால் நமக்கும் சௌகர்யம்.