புதன், 8 ஜனவரி, 2025

மருத்துவமனை அனுபவங்கள்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******




நெய்வேலி நகரில் வசித்த போது, அங்கே பணிபுரியும் நபர்களும், அவர்களது குடும்பத்தினரும் மருத்துவத் தேவைகளுக்காக செயல்பட்டு வந்த பொது மருத்துவமனை (ப்ளாக் - 12) சென்று வருவது தான் வழக்கம்.  பல துறைகளை தன்னகத்தே கொண்டு செயல்பட்டு வந்த அந்த மருத்துவமனை நெய்வேலி வாழ் மக்களின் அனைத்து மருத்துவ வசதிகளையும் தந்து வந்தது என்று சொன்னால் மிகையாகாது.  அதீத அளவில் மருந்து மாத்திரைகள் கொடுத்தது இல்லை என்றாலும், சில நாட்களிலேயே குணம் தெரியும் அளவிற்கு மருத்துவ வசதிகளைத் தந்த மருத்துவமனை அது.  பல திறமையான மருத்துவர்களை அங்கே பணியில் அமர்த்தியிருந்தது நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்.  எனக்கு நன்றாக நினைவிருக்கிறது - அந்த நாட்களிலேயே பல் மருத்துவராக ஒரு வட இந்தியர் - டாக்டர் மல்ஹோத்ரா - என்பவர் இருந்தார்.  தட்டுத் தடுமாறி தமிழ் பேசுவார் - பல் வலி என்று போனால் “ஆ காட்டு” என்று மழலைத் தமிழில் பேசுவார்!  அப்போது மருத்துவம் என்பது சேவையாகவே தெரிந்தது, இருந்தது! 


ஆனால் அப்பாவின் உடல் நிலை காரணமாக மருத்துவமனைக்குச் சென்ற போதும், அவர் உட்பிரிவு நோயாளியாக அனுமதிக்கப்பட்டு இருந்த போதும் கிடைத்த அனுபவங்கள் வேறு வகையானவை.  இப்போது எல்லா மருத்துவமனைகளுமே கார்ப்பரேட் நிறுவனங்களாக மாறி விட்டன என்பதால் சேவை என்பதைத் தாண்டி பொருள் ஈட்டும் நிறுவனமாகவே மருத்துவமனைகள் செயல்படுகின்றன என்பதை நேரிடையாக பார்க்கவும், அனுபவங்களைப் பெறவும் முடிந்தது.  பலவித உபகரணங்கள் வந்துவிட்டபடியால் எல்லாவற்றையும் உபகரணங்கள் வழியாகவே பரிசோதனை செய்து கொள்ள முடிகிறது என்பது ஒருவிதத்தில் முன்னேற்றம் என்றாலும், மருத்துவர்கள், நோயாளிகளிடம் பிரச்சனைகள் குறித்து பேசுவது குறைந்திருக்கிறது. நோயாளி தலைவலி என்று போனால் கூட, உடனே CT Scan, X-ray என்று தான் ஆரம்பிக்கிறார்களே தவிர எதனால் தலைவலி என்று நோயாளியிடம் பேசுவதைக் கூட தவிர்க்கிறார்கள்.  இது ஒரு உதாரணம் தான். எந்தப் பிரச்சனை என்று சொன்னாலும், உடனேயே பலவித சோதனைகளைச் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள் - அது தேவையா இல்லையா என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்.  


மருந்து மாத்திரைகளின் விலையும் குறைவாக இருப்பதில்லை. மருத்துவமனையின் சார்பில் நடக்கும் மருந்தகத்திலிருந்து தான் மருந்துகள் தருகிறார்கள். வீட்டின் அருகே இருக்கும் சிறு சிறு கடைகளில் கூட 18 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை MRP விலையிலிருந்து கழிவுகள் கிடைக்கின்றன.  ஆனால் மருத்துவமனை நடத்தும் மருந்துக் கடைகளில் எந்தவித கழிவுகளும் கிடையாது! MRP விலை என்னவோ அதனையே வசூலிக்கிறார்கள். இத்தனைக்கும் சிறு கடைகளை விட இவர்களுக்கு மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் தரும் சலுகைகள் அதிகம் என்பதை நான் நேரடியாகவே பார்த்திருக்கிறேன்.  துறை சார்ந்த அனுபவமும் உண்டு என்பதால் அதனை பல முறை கவனித்தும் இருக்கிறேன்.  ஆனாலும் இவர்கள் அதனைப் பற்றி கிஞ்சித்தும் சிந்திக்காமல், லாபம் ஒன்றே குறிக்கோள் என்ற நோக்குடன் MRP விலையிலேயே மருந்துகளை விற்கிறார்கள்.  எனது தந்தையின் மருத்துவமனை அனுமதியின் போது மருந்துகளுக்கு மட்டும் வசூலித்த தொகை இரண்டரை லக்ஷத்திற்கும் மேல்! சராசரியாக 18 சதவீதம் கழிவு தந்தாலும், இந்தத் தொகையில் மருத்துவமனை/மருந்தகம் என்னிடமிருந்து அதிகம் பெற்றது 45000/-.  


அதே போல ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு நடவடிக்கையிலும் இவர்கள் சம்பாதிக்க மட்டுமே எண்ணுகிறார்கள் என்பதை பல உதாரணங்களுடன் சொல்ல முடியும்.  தேவையோ இல்லையோ விதம் விதமான மருத்துவர்களை நோயாளிகளை கவனிக்கச் சொல்வார்கள்.  வேறு எங்கிருந்தோ வரும் மருத்துவர்கள் அல்ல! அதே மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள்.  உதாரணத்திற்கு ICU-வில் முப்பது நோயாளிகள் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.  அவர்கள் அனைவருக்கும் எல்லா துறை மருத்துவர்களும் சென்று பார்த்து விடுகிறார்கள்.  முப்பது பேரிடமிருந்தும் Visiting Charges என்ற பெயரில் 500/- ரூபாய் கணக்கில் வாங்கி விடுகிறார்கள்.  ஒரே ஒரு முறை ICU உள்ளே ஒரு மருத்துவர் உலா வந்தால் அவருக்கு சுமார் 30 நிமிடங்கள் ஆகலாம். அந்த 30 நிமிடத்திற்கு மருத்துவமனை நோயாளிகளிடமிருந்து வசூலிக்கும் தொகை 15000/-.  அதைத் தவிர நோயாளியின் தனிப்பட்ட மருத்துவர், அதாவது அவரை கவனித்துக் கொள்ளும் மருத்துவரின் Professional Fees என்ற பெயரில் 5000 ரூபாய் வரை வாங்கி விடுகிறார்கள்.  இந்த கட்டணமும் ICU உள்ளே இருக்கும் வரை இரண்டு மூன்று முறை வாங்கி விடுகிறார்கள்.  


எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு தருவதாக நம்பிக்கை தந்து, விதம் விதமான வழிகளில் பணம் வாங்குகிறார்கள். நோயாளிகளின் உறவினர்களது emotions ஒன்றை மட்டும் பயன்படுத்தி, அவர்களை தங்களது வழிக்குக் கொண்டு வருவதையும் சில மருத்துவமனைகள் பயன்படுத்துகின்றன என்பதும் இங்கே பொதுவாக உள்ள ஒரு குற்றச்சாட்டு.  இப்படிச் செய்யாவிட்டால் நோயாளியின் உயிர் போகக் கூடும் என்று சொல்லும்போது உறவினர்கள் நிச்சயம் பதறித்தான் போவார்கள் என்பதில் சந்தேகமில்லை.  எத்தனை எத்தனை வழிகள் சம்பாதிக்க என்று பார்க்கும்போது வேதனை மட்டுமே மிஞ்சுகிறது.  இங்கே இந்தப் பதிவில் நான் சொன்ன விஷயங்கள் எனது ஒருவனின் அனுபவங்கள் மட்டுமல்ல, மருத்துவமனையில் இருந்த நாட்களில் பார்த்த பொதுவான விஷயங்கள்.  தவிர ஒரு மருத்துவமனையினை மட்டும் குறித்த விஷயங்கள் அல்ல! பொதுவாகவே தனியார் மருத்துவமனைகள் இப்படித்தான் செயல்படுகின்றன.  


தலைநகரின் ஒரு பிரபல தனியார் மருத்துவமனை.  கிட்டத்தட்ட 50 நாட்களாக 42 வயது மதிக்கத்தக்க ஒரு குடும்பஸ்தர், எனக்குத் தெரிந்தவர், வெண்டிலேட்டர் உதவியுடன் உயிருடன் இருக்கிறார்.  குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு 1 லட்சம் ரூபாய் செலவு.  50 நாட்களில் 50 லட்சம் செலவு என்றால் பாருங்களேன்.  அவர் சார்ந்த துறை அவரது மருத்துவ செலவுகளைக் கவனித்துக் கொள்ளும் என்றாலும், ஒரு சாதாரணரால் இப்படியான செலவுகளை எப்படி சமாளிக்க முடியும் என்ற கேள்வியும் எனக்குள்.  அது ஒரு புறம் இருந்தாலும், இப்படி இன்னும் எத்தனை நாள் வரை வைத்துக் கொள்ள முடியும்? என்றாவது ஒரு நாள் இதற்கு ஒரு முடிவு எடுத்தே ஆக வேண்டுமே! குடும்பத்தினைச் சேர்ந்த ஒருவர் இறப்பது என்பது மிகப் பெரிய இழப்பு என்றாலும், அவருக்காக மருத்துவ செலவாக எவ்வளவு செலவு செய்ய முடியும் என்பதையும் குடும்பத்தினர் கவனித்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.  ஒவ்வொரு நாளும் மருத்துவமனைகளில் நடக்கும் விஷயங்களைப் பார்த்தால் என்ன சொல்வது என்றே புரியவில்லை.  


ஒவ்வொரு தினமும் கிடைத்த அனுபவங்களை இங்கே சொல்ல ஆரம்பித்தால் நிச்சயம் ஒரு பதிவில் எழுதி முடிக்க முடியாது.  மருத்துவமனை சார்பாக இதற்கு பல காரணங்களைச் சொல்ல முடியும்.  ஒரு நிறுவனத்தினை நடத்த ஆகும் செலவு பல கோடிகளில் இருக்கும்போது அவற்றை வசூலிக்க இருக்கும் ஒரே வாய்ப்பு நோயாளிகள் தானே.  இத்தனை பணம் போட்டு ஒரு மருத்துவமனையை நடத்துவது சேவை மனப்பான்மை காரணமாக அல்ல என்று மிகச் சுலபமாக சொல்லி விட முடியும் என்றாலும் ஒவ்வொரு நோயாளியையும் அவர்களது குடும்பத்தினர்கள் படும் அல்லல்களையும் பார்க்கும்போது நோயே வராமல் இருக்க என்ன வழி, எந்த வித பிரச்சனையும் இல்லாமல் தூக்கத்திலேயே இறந்துவிடுவது மட்டுமே தீர்வாகத் தெரிகிறது. இப்படியான மரணம் அனைவருக்கும் வாய்ப்பதில்லை என்பதையும் இங்கே யோசிக்க வேண்டியிருக்கிறது!  மரணம் என்று வரும்போது இப்படியான மரணம் வாய்க்க வேண்டும் என்று ஆண்டவனிடம் வேண்டிக்கொள்ளத் தோன்றுகிறது…  வேறென்ன சொல்ல!


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லி

8 ஜனவரி 2025


13 கருத்துகள்:

  1. மருத்துவமனை செல்லாத மரணம் வேண்டும் என்றுதான் வேண்டிக்கொள்ள வேண்டும்.  நானும் இது குறித்து நிறைய பதிவுகள் எழுத யோசித்தது உண்டு.  பயனில்லை என்பதால் விட்டு விட்டேன். 
     
    தனக்கு உடம்பு என்று வந்ததும் அனைவரும் மருத்துவமனையை நாடி விடுதல் இயல்பு.  அவர்களின் எமோஷனல் பிளாக்மெயிலுக்கு ஆட்படுவதும் இயல்பு.  அரசு  ஆஸ்பத்திரிகளே முன்போல் எளிமை இல்லை. இலவசமும் இல்லை. 

    அங்குதான் ஆட்சியாளர்கள் நிறைய கொள்ளை அடிக்கிறார்கள்.  அதே சமயம் அவர்களுக்கு உடம்பு என்று வந்தால் எந்த பிரபலம், எந்த அரசியல்வாதி அரசு ஆஸ்பத்திரியை நாடுகிறான்?

    பதிலளிநீக்கு
  2. கம்யூனிஸ்டுகள் தோழர் தோழர் என்று அழைத்து எளிமையாக இருப்பவர்கள் என்று காட்டிக் கொள்வார்கள்.  மதுரை எம் பி உடல்நிலை சரியில்லை என்றதும் தனியார் மருத்துவமனையில்தான் அனுமதிக்கப் பட்டிருக்கிறார்.  கக்கன் நினைவு வரவில்லை?

    பதிலளிநீக்கு
  3. அரசு பள்ளி, அரசு ஆஸ்பத்திரி என்பதெல்லாம் பாமர மக்களுக்கானது, அதுதான் அவர்களுக்கு விதித்திருப்பது, அங்கு போனால் கொஞ்சம் கௌரவக்குறைச்சல் என்பது இங்கு ஒவ்வொருவர் மனத்திலும் வேரூன்றி இருக்கிறது.  தரம் பற்றியும் சந்தேகம் இருக்கிறது.

    நடுத்தட்டு மக்கள் கூட அரசு மருத்துவமனைகளை நாடுவதில்லை.  தனியார் மருத்துவமனைகளை நாடி விடுகிறார்கள். 

    ​தங்கள் செயல்களால் தனியார் மருத்துவமனைகள் மருத்துவக் காப்பீடு எடுத்து வைத்துக் கொள்வது எல்லோருக்கும் நல்லது என்று புரிய வைத்திருக்கிறார்கள்.  அது ஒரு தனிக்கொள்ளை.  குறிப்பிட்ட வயதைக் கடந்த முதியவர்களுக்கு அதில் வாய்ப்புகள் மறுக்கப்படும். ஒரு நோயாளி மாட்டினால் அதை மொத்தமாக வழித்து எடுக்கும்வரை தனியார் மருத்துவமனைகள் ஓயமாட்டார்கள்.

    பதிலளிநீக்கு
  4. நானும் எனது அப்பாவை திருச்சியில் KMC யில் அட்மிட் செய்து பட்ட பாடு (2010) நினைவுக்கு வந்தது. காரணம் இல்லாமல் ICU விலேயே 12 நாட்கள். வார்டுக்கு மாற்ற சொன்னால் நிலைமை சரியில்லை என்று டாக்டர். கடைசியில் டிஸ்சார்ஜ் வாங்கி வீட்டிற்கு ஆம்புலன்ஸில் கொண்டு வந்தோம். மருந்துகள் எல்லாம் நிப்பாட்டி விட்டாயிற்று. அதன் பின் ஒன்றரை வருடம் அவர் இருந்தார். 2011 இல் காலமானார்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
  5. மருத்துவ தொழில் மகத்தான தொழில் என இருந்தது ஒரு காலம்.

    பதிலளிநீக்கு
  6. மருத்துவமனைகள் குறித்த உங்கள் கருத்துகள் அனைத்தையும் டிட்டோ செய்கிறேன்.

    மக்கள் நாமும் மருத்துவர்களை மாபெரும் சக்தி போன்று நினைத்து, எப்படியாச்சும் காப்பாத்திடுங்க, சரியாகிடுவாங்களா டாக்டர்...என்று உணர்ச்சிவசப்பட்டுப் போகும் போது அது அவர்களுக்கு சாதகமாகிவிடுகிறது.

    பயம் தான் மனிதனுக்கு எதிரி என்பார்களே அதுவேதான்.

    வென்டிலேட்டரில் சும்மாவானும் வைப்பது எல்லாம் எனக்கு 'ரமணா' திரைப்படத்தை நினைவூட்டியது. அப்பட்டமாகச் சொல்லியிருப்பாங்க அந்தப் படத்தில். அந்தப் படம் வந்து 22 வருடங்கள் ஆகிவிட்டது...பாருங்க நிலைமை அதேதான் இப்பவும் நாம் வேதனைப்படுகிறோம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. இரண்டு பக்கப் பார்வைகளும் வேறுபடும் என்றாலும் நடுத்தரக் குடும்பங்கள்பாடு மிகவும் கடினம். Doctors are just waiting to utilise various machines. Pharmacy கொள்ளை தனி. ஆன்லைன் வந்ததால் டிஸ்கவுன்ட் என்ற பேச்சே ஆரம்பித்தது. 20-50 சதம் வரை pharmacy லாபம் பார்க்கிறது. இதில் எத்தனை போலி மருந்துகளோ

    பதிலளிநீக்கு
  8. டிஸ்சார்ஜ் பண்ணுவதற்குள் நமக்கு தாவு தீர்ந்துவிடும். இன்னும் ஒரு நாள் இருந்தால் இன்னும் வருமானம் என்ற நினைப்புதான். டிஸ்சார்ஜ் ஆகணும்னா கடவுளே இன்னொருத்தன் மாட்டணுமே என்று வேண்டிக்கொள்ளும் நிலைமை

    பதிலளிநீக்கு
  9. எந்த profession லயும் அறம் இல்லை எனும்போது மருத்துவத்துறை மாத்திரம் விதிவிலக்காக இருக்கமுடியுமா?

    பதிலளிநீக்கு
  10. மிக வயதான உறவினர்கள் நோய் வாய்ப்பட்டால் அதிகப்பலன் கிடையாது என்று தெரிந்தும் ஆஸ்பத்திரியில் சேர்க்க நிர்பந்தம்.பல லட்சங்கள் செலவழித்தும் பலனில்லை என்பது மிக வேதனையான விஷயம்.என்ன செய்வது.மனசாட்சி,உறவினர்கள் pressure என்று சில விஷயங்கள் இருக்கின்றன.அவற்றை ஆஸ்பத்திரிகள் பயன் படுத்திக் கொள்கின்றன.அனைவருக்காகவும் இந்த ஸ்லோகத்தை பதிவிடுகிறேன். மற்றவை கடவுள் கர்மா கையில்!

    अनायासेन मरणं विनादैन्ये- न जीवनं देहि मे क्रिपय शम्भो भक्तिं अचन्चलं
    AnAyAse- na MaraNam, VinA Dainyena JIvanam DEhime Kripaya ShambO Bhakthim Achanchalam "

    அநாயாசேன மரணம் விநா தைன்யேன ஜீவனம் தேஹிமே க்ருபையா சம்போ த்வயி பக்திம் அசஞ்சலம்''

    சம்போ மகாதேவா, அப்பா எனக்கு தேஹ உபாதை இல்லாத சிரமப்படாத, யாரையும் படுத்தாமல், எவருக்கும் துன்பமில்லாமல், உன்னை நன்றி கலந்த
    பக்தியோடு நினைத்துக் கொண்டே இந்த உலகை விட்டு பறக்கும் மரணத்தை கொடுப்பாயா? “

    'பரமேஸ்வரா நான் கேட்பது மூன்று வரம். ஒன்று: கஷ்டமே இல்லாத வலி இல்லாத சுக மரணம்.
    ரெண்டாவது: நான் எதற்கும், எவரிடமும், கையேந்தி தஞ்சமடையாமல் சுதந்திரமாக வாழ்ந்து மறையவேண்டும்.
    அப்பனே, கடைசியாக மூன்றாவது வரம் என்ன தெரியுமா? என்னை நீ விடவே கூடாது என் கடைசி நிமிஷத்தில் நீ என்னோடு இருந்து நான் உன்னை அடைய உதவ வேண்டும்.''
    காஞ்சி மகாபெரியவா ,ஒரு பக்தருக்கு நற்கதியடைய தினமும் பராயணம் பண்ணச் சொன்ன ஸ்லோகம் இது.

    விஜி வெங்கடேஷ்.

    பதிலளிநீக்கு
  11. உலகமெங்கும் இப்போது இது தான் நிலைமை வெங்கட். இப்போதெல்லாம் அறம் சார்ந்த மதிப்பீடுகள் வலுவிழந்து பணமுள்ளவனே பலசாலி என்றாகி விட்டது...அரசியலில் இருந்து குடும்பங்கள் வரை இதுவே நியதியாகி விட்டது.... யசோதா.ப

    பதிலளிநீக்கு
  12. உண்மை! பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம் என்றுதான் செயல்படுகின்றன. நமது நாட்டில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் மக்கள் எதிர்பாராத மருத்துவச் செலவுகளால் மேல் நடுத்தர வர்க்கத்திலிருந்து கீழ் நடுத்தர வர்க்கத்திற்கு தள்ளப் படுகிறார்களாம்.

    ஆனாலும் பெருநிறுவன மருத்துவ மனை உணவகத்தில் கூட்டத்திற்கு குறைவில்லை.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....