செவ்வாய், 7 ஜனவரி, 2025

கதம்பம் - பரீட்சை - 2024 - கடந்து வந்த பாதை - புத்தாண்டு 2025


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட வேகமாக ஓடும் நாட்கள்… பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


பரீட்சை - 22 டிசம்பர் 2024: 



அனைவருக்கும் வணக்கம்! 


எனது முந்தைய பதிவு ஒன்றில் குடும்பச்சூழல் ஒருபுறம் நெருக்குகிறது என்றால் மறுபுறம் என்னுடைய தேர்வுகளும் நெருங்கிக் கொண்டிருப்பதாக சொல்லியிருந்தேன்! ஆமாங்க! நான் கடந்த ஏழு மாத காலமாக கற்று வந்த சமஸ்கிருத மொழியின் இறுதித் தேர்வு கடந்த 8ந்தேதியன்று நடைபெறப் போவதாக முடிவு செய்யப்பட்டு இருந்தது! 


நவம்பர் மாதத்திலிருந்தே மாமனாரின் உடல்நிலையால் வீட்டுச்சூழலோ சரியில்லை! குழப்பமான மனநிலையில் தான் அனைவருமே இருந்தோம்! அதனால் பரீட்சை எழுதப் போவதைப் பற்றி நானும் பெரிதாக சிந்திக்கவும் இல்லை! அதற்காக முழு முனைப்புடன் நானும் தயாராகவில்லை என்று தான் சொல்லணும்! பிராப்தம் இருந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று தான் இருந்தேன்!


முந்தைய யூனிட் டெஸ்ட்டுகளுக்காக படித்திருந்ததும், மாடல் கொஸ்ட்டீன் பேப்பர்கள் சிலவற்றை அட்டெண்ட் செய்திருந்ததும் தான் சற்று தைரியத்தைக் கொடுத்திருந்தது! பரீட்சைக்கு முதல் நாள் ஒருமுறை பார்த்துக் கொண்டு விட்டால் சரியாக இருக்கும் என்று தான் வீட்டில் சொல்லிக் கொண்டிருந்தேன்! ஆனால்!!!


சரியாக பரீட்சைக்கு முதல்நாள் மாமனாரின் மறைவு! பரீட்சை எழுதுவேன் என்ற நம்பிக்கையே என்னிடம் இல்லை! நெருக்கடியான வீட்டுச்சூழலும், செய்ய வேண்டிய வேலைகளும் தான் கண்முன்னே நிழலாடுகின்றன! விஷயத்தை என் ஆசிரியரிடம் கூட மெசேஜ் செய்து சொல்லிவிட்டேன்! 


ஏதேனும் ஒரு வழி கிடைக்கும் என உடன் பயிலும் நட்புகளும், ஆசிரியரும் கூட நம்பிக்கை தந்தார்கள்! என்னவரும், மகளும் கூட நான் நிச்சயம் எழுதுவேன் என்று நம்பிக்கை தந்தார்கள்! முதல்நாள் காரியங்கள் எல்லாம் முடிய இரவு ஏழு மணியாகி விட்டது!


அடுத்த நாள் மதியம் போல எங்கள் வீட்டுக்கும் வந்து பெருக்கி, துடைத்து வாஷிங்மெஷின் போட்டு, கைகளிலும் துவைத்து என்று இடைவிடாத வேலைகள் இருந்தன! எல்லாவற்றையும் முடித்த பின்னர் கிடைத்த நேரத்தில் இறைவன் அருளால் சமஸ்கிருத இறுதித் தேர்வையும் நல்லபடியாக என்னால் எழுத முடிந்தது! அடுத்த நாள் என்பதால் தான் இதுவும் சாத்தியமானது!


இதோ இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் அதன் முடிவுகளும் வெளியானது! ரிசல்ட்டை இணையதளத்தில் பார்த்ததும் மிகவும் மகிழ்ந்தேன்! தேர்வில்  94% மதிப்பெண்கள் பெற்று நான் தேர்ச்சி பெற்றிருக்கிறேன்! அன்று அந்த இக்கட்டான சூழலிலும் எனக்கு உறுதுணையாக நின்ற நெஞ்சங்களை எண்ணி நெகிழ்ந்தேன்!


*******


2024 - கடந்து வந்த பாதை - 29 டிசம்பர் 2024: 



வருடங்கள் அதிவேகமாக கடந்து தான் சென்று கொண்டிருக்கின்றன! இதோ ஆரம்பித்தது போல் உள்ளது! மின்னல் வேகத்தில் பறந்துவிட்டது! புத்தாண்டு பிறப்பதற்குள் இந்த வருடம் நான் என்ன தான் செய்தேன் என்று யோசித்துப் பார்க்கிறேன்! இந்த வருடம் மட்டுமல்ல அவ்வப்போது எல்லோருமே சுய அலசல் செய்து பார்த்துக் கொள்தல் நன்மை தரும்! தவறுகளையும் சரி செய்து கொள்ளலாமே! நம்மை மெருகேற்றிக் கொள்ள இது ஒரு வாய்ப்பு! 


சரி! இந்த வருடக் கதைக்கு வரலாம்! ஒவ்வொரு நாளும் புத்துணர்வுடன் மலர்வதும் அன்றாட வேலைகளில் இயந்திரம் போன்று  செயல்படுவதும், கிடைக்கும் ஓய்வு நேரங்களில் சற்றே பொழுதைக் கழிக்க அலைபேசியில் நேரத்தைச் செலவிடுவதும், புத்தக வாசிப்பில் ஆழ்ந்து போவதுமாகத் தான் சென்றது! 


இந்த வருடம் சரஸ்வதி தேவியின் அருட்பார்வை என் மேல் பட்டிருக்கிறது போலிருக்கிறது! ஏனென்றால் என் வாழ்க்கை பாதையில் கற்றல் என்பது நின்றே போய் பல வருடங்களாகி விட்டது! ஆனால் நான் நினைத்தும் பார்க்காத ஒரு தருணத்தில் கல்வி கற்க ஒரு வாய்ப்பு கிடைக்கவே ஏப்ரல் மாதத்தில் சமஸ்கிருத மொழியை ஆன்லைன் வழியே கற்றுக் கொள்ளத் துவங்கினேன்.


சமஸ்கிருதத்தைத் தொடர்ந்து ஜூன், ஜூலையில் இன்னும் இரண்டு வகுப்புகளும் சேர்ந்து என்னை பிஸியாக வைத்துக் கொள்ளத் துவங்கினேன்! வாழ்க்கையில் வட்டத்தில் புதிதாக ஒரு பரிமாணம்! நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்! என்பதைப் போல என் நினைவுத்திறன் மிகவும் குறைந்து போன தருணத்தில் தான் மீண்டும் மாணவியாக ஆனேன்!


சமஸ்கிருதமும் கணிதம் போல தான் என்று என் ஆசிரியர் அடிக்கடி சொல்வார்! உண்மை தான்! கணித ஃபார்முலாக்களை  போன்றதொரு இலக்கணம் இதனுடையது! இந்த தெய்வீக மொழியினை ஆர்வத்துடன் கற்று கொஞ்சம் கொஞ்சமாக மனதில் பதிய வைத்துக் கொள்ளத் துவங்கினேன்! இப்போது என் நினைவுத் திறனும் தன்னை மெருகேற்றிக் கொள்ளத் துவங்கி விட்டது!


கூட்டத்தில் பத்தோடு பதினொன்றாக எல்லோரையும் போல் மந்திரங்களை கேட்டுக் கொண்டிருந்த காதுகளில் இப்போது அதன் பொருளும் விளங்கத்  துவங்கியுள்ளது! 


சமீபத்தில் நடைபெற்ற மாமனாரின் காரியங்களில் கூட சாஸ்திரிகள்  சொன்ன மந்திரங்களை என்னவர் திருப்பிச் சொன்ன போது அந்த வார்த்தைகளுக்கு உண்டான பொருளை நான் உணர்ந்த தருணம் என்னை மெய்சிலிர்க்க வைத்தது! என்னவரிடமும் மகளிடமும் கூட எனக்கேற்பட்ட உணர்வை பற்றி பகிர்ந்து கொண்டேன்!


இந்த வருடம் கிண்டில் வாசிப்பில் வித்யா மேமின் உப்பு கணக்கு, ஆசை முகம் மறந்தாயோ, அவள் முகம் காண, சிவசங்கரி மேமின் சூர்ய வம்ச நினைவலைகள் இரண்டு பாகங்களும் இன்னும் பிற எழுத்தாளர்களின் புத்தகங்கள் சிலவும் வாசிக்க வாய்ப்பு கிடைத்தது! வரும் ஆண்டில் வாசிப்பை இன்னும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்!


பள்ளிக்கூட மாணவியாக இருந்த போது பொறுப்பும் கவலைகளும் அற்ற நிலையில் படிப்பதற்கும் இப்போது குடும்ப பொறுப்புகளுடன் படிப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது! வரும் ஆண்டில் மனதளவில் இன்னும் கொஞ்சம் பக்குவம் வர வேண்டும்! நிதானத்துடன் செயல்பட வேண்டும்!


பிறக்கப் போகும் புத்தாண்டில் நல்லவை அனைத்தும் நிகழ்ந்து நாடும், வீடும், சுற்றமும் செழிப்புடன் சிறந்து விளங்க, நம் இதயங்களில் அன்பும் பண்பும் தெய்வீகமும் ஓங்கி வளர இறைவனை வணங்கி பிரார்த்தித்துக் கொள்கிறேன்! 


நல்லதே நடக்கட்டும்! நலமே சூழட்டும்! 


*******


புத்தாண்டு 2025 - 1 ஜனவரி 2025: 



அனைவருக்கும் புத்துணர்வான இனிய காலை வணக்கம்!


மலர்ந்திருக்கும் புத்தாண்டில் நம் அனைவரின்  எண்ணங்களும், வார்த்தைகளும் இனிமையாக இருக்கட்டும்! நல்லதே நடக்கட்டும்! நோய்நொடி இல்லாத ஆரோக்கியமான ஆண்டாக இருக்கட்டும்! நாடும் வீடும் சுற்றமும் வளமாக அமையட்டும்! நம்மிடையே அன்பும், புரிதலும், இறையுணர்வும், பெருந்தன்மையும், உதவும் மனப்பான்மையும் பல்கி பெருகட்டும்!


புத்தாண்டில் துவங்கும் எந்தவொரு செயலும் சிறப்பாக இருக்கும் என்பதால் இன்று முதல் என்னுடைய அடுத்த நிலை வகுப்புகளும்  ஆரம்பிக்கிறது! இறைவன் அருளால் இந்தப் பயணமும் தடையேதும் ஏதுமின்றி வெற்றியை நோக்கி செல்லட்டும்! எண்ணங்கள் சிதறலின்றி ஒன்றுபடட்டும்! நினைவுத்திறன் மேம்படட்டும்! என் எண்ணங்களுக்கு வடிகாலான எழுத்தை இன்னும் மெருகேற்றிக் கொள்ளணும் என்ற சிந்தனைகளுடன் இறைவனிடம் பிரார்த்தித்துக் கொள்கிறேன்!


அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்! நல்லதே நடக்கட்டும்! நலமே சூழட்டும்! எல்லாம் நன்மைக்கே!


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்

7 ஜனவரி 2025


11 கருத்துகள்:

  1. நல்லதே நடக்கட்டும்! நலமே சூழட்டும்! எல்லாம் நன்மைக்கே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சகோ.

      நீக்கு
  2. பரீட்சையில் 94% எடுத்து அசத்திட்டீங்க ஆதி! அதுவும் பல சூழல்களுக்கு இடையில்!
    வாழ்த்துகள்! பாராட்டுகள்!

    இந்த வருடமும் நல்லபடியாகக் கடந்து போகும். நல்லதே நடக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  3. கதம்பம் ரசித்தேன்.  

    இப்போது நானும் கிண்டிலில் புத்தகங்கள் வாசிக்கத்தொடங்கி உள்ளேன்.  நீங்களும் என் ஒரு சந்தேகத்துக்கு பதில் சொல்லி இருந்தீர்கள்.  நீங்கள் சொல்லி இருக்கும் புத்தகங்கள் விலை கொடுத்து வாங்கியவைதானா?  அங்கு இலவச புத்தகங்களும் கிடைக்கின்றனவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் வாசித்த புத்தகங்கள் எல்லாமே மாத சப்ஸ்கிரிப்ஷனில் தான். எவ்வளவு புத்தகங்கள் வேண்டுமானாலும் அதில் வாசிக்கலாம். சப்ஸ்கிரிப்ஷனை புதுப்பிக்கவில்லை என்றால் அனைத்தும் சென்று விடும்! இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம் என்கிற புத்தகங்களை இலவசமாக செய்து கொள்ளலாம்! மற்றபடி எல்லா புத்தகங்களையும் அல்ல!

      தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  4. வணக்கம் சகோதரி

    நலமா? இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். பதிவின் சோகங்களும், தங்களின் விடாமுயற்சியும் வேதனையையும், சந்தோஷத்தையும் ஒருங்கே தந்தது.

    உங்கள் உழைப்பிற்கு சமஸ்கிருத பரீட்சையில் நல்ல பலன் கிடைத்தது குறித்து மிக்க மகிழ்ச்சி. இனி அனைத்தும் நல்லதாகவே நடக்கட்டும்.அதனையே வேண்டி நாம் இறைவனை பிரார்த்திப்போம். நீங்களும் மன அமைதிக்காக தொடர்ந்து எழுதுங்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கமலா ஜி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி தன்பாலன் சகோ.

      நீக்கு
  6. புத்தாண்டு வாழ்த்துகள் ஆதி. நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்வானதற்கு வாழ்த்துகள். முகநூலில் படித்தேன்.
    .
    புதிய பயணத்திலும் வெற்றிதான். இறைவன் அருளால் நல்லதே நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....