வியாழன், 9 ஜனவரி, 2025

கதம்பம் - மெமரீஸ் - பதிவுகள் - திருவரங்க இற்றைகள்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட மருத்துவமனை அனுபவங்கள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


மெமரீஸ் - 2 டிசம்பர் 2024: 



இன்றைய காலைப் பொழுதில் முகநூலை சற்றே பார்த்துக் கொண்டிருந்த போது மெமரீஸில் வரிசையாக வலைப்பூ நட்புகளை என் முகநூல் நட்புவட்டத்தில் இணைத்துக் கொண்டதாக காண்பிக்கவும் தான் ஒரு விஷயத்தை உணர்ந்தேன்! முகநூலில் கணக்கு துவங்கி 10 வருடங்கள் ஆகி விட்டதாம்!!! 


வலைப்பூவில் இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் தட்டச்சு செய்ய வைத்த எழுத்தை இங்கு இரண்டு வரியிலும் நான்கு வரியிலும் முடக்கிக் கொண்டாலும் பின்பு இங்கு தான் விரிவாக சில தொடர்களும், கதைகளும், வாசிப்பனுபவங்களும், சமையல் குறிப்புகளுமாக எழுதி அவற்றை மின்னூலாகவும் மாற்றியிருக்கிறேன்! எனக்கும் என் எழுத்துக்குமான தனி அடையாளம் தந்தது இந்த முகநூல்! 


எழுத்து!! அதை விட்டு எங்கோ தொலைதூரம் சென்று விட்டது போன்ற உணர்வு ஏற்படுகிறது! இரண்டு நாட்களுக்கு முன்பு கூட அன்புத்தோழி புவனா கோவிந்த் ஃபோன் செய்து விசாரித்துக் கொண்டிருந்தார்!  ஏன் உங்க எழுத்து எதுவும் காணலையே! உடம்பு சரியில்லையா என்று! அன்பு சூழ் உலகில் எங்களுக்கான மனிதர்கள்!❤️ ❤️


குடும்பச்சூழல் தான் ஒவ்வொருவரின் பாதையையும்  நிர்ணயிக்கிறது! வயதானோர் மூவர்! கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மாமனாரின் உடல்நிலை காரணமாக மருத்துவமனையோடு பயணிக்கிறது எங்களின் அன்றாட நாட்கள்! இவற்றோடு என் வகுப்புகள்! கீதையில் மூன்றாவது லெவலுக்கு வெற்றிகரமாக சென்று விட்டேன்! சமஸ்கிருதத்தில் வரும் வாரத்தில் இறுதித் தேர்வு வருகிறது!


நல்லதே நடக்கட்டும்! இதுவும் கடந்து போகும்! போன்ற நேர்மறை சிந்தனைகளையும் அன்பான மனிதர்களின் அன்பு பகிர்தலையும்  பற்றிக் கொண்டு வாழ்க்கை என்னும் காட்டாற்றை கடந்து சென்று கரை சேர்வோம்! என்று நம்பி பயணித்துக் கொண்டிருக்கிறோம்!


*******


பதிவுகள்  - 22 டிசம்பர் 2024: 



பதிவு எழுதி நெடுநாட்களாகி விட்டது! எல்லோரும் நலம் தானே! குடும்பச்சூழல் தான் எல்லாவற்றையுமே நிர்ணயிக்கிறது என்று என்னுடைய சென்ற பகுதியிலும் கூட எழுதியிருந்தேன்! உண்மை தான்! இறைவனின் சித்தம்! எப்போது என்ன நிகழ வேண்டும் என்று என்றோ அவன் எழுதிவிட்டான்!

விடுதலை! வயது மூப்பின் காரணமாக வலியிலும் வேதனையிலும் துன்புற்று கொண்டிருப்பவர்களுக்கு இவ்வுலக வாழ்விலிருந்து விடுதலை வாங்கிக் கொள்வது என்பது பெரும் வரமே! அப்படி ஒரு வரத்தை இறைவனிடம் வாங்கிக் கொண்டார் என் மாமனார்! அவர் சிவலோகப் பிராப்தியடைந்து இன்றோடு 16 நாட்கள் விரைவாக கடந்துவிட்டன! அவரின் ஆன்மா சாந்தியடைந்து இறைவனின் பாதங்களில் இளைப்பாறட்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன்!

வரிசையாக பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த  காரியங்களில் உறவுகளுடன் நேரத்தை செலவிட்டுக் கொண்டிருந்ததில் கடந்து சென்ற கார்த்திகை தீபம், மாதவனின் புகழைப் பாடும் மார்கழி என்று எதுவுமே தெரியவில்லை! 


முகநூலில் எங்களிருவருக்கும் பொதுவான நட்புகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இருக்க என்னுடைய பக்கத்தில்  தனியே ஏதும் இந்தத் தகவலை நான் பகிர்ந்து கொள்ளவில்லை! இதை அறியாத சிலர், “என்னாச்சு ஆதி! மார்கழிக் கோலம் எல்லாம் போடுவீங்களே! என்றும் வரிசையாக கேட்டுக் கொண்டிருந்தனர்! எங்களைப் பற்றி நினைத்து, எங்களுடைய இன்ப துன்பங்களில் பங்கேற்று அன்புடனும் அக்கறையுடனும் பழகி வரும் அனைவருக்கும் எங்கள் நன்றிகள்!


வாழ்வில் கிடைக்கும் அனுபவ அறிவால் தான் ஒரு மனிதன் பக்குவமடைகிறான் என்பது எத்தனை உண்மையானது என்பதை சமீபநாட்களில் உணர்ந்தேன்! என்னுடைய வாழ்வின் ஆரம்பநாட்களிலேயே பெரும் துயரங்களைக் கடந்துவிட்டதாலோ என்னவோ யாருக்காகவும் இந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் இந்த மரத்துப் போன மனதால் துளியும் கலங்க முடியவில்லை! என்ன நினைத்துப் பார்த்தாலும் கண்ணீர் எட்டிப்பார்க்கவில்லை! இது வரமா? சாபமா?


*******


திருவரங்க இற்றைகள் - 7 ஜனவரி 2025: 



இதோ வைகுண்ட ஏகாதசி நெருங்கிக் கொண்டிருக்கிறது! இப்போது இங்கு பகல்பத்து உற்சவம் நடந்து கொண்டிருக்கிறது! பூலோக வைகுண்டமாம் திருவரங்கமே இப்போது விழாக்கோலம் பூண்டு ஜேஜே என்று பரபரப்புடன் காணப்படுகிறது! எங்கும் மக்கள் வெள்ளம்!


இங்கு வருடம் முழுவதுமே சுற்றுலாப் பயணிகளால் பரபரப்புடன் தான் சாலைகள் காணப்படும்! இந்த வருடம் வழக்கத்தை விட அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர் என்றே நினைக்கிறேன்! ஒருபுறம் சபரிமலை பக்தர்கள்! மறுபுறம் மேல்மருவத்தூர் பக்தர்கள்! இதுபோக வடக்கிலிருந்து வரும் பக்தர்கள்! வெளிநாட்டினர் என்று அலைகடலென மக்கள் திரண்டுள்ளனர்! 


சுற்றுலா வாகனங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள பார்க்கிங் மைதானமே போதாமல் குடியிருப்புகளுக்கு அருகே எல்லாம் கிடைக்கும் சந்து பொந்துகளில் கூட வேனும் பஸ்ஸுமாக நின்று கொண்டிருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்! இந்த வருடம் நிச்சயம் அதிகம் தான்!


சுற்றுலாவாசிகளுக்காக புதிது புதிதாக முளைத்திருக்கும் சாலையோரக் கடைகள்! அங்கே கம்பளி முதல் ஸ்வெட்டர், குழந்தைகளுக்கான உடைகள் என அனைத்தும் விற்கப்படுகின்றன! இதுபோக உணவுக் கடைகள், பாத்திரங்கள், மலர்கள் என மக்கள் வெள்ளம் ஆங்காங்கே பேரம் பேசி வாங்கிக் கொண்டிருப்பதையும் பார்க்க முடிகிறது!


திருவரங்கம் எங்குமே மூலைக்கு மூலை காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்! ஆங்காங்கே கண்காணிப்பு கேமிராவும் வைக்கப்பட்டுள்ளது! வாகன நெரிசலை தடுப்பது, சின்னஞ்சிறு குழந்தைகள், பெண்கள் என இவர்களின் பாதுகாப்பை கவனிப்பது என இவர்களுக்கு இது ஒரு பெரும் சவாலான வேலை தான்!


நம் மக்கள் தான் எங்கு சென்றாலும் குப்பை போடுவதை வழக்கமாக  வைத்திருக்கிறோமே! நம் வீட்டுக்குள் இப்படி செய்வோமா?? சாப்பிட்ட உணவுப் பண்டங்களை தெருவில் வீசியெறிவது, நடுரோட்டில் எச்சில் உமிழ்வது, சிறுநீர் கழிப்பது, பிளாஸ்டிக் பாட்டில்களையும், கவர்களையும் தெருவிலும் முடிந்தால் காவிரியிலும் கொள்ளிடத்திலும் கூட வீசி எறிவது என்று மக்கள் பதித்த சுவடுகளை ஆங்காங்கே சுத்தம் செய்து கொண்டிருக்கும் துப்புரவு பணியாளர்கள்!


இப்படி திருவரங்கமே கோலாகலமாக காணப்படுகிறது! மக்கள் மனதில் எங்கும் மகிழ்ச்சியும், உற்சாகமும் கரைபுரண்டோட ரங்கனும் தன் புன்முறுவலுடன் எல்லோரையும் பார்த்துக் கொண்டிருக்கிறான்! ரங்கா! ரங்கா!


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்

9 ஜனவரி 2025


13 கருத்துகள்:

  1. எளிதான பக்கங்களும் கடினமான பக்கங்களும் வாழ்வின் புத்தகத்தில் மாறி மாறி இடம்பெறும்.  இறைவன் நம் வாழ்க்கை நூலை எப்படி எப்படி நிர்ணயம் செய்துள்ளானோ.  உங்களை நீங்கள் நன்றாக வடிவமைத்துக் கொள்கிறீர்கள்.  பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் சார். இன்பமும் துன்பமும் அடுத்தடுத்த பக்கங்களில் தான் இருக்கும் என நினைக்கிறேன்! அவற்றை எப்படி கடக்கிறோம் என்பதே வாழ்க்கை நமக்கு வைக்கும் பரீட்சை!

      தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு

  2. எழுத்தும் படிப்பும்தான் நம்மை மெச்சூர் அடையச் செய்கின்றன. அதனால் பிரச்சனைகளை நம்மால் எதிர் கொள்ளவும் கண்ணீர்விட்டு கலங்காமலும் இருக்க முடிகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் சகோ. அனுபவங்கள் தான் நம் முதல் ஆசான்! கடந்து வந்த பாதைகளே நம்மை பக்குவப்படுத்துகின்றன! கற்ற கல்வியும் அதற்கு உறுதுணையாக இருக்கின்றது!

      தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சகோ.

      நீக்கு
    2. உண்மை தான் சகோ. அனுபவங்கள் தான் நம் முதல் ஆசான்! கடந்து வந்த பாதைகளே நம்மை பக்குவப்படுத்துகின்றன! கற்ற கல்வியும் அதற்கு உறுதுணையாக இருக்கின்றது!

      தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சகோ.

      நீக்கு
  3. வணக்கம் சகோதரி

    கதம்ப பதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை. பகிர்ந்த படங்கள் எல்லாம் மிக அழகாக இருக்கிறது.

    தங்களின் மனப்பக்குவத்தை கண்டு வியக்கிறேன். நல்ல படிப்பினைகள். நம் அனுபவங்கள் அவற்றை எளிதாக பெற வைத்து விடு மென்பதும் என் கருத்தும் கூட. மேலும் தங்களின் சமஸ்கிருத படிப்பின் உற்சாகத்திற்கும் என் அன்பான வாழ்த்துக்கள். அனைத்தும் இனி நல்லவையாக நடக்க நானும் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    திருவரங்கம் விழா கோலம் கொண்டிருப்பதை குறித்து மகிழ்ச்சி. உங்கள் வார்த்தைகளில்/ வரிகளில் ஸ்ரீ ரங்கநாதனை தரிசித்த திருப்தி கிடைத்தது.

    /இப்படி திருவரங்கமே கோலாகலமாக காணப்படுகிறது! மக்கள் மனதில் எங்கும் மகிழ்ச்சியும், உற்சாகமும் கரைபுரண்டோட ரங்கனும் தன் புன்முறுவலுடன் எல்லோரையும் பார்த்துக் கொண்டிருக்கிறான்! ரங்கா! ரங்கா!/

    ரங்கா, ரங்கா, அனைவருக்கும் உன்னருளை தப்பாது தந்து விடு. 🙏. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க்கை அனுபவங்களால் தான் மனப்பக்குவம் வருகின்றது! எதையும் சமாளிப்போம்!

      தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கமலா ஜி.

      நீக்கு
  4. யாருக்காகவும் இந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் இந்த மரத்துப் போன மனதால் துளியும் கலங்க முடியவில்லை! என்ன நினைத்துப் பார்த்தாலும் கண்ணீர் எட்டிப்பார்க்கவில்லை! இது வரமா? சாபமா?//

    மனம் பக்குவம். நம் அனுபவங்கள் நம்மைப் புடம் போட்டுச் செதுக்கிவிடும். சாபம் இல்லை. சாபம் என்ற வார்த்தையே தேவையில்லை!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுகுறித்து பலமுறை நானே சிந்தித்துப் பார்த்து என்னை நானே கேள்வியும் கேட்டுக் கொண்டேன்!

      தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  5. பொதுவெளிகளில் மக்கள் செய்யும் அசுத்தங்கள்...எதுவும் சொல்வதற்கில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொல்லிப் பயன் எதுவும் இல்லை என்றாலும் மனம் தவிக்கிறதே!

      தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  6. அனைவருக்கும் நல்லதே நடக்கட்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி தனபாலன் சகோ.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....