அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு கதம்பம் பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. முகநூலில் எழுதிய இற்றைகளின் தொகுப்பு - அங்கே வாசிக்காதவர்களின் வசதிக்காகவும், எனது சேமிப்பிற்காகவும் இங்கேயும் பகிர்ந்து கொள்கிறேன்.
இதற்கு முன்னர் வெளியிட்ட மூன்று நாட்கள் மூன்று சிகரங்கள் - தேவர்களின் குளம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
திருவரங்கத்து இற்றைகள் - 25 ஆகஸ்ட் 2025:
தினசரி வேலைகளும் வகுப்புகளுமாக எந்த மாறுதலும் இல்லாத நாட்களாகத் தான் சென்று கொண்டிருக்கிறது! எல்கேஜி, யூகேஜிக்குப் பிறகு நேரே கல்லூரிக்குச் சென்று விட்ட மாதிரி ஒரு உணர்வு தான் வருகிறது! வாரத்தின் துவக்க நாளான ஞாயிறைத் தவிர எல்லா நாட்களுமே எனக்கு வகுப்புகள் இருக்கின்றன! ரெகுலர் வகுப்புகள், க்ரூப் ஸ்டடி வகுப்புகள் என்று ஏதோ ஒன்றில் பிணைத்துக் கொள்ள வேண்டிய சூழல்! பாடங்களும் நிறையவே இருக்கிறது!
இதோ இன்னும் பத்து நாட்களில் முதல் யூனிட் டெஸ்ட் நடக்க இருக்கிறது! அதற்கான பயிற்சியில் தான் நாங்கள் அனைவரும் ஈடுபட்டுள்ளோம்! சமஸ்கிருத மொழி என்பது மகா சமுத்திரம் போல் பரந்து விரிந்தது! அதற்கான இலக்கண இலக்கிய நியதிகள் என்பது ஏராளமானது! கணித ஃபார்முலாக்கள் போல இதிலும் நியதிகள் தனித்தனி!! அதில் சிலவற்றை தான் நாங்கள் ஒவ்வொரு நிலையிலும் கற்று வருகிறோம்.
சென்ற ஆண்டு சமஸ்கிருதம் கற்றுக் கொள்ள சேர்ந்திருந்த புதிதில் நடைபெற்ற சமஸ்கிருத தினப் போட்டிகளில் அப்போது நாங்கள் முதல் நிலை என்பதால் எங்களுக்கு தரப்பட்டது Quiz competition! 300 வார்த்தைகளை கற்று அதில் 30 வார்த்தைகளுக்கு போட்டி நடத்தப்பட்டது! அதில் குறிப்பிட்ட நேரத்திற்குள் 26 வார்த்தைகளுக்கு என்னால் சரியான பதிலைச் சொல்ல முடிந்தது!
இந்த வருடம் நாங்கள் மூன்றாம் நிலைக்கு வந்துவிட்டோம் என்பதால் எங்களுக்கு picture description competition தரப்பட்டிருந்தது! ஒரு குறிப்பிட்ட சித்திரத்தைப் பற்றி ஒரு மணிநேரத்திற்குள் 20 சமஸ்கிருத வாக்கியங்கள் எழுத வேண்டும்! ஒரு வாக்கியத்தில் நான்கு வார்த்தைகள் இருக்கணும்! அவை இலக்கண சுத்தமாகவும் இருக்கணும்! அந்த வாக்கியங்கள் அர்த்தமுள்ளதாகவும் இருக்கணும்! இதுதான் போட்டிக்கான நியதியாக எங்களுக்கு தரப்பட்டிருந்தது! போட்டிக்கு முதல் ஆளாக பேரை ரெஜிஸ்டர் செய்து விட்டேன்..🙂
போட்டியன்று அவர்கள் தந்த சித்திரத்திற்கு ஏற்ற வாக்கியங்களாக முதலில் ஒரு நோட்டில் தமிழில் எழுதி பின்பு அதை சமஸ்கிருதத்தில் மாற்றி, சமஸ்கிருதத்தில் டைப் செய்தால் நேரமாகி விடப் போகிறதே என்று யோசித்து நேரே ஒரு பேப்பரில் சமஸ்கிருதத்தில் எழுதி என்று ஒரு மணிநேரத்தில் என்னால் 18 வாக்கியங்களை தான் அன்று எழுத முடிந்தது…:) பரவாயில்ல! பரவாயில்ல! கலந்துக்கணும் அவ்வளவு தான்! என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்…:)
என்னுடன் கற்று வரும் நட்புகள் எல்லோருக்குமே இந்த மொழியை கற்றுக் கொள்ள ஆசைப்பட்டதற்கு ஒரு உண்மையான காரணம் இருக்கிறது! ஸ்லோகங்களை நன்கு உச்சரிக்கவும், அர்த்தத்தை புரிந்து கொள்ளவும் சேர்ந்ததாகத் தான் சொல்வார்கள்! ஆனால் யோசித்துப் பார்த்தால் எனக்கு அப்படி எந்த குறிக்கோளும் இல்லை என்று தான் சொல்வேன்! எதேச்சையாக முகநூலில் இணைப்பு ஒன்று கிடைத்தது, என்னவர் அனுமதி தந்ததும் சேர்ந்து விட்டேன்! ஹிந்தி எழுதவும், படிக்கவும் தெரியும் என்ற காரணம் மட்டுமே என்னிடம் இருந்தது!
இந்த கற்றலைத் துவங்கி ஒரு வருடத்திற்கு மேலேயே ஆகிவிட்டது! பார்க்கலாம்! இந்த சாகரத்தில் எவ்வளவு தூரம் என்னால் நீந்த முடிகிறது என்று! ஆன்லைன் வழிக் கல்வி என்பது லாக்டவுன் சமயத்தில் துவங்கியது! அப்போது நான் மின்னூல்கள் வெளியிட, யூட்டியூப் சேனலில் வீடியோக்கள் பதிவிட என்று வேறு விதத்தில் பரபரப்பாக இருந்தேன்! எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் வர வேண்டுமல்லவா!
******
மகள் செய்த பிள்ளையார் - 27 ஆகஸ்ட் 2025:
மகளின் கல்லூரியில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றதில் eco friendly பிள்ளையார் செய்ய போட்டி நடைபெற்றது. அழகான 70 பிள்ளையார்கள் மாணவிகளின் கைவண்ணத்தில் செய்யப்பட்டதாம். பெரும்பாலான பிள்ளையார் சிலைகள் களிமண்ணால் செய்யப்பட்டது என்றாலும், கோதுமை மாவு, மைதா மாவு, காய்கறியால், crochetஆல் என்று ஒவ்வொன்றும் அவ்வளவு அழகாக இருந்தது என்றாள் மகள்! எதைத் தேர்ந்தெடுப்பது என்று நடுவர்களுக்கே தடுமாற்றம் ஏற்பட்டதாம்!
போட்டியில் மகள் முதன்முதலாக செய்த களிமண் கணேஷாவும் அவ்வளவு அழகாக வந்திருந்தார்! 'எனக்கே ஆச்சரியமா இருந்ததும்மா' என்றாள்! உன் ப்ரெண்ட் தானே கண்ணா! அழகா வந்துடுவார்! என்றேன்! இந்த வருடம் பண்டிகை இல்லாததால் பிள்ளையார் வாங்கவில்லை என்றாலும் மகளின் கையால் உருவான ஸ்பெஷல் பிள்ளையார் வீடு தேடி வந்திருக்கிறார்!
எல்லாம் நன்மைக்கே! நல்லதே நடக்கும்!
******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
திருவரங்கம்
4 செப்டம்பர் 2025
அயற்சியில்லா தொடர்முயறசியும் பயிற்சியும் தானே வளர்ச்சிக்கான வழி..வாழ்த்துகள்..(இற்றைகள் வார்த்தைப் பிரயோகம் அருமை )
பதிலளிநீக்குஸ்லோகங்கள் பிழையின்றி சொல்லவேண்டும் என்பதற்காகத்தான் சமஸ்கிருத வகுப்பில் சேர்ந்தேன் என்னும் தோழிகளின் நோக்கம் பாராட்டப்பட வேண்டியது. உங்களுக்கு ஹிந்தி சரளமாக எழுதவும், பேசவும் வரும் என்பதும் அப்படியே.
பதிலளிநீக்குமுழு ஈடுபாட்டுடன் அந்த மொழியை கற்கிறீர்கள். என்னால் முடியாத ஒன்று என்பதால் பிரமிப்பாக இருக்கிறது. ஒரு மணி நேரத்தில் 18 வார்த்தைகள்தான் எழுத முடிந்தது என்கிற உங்கள் நேர்மையும், கற்கும் அர்ப்பணிப்பும் பாராட்டப்பட வேண்டியவை.
பதிலளிநீக்குரோஷ்ணி செய்த பிள்ளையார் அழகு. பிள்ளையாருக்கு இப்படி தாமரை பேஸ் கொடுத்து இப்போதுதான் பார்க்கிறேன். ரோஷ்ணி கைவண்ணம் என்று பார்க்கும்போது நுண்ணிய வேலைப்பாடு.
பதிலளிநீக்குஇந்த வருடம் விநாயகர் சதுர்த்தி கிடையாது என்றாலும் பிள்ளையார் ஒரு ஐடியா செய்து உங்கள் இல்லம் வந்து விட்டார் பாருங்கள்.
விசேஷம்.