அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பயணக்கட்டுரை பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட அழகிய படங்களும் சில வரிகளும் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
ஃபிப்ரவரி 2025-இல் பயணித்த இடங்கள் குறித்த பயணத் தொடரான மூன்று நாட்கள் மூன்று சிகரங்கள் வரிசையில் இது வரை வெளியிட்ட பதிவுகளுக்கான சுட்டிகள் கீழே.
மூன்று நாட்கள் மூன்று சிகரங்கள் - பகுதி ஒன்று
சென்ற பகுதியில் சாரி எனும் கிராமத்திலிருந்து மலையேற்றம்/நடைப்பயணத்தினை தொடங்கியதிலிருந்து வழியில் கிடைத்த அனுபவங்களுடன் எங்களது இலக்கினை அடைந்தது குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டேன். இந்தப் பகுதியில் மேலும் சில விவரங்களைத் தொடர்ந்து பார்க்கலாம். நாங்கள் இங்கே வருவதற்கு முன்னரே நண்பர் தனது தொடர்புகளின் மூலம் நாங்கள் தங்குவதற்கு ஒரு அறையைத் தேர்ந்தெடுத்து முன்பதிவு செய்திருந்தார். அதனால் நாங்கள் எங்கள் அன்றைய தேவையாக இருந்த உடைமைகளுடன் அந்தத் தங்குமிடத்தினை அடைந்தோம். இது போன்ற மலைப்பிரதேசங்களில் கிடைக்கும் தங்குமிடங்கள் பெரிதாக வசதிகள் கொண்டதாக இருக்காது என்பதை முன்னரே சொல்லிவிடுவது நல்லது. எங்களுக்குக் கிடைத்த தங்குமிடமும் அப்படித்தான். ஒரு அறையில் Bunk Bed என்று சொல்லக்கூடிய விதத்தில் கீழே இரண்டு படுக்கைகளும், படிக்கட்டுகள் வழி மேலே ஏறினால் அதன் மேலேயே இரண்டு படுக்கைகளும் இருக்கும் விதமான அறை. ஒரு பக்கத்தில் குளியலறை/கழிவறை இணைந்தது. இவ்வளவு தான் அறை! மின்சார வசதி உண்டு என்றாலும் சுடு தண்ணீர் எல்லாம் வராது! ஒரு நாள் கட்டணம் ஆளுக்கு 1000 ரூபாய். இதில் தங்கும் வசதி, மாலை நேர சிற்றுண்டி, இரவு உணவு மற்றும் காலை உணவு என அனைத்தும் அடக்கம்.
அப்படியான ஒரு அறைக்கு தான் ஏற்பாடு செய்திருந்தார் நண்பர். நாங்கள் வருவதை, எங்களுக்கு ஏதேனும் தகவல்கள் தேவையா என்பதை தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தார் தங்குமிட சிப்பந்தி/உரிமையாளர். நாங்கள் சென்று சேர்ந்ததும் எங்களுக்கு தேநீர் மற்றும் பகோடா தயாரித்துச் சுடச் சுட தருவதற்கு தயாராக இருந்தார். எங்கள் உடமைகளை அறையில் வைத்துவிட்டு நாங்கள் முதலில் தேவரியா தால் வரை நடந்து வருகிறோம் என்று சொல்லி புறப்பட்டோம். தங்குமிடத்திலிருந்து சில அடிகள் மலைப்பாதையில் நடந்தால் அந்த அற்புதமான காட்சி நம் கண்முன்னே தெரியத் தொடங்குகிறது. சுற்றிலும் இயற்கை எழிலும், பனி படர்ந்த மலைச்சிகரங்களும் நம் கண்களுக்குக் காட்சி தர, நடுவே ஒரு அழகிய குளம் - அது தான் தேவரியா தால்! அந்தக் குளத்தில் நமக்குக் காணக் கிடைப்பது மலைச்சிகரங்களின் பிரதிபிம்பம்! பார்க்கப் பார்க்க ஆனந்தம் தரும் இயற்கையின் பேரெழில். தொடர்ந்து அந்த இடத்தினை நோக்கி நாங்கள் நடந்ததோடு, ஆங்காங்கே படங்களும் காணொளிகளும் எடுத்துக் கொண்டோம். சுற்றிலும் இயற்கையின் பேரெழில் - எங்கள் குழுவினரைத் தவிர வேறு யாருமே அங்கே இல்லாமல், இயற்கையின் பேரெழில் அனைத்தும் எங்களுக்கே எங்களுக்காக எனக் கிடைப்பது ஒரு வரம் தானே!
இந்த இடம் வனப்பகுதிக்குள் இருக்கிறது என்பதால் இங்கே உள்ளே செல்ல வன அலுவலர்களிடம் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். குளத்திற்குச் செல்லும் வழியில் ஒரு அலுவலகம் இருக்கிறது - ஆனால் நாங்கள் சென்ற போது யாரும் இல்லை என்பதால் நாங்கள் அப்படியே நடந்தோம். அந்த இடத்தில் ஒரு Watch Tower உண்டு. சீக்கிரமாக அங்கே சென்று மேலே ஏறி மலைச்சிகரங்களில் அஸ்தமிக்கும் சூரியனைக் காண்பது எங்கள் இலக்காக இருந்தது. அதனால் வேகமாக நாங்கள் நடக்க, எங்கள் பின்னால் எங்கிருந்தோ பார்த்த ஒரு வன அலுவலர் தொடர்ந்து சத்தமிட்டபடி வந்து கட்டணத்தை வாங்கிக் கொண்ட பிறகு தான் திருப்தியானார்! அவர் வேலை அவருக்கு! ஒரு நபருக்கு 200 ரூபாய் கட்டணம் என நினைவு. வனப்பகுதிக்குச் சென்று அங்கேயிருந்து மலையேற்றம், மலைப்பாதையில் இரண்டு மூன்று நாட்கள் என நடந்து சந்த்ரஷீலா மலைப்பகுதிக்கும் செல்ல முடியும் என்பதால் சற்றே அதிகமான கட்டணம். முன்பெல்லாம் குறைந்த கட்டணமாக இருந்தது என்றும் சமீப நாட்களாகவே அதிகமாக வாங்குகிறார்கள் என்றும் நண்பர் Bபிஷ்ட் சொல்லிக் கொண்டிருந்தார்.
Watch Tower-லிருந்து எங்களுக்குக் காணக் கிடைத்த காட்சியை என்னென்பது? வார்த்தைகளால் விவரிக்க முடியாத இயற்கையின் பேரெழில். ஒரு சில விஷயங்களை நேரடியாக அனுபவிக்கும்போது தான் அதன் முழுமையான வீச்சு நமக்குக் கிடைக்கும் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. அப்படியான விஷயங்களில் இயற்கையும் ஒன்று. என்னதான் வார்த்தைகளால் நான் கண்ட காட்சிகளை விவரித்தாலும், அங்கே எடுத்த நிழற்படங்களை இங்கே இணைத்தாலும் நேரடியாக நம் கண்களால் காணும்போது கிடைக்கும் அனுபவம் நிச்சயம் வேறானது என்பதை நீங்களும் உணர முடியும். சுற்றிலும் பனிபடர்ந்த மலைகள், மலைச் சிகரங்கள் என படர்ந்து விரிந்த பேரின்பம். அங்கே காணக்கிடைக்கும் ஒவ்வொரு சிகரத்திற்கும் பெயர் உண்டு என்றும் அவற்றின் பெயர் இது இது எனவும் சொல்லிக் கொண்டிருந்தார் நண்பர் Bபிஷ்ட். அந்த இடத்திலிருந்து காணக்கிடைக்கும் ஒரு மலைச்சிகரம் Chசௌக்கம்பா! நான்கு (Chசௌ) கம்பங்களை (கம்bhபா) நிற்க வைத்தார் போல, நான்கு சிகரங்கள் அங்கே இருப்பதால் இந்தப் பெயர் அந்த மலைக்கு!
தேவரியா தால் - இந்தப் பெயரிலிருந்து உங்களுக்குப் புரிந்திருக்கலாம்! இந்த இடம் தேவர்கள் சம்பந்தப்பட்டது என்று. ஆம். தேவர்கள் இங்கே வந்து குளத்தில் குளித்துச் செல்வது வழக்கம் என்றும், இந்திரனால் உருவாக்கப்பட்ட குளம் என்றும், சுற்றிலும் பனி படர்ந்திருந்தாலும், குளத்தில் உள்ள நீர் மட்டும் எப்போதுமே உறைவதில்லை என்றும் நிறைய நம்பிக்கைகள். தேவர்கள் இங்கே வந்து குளிப்பார்கள் என்பதாலே இந்தக் குளத்தின்/இடத்தின் பெயர் தேவரியா தால்! எல்லாம் நம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயம் தான். இதைத் தவிர வேறு சில கதைகளும் உண்டு. மஹாபாரதத்தில் வரும் யக்ஷன் கதை உங்களுக்கு நினைவிருக்கிறதா? ஒரு குளத்தில் தண்ணீர் குடிக்கச் செல்லும் பஞ்சபாண்டவர்கள், அந்தக் குளத்தினைக் காக்கும் யக்ஷனின் கேள்விக்கு பதில் சொல்லாமல் நீரைக் குடித்து, ஒவ்வொருவராக இறந்து போக, கடைசியில் தர்மர் வந்து யக்ஷனின் கேள்விக்கு சரியான பதில் சொல்லி, யக்ஷனின் அருள் பெற்று சகோதரர்கள் நால்வரையும் மீட்ட கதை தான் அக்கதை. அந்த விஷயம் நடந்த இடம் இந்தக் குளம் தான் என்பதும் இங்கே ஒரு நம்பிக்கை. பீமனால் உருவாக்கப்பட்ட குளம் என்பதும் சிலர் சொல்லும் நம்பிக்கை. கதை என்னவாக இருந்தாலும், இன்றைக்கும் இயற்கை எழிலுடன் நமக்குக் காணக்கிடைக்கும் காட்சிகளில் மனம் நிறைந்து போகிறது என்பதைச் சொல்லியாக வேண்டும்.
தங்குமிடம் திரும்பி, தேநீர், பகோடா சுவைத்து இயற்கையான சூழலில் கொஞ்சம் ஓய்வெடுக்க, எட்டு மணிக்கு மேல் இரவு உணவு தயாராகிவிட்டது என்று சொன்னார் எங்கள் தங்குமிடத்தில் இருந்த சிப்பந்தி. வீட்டுச் சாப்பாடு போல சாதாரண சாப்பாடு - ஆனால் சுவையில் எந்தக் குறையும் சொல்ல முடியாத உணவு. அந்தக் குளிரில் சுடச் சுட சாப்பிடக் கிடைப்பதே பெரிய விஷயம் அல்லவா? வடக்கில் எப்போதுமே சப்பாத்தி, தால், சப்ஜி மற்றும் கொஞ்சமாக சாதம்! சுவையில், அளவில் எந்தவிதக் குறையும் சொல்லமுடியாத அளவுக்கு கொடுத்தார் இரவு உணவு. உணவினை உட்கொண்ட பிறகு கீழே இருந்த எங்கள் அறைக்குச் சென்று குளிருக்கு இதமாக படுக்கையில் படுத்தோம். இரண்டு இரண்டு ரஜாய் போர்த்திக் கொண்டு தூங்க வேண்டியிருந்தது - அத்தனை குளிர்! அடுத்த நாள் இந்தக் குளிரில் (சுமார் 4 டிகிரி!) காலைக் கடன்களை எப்படி முடிக்கப் போகிறோம் என்ற கேள்வி மனதுக்குள் இரவே வந்து விட்டது! எத்தனையோ குளிர் பார்த்துவிட்டோம் இந்தக் குளிரையும் பார்த்து விட்டோம் என்று சொல்லிக் கொண்டு உறக்கத்தினைத் தழுவினோம். தொடர்ந்து அடுத்த நாள் காலை கிடைத்த அனுபவங்கள், அடுத்த நாளின் பயணம் போன்றவற்றை அடுத்த பகுதியில் எழுதுகிறேன். அது வரை பயணத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள் நண்பர்களே!
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
1 செப்டம்பர் 2025
என்ன ஒரு இயற்க்கையின் ராஜாங்கம் நடக்கும் இடம். பார்த்த கண்கள் அதிருஷ்டம் செய்தவை. குளம் மிக அழகு. படங்களை மறுபடி மறுபடி பார்க்க தூண்டுகிறது. லானொலிகள் சுவாரஸ்யம். முதல் காணொளி இரண்டு முறை வந்திருக்கிறது.
பதிலளிநீக்குபகோடா என்று சொல்லி தூள் பஜ்ஜி கொடுத்திருக்கிறார் போல!