*பாரதி யார்?*
(B) பாட்டிலைத் திறந்தால் கவிதை வரும் சிலருக்கு;
பாட்டின் திறத்தால் போதை ஊட்டினாய் இவையகத்துக்கு;
வறுமை வாட்டியபோதும் வாடி நீ நிற்கவில்லை;
கருமை வண்ணணைப் பாடினாய், அவனருளையே நாடினாய்.
கண்ணம்மா என்று கவிதையில் நீ உருகியது உலகுக்கே தெரியும்..
உன் செல்லம்மா தான் அது என்று எத்தனை பேருக்குத் தெரியும்?
முண்டாசுக்கவி என உனை
பெயரிட்டு அழைத்தனர்..
கண்டவரும் உன் கவியரங்கம் நடத்தியே பிழைத்தனர்.
நீ இருக்கும்வரை உன் திறமையைக் கண்கள் காணவில்லை..
இப்போதோ ஊரெங்கும் உன் சிலைகளைக் காணக் கண் போதவில்லை!
புரச்சிகரமான கருத்துக்களை தைரியமாய் முன் வைத்தாய்.
வெறுத்து ஊரார் உனைத் தள்ளி வைத்தார்.
உன் கவியால் மனங்களில் தேசப் பற்றைப்
பற்றவைத்தாய்;
அந்நிய ஆட்சியெனும் காட்டை அதன்மூலம் எரிய வைத்தாய்.
தொலைக்காட்சி நேரலையை அன்றே சிந்தித்தாய்.
அதை உன் பாட்டிலும் சிறப்பாய் வடித்து வைத்தாய்.
காளி நீ கண் முன் கண்ட தெய்வம்; அவளையே வணங்கிய
நீயும் காளிதாசனே!
ஆசுகவி உனக்கு
கவித்திறனை அள்ளி அள்ளிக் கொடுத்தாள்.
காசுபணத்தை ஏனோ கிள்ளிக் கிள்ளியே கொடுத்தாள்..
செல்வம் வந்தால் நீ தன்னை(self), ஏன் தன்னையும்(herself) மறப்பாய் என நினைந்தாளோ..
செல்வத்தை நீ கேட்டிருந்தால் அதைப் பொழிந்திருப்பாள்.
நீ கேட்டதோ பகைவனுக்கு அருளும் நெஞ்சும், மோகத்தைக் கொல்லும் வைராக்கியமும்!
செல்லம்மாளின் தியாகங்கள் உனை மஹாகவியாய் உயர்த்தின.
இரு பெண் குழந்தைகள் உன் பாசத்தில் நனைந்தன.
கோவில் யானை நீ குடுத்த பழத்தை தன் வாய்க்குள் தள்ளியது ..
பழம் கொடுத்த மஹாகவியை தன் துதிக்கையால் தள்ளியது.
ஓரிரு மாதங்களில் மண்ணுலகை நீ நீத்தாய்.
39 வயதிற்குள் யாரும் சாதிக்காததை சாதித்தாய்.
இன்று நீ இருந்தால்..
பதவியில் இருப்போரை பாராட்டிக் கவி எழுதியிருப்பாய்.
செல்வத்தில் புரண்டிருப்பாய்..செருக்கில் மிதந்திருப்பாய்..
நல்லவேளை நீ பிறக்கவில்லை,
உன் பாக்கள் சுயமிழந்து இறக்கவில்லை..
பசியில் வாடிய போதும் குருவிக்கு
அரிசி ஈந்தாய்!
அக்கருணையை என்னவென்பது!
ரௌத்திரம் பழகு என்று வீரம் புகட்டினாய்!
உன்னை எப்படி வியப்பது!
காசுக்காக பாக்களை அடமானம் வைக்காத தன்மானம் உனது!
உனை என்ன சொல்லிப் போற்றுவது!
தமிழ் மொழி இருக்கும்வரை நீ இருப்பாய்.
எம் மனச் சிம்மாசனத்தில் கம்பீரமாய் அமர்ந்திருப்பாய்..
வாழ்க பாரதி! வாழிய நின் புகழ்!
🙏🏻🙏🏻🙏🏻
விஜி வெங்கடேஷ்.
11.9.25.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....