வெள்ளி, 29 ஆகஸ்ட், 2025

மூன்று நாட்கள் மூன்று சிகரங்கள் - தேவரியா தால் நோக்கி ஒரு நடை - பகுதி ஐந்து


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பயணக்கட்டுரை பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட ஏகாதசி உபவாச மகாத்மியம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


ஃபிப்ரவரி 2025-இல் பயணித்த இடங்கள் குறித்த பயணத் தொடரான மூன்று நாட்கள் மூன்று சிகரங்கள் வரிசையில் இது வரை வெளியிட்ட பதிவுகளுக்கான சுட்டிகள் கீழே.


மூன்று நாட்கள் மூன்று சிகரங்கள் - பகுதி ஒன்று


dhதாரி தேவி மந்திர்


தொடரும் பயணம்


சாரி எனும் கிராமம்



மரத்தில் சேர்க்கப்படும் கால்நடைகளுக்கான உணவு...


பாதையில் செல்லும்போது காணக்கிடைக்கும் காட்சிகள்...


போகும் வழியில் இருந்த ஒரு தங்குமிடம்...
நாற்காலிகளைப் பார்க்கும்போதே உட்காரத் தோன்றுகிறது!

சாரி என்கிற பெயர் கொண்ட சிறு கிராமத்திலிருந்து எங்களது மலையேற்றம்/நடைப் பயணம் துவங்கியது. கிராமத்தில் உள்ள ஒரு தங்குமிடம்/மலையேற்ற உதவி நிறுவனம் ஒன்றின் பக்கத்தில் அமைந்திருந்த நுழைவாயில் இருப்பதே தெரியாமல் இருக்கிறது! கொஞ்சம் கவனம் தப்பினால் அந்த நுழைவாயிலை நீங்கள் பார்க்க முடியாது. அந்த நுழைவாயில் வழி உள்ளே பாதையில் நடக்க ஆரம்பித்தால் கிராம மக்களின் வீடுகள் வழி மலையேற்றப் பாதை தொடங்குகிறது. முதுகில் சுமையோடும், கைகளில் மலையேற்றத்தில் உதவும் நோக்கத்தில் எடுத்துக் கொண்ட Folding Walking Stick உடனும் நாங்கள் நடக்க ஆரம்பித்தோம். வழியில் பார்க்கும் கிராம மக்கள் ஒரு புன்னகையுடன் கடந்து செல்கிறார்கள். அந்தப் புன்னகை நம்மையும் ஈர்த்து, நாமும் அவர்களை நோக்கி பதிலுக்கு புன்னகை செய்கிறோம். உள்ளூர் மக்களிடம் பழகுவதில் பல தெரியாத விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடியும் என்பது எனது பல பயணங்களில் உணர்ந்த, தெரிந்து கொண்ட அனுபவம்.  இது எப்போதுமே நான் கடைபிடிக்கும் வழக்கமும் கூட.



மலையேற்றப் பாதையில் நண்பர்கள்...


மலையேற்றப் பாதை...

கரடு முரடான பாதைகளில் மெதுவாக நடக்கிறோம்.  சுற்றிலும் பார்த்தால் இயற்கையின் பேரெழில் நம் கண்களைக் கவர்வதோடு மனதையும் கவர்கிறது.  நடக்கும் போது ஏற்படும் உடற்சோர்வினை இப்படியான காட்சிகள் போக்கும் விதமாக இருக்கிறது.  ஆனாலும் சோர்வு ஏற்படும்போதெல்லாம் கொஞ்சம் நின்று நிதானித்து, கண்களுக்கு எட்டும் தூரம் வரை பார்த்து, இயற்கை எழிலை ரசிப்பதோடு, ஓய்வும் எடுத்தோம்.  கிராமத்திலிருந்து ஏற்றம் இறக்கம் என மாறி மாறி நடந்தால் ஒரு அழகான ஆலயம் நம் கண்களுக்குத் தெரிகிறது.  உத்திராகண்ட் மாநிலத்தில் இருக்கும் பெரும்பாலான ஆலயங்கள் ஒரே மாதிரி கட்டப்பட்டவை.  பெரிய கரும்பாறைகளைக் கொண்டு கட்டப்பட்ட ஆலயங்கள் தான்.  ஒரு ஆலயத்தினையும் அடுத்த ஆலயத்தினையும் பார்க்கும்போதே இதே மாதிரி ஆலயத்தினைப் பார்த்திருக்கிறோமே என்று தோன்றும்.  கேதார்நாத், துங்க்நாத் என எந்த ஆலயத்தினைப் பார்த்தாலும் அதன் உருவம் ஒரே மாதிரி தான் இருக்கிறது.  இந்தப் பயணத்தில் சாரி எனும் கிராமத்தில் பார்த்த ஆலயம் எது? அங்கே குடிகொண்டிருப்பவர் யார்? தொடர்ந்து வரும் வரிகளில் சொல்கிறேன். 


ஓம்கார் ரத்னேஷ்வர் மஹாதேவ் மந்திர்:



ஆலயத்தின் வெளிப்புறத் தோற்றம்...


மலையேற்றப் பாதையில் நடந்தபடி எடுத்த சாரி கிராமத்தின் படம்...

ஆலயத்தின் பிரதான தெய்வம் சிவன் என்றாலும் உள்ளூரில் இந்த ஆலயத்தினை நாகதேவதையுடன் சம்பந்தப்படுத்தி நாக தேவதை ஆலயம் என்றும் குறிப்பிடுகிறார்கள்.  அழகான கர்பக்கிரஹத்தின் உள்ளே சிவபெருமான் லிங்க ரூபத்தில் குடிகொண்டிருக்கிறார்.  ஆலயத்தினை நெருங்கும்போதே மெல்லிய ஒலியில் சிவபெருமானின் புகழ் சொல்லும் பாடல்களும் மந்திரங்களும் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருப்பதைக் கேட்க முடிகிறது.  லிங்காஷ்டகம் கூட SPB குரலில் ஒலித்துக் கொண்டிருந்ததைக் கேட்டபோது ஆஹா, இங்கேயும் அவரின் குரல் கேட்கிறதே என உள்ளுக்குள் மகிழ்ச்சி.  அது மட்டுமல்லாது நான் கடவுள் படத்திலிருந்து “ஓம் சிவோஹம்” பாடலும் ஒலித்துக் கொண்டிருந்தது.  எங்கேயிருந்தோ எங்கோ வந்து அங்கேயும் இப்படியான நமக்குத் தெரிந்த பாடல்களைக் கேட்பதிலும் ஒரு மகிழ்ச்சி உண்டாகத் தான் செய்கிறது அல்லவா? மெல்ல பாடல்களைக் கேட்டபடியே ஆலயத்தில் பிரவேசிக்க இருக்கும் படிகளில் நடந்தோம்.  ஆலயத்தின் வாசலில் இருந்த கற்களில் அமர்ந்து காலணிகளைக் கழற்றி, கைகால்களைச் சுத்தம் செய்து கொண்டு ஆலயத்தின் அருகே சென்றோம். 



வழியில் பார்த்த செல்லம் ஒன்று...


சாரி கிராமம் - மற்றொரு பறவைப் பார்வை...

அங்கே இருந்த பூஜாரி ஆலயம் பற்றி சில தகவல்களைச் சொன்னார்.  இங்கே இருக்கும் சிவலிங்கமும் ஆலயமும் மிகவும் பழமையானது என்றும் சுமார் 4000 வருடங்களுக்கும் மேலாக இங்கே இந்த ஆலயம் இருக்கிறது என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்.  அதுவும் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயம் என்றும் பார்க்க சிவலிங்கம் போல இருந்தாலும் இங்கே சிவன், விஷ்ணு இருவரும் இருக்கிறார்கள் என்றும் இந்த இடத்தில் இருக்கும் சிவபெருமான் ஆலயம் துங்க்நாத் ஆலயத்தினை நோக்கியே அமர்ந்திருக்கிறார் என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்.  ஆலயத்தில் சிவலிங்கத்திற்கு ஜலாபிஷேகம் செய்யும்போது அந்த நீர் கீழே வழிவது ஒரு பாம்பு நெளிவது போல இருக்கும் என்றும் ஓம் எனும் எழுத்தை உருவாக்கும் விதமாகவும் இருக்கும் என்பதெல்லாம் இங்கே உள்ளவர்கள் சொல்லும் விஷயம்.  தொடர்ந்து தாராவாக மேலே இருக்கும் பாத்திரத்திலிருந்து நீர் சிவலிங்கத்தின் மீது சொட்டிக்கொண்டு இருக்கிறது.  பார்க்க பாம்பு நெளிவது போலவே தான் இருந்தது.  ஆலயத்தில் நின்று நிதானித்து எல்லோருடைய நலனுக்காகவும் வேண்டிக்கொண்டு, பூஜாரி கொடுத்த சர்க்கரை மிட்டாய்களை பவ்யமாகப் பெற்றுக் கொண்டு பக்கவாட்டில் இருந்த இடத்தில் அமர்ந்து அவற்றை உண்டோம்.  சில நிமிடங்கள் அங்கே இருந்ததில் மனதுக்கு மகிழ்ச்சியும் இதமும். அப்படியே அமர்ந்து கொண்டே இருக்கலாம் என்று தான் தோன்றியது. 



நின்று நிதானித்துச் செல் என்று சொல்லும் தகவல் பலகை...

ஆலயத்தில் மனதுக்கு கிடைத்த நிம்மதியுடன் எங்கள் நடைப்பயணத்தினைத் தொடர்ந்தோம்.  மலைப்பகுதியில் இப்படியான இடங்களில் நடக்கும்போது பார்க்கும் விஷயங்கள் அனைத்துமே பிரமிக்க வைப்பதாகவே இருக்கும்.  இயற்கையின் பேரெழில், பார்க்கப் பார்க்க பரவசம் தரும் விஷயங்கள் என நடந்து கொண்டே இருந்தால் மனதுக்கு எப்போதும் அலுப்பே தோன்றுவதில்லை. மனதுக்கு அலுப்பு இல்லையென்றாலும், உடலுக்கு நிச்சயம் அலுப்பு உண்டாகும் - குறிப்பாக கால்களுக்கு! எங்கே கால்கள் ஓய்வு வேண்டும் என்ற உணர்வலைகளை அனுப்புகிறதோ அப்போதெல்லாம் சற்றே நின்று, இளைப்பாறுவதை வழக்கமாக வைத்துக் கொண்டோம்.  போகும் வழியில் இருந்த பதாகையும் அதைத் தான் சொல்கிறது! தொடர்ந்து நடக்கும்போது கால்கள் ‘கொஞ்சம் உட்காரேன்’ என்று கெஞ்சினாலும் உட்கார்ந்தால் தொடர்ந்து நடக்க முடியாது என்கிறார் நண்பர் Bபிஷ்ட். அதனால் நின்றபடியே ஓய்வு எடுத்துக் கொள்வதோடு, சுற்றிலும் பார்வையைச் செலுத்தி இயற்கை எழிலை கண்களால் பருகுவதோடு எங்கள் அலைபேசி வழியாகவும் காட்சிகளை சிறைபடுத்திக் கொண்டோம். 

 


மலையேற்றப் பாதையில் இருக்கும் கடை ஒன்று...


அதே கடையில் தங்குவதற்கான கொட்டகைகள்...


கிராமத்தைச் சேர்ந்த உழைப்பாளி ஒருவர்...

கிராமத்தினைச் சேர்ந்த சிலர் வழியில் ஆங்காங்கே சிறு கடைகளை வைத்திருக்கிறார்கள்.  ஒரு சிலர், கொஞ்சம் சமதளமாக இருக்கும் பகுதிகளில் டெண்ட் அமைத்து தங்குமிடங்களாகவும் வைத்திருக்கிறார்கள். அது போன்ற இடங்களில் மலையேற்றம் செய்பவர்கள் சற்றே அமர்ந்து இளைப்பாறுவதோடு, அங்கே கிடைக்கும் எலுமிச்சை பழச்சாறு அல்லது Bபுரான்ஸ் பூக்களிலிருந்து எடுத்த சாறு போன்றவற்றை பருகிக் கொள்ளலாம்.  அவற்றை வாங்கியே ஆக வேண்டும் என அந்தக் கடைக்காரர்கள் நம்மை கட்டாயப் படுத்துவதில்லை.  சில இடங்களில் தேநீரும் கிடைக்கிறது என்றாலும் நாங்கள் பெரும்பாலும் பஹாடி நிம்பு பிழிந்து தண்ணீர் கலந்து அந்தச் சாறையே பருகினோம்.  நடந்து தளரும் போது இப்படியான சாறு பருகுவதால் நமக்கு புத்துணர்வு கிடைப்பதோடு, அந்த மலைப்பகுதியில் இருக்கும் உழைப்பாளிகளுக்கு உதவியதாகவும் இருக்கும்.  இது போன்ற கடைகளில் பெரும்பாலும் பயணிகள் வரும்போது மட்டுமே வியாபாரம் - மற்ற நாட்களில் வியாபாரம் இல்லாமல் சும்மா இருக்க வேண்டியது தான்!



பைன் மரத்தின் இலைகள் - மழையின் ஊடே...


நானும் நண்பர் Bபிஷ்ட் அவர்களும்...


போகும் பாதை சரியா தவறா?




எங்கள் மலையேற்ற அனுபவத்தினை நீங்களும் உணர சில காணொளிகள்...

நாம் செல்லும் பாதை சரியானதா என்பதைத் தெரிந்து கொள்ள ஆங்காங்கே பாறைகளில் எழுதி வைத்திருக்கிறார்கள் உள்ளூர் மக்கள்.  இப்படியான மலைப்பாதைகளில் நடந்து நடந்து பாதை உண்டாகி இருந்தாலும் சில இடங்களில் நாம் பாதை தவறக் கூடும்.  இப்படியான வழிகாட்டல் பலகைகள் நமக்கு நிச்சயம் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.  தொடர்ந்து நடந்து நாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்வதற்கு எங்களுக்கு சுமார் இரண்டு மணி நேரம் ஆனது.  அங்கே தங்குவதற்கு முன்னரே ஏற்பாடுகள் செய்து வைத்திருந்தார் நண்பர் Bபிஷ்ட்.  நாங்கள் மொத்தம் நான்கு பேர்.  ஒரு அறையில் Bunk Bed - நான்கு பேர் படுக்கக் கூடியது அதைத் தான் ஏற்பாடு செய்திருந்தார் நண்பர்.  இந்த இடம் குறித்த தகவல்கள், அதற்கான கட்டணம், நாங்கள் கண்ட காட்சிகள், எங்களுக்குக் கிடைத்த அனுபவங்கள் ஆகியவற்றை வரும் பகுதியில் சொல்கிறேன். அது வரை பயணத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள் நண்பர்களே!


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

29 ஆகஸ்ட் 2025


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....