அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு கதம்பம் பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட முகப்புத்தகத்தில் நான் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய சில இடுகைகளின் கதம்பமாக இன்றைய பதிவு உங்கள் பார்வைக்கு - வெங்கட், புது தில்லி. ஓவர் டு விஜி வெங்கடேஷ்.
******
Verdant சத்சங்கம் - 7 ஆகஸ்ட் 2025:
கோபாலா என்றழைக்க, கோவிந்தன் வந்தான்.. குழலூதி நின்றான்.
ஆடிப்பூரம் நினைவூட்டியது ஆண்டாளை...
பக்தியால் பாவால் நமை ஆண்டாளை.
துளசிச் செடியடியில் கிடைத்தது குழந்தை.
அவளுக்கு பெரியாழ்வார் சூட்டிய பெயர் கோதை.
பாவையரை திருப்பாவை பாடி எழுப்பினாள்.
அவர்தம் மனதை கோபாலனை நோக்கித் திருப்பினாள்.
பூமாலை சூடிக் கொடுத்த சுடர்கொடி,
பல பாமாலை புனைந்தும் கொடுத்திட்டாள்.
பொழுதெலாம் கோபாலன் நினைவிலேயே கழித்தாள்.
இறுதியில் அவனுடனேயே இரண்டறக் கலந்தாள்.
அபிராமி அணிகலன்கள் ஜொலிக்க வந்தாள்.
மெல்ல எமை 40 பாடல்கள் அழைத்துச் சென்றாள்.
துலுக்க நாச்சியாரின் காதல் ஶ்ரீரங்கனை மயக்க;
அவளைச் சந்திக்க அவன் சென்றிருக்க;
தாயார் மனது அதனால் கலங்கியிருக்க;
அவன் வருகையை அவள் கையூன்றி எதிர்நோக்கியிருக்க;
தரையில் அது ஐந்து குழிகளாய் பதிந்திருந்ததே..
ஶ்ரீ ராமானுஜர் உயிர் நீத்தும் மெய் நீக்காமல் அங்கு அருளுவது மெய்;
கோபண்ணா கனவிலே கபீர்தாசர் தோன்றினார்.
ராம மந்திரம் உபதேசித்து பக்திப் பயிரை ஊன்றினார்.
ராமதாசர் எனும் பெயர் சூட்டினார்;
பக்தியெனும் பேரின்ப வழி காட்டினார்;
ராமதாசர் வாழ்க்கை சம்பவங்கள் நெகிழ்ச்சியூட்டின.
கேட்க கேட்க செவிக்கு அவை மகிழ்ச்சியூட்டின.
இறந்த குழந்தை எழுந்து வந்தது.
ராமபக்தி அதை சாதித்துத் தந்தது.
பத்ராசலத்தில் ராமர் கோவில் அழகாய் எழும்பியது;
அதனால் அவர் பட்ட கடன் ராமனால் தீர்த்தது;
ஒப்பிலி அப்பன் எதிரே ஶ்ரீ மண்ணுடையார் சன்னதி;
புரிந்தது அது அங்கு வந்த சங்கதி;
இதுபோல் பலப் பல சங்கதிகள் செவியுற்றதால் மனம் நிறைவுற்றது..
உலகோர் உய்ய, மனம் அமைதியுற வேண்டுதலோடு சபை கலைந்தது..
******
ஆடி மாச அலப்பறைகள்:
ஆடி மாசம் பிறக்குதோ இல்லியோ நம்ம வீட்டு பெருசுகள் எல்லாம் ஆட /ஆட்டி வைக்க ஆரம்பிச்சுடும். அவங்க வீட்டுல மாவிளக்கு போட்டாச்சு. இவங்க போட்டாச்சு. வெள்ளிதான்னு இல்ல ஆடி செவ்வாயும் நல்லதுதான் போடலாம்.(அதாவது நீ எப்ப போடப் போற - office க்குப் போனா என்ன, ஒரு 2 மணி நேரம் முன்னால எழுந்திரு - படுக்கப் போறதே 12 க்கு). கூட வடை / சுண்டல் சிறப்பு(அதாவது sweet & savoury combination!) பெண்மணிகள் கேக்கவே வேண்டாம்… நேத்து சாதத்த (பழையதுன்னு சொல்ல மாட்டாங்களாம்) நீங்க சாப்பிடுங்க 70 ரூபாய் குடுத்து வாங்கின அரிசி, நான் ஆடி மாசம் சாப்பிட மாட்டேன்.வெள்ளி, செவ்வாய் வெங்காயம் பெயரே சொல்லவே கூடாது.
எப்பவும் வெத்தலை பழம் பாக்கு பூ வாங்கி வெச்சுக்கோ, பெண்கள் தலையப் பார்த்தா வெச்சுக்குடுத்துடு.. வெள்ளி, செவ்வாய் ஏதோ ஒரு நாள் கொழுக்கட்டை பண்ணனும்.ஊறவெச்சு அரைச்சுத்தான் பண்ணனும்.readymade கொழுக்கட்டை மாவு வாங்கக்கூடாது. அம்பாளுக்கு பண்றோம்.அப்புறம் ஒரு முறை பாயசம், ஒரு முறை சர்க்கரை பொங்கல் பண்ணனும். (என் தோழி ஒருத்தி எல்லாத்தையும் i.e மாவிளக்கு, கொழுக்கட்டை, ச.பொங்கல் or பாயசம் etc ஒரே நாள்ல பண்ணித் தீர்த்துடுவாள், கடமை முடிஞ்சுதுன்னு🤗)
வாசல்ல மாக்கோலம் போட்டா போதாது.காவி கட்டணும். அழகா தலைக்குக் குளிச்சு தலைமுடிய நுனி முடிச்சு போட்டுக்கொண்டு மடிசார் முடியலன்னா at least ரெகுலர் புடவைதான் கட்டணும், (மடியா) அம்பாளுக்குப் பண்றோம்.. (நைட்டி,சல்வார் etc பேசவே கூடாது..மூச் 🤫)
அம்மா, இந்த கோவில்ல கூழ், அந்த கோவில்ல கூழ்னு வேலைக்காரி late ஆ இல்ல வரவே மாட்டா.முகத்துல மஞ்சள் பூசியிருக்கிறதப் பாத்துட்டு நாமளும் ஒண்ணும் சொல்ல மாட்டோம்.(ஏதாவது குரல ஒசத்தப்போய் சாமி கீமி வந்து ஆடி நமக்கு மோசமா குறி சொல்லிடுவாளோன்னு ஒரு பயம்தான்😳) இது வீட்டுல.
வெளில இறங்கினா எல்லாத்துக்கும் ஆடித் தள்ளுபடி..பழைய சரக்க தள்ளி விடறதுக்கு பேரு ஆடித் தள்ளுபடி. புடவை 2 வாங்கினா ஒண்ணு free. அதுல ஒண்ணுதான் சுமாரா தேறும்.ஷர்ட் pant க்கும் ஆடித்தள்ளுபடியாம்😟!என்ன சம்பந்தம்...புரியல (ஏன்னா அவருதான் ladies க்கு credit card குடுக்கணும்!😜)
இது பரவாயில்ல, city ல நடக்கற circus க்கு ஆடி ஆஃபர் போட்டு டிக்கெட் fare ஐ குறைச்சு துண்டு notice பறக்க விடறான்! (நல்லவேளை தள்ளுபடின்னு போடல - இல்லாட்டா படில எல்லாரையும் ஏற விட்டு தள்ளிவிடுவானோன்னு பயந்துகிட்டே பாக்கணும்🫣)
அக்ஷயத்ருத்தியைக்கு (தங்கம் வாங்கணும்ங்கர புரளி) எல்லாம் ஆடித்தள்ளுபடி தான் ஆரம்பப் புள்ளின்னு தோணுது..
மொத்ததுல பெருசுக ஆட்டி வெக்கற மாசம்னு தோணுது.. (அம்பாள் பூச்சாண்டி காட்டி).
அவளோ அவ்யாஜ கருணாமூர்த்தி, அதாவது காரணமேயில்லாமல் கருணை பொழிபவள்.
அதனால யாருக்காகவும் இல்லாம, நமக்காக, நம் அம்மாவாக அவளை நினைத்து relaxed ஆ tension இல்லாம முடிந்ததைச் சிரத்தையாகச் செய்து ஆடியைக் கொண்டாடுவோம். (அப்பாடா முடிவுல ஒரு கருத்து சொல்லியாச்சு😁😊)
மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…
நட்புடன்
விஜி வெங்கடேஷ்
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
14 ஆகஸ்ட் 2025
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....