அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு கதம்பம் பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. முகநூலில் எழுதிய இற்றைகளின் தொகுப்பு - அங்கே வாசிக்காதவர்களின் வசதிக்காகவும், எனது சேமிப்பிற்காகவும் இங்கேயும் பகிர்ந்து கொள்கிறேன்.
இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
July Dump - 31 ஜூலை 2025:
மனதை குளிர்விக்க பெரிதாக ஏதும் நிகழ வேண்டும் என்ற அவசியமில்லை! சிறு சிறு விஷயங்களிலும் மனதில் மகிழ்ச்சி உண்டாகும்! இன்றைய காலைப் பொழுதில் சமையல் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, மகளும் ஒருபுறம் கல்லூரிக்கு தயாராகிக் கொண்டிருந்தாள்! நான் தான் வேலை ஒருபுறம் செய்து கொண்டிருந்தாலும் என்னுடைய மனம் நான்கு திசைகளிலும் பறந்து கொண்டிருக்குமே! அப்போது சட்டென ஒரு எண்ணம்!!
கண்ணா! அந்த collage இன்னிக்கு போடணுமா?? நாளைக்கா??
எதும்மா??
அதான் மாசம் முடிஞ்சதும் போடுவியே கண்ணா!!!
அம்மா! நானே இன்னும் அதை டிசைட் பண்ணல!! அதுக்குள்ள நீ 2k kidக்கு போட்டியா போடப் போறியா!!?? என்று டென்ஷன் ஆனாள்…:)
சிரித்துக் கொண்டே நான் களத்தில் இறங்கி விட்டேன்..🙂
ஜுலை மாதத்தில் செய்தவைகளில் சிலவற்றின் புகைப்படங்களை தொகுத்து ஒரு collageஆக வாட்ஸப் ஸ்டேட்டஸில் வைத்து அதற்கு ஒரு பாடலையும் சேர்த்து விட்டேன்..🙂
நேற்று யூட்டியூபில் ‘புன்னகை தேசம்’ என்ற படத்தின் காட்சிகளை சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன்! அதில் கதாநாயகன்( பெயர் தெரியவில்லை!) தன் நண்பர்களிடம் பேசும் போது, ‘டேய்! உனக்கு பாடத் தெரியும்! பாடற! உனக்கு படிக்கத் தெரியும்! படிக்கிற! எனக்கு சமைக்கத் தானடா தெரியும்! அதை செஞ்சுட்டு போறேனே!’ என்று சொல்வதாக வரும்! இந்த collage பண்ணும் போது எனக்கு அது தான் நினைவுக்கு வந்தது…:) என்னுடைய collageல் பெரும்பாலும் ரெசிபீஸ் தான் இருந்தது!
அன்றாடம் செய்து வரும் நடைப்பயிற்சியின் google fit தகவல், இயற்கையின் அழகு, ப்ளாகில் கிடைத்த மனதைக் கவர்ந்த பின்னூட்டம், இப்போது படித்துக் கொண்டிருக்கும் விஷயம், செய்து பார்த்த புது ரெசிபீஸ் என்று கலவையாக இருக்கும் இந்த தொகுப்பு! இதுபோல செய்வதும் ஒரு சுவாரசியமாக தான் இருக்கிறது! அடுத்த மாதம் இன்னும் இந்த தொகுப்பை அழகாக்கும் விதமாக செயல்பட வேண்டும் என்ற உந்துதலைத் தருகிறது!
நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன்!
******
கடலை மிட்டாய் மில்க்ஷேக் - 2 ஆகஸ்ட் 2025:
சமீபத்தில் நாங்கள் குடும்பத்துடன் சென்று வந்த கோவை - கோத்தகிரி குளுகுளு பயணத்தில் கோவை அன்னபூர்ணாவில் சாப்பிடச் சென்ற போது அங்கே கடலைமிட்டாய் மில்க்ஷேக் என்ற விளம்பர பதாகையைப் பார்த்து அதை ஆர்டர் தந்ததைப் பற்றியும் பின்பு வட இந்திய சர்வர் ஒருவரால் எச்சரிக்கை தரப்பட்டு நாங்கள் அதை கேன்சல் செய்து விட்டு அவர்களின் மற்றுமொரு ஸ்பெஷலான அல்பான்ஸோ மாம்பழ மில்க்ஷேக்கை ருசித்தோம் என்பதைப் பற்றியும் எழுதியிருந்தேன்!
ஏன் அன்று கடலை மிட்டாய் மில்க்ஷேக்கை கேன்சல் செய்தோம்?? அந்த சர்வர் தந்த எச்சரிக்கை தான் என்ன??
முதலில் நாங்கள் ஆர்டர் தந்த போது அதன் விலையை கவனிக்கவில்லை! பின்பு அந்த சர்வர் சொன்ன பிறகு தான் தெரிந்தது! அன்னபூர்ணாவில் ஒரு கடலை மிட்டாய் மில்க்ஷேக்கின் விலை ரூ 230! மூவருக்கும் ஆகப்போகும் தொகை ரூ 690! அதை விட அன்று நாங்கள் மூவரும் சாப்பிட்ட டிபன் + 3 மாம்பழ மில்க்ஷேக் என்று எல்லாம் சேர்த்து ஆன தொகை குறைவு தான்!
அன்றே முடிவு செய்து விட்டேன்! ‘ஆதியின் அடுக்களை’யில் இதை ஒருநாள் செய்து விட வேண்டும் என்று..🙂 இது என்ன கண்ணா பிரமாதம்! ஊருக்கு போனப்புறம் அம்மா உனக்கு இதை விட சூப்பரா பண்ணித் தரேன்! என்று மகளிடமும் கூடச் சொல்லியிருந்தேன்! இதோ அதை ஆதியின் அடுக்களையிலும் செய்து ருசித்தாச்சு! மகளுக்கும் மிகவும் பிடித்திருந்தது!
இதோ அதன் ரெசிபி… சிறிதளவு கடலைமிட்டாயுடன், 2 ஸ்பூன் கோக்கோ பவுடரும், சிறிதளவு ஏலக்காய் பொடியும் சேர்த்து மிக்சியில் நன்கு அரைத்துக் கொண்டு அதனுடன் தேவையான அளவு பால் சேர்த்து அடித்து எடுக்கலாம்! இதனுடன் இனிப்பு சுவைக்கு ஏற்றாற் போல் நாட்டுச் சர்க்கரையும், வெனிலா எசன்ஸ் சிறிதளவு கூட சேர்த்துக் கொள்ளலாம்! இதன் மேலே பொடியாக நறுக்கிய உலர் பருப்புகளும், ஐஸ்க்ரீமும் போட்டு அலங்காரம் செய்வதும் நம் விருப்பம் தான்! ஆக! இந்த மில்க்ஷேக் செய்வது மிகவும் எளிதானது தான்!
என்ன! உங்கள் வீட்டிலும் செய்து பார்ப்பீர்கள் தானே!
******
National Handloom day - 7 ஆகஸ்ட் 2025
இன்றைய தினத்தை தேசிய கைத்தறி நெசவாளர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது! கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இந்த நாள் கொண்டாடப்படுகிறது! மகளின் கல்லூரியில் நேற்றும் இன்றும் இதை பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது!
250 மாணவிகள் சேர்ந்து சென்ற Handloom Rally, fashion walk, நடன நிகழ்ச்சிகள், exhibition, stalls என்று நிகழ்ச்சி நிரல் இருந்ததாகச் சொன்னாள்! இதில் மகள் தான் Welcome speechம் கொடுத்து நிகழ்ச்சியை முழுவதும் சிறப்பாக தொகுத்து வழங்கியிருக்கிறாள்! ஆடை வடிவமைப்பு குறித்த ஒரு நடன நிகழ்ச்சிக்கும் voice over கொடுத்திருக்கிறாள்! கீழே படங்களில் இருக்கும் இந்திய வரைபடத்தில் பலவித துணிகளால் ஆன bannerம் அவள் டிசைன் செய்தது தான்!
இன்றைய தினம் மாணவிகள் எல்லோரும் கைத்தறி நெசவாளர்களுக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் ஒன்று போல புடவையணிந்து சாலையில் placard பிடித்தும் rally சென்றிருக்கின்றனர்!
******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
திருவரங்கம்
12 ஆகஸ்ட் 2025
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....